Monday 23 March 2015

ட்ராட்ஸ்கி மருது, குணா அமுதன் மற்றும் நான்.

அவர்கள் இருவரும் இருக்கும் அந்தப் படம் ஆர்.சி.மதிராஜின் பதிவாகவே வெளியாகி இருந்தது. மதி நல்ல புகைப்படக்காரர். அவர் எடுத்திருக்கக் கூடும் ஒன்றாகவே அதை நினைத்து அவருக்குப் பாராட்டுச் சொன்னேன். அது தான் எடுத்தது அல்ல என்றும், அதை எடுத்தவருக்கு என் பாராட்டுகளைச் சேர்த்துவிடுவதாகவும் அவர் பின்னூட்டினார்.

நான் அந்தப் படத்தை மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்தப் படத்தில் இருக்கும் ஆண், பெண் , நான் அறிந்திருக்கும் அவர்களின் சொந்தச் சாயல்கள் எல்லாம் அகன்று, பனிப் படிவு போல, திருநீறு போல, ஒரு வித வெள்ளை அல்லது வெளிச்சம் அந்தப் படத்தில் படர்ந்துகொண்டிருந்தது. நான் இந்த வெளிச்சத்தை மட்டும் ஆழ்ந்து உணர்கையில், நான் பார்த்திருக்கும் இதே வெளிச்சம் நிரம்பிய வேறு சில படங்கள் நினைவுக்கு வந்தன. எடை இயந்திரங்கள் வீசுகிற எடை அட்டைகள் போல, சட்டென்று அந்தப் பெயர் எனக்குள் ஒலித்தது.  ‘ குணா அமுதன் ‘. துளியும் சந்தேகமே இல்லை, அது குணா அமுதன் எடுத்தது தான்.

குணா அமுதனை நான் சென்ற மதுரை புத்தகத் திருவிழாவில் பார்த்திருக்கிறேன். செல்வம் ராமசாமி எங்களைச் சில படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தார். அங்கே வந்த குணாவை முகமறிய வாய்த்தது. செல்வம் தானும் எங்களுடன் நின்று கொண்டு குணாவை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். எடுத்துத் தரச் சொன்னதற்காக குணா எடுத்தார். அவருக்காகத் தோன்றி எடுக்கவில்லை. குணா எடுத்த, நானும் இருந்த, அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். இதுவரை குணாவின் கண்களில் நான் அந்தப் படத்தில் எப்படிப் பதிந்தேன் என்று தெரியவே முடியவில்லை.

சிற்பிகள், ஓவியர்கள், படம் எடுப்பவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கும். இவர்களைச் செதுக்கு, இவர்களை வரை, இவர்களை எடு என்று அவர்கள் மனம் அவர்களிடம் ஓதும். மதிராஜ் பதிந்திருக்கும் அந்தப் படம் குணா ஒரு உள்ளுணர்வின் கீழ்ப்படிதலில், கட்டவிழ்ப்பில் எடுத்தது. அதில் ஒரு சொல்ல முடியாத மருதா நதிக்கரை நீர்மை இருக்கிறது. கல் மண்டபம் ஒன்றில் என்னை தேனி ஈஸ்வர் எடுத்த படத்தில் என் மீது தாமிரபரணி ஓடிக்கொண்டு இருந்தது. அந்த அகலச் சிரிப்பு என்னுடையதல்ல. நதியினுடையது. அதே போல , அத்தனை இலைகளும் வெயிலில் புரண்டு மினுங்கும் ஒரு தூரத்து அரசமரம் இருக்கிற வெளியில் எடுக்கப் பட்ட படத்தின் முகத்தில் பாடும் ஒரு காற்றை உணரமுடியும். பாலைவனத்தின் மணல் படிவுகள் கானலில் புரள, ஒரு பேரீச்சை நிழலில் நம்மைப் படம் எடுத்தாலும் , வெயிலில் துடிக்கும் கன்னங்கரிய  பாம்புகளின் நெளிந்த ஊர்தல் நம் முகத்தில் தெரியாமல் போகாது.

ஓவியர்கள் நிழலைப் பின் தொடர்ந்து தங்கள் ஓவியத்துள் நுழைகிறார்கள். நிழல்களின் வாசல்களை அவர்கள் திறக்க முடிகிறவர்கள். அதே போல தேனி ஈஸ்வர், குணா அமுதன் போன்ற காமெரா கலைஞர்கள் எல்லாம்  தங்கள் வசம் ஒளியின் மாயத் திறவுகோல்களை வைத்திருக்கிறார்கள். இசைக் குறிப்புகள் எழுதுவது போல, தன் சுருங்கி நிதானிக்கும் கண்ணுக்கும் அழுத்தி விடுவிக்கும் சுட்டுவிரலுக்கும் இடைப்பட்ட சிறு பொழுதில். தான் எடுக்கப் போகும் முகங்களின் மேல் . தங்களைச் சுற்றி இருக்கும் வெளிச்சத்தினை ஒரு கை அல்லது ஒரு துளி அள்ளிப் பூசி விடுகிறார்கள். எல்லோரும், ‘காடுடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளங் கவர் கள்வன்’  முகத்தர் ஆகிவிடுகிறார்கள்.

குணா அமுதன் மட்டும் அல்ல , ட்ராட்ஸ்கி மருதுவும் வரைய என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. Photogenic  போல, sculptogenic, paintogenic என்ற சொற்கள் உண்டா தெரியவில்லை. அகராதியில் இல்லாவிட்டாலும் கலைஞர்களிடம் அவர்களுக்கே அவர்களுக்கான கலைச் சொற்கள் உண்டு. ”மருது என்னை வரைய மாட்டீர்களா?’ என்று கெஞ்சினாலும் அவர் வரைய மாட்டார். அவரை வரையச் சொல்லும் ஒன்று என்னிடம் இல்லை. அது இளைய பாரதியிடம் இருந்தது. இளைய பாரதியை மருது அற்புதமான கோட்டோவியமாக எழுதி இருக்கிறார்.

எனக்கும் ஓரளவுக்கு நிழல் தெரியும். ஓரளவுக்கு வெளிச்சம் தெரியும். குணா அமுதன் அவருக்குப் பிடித்தவரைப் படம் எடுக்கிறார். மருது அவருக்குப் பிடித்தவரை வரைகிறார். நான் மட்டும் என்ன?, எனக்குப் பிடித்ததைத் தானே எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

%

(முக நூலில் அவர் பக்கத்தைப் பார்த்தேன். அவரை ‘ குணா அமுதன் ‘ என்று அழைப்பதை விட, ‘இரா. குண. அமுதன்’ என்று அழைப்பதே இயல்பாகவும் சரியாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.

காலையில் இருந்தே ஒரு அடர்ந்த மன எழுச்சியில் , ‘ குணா, குணா ‘ என்றே அவரை அழைத்துப் பழகிவிட்டது. அத்தனை நெருக்கமாகிவிட்ட 
‘ குணா அமுதன் ‘ ஆகவே எனக்கு அவர் இருக்கட்டும்.).

2 comments:

  1. மிகவும் அபூர்வமான பார்வை; எழுவதில் தன்னைத் தானே பார்த்துக் கொள்ள முயல்பவர்களால்தான் இப்படி எழுத முடியும். மிகவும் சந்தீசமாக இருக்கிறது அண்ணே!

    ReplyDelete
  2. காணும் ஒவ்வொன்றிலும் தன்னை உணரும் ஒரு பேரன்போடும் கவிதை எழுதும் அதே உணர்வோடு கடிதமோ, கட்டுரையோ, சிறுகதையோ எழுதுவதாலும் எல்லா எழுத்திலுமே ஒரு மாய வசீகரம் வந்து அமர்ந்துகொள்கிறது. இல்லையென்றால் கல் மண்டபத்தில் எடுத்த புகைப்படத்தில் தாமிரபரணி ஓடிக்கொண்டிருப்பதையும் வெயில்காலத்து அரசமரக் காற்று பாடிக்கொண்டிருக்கும் ஒரு முகத்தையும் இப்படி வார்த்தையில் கொண்டுவர முடியுமா?

    அதிகபட்சமான மன அழுத்தங்களும் பிரச்சினைகளும் கொண்ட இந்த மத்திம வயதில் உங்கள் எழுத்துக்களை வாசிப்பதே பெரிய பேறுதான்.

    ReplyDelete