Tuesday 17 March 2015

நீல கண்டம்.








ஞாயிற்றுக் கிழமை கோவையில் இருந்தேன்.

ரவீந்திரன் சார் பையன் பிரபுவுடைய திருமண வரவேற்பு.  கொடீசியா ஹால் ரவீந்திரனுடைய மனசு மாதிரியே ரொம்பப் பெருசு. கொஞ்சம் சீக்கிரமாகவே போய்விட்டோம். சொல்லப் போனால் 12 மணி நிகழ்வுக்கு பத்தே முக்காலுக்கே போவது ரொம்பவே முந்தி.

அப்படிப் போனது ஒரு வகைக்கு நல்லது. ரவீந்திரன் சாரைத் தனியாகப் பார்த்துக் கல்யாணம் விசாரிக்க முடிந்தது. அவர் செல் பேசியில் தன் வியட்னாமிய மருமகளைக் காட்டி, ரொம்ப சந்தோஷமாக மருமகளை, மருமகள் தாயார், குடும்பம் பற்றி எல்லாம் பேசிய போது, அவருடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே நிற்க முடிந்தது. இது வேறு ரவீந்திரன். இந்த ரவீந்திரனை இதற்கு முன் பார்த்ததே இல்லை.

ரவீந்திரனைப் பார்க்கும் போது மட்டும் அல்ல, ஒவ்வொருவராக எல்லோரையும் பார்க்கப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இசைக் கவி ரமணன் (மீசையைக் கொஞ்சம் இப்போது முறுக்கி விட்டிருக்கிறார்), கிருஷியும் அவர் நண்பர்களும், சாம்ராஜ்-சரோ, இளைய நிலா ஜான் சுந்தர் (இன்னும் மழித்தலை நீட்டவில்லை), அன்று புதிதாய்ப் பிறந்திருந்த ஓவியர் ஜீவானந்தம் ( நான் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அவர் கையைப் பிடிக்கும் போது, ‘நாஞ்சில் எங்கே காணோம்? என்று ஜீவா தேடிக்கொண்டு இருந்தார்), விஜயா வேலாயுதம் அண்ணாச்சி (மனுஷர் அப்படியே, அதே சிரித்த முகத்தோடு)  என்று பார்த்து, கையைப் பிடித்து, தோளைத் தொட்டுக் கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் ஓலைக் கிலுக்கு இரண்டை என் முன்னால் நீட்டிய படி சிவராஜ் வந்து நின்று சிரித்தார். ஆமாம் அதே, குக்கூ குழந்தைகள் வெளி, வானகம், இயல் வாகை  சிவராஜ் தான். கையில் ஒரு பச்சைத் துணிப் பை இருந்தது.. அதில் அச்சடிக்கப்பட்டிருந்த வரிகளைக் காட்டினார். அது இஸ்ஸாவுடையது. பாரம்பரிய காய்கறி விதைகள் அடங்கிய ஒரு காகிதப் பையில் என் வரியொன்று இருந்தது. ’மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்’ என்று அச்சடிக்கப் பட்ட புத்தகத்தில்  கவிஞர் அறிவுமதியின் ‘கடைசி மழைத்துளி’ தொகுப்பில் இடம் பெற்றிருந்த என்னுடைய ‘மெல்லினம்’ கவிதையை முழுதாக இணைத்திருப்பதாகச் சொன்னார். படங்கள் எடுத்துக்கொண்டோம். முகத்தோடு முகம் வைத்து மிக நெகிழ்வாக ஒரு படம் உண்டு. யாராவது அதைக் காட்டினால் நன்றாக இருக்கும். நான் அரக்குச் சிவப்பும் கருப்புக் கோடுகளுமாய் ஒரு புது குர்தா வேறு போட்டு வேட்டி கட்டியிருந்தேன்.

ஒரு இரண்டு நிமிஷம் உங்களோடு தனியாகப் பேசணும்என்றார். அவ்வளவு நேரமும் சந்தோஷமாக இருந்த அவர் முகமும் கண்களும் கலங்கி இருந்தன. சற்றுத் தள்ளிப் போய் அமர்ந்தோம். நான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டேன். சிவராஜ் அவரும் நம்மாழ்வார் அய்யாவுமாக இருந்த நாட்களைப் பற்றிச் சொன்னார். என் இந்தக் கவிதையை வாசித்துக் காட்டிய நேரம் பற்றி அவர் நினைவு கூர்கையில் ஒரு அறுவடைத் தானிய அம்பாரம் போல இருந்த அவர் முகம் சரியத் துவங்கியது. மிகச் சிரமமான அவருடைய ஒரு காலத்தை, அவருடைய தாயாரைப் பற்றிச் சொல்கையில் அவர் பெருங்குரலில் அழத் துவங்கி, மறு நொடியில் நஞ்சுண்டு அமைவது போல அந்த அழுகையை அவர் விழுங்கினார். விழுங்க முடியாமல் அழுகை அவர் கண்டத்தில் இருந்தது. கையை நொறுக்கிப் பிடித்து ‘ ஊருக்கு வாங்க சிவராஜ்’ என்றேன். ‘சரி; என்று சொல்ல முடியவில்லை அவரால். தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து போனார்.

சாப்பாடு எல்லாம் முடிந்து வெளியே வரும் போது, தாம்பூலப் பைக்குப் பதிலாக, விதைகள், புத்தகம், ஓலைக் கிலுக்கு எல்லாம் அடங்கிய அந்தப் பச்சைப் பையை சிவராஜ் முன்னால் நின்று எல்லோர் கையிலும் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவர் சகாக்கள் பின்னால் நின்று ஒழுங்குபடுத்தி உதவிக் கொண்டு இருந்தார்கள்.

‘ எனக்கு ரெண்டு பை கொடுங்க’ என்று நான் அவர் ,முதுகுப் பக்கம் நின்றுகொண்டு சிவராஜ் தோளில் கையை வைத்தேன். திரும்பிப் பார்த்த சிவராஜ் முகம் முழுக்கச் சிரித்தார். கையைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டார். மிகவும் மெலிந்த வெதுவெதுப்பான அந்தக் கைகளால் நான் எங்கோ விதைக்கப்படுவது போல இருந்தது.

நான் தற்செயலாக அவர் கழுத்தைப் பார்த்தேன். அந்த அழுகை இன்னும் விழுங்கப் படாமல் சிவராஜின் கண்டத்திலேயே இருந்தது.





2 comments:

  1. சிவ-ராஜ்
    பெருத்தமான பெயர் தான்
    நீலகண்டன்

    ReplyDelete
  2. சந்தித்த சில மனிதர்களில் சில மணித்துளிகள் சந்தித்து இருந்தாலும் தீரா கதைகளை தம்முள் அடக்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சற்றே கலங்கி நிற்பர். இன்னும் சொல்லபடாத கதைகளை தம் சிரிப்பிலும் தொண்டை குழியில் புதைக்க நினைக்கும் சோகத்திலும் காணலாம். இவ்வாறான பல கதைகளை தம்முள் அடக்கி வாழும் அற்புத மனிதர் சிவராஜ்.

    ReplyDelete