Friday, 3 November 2017

வியனுலகு முழுவதையும் ...






நான் நன்றி சொல்ல வேண்டியது சந்தியா பதிப்பகத்திற்கா? அல்லது மரபின் மைந்தன் முத்தையாவுக்கா? நன்றி சொல்லவேண்டும் என்ற நல்லுணர்வு சுடர்ந்த பின், இவருக்கு அவருக்கு என்னாமல் எல்லோர்க்கும் நன்றி சொன்னால் தான் என்ன? எல்லோரும் என் நன்றிக்குரியோர் தாமே. ‘என்னை நன்றாக இறைவன் வைத்தனன்’ எனில், அதை விடவும் நன்றாக,   அதனினும் அவனினும் மேலாகத்தானே  என்னைச் சுற்றியிருக்கிற எல்லோரும், அல்லது நான் சுற்றிவரும் எல்லோரும் என்னை வைத்திருக்கிறார்கள்.

எனக்கு நிகழ்ந்த எல்லா நற்செயலும் தற்செயலே என்றே நான் நம்புகிறேன். நேற்றும் அப்படி மற்றொன்று நிகழ்ந்தது. அஃதொப்பதில்லாத விரல்களின் அடுத்தூர்தலில், சந்தியா பதிப்பகத்தின் அந்தப் பதிவு இருந்தது முகநூலில். ஜெயகாந்தன் உரை குறித்த ஒரு ’சவுண்ட் க்ளௌட்’  இணைப்பு அது.. சில முகங்களைத் தாண்டிப் போகமுடிவதில்லை. முகம் பார்த்தவுடன் குரல் கேட்கத் துவங்கும் நிலைகளும் உண்டுதானே. நான் ஒலியின் மேகங்களுக்கு உடனே நகர்ந்தேன்.

சவுண்ட் கிளௌட் பதிவு மரபின் மைந்தன் முத்தையாவால் இரு பகுதிகளாகச் செய்யப்பட்டிருந்தது. பாரதியின் ஆன்மீகப் பார்வை என்ற தலைப்பில் அல்லது பொருளில் ஜெயகாந்தன் நிகழ்த்தியது. கோவையிலாக இருக்க வேண்டும், ‘ நண்பர்களே’ என்று துவங்கி, ஒரு மௌனம் காத்து, அந்த மௌனத்தில் மடியிலிருந்து பீச்சுவது போல் மறுபடியும், ‘ நண்பர் சிதம்பரநாதன் சொன்னது போல இது ஒரு வளமான கூட்டம்’ என்று மேற்செல்வது அப்படித்தான் யூகிக்க வைக்கிறது.
‘வித்தையேதும் கல்லாதவன், என்னுளே வேத நுட்பம் விளங்கிடச் செய்தனை’ என்று அங்கிருந்து அவர் பாரதியின் ஆன்மீகப் பார்வையை விதந்தோத, ஓத நிச்சயம், அந்தச் சபை அன்று வேதபுரம் ஆகியிருக்கும். அங்குறு சபையோர் ஒரு வேத வாழ்வு வாழ்ந்திருப்பர்,

’வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேத வாழ்வு ‘ என்பதன் நீட்சியாகவும் மடங்குகளாகவும் நிறுவுவதாகவும், ஜெயகாந்தன் அவருக்கே உரிய தோய்வோடும் ஆய்வோடும், முரணோடும் இசைவோடும் ஒரு பாரதி தரிசனம் உண்டாக்குகிறார். மிகவும் மேற்கொளப்படுகிற, “ விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல, காண்பது’ என்ற தெறி அந்தப் பேச்சிடை மின்னிய ஒன்றுதான்.

நான் அந்த உரையைக் கேட்ட உன்மத்தத்தில், ஜெயகாந்தனின் குரலில் எனக்குள் அவர் பேசிக் கேட்டவற்றுள் நினைவுறுவதை, அவர் பாணியில் எனக்குள் போலிசெய்துகொண்டே இருக்கிறேன். அது ஒரு சிறு பிள்ளைத்தனம் எனினும், யாரும் அருகிலற்ற இந்தத் தனிமையில் அதுவே எனக்கு விருப்பமான பெரும் பிள்ளைத்தனமாகவும் படுகிறது.

பொன்னீலன் பாரதியைப் பேசுகிற குரலில், பாரதி கிருஷ்ணகுமார் ஜெயகாந்தனைப் பேசுகிற குரலில் நான் என்னுடைய குரலை வடிவமைத்துக்கொண்டு,, மறைவாக நமக்குள்ளே, பேசத் துவங்குகிறேன்.

‘நண்பர்களே, நாம் பாரதியைப் பயில்வோம். ஜெயகாந்தனைப் பயில்வோம். அப்படிப் பயில்வதன் முகத்தான் வேதத்தைப் புதுமை செய்வது போல, பாரதியைப் புதுமை செய்வோம். ஜெயகாந்தனைப் புதுமை செய்வோம். நாம் புதுமை செய்ய அவசியமின்றி, அவர்களே புதுமையுறுவர். அப்படி அவர் புதுமையுறுவர் எனில் நாம் புதுமையுறுவோம். நம் வாழ்வு புதுமை கொள்ளும். வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேதம் நமக்கு வசப்படும்… .. “
*




Thursday, 2 November 2017

அற்ற ஒரு சுடராய்













மழை கொஞ்சம் வெறித்திருந்தது.

எங்கேயாவது போய், யாரையாவது பார்க்கலாம் என்று தோன்றியது. என் வயதில் என் வயதுக்காரனைத்தானே பார்க்க முடியும்.

செருப்பில் செம்மண் அப்பிய கனம். 19ம் நம்பர் வீடு ரொம்ப தூரமில்லை. அவன் வீட்டிலும் உதிர்ந்து கிடந்த பன்னீர்ப் பூ. ஊடே நகரும் முதல் வளையல் பூச்சி.

புறவாசலில் இருக்கிறதாகச் சொன்னார்கள். வீட்டைச் சுற்றிப் போய்க் கொள்கிறேன். கதவைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இன்னும் பைக் ஓட்டுகிறான். ஆனால் துடைக்கவே மாட்டான் போல. பின் என்ன? வெளியூருக்குப் போனால் முன் விளக்கு அடைப்பில் பறவை முட்டை இடத்தான் செய்யும்.

செருப்புச் சத்தத்தைக் கேட்டே,’வா சுந்தரம்’ என்றான். காதும் மூக்கும் அத்தனை கூர்மை. அவன் ஒரு மிருகமாம். அவனே,’நான் மிருக ஷ்ரீச நட்சத்திரம்’ என்று சிரிப்பான். ‘என்ன நடக்கு? உங்க ஊரில மழை உண்டா?’ என்ற பழைய பாணி உரையாடலைத் துவக்கினேன். அந்தந்தப் பருவத்திற்கு அந்தந்த உரையாடல். அதில் தப்பில்லை.

கூடுமானவரை வெயில் அடிக்கிற இடத்தில் கல்யாணி குத்த வைத்து உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் ஒரு வெங்கல விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. பச்சை, சிவப்பு தீப்பெட்டி மத்தாப்புப் பெட்டிகள் நாலைந்து. கூடுதலாகவே இருக்கும்.

ஒவ்வொரு குச்சியாய் மத்தாப்பை எடுத்து, விளக்குச் சுடரில் பொருத்தி, கண் மட்டத்திற்கு உயர்த்தி அணையும் வரை வைத்திருந்து கீழே போட்டான். மறுபடி ஒன்றைப் பொருத்தி என் பக்கம் உயர்த்தி, ‘பச்சைக்கலர் மத்தாப்பு; நல்லாருக்கா என்றான்?’

நான் சிரித்துக்கொண்டே பக்கத்தில் புறவாசல் நடையில் உட்கார்ந்தேன். ‘நீ பொருத்துதியா?’ என்று என் பக்கம் ஒரு பெட்டியை நீட்டினான். அது சிவப்பு மத்தாப்புத் தீப்பெட்டி. ‘தீவாளிக்குப் பிள்ளைகள் வந்திருக்கும் போது வாங்குனதுல மிச்சம்’ என்று அவனே சொன்னான்.

நான் ஒரு குச்சியை எடுத்துப் பக்கவாட்டில் உரசினேன். பிடிக்கவில்லை. மறுபடி உரசினேன். ‘எல்லாம் நயத்துப் போச்சு. இங்கே வா’ என்றான். நான் அவன் பக்கம் போய் விளக்கில் பொருத்தினேன். சுருசுரு என்கிற கருப்புப் பாகம் நுரைத்து முடிந்து சிவப்பு நுனியில் அடர்த்தியாக ஒளிர்ந்தது.’ பச்சையை விட சிவப்பு நல்லா எரியுது’ என்றேன்.

‘நல்லாப் பாரு சுந்தரம் சிவப்பு எரியும் போது உச்சியிலே லேசா ஒரு பச்சை தெரியும். அது சிவப்பை விட பாக்க நல்லா இருக்கும்’ என்று கையில் கொழுத்திய பச்சை மத்தாப்புடன் சிரித்தான்.

நான் இன்னும் கொஞ்சம் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து, அவன் கொழுத்தி வைத்திருக்கும் பச்சை மத்தாப்பில் என் சிவப்பு மத்தாப்பைக் கொழுத்தினேன். ஒன்றிலிருந்து ஒன்று பற்றி, சிவப்பைப் பச்சையாக்கி, பச்சையைச் சிவப்பாக்கி, சிவப்பும் பச்சையும் அற்ற ஒரு சுடராய் மலர்ந்தது.

‘நல்லாருக்கில்லா?’ என்று அவனும் சொன்னான்.


‘நல்லாருக்கு’ என்று அதே சமயத்தில் நானும் சொன்னேன்.

Wednesday, 1 November 2017

அதற்குப் பிறகு








டாஸ்மாக் கடைக்குத் தனியாக வருபவர் நீங்கள்.
உங்கள் அடிக்கடி வருகையால்
டாஸ்மாக் கடைக்கு இப்போது
டாஸ்மாக் கடை வாடை கிடையாதாயிற்று.
இந்த டாஸ்மாக்கிற்கு முதன் முதல் வருகையில்
தனியாக மேஜையில் இருந்தவர் உங்களை
அவருடன் ஒரு மிடறு அருந்த உபசரித்தார்.
நீங்கள் போய் அமர்கையில் அவருடைய மேஜையில்
அதற்கு முந்திய நொடியில் மலர்ந்த,
அடுத்த நொடியின் பொன் மஞ்சளுடன் பறித்த
ஒரு பூவரசம் பூ  நீளக் காம்புடன் இருந்தது.
அடுத்தடுத்த எண்ணிலி மிடறுகளுக்குப் பின்
அது சிவந்திருந்ததைப் பார்த்தீர்கள்.
உங்களை உபசரித்தவரிடம் அனுமதி கேட்டு
அந்தப் பூவை  வாஞ்சையுடன்  கையில் எடுத்தீர்கள்.
அப்போதும் அது சொரசொரப்பாகவே இருந்தது.
‘எப்போதும் சொரசொரப்பானது இந்த வாழ்வு’ என்று
யாரோ சொல்வது போல நீங்கள் சொன்னீர்கள்.
மிக உச்ச விசையுடன்  உங்கள் கன்னத்தில்
உடனடியாக உங்களை உபசரித்தவர் அறைந்தார்.
வேறெங்கும் இன்றி இந்த டாஸ்மாக் கடைக்கு மட்டுமே
நீங்கள் வரத் துவங்கியது அதற்குப் பிறகுதான்.