Monday 25 November 2019

அதன் போக்கில்
மனம் வனமிருகங்களைப் போல நுட்பமானது.
ஒரு சருகு உதிர்வதை, புல்லின் மீது புழு ஊர்வதை அது காதுயர்த்திக் கேட்கிறது. ஒடிபடும் கிளையின் பச்சையை, பின்கால்களால் பரபரவென்று கீறி, கழிவை மூடும் ஈரமண்ணை நாசி விரித்து உணர்கிறது. வேட்கையை, இணக்கத்தை, வேட்டையாடலை, பயத்தை வாலசைவுகளில் எதிர் மிருகத்திற்குச் சொல்கிறது.
ஒரு மான் குட்டி பிறந்திருப்பதை, பேருடலுடன் யானை சாய்ந்துவிட்டதை, எங்கோ மழை திரள்வதை, தொடர்மலையின் மறுபக்கச் சுனை பெருகுவதை, குடும்பம் குடும்பமாக முளைத்திருக்கிற காளான் குடைகளை, வேதியத் துகளாகி விட்ட சாணத்தின் மீது மொய்க்கிற இளம்பச்சை நீர் நிறப் பட்டாம் பூச்சிகளின் சிறகசையா தீப வடிவை எல்லாம் அது ஒரு கூரிய ஆதிப் புலனால் அறிகிறது.
முப்பது அடி தூரத்திற்கு அப்பால், புனித மேரி தெரு தன்னை வேறு சாயலில் வைத்திருந்தது. பின்-மழைச் சிறு தாவரங்கள் தரையோடு தரையாக இன்னொரு அமைதியில். இன்னும் நெருங்கினால், வெள்ளை வாகனம் சிவப்பு இட வல எழுத்துக்களுடன். சாயமிழந்த துணிப்பந்தலை இழுத்துக் கட்டும் இரும்பு முளைக்குத் தெருவில் குழி தோண்ட, தரை அதிர்ந்தது. தார்க் கருப்பில் பேபி ஜல்லிகள் குதித்தன. நான் மரணத்தை உணர ஆரம்பித்தேன்.
யாருடையது என அறியாமல் சுற்றிலும் நிகழ்ந்துகொண்டு இருக்கும் மரணத்தில், இது யாருடையது என அறிய விரும்பினேன். என்னைத் தாண்டி வேகமாக விரைந்துபோய் அந்த வாசல் பக்கம் நின்ற வாகனத்தில் வெளிறிய பிளாஸ்டிக் நாற்காலிகள். அந்த வீடு எனக்குப் பரிச்சயமான ஒன்று. அந்த குறிப்பிட்ட வீட்டில் இருக்கிற ஒரு பேராசிரியையும், அதற்கு அடுத்த வீட்டு ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவியும் எதிர்ச் சுற்றாக என் முன் நடந்து செல்வார்கள்.
மரணம் பைத்தியக்கார விரல்கள் உடையது. யாரையும் பறிக்கும். யாராக இருக்கும் எனத் திரும்பினேன். ஒரு சரிவான கோணத்தில் கண்ணாடிப் பேழை இன்னும் ஒரு குளிருடலை ஏந்துவதற்காக கிடத்தப்பட்டிருந்தது. வேறு யாரும் வாசலில் இல்லை. இருந்தால் கேட்டிருப்பேன். ’யாருமற்ற மரண வீடு’ என்ற தலைப்பை மனம் உச்சரித்தது.
தெருப்பக்கம் பன்னீர்ப் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. எதிர்ப் புறக் கட்டுமானத்தில் ஒரு வடக்கத்திய இளைஞன், இடது காதில் பொருத்திய கைபேசியோடு, ஒரு அலுமினியப் பாத்திரத்தில் சமையல் துவங்கியிருந்தான். மூன்று கால்களை மட்டும் ஊன்றி அந்த வெள்ளை நாய் சூரியனைப் பார்க்க ஓடிக்கொண்டு இருந்தது.
பன்னீர்ப்பூ வாசனையோடு பன்னீர்ப் பூ இருந்தது.
அதிகாலைச் சமையல் அதனுடைய கொதிப்பில் மூடியிருக்கும் ஈய வட்டத் தட்டை சிறுகுரலுடன் நகர்த்தியது.
வலப்பக்க பின் கால் தொய்வுடன் செல்லும் நாயின் வால் உயர்ந்திருந்தது.
நான் நடப்பதை நிறுத்தவில்லை.
சுற்றி நிகழ்வதை எல்லாம் அதன் போக்கில் நிகழ விடுகிறது. அது நிகழ்கிறது. மரணம் எப்போதுமே அப்படித்தான்.

No comments:

Post a Comment