Saturday 28 October 2017

நாளைக்குச் செல்வது




நாங்கள் இருந்த வெட்ட வெளியில்
முதலில் ஒரு கதவைத்தான் பொருத்தினார்கள்.
அப்புறம் எங்களுக்கு மேல் பறந்த பறவைகளை மறைத்துக்
கூரை வேய்ந்தார்கள்.
சுற்றிலும் நான்கு சுவர்கள் வளர்க்க அவர்களிடம்
சற்றுச் சிரமம் தெரிந்தது.
எங்கள் அருகில் இருந்த பூனைக்குட்டியை
வெளியேற்றியபோது அது குரலிட்டது.
எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று துளாவிப் பார்த்தவர்கள்
சில புத்தகங்களையும் சிறு புல்லாங்குழல் ஒன்றையும்
எங்கள் வசமிருந்து எடுத்துக் கொண்டனர்.
‘புதிதாக ஒரு வாசனை வருகிறது’ என்று  அடைபட்ட காற்றை
இழுத்து நுகர்ந்தனர்.
‘நீங்கள் பத்திரமாக இருப்பதற்காகவே
இவ்வளவு மெனக்கெடுகிறோம் தெரியுமா?’ என்று அகன்றார்கள்.
கதவை வெளிப்புறமாகப் பூட்டுகிற உலோகச் சத்தம்
எங்கள் தலையில் பாறை போல் உருண்டது.

%

2.

பழகிய காலணிகளை
இருட்டுக்குள் கால் நுழைத்து
அணிந்துகொள்வது போல இருந்தது
கழற்றிப் போடப்பட்டிருக்கும்  இருட்டில்
இன்றைய இரவின் ஊடாக
நாளைக்குச் செல்வது.

%

1 comment:

  1. கழற்றிப் போடப்பட்டிருக்கும் இருட்டில்// ரசித்தேன்.

    பறவைகள், புத்தகங்கள் , பூனைகள், புல்லாங்குழல் அற்ற சவம் ஒத்த மனிதனின் கடைசி மூச்சோ அக்காற்றின் வாசனை...

    ReplyDelete