Thursday 12 October 2017

எங்கேயோ
எல்லாப் பெட்டிக் கடைகளிலும் வாழைப் பழத்தார் தொங்கிக்கொண்டு இருக்கும்.  எங்கள் பக்கத்தில் அதிகம் தொங்குகிற தார் ‘மொந்தாம் பழம்’ என்று சொல்லப்படும் மொந்தன் பழம் அல்லது நாட்டுப் பழம். மோரிஸ் என்கிற பச்சை நாடான், கோழிக்கோடு என்கிற ரஸ்தாளி, செவ்வாழை எல்லாம் பிற்பாடு வந்தவை.
கொஞ்சம் கனிந்த தாராக இருக்கிறதே என்று அந்தக் கடைக்குப் போய் இருந்தேன். வழக்கமாக வாங்குகிற கடை இல்லை. புதியது. தாரிலிருந்து நாமாகப் பிய்த்து எடுத்துக் கொள்வதில் நமக்கும் அந்த வாழைத்தாருக்கும் ஒரு ‘உருத்து’ வந்துவிடும். அந்த வளைந்த அடிக்காம்பின் குளிர்ந்த பருமன் உங்களிடம் அப்படியே இருக்கும்.
கடையில் இருந்தவருக்கு ‘என்னை எங்கேயோ பார்த்திருப்பது போல’ இருந்திருக்கிறது. கொஞ்சம் கரிசனத்தோடு பார்த்தால். எல்லா முகங்களுமே அப்படி ஏற்கனவே பார்த்ததாகவே தோன்றும்.
‘ எங்கே இருக்கியோ?’ என்று கேட்டார். ‘அந்தக் கல்வெட்டாங்குழிப் பக்கம் தெற்கே பார்த்த மூணு வீடுகளில் ஒன்று’ என்றேன்.
‘இந்த சர்ச்சிற்குத்தான் வருவீர்களா?’ என்றார். பதில் சொன்னேன். ‘இதுக்கு முந்திப் பாளையாங்கோட்டையிலே இருந்தேளோ?’ என்பதற்கு, ‘இல்லை . எனக்கு டவுண். மேல ரதவீதி சுடலமாடன் கோவில் தெரு. சந்திப் பிள்ளையார் முக்குப் பக்கம்’ என்று விவரம் சொன்னேன்.
அவருக்கு விடை கண்டு பிடித்துவிட்ட சந்தோஷம் வந்துவிட்ட முகம். இதுவரை தோலுக்கு அடியில் இருந்த சிரிப்பு மேலே வந்து, ஒட்டின கன்னத்தில் படர்ந்துவிட்டது. கண்களின் ஓரத்தில் சதை திரண்டு இடுங்கிப் பார்வையில் ஈரப்பூச்சு மினுங்கியது. ‘ சரிதான். நான் டி.பி.ட்டியிலே கண்டக்டரா ஓடிக்கிட்டு இருந்தேன்’. என்று சிரித்தார். சற்று உட்புறமாகச் சரிந்திருந்த புகையடித்த பற்கள். தனபேரின்பம் என்று எனக்குள் இருந்த பெயரை அவர் டி.ப்பி.ட்டி என்று உச்சரித்த விதத்தில் அவர் எனக்கும் தெரிந்தவர் ஆகிவிட்டார். அவரை நான் பார்த்ததே இல்லை. அவரும் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
‘இங்கே குடி வந்து எத்தனை வருஷம் இருக்கும்?’ என்றார். இதற்குள் பழங்களுக்குரிய தொகையைக் கொடுத்திருந்தேன். ‘இருவது ரூவா தான் போட்டிருக்கேன்’ என்ற சலுகையுடன், இந்தக் கேள்வி அவரிடம்.
‘பத்துப் பதினஞ்சு வருஷம் இருக்கும்’ என்று என் பைக் பக்கம் வர, அவரும் சற்று நகர்ந்து வெளியே வருகிறார். உள்ளே நிழலில் இருந்து வியாபாரப் பேச்சுக்கொடுத்த போது இருந்ததை விட, வெயிலில் ஒல்லியாகவும் தளர்ந்தவராகவும் தெரிகிறார். அதிகம் குடித்து ஓய்ந்த ஒருவராக இருக்கலாம்.
‘கல் வெட்டாங் குழிப்பக்கம் வீடுண்ணு தானே சொன்னிய?’ முகம் இளகி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் மட்டும் கொம்பு மாதிரி இரண்டு பள்ளம்.
‘ஆமா’ நான் அந்தப் பள்ளங்களில் இருந்து அவரை வெளியேற்றிக்கொண்டு இருந்தேன். என் பைக் சீட்டை அவர் துடைப்பது போலத் தடவிக்கொண்டு இருந்தார்.
‘இப்போ அங்கே பூச்சி நடமாட்டம் இருக்கா?’ என்றார்.அவர் சொல்லியது நெளிந்து என்னைத் தாண்டிச் செல்வதற்குள், அவரே, ’முன்னால எல்லாம் அந்தப் பக்கம் அது ஜாஸ்தி’ என்றார்.
அவர் ஏதோ ஒரு புதிய திசையை எனக்கும் அவருக்கும் இடையில் உண்டாக்கியிருந்தார். அதில் ’பூச்சிகள்’ சதா ஊர்ந்து நெளிந்துபோனபடி இருந்தன. என் பாதையின் குறுக்கே எந்த அவசரமும் இன்றிப் போகிற ஒரு வால் சுழிப்பின் பளபளப்புத் தென்பட்டது.
‘முன்ன மாதிரி இல்லை.இப்ப ஒண்ணும் கண்ணுல தட்டுப்படக் காணும். கீரிப் பிள்ளை நடமாட்டம் எப்பமாவது இருக்கு’ – இப்படிச் சொல்லும் போது எனக்கும் வேறு வேறு நினைவுகள் வராமல் இல்லை. ஒரு வெள்ளிக்கிழமை வாசலுக்குள் ஏறி வந்த ஒன்று எந்தப் புடைக்குள் போய் ஒளிந்தது என்று இன்றுவரை தெரியாது. பைக் முன் சக்கரத்துக்குள் ஒன்று நசுங்காமல் தப்பித்திருக்கிறது. பக்கத்து வீடு கட்டுமானம் நடக்கும் போது மணல் அம்பாரத்தில் படுத்திருந்த கருப்பு நாய் விடாமல் ‘குலைத்து’ விரைப்பாக எச்சரிக்கை செய்ய, மழைத்தண்ணீர் போலத் தன்போக்கில் ஒன்று அதன் வலசையில் போய்க்கொண்டு இருந்தது.
அவர் இன்னும் அதே திசையில் தான் பார்த்துக்கொண்டு இருந்தார். கை தன் தடவலை நிறுத்தி பைக் சீட்டின் மத்தியில் அப்படியே படர்ந்திருந்தது.
‘சொல்லி வச்சது மாதிரி, டாண்ணு விடியக்காலம் வடக்கே இருந்து தெக்கே போகும். அதே மாதிரி சாயுங்காலம் டாண்ணு தெக்கே இருந்து வடக்கே திலும்பி வரும். மாயம் மாதிரி இருக்கும். ஒண்ணும் செய்ய ஓடாது. கன்னத்துல போட்டுக்கிட்டுக் கும்பிடுகிறதோடு சரி’ – அவர் குறுக்குக் கை போட்டு இரண்டு கன்னங்களிலும் போட்டுக் கொண்டார்.
‘பால் காய்ச்சி வந்த புதுசில நாங்களும் பார்த்திருக்கோம்’  நான் அவரிடம் சொன்ன போது, அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘ நல்லா இம்புட்டு நீளம், இரு பாகம் சைஸுக்கு இருக்கும்’ அவர் இரண்டு கைகளையும் அகலமாக விரித்திருந்தார்.
‘ஆமா. பார்த்திருக்கேன்’ என்றேன்.
‘அப்படியா. சார்வாளும் பாத்திருக்கேளா?’
கண்ணெதிரே அது மீண்டும் தெரிவது போல, நான் தலையை மட்டும் அசைத்தேன்.
அவர் வேறு ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்போ சரியாப் போச்சா?’ என்றார். 
‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே,இருக்கேண்ணு அதான் முதல்லே இருந்தே தோணிக்கிட்டு இருந்தது’ என்று பைக்கின் மேல் வைத்திருந்த கையை எடுத்து விலகிக் கொண்டார்.
%


2 comments: