Tuesday 9 December 2014

உயரப் பறத்தல்.





இந்தப் பெருமழைக் காலத்தில் நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?

ஒரு இசைஞன் என்றால், நீங்கள் மழையின் சுருதிக்குப் பாடிக்கொண்டு இருப்பீர்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த இசை கேட்பீர்கள்.. இன்றைய உங்களுடைய தேர்வு அனுஷ்கா ரவிஷங்கர் சிதார் என்றால் அது 34 நிமிடங்கள் வரும். அந்த 34 நிமிடங்களை தற்சமயத்திற்கு மழை பார்க்க ஒப்புக்கொடுத்து விடுவீர்கள்.

நீங்கள் ஒரு ஓவியன் எனில், இந்த மழையில் இதுவரை நீங்கள் வரைந்திராத ஒரு ஓவியத்தை இப்போது வரைந்துவிட நினைப்பீர்கள். உங்கள் அறையின் ஜன்னல் திரையோரம் நின்று மழை பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் தோழியைக் கூட உங்களால் உணரமுடியாது. வழக்கமாக நீங்கள் குழைக்கும் உங்கள் பிரதான வண்ணங்களில் இருந்து முற்றிலும் விலகிய ஒரு கலவையை நீங்கள் திரட்டியபடி இருப்பீர்கள்.

நீங்கள் ஒரு கவிஞன் எனில், இந்த மழையின் ஒவ்வொரு சரமும் கூர் தீட்டி உங்களிடம் தரும் சொற்களை உங்களின் கைகளில் வைத்துப் பதறிக்கொண்டு இருப்பீர்கள். ஏற்கனவே கொல்ல நினைத்தவரை இந்தச் சொற்களால் கொல்ல முடியாது என்று உங்களுக்குத் தெரிந்துபோயிருக்கும். உங்களின் அடிவயிற்றில் பாய்ச்சிக்கொள்ளவும் தீர்மானிக்க முடியாமல், உங்கள் காகிதத்தில் மழை சொட்டி, ஒற்றை நெடுக்கு வாட்டுச் சீன எழுத்துப் போல, அது இறங்கிக்கொண்டு இருக்கும்.

நான் என்ன செய்துகொண்டு இருக்கிறேன் தெரியுமா? இந்த முன்னுரையை எழுதிக்கொண்டு இருக்கிறேன். சற்று உடல் நலிவுடன் ஈஸ்வரியம்மா கண்ணயர்ந்திருப்பது எனக்கு எதிரே தான். ஒரே ஒரு சாளரக் கதவு மட்டும் திறந்திருக்கும் மழைக்கால வெளிச்சம் கட்டிலில் படுத்திருக்கும் பிணியாளர் மீது விழும் நேரம் உண்டாகும் துக்கம் அடர்த்தியானது. ஒரு பொது மருத்துவ மனையின் தீவிர சிகிட்சைப் பிரிவுப் படுக்கை வரிசையில் இருக்கும் ஒரு சினேகிதனுக்கு உதவச் சென்ற, ஒரு தினத்தின் அடர்மழையை ஒப்பிடுகையில், இந்த மழை அப்படி ஒன்றும் வலுவானதில்லை. எனக்கு எதிரேயான இந்தக் காட்சியும் வலியானதில்லை.

இந்த முன்னுரையின் முதல் வரியை, நான் நேற்றே அடைந்துவிட்டிருந்தேன். இந்த வார விகடன் இதழில், ‘பேசாத பேச்செல்லாம்பேசுகிற ப்ரியா தம்பி அந்த வரியைத் தந்திருந்தார். அவர் காட்டியிருக்கும் ரேகாவும், சேகரும், மலைநகர்  இளைஞனும், உலகு அத்தையும், மூக்கன் மாமாவும், ’பிரணவம்படத்தின்  மோகன் லாலும், அனுபம் கேரும், ஜெயப்ரதாவும் கருகமணிப் பாசிகள் கோர்க்கப்பட்ட மாலையை, துர்காவின் மரணத்திற்குப் பின், நூலாம்படைச் சிரட்டையில் இருந்து எடுத்துவைத்துக்கொண்டு, குளத்தில் வீசி எறிவதற்கு முன் நிற்கும்பதேர் பாஞ்சாலிஅப்புவின் கைகளைப் போல என்னிடம் கனத்துக் கிடக்கிறார்கள்.

அதையெல்லாம் விட, அந்த உலகு அத்தையும் மூக்கன் மாமாவும் எங்கள் அப்பா கூடப் பிறந்த/பிறக்காத சகோதரியாகவும், எங்கள் அம்மா கூடப் பிறந்த/பிறக்காத சகோதரனாகவும் இருந்தார்கள். நானும் கூட, தன்னுடைய 81 வயது நிறைந்த மனைவியை, ‘குளிப்பாட்டி, தூக்கிக்கொண்டுபோகிற நேரத்தில், கிட்டத் தட்ட அவரை முத்தமிடக் குனிந்த ஒரு கனிந்த கணவரை அறிவேன். மூக்கன் மாமா வணக்கத்திற்கு உரியவர்தான். அதை விட வணக்கத்திற்கு உரியது, உலகு அத்தை அவருக்குக் கொடுத்த தீராத, முடிவிலி முத்தங்கள்.
பிரணவத்திலும் உலகு அத்தையும், மூக்கன் மாமாவும், சேகரும், ரேகாவுமே வேறு வேறு பெயர்களில் நடமாடிக்கொண்டு இருந்திருப்பார்கள். நடமாடிக்கொண்டு இருக்கிறார்களா? யார் சொன்னது? அவர்கள் வாழ்ந்துகொண்டு அல்லவா இருக்கிறார்கள். நடமாடுவது எல்லாம் நம்மைப் போன்ற, புரிதலே அற்ற சராசரியரே அல்லவா.

புரிந்துகொள்கிறவர்களும் புரிதல் உடையோரும் எங்கும் இருக்கிறார்கள். இன்று அதிகாலையில், முகநூல் உள்-பெட்டியில்  ‘பெரியப்பாஎன்ற குரல். வித்யா முத்துசாமியுடையது. நேற்று அவரும் ப்ரியா தம்பி கட்டுரையைப் படித்துவிட்டு, என்னையும் என் கதைகளையும் நினைத்திருக்கிறார். அவர் ஊரிலும் மழை பெய்திருக்கிறது. ’பிரணயம்படத்தை யூ ட்யூபில் தரவிறக்கிப் பார்த்திருக்கிறார். அழுதிருக்கிறார். ‘நீங்க பார்த்து இருக்கீங்களா பெரியப்பா? பார்க்காவிட்டால் இதே போல மழை பெய்கிற ஒரு பின் மாலையில் பாருங்கள்என்று இணைப்பைக் கொடுத்திருந்தார்.

இன்று பார்க்க வேண்டும். ‘உயரப் பறத்தல்தொகுப்புக்கு இந்த முன்னுரையை எழுதிமுடித்த கையோடு பார்க்க வேண்டும். நான் நம்புகிறேன். அது வரை மழை பெய்யும். என்னுடன், ப்ரியா தம்பி, வித்யா முத்துசாமி, ஈஸ்வரியம்மா, மூக்கன் மாமா, உலகு அத்தை எல்லோரும் இருப்பார்கள். அவர்கள் மட்டும்தானா? இந்தத் தொகுப்பின் பதினேழு கதைகளிலும் வரும் லோகு  மதினி, கோமு அக்கா, ராமையா, ஆவுடை, தெய்வு, பிச்சம்மா, அருணாசலம், ஜெகன், மல்லேஸ்வரி, சுபத்ரா, பாத்திமா, அலர்மேலு என்கிற அம்மு, பானு, முருகேசன், சிவனுப்பாண்டி, சித்திரை, திருவாரிய முத்து, தங்கம்மை, மஹேஸ்வரி, நாகலிங்கம் எல்லோரும் இருப்பார்கள்.

எல்லோருடனும், எல்லோருமாகசுந்தரம்எனும் நானும் இருப்பேன். என் மகளாக தினகரி இருப்பாள். தினகரியிடம் தான் அந்தப் படம் இருக்கும். கடலும் பாய்மரப் படகும், ஒரே ஒரு ஆலாப் பறவையும்  பறக்கும் அந்த முப்பரிமாணப் படத்தை அவள் அர்ச்சன் அப்பாவிடம் காட்டுவாள். அந்தப் பறவை அவளுடையஜோமாதிரிப் பறந்துகொண்டு இருக்கும். அர்ச்சன் அப்பா தினகரியின் உச்சந்தலையில் ஒரு கையை வைத்து, அவருடைய சுட்டுவிரலைப் படத்தில் இருக்கிற பறவையில் இட்டு, ‘எவ்வளவு உயரத்தில் பறக்குது பாருஎன்று சொல்வார்.

நானும் அப்படியே சொல்கிறேன்இந்த வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் என் சுட்டுவிரலை வைத்து, ‘எவ்வளவு உயரத்தில பறக்குது பாருஎன்று என் கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். சொல்லியும் வருகிறேன்.
1998ல் பாவை சந்திரனின்கண்மணி க்ரியேட்டிவ் வேவ்ஸ்பதிப்பாக  முதலில் வந்த இதை, சந்தியா பதிப்பகம் இரண்டாவதாக 2010ல் வெளியிட்டது. இப்போது மீண்டும் விகடன் பிரசுரம் புதிய பதிப்பாக வெளியிடுகிறது.

அகம் புறம்ஆனந்த விகடனில் வாரா வாரம் வெளியான போதும் சரி, அது விகடன் பிரசுரமாகப் புத்தகமான போதும் சரி, நான் மேலும் சில ஆயிரம் புதிய வாசகர்களை அடைந்தேன். இந்தத் தொகுப்பும் அதையே எனக்குச் செய்யும் என மகிழ்ச்சியுடன் நம்புகிறேன்.

இந்தத் தொகுப்பு முதலில், என் மீது பிரியமும், என் எழுத்தின் மீது தொடர்ந்த அக்கறையும் கொண்டவர்களான கந்தவர்வனுக்கும், .தமிழ் செல்வனுக்கும் சமர்ப்பிக்கப் பட்டிருந்தது. இப்போதும், எப்போதும் இது அவர்களுக்கானதே.

கல்யாணி.சி
திருநெல்வேலி – 627007.
14.11.2014.


No comments:

Post a Comment