Monday 8 December 2014

நொடி நேர முழுவட்டம்எழுதுகிறவனுக்கு  அவன் எழுத்து புத்தகமாக வருவதில் உண்டாகும் மகிழ்ச்சி தனி. நான் இதற்கு முந்திய பருவத்தில் அல்லது காலத்தில் என்னுடைய எந்தத் தொகுப்பும் வருவதில் ஆர்வமும், வந்துவிட வேண்டும் என்பதில் விருப்பமும் இவ்வளவு கொண்டது இல்லை. இந்தக் கவிதைகள் தொகுப்பு ஆகிறதைக் குறித்து உள்ளூர அக்கறையும் , வெளியாகுமா என்று வெளிப்படையாகக் கவலையும் கொஞ்ச நாட்களாகவே இருந்து வருகின்றன.

‘பூனை எழுதிய அறைதொகுப்புக்குப் பின் இது வருகிறது. அந்தத் தொகுப்பில் உள்ளவை எப்படித் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மாதத்தின் தினங்களில் எழுதப்பட்டனவோ, அதே போல இவையும் தொடர்ந்து நாள்தோறும், இரு கட்டங்களில் முகநூலிலேயே நேரடியாகப் பதிவேறின. ஒரு கவிதையும் இதழ்களிலோ, சிற்றிதழ்களிலோ  அச்சேறியது அல்ல.

மனுஷ்யபுத்திரன் கூட, சமீபத்தில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஒட்டிய சந்திப்பில், ‘பத்திரிக்கைகளில் வந்த பிறகு முகப்புத்தகத்தில் வெளியிடலாமேஎன்றார். ‘ யார் வெளியிடுகிறார்கள்?’  என்று சிரித்துக் கொண்டே அவரிடம் கேட்டேன். உண்மையைச் சிரித்துக்கொண்டேதான் கேட்கவேண்டியது இருக்கிறது. என்ன? கொஞ்சம் உப்புக் கைத்த சிரிப்பு. உப்பு அப்படி ஒன்றும் லேசுப்பட்டது இல்லையே.

ஆனால் எந்த வருத்தமும் இன்றி, மிகுந்த நிறைவோடும், தடையற்ற புத்துணர்வோடும்தான் இவற்றை எழுதினேன். கலாப்ரியாவும் போகன் சங்கரும் அப்படித்தான் செய்துகொண்டு இருந்தார்கள். சக்தி ஜோதியும் அதே மன நிலையோடுதான் இருந்தார். கடங்கநேரியான். கு.விநாயக மூர்த்தி, ரவி உதயன், ஷான் கருப்பசாமி கூட அப்படித்தான். இதைத் தவிர முகநூல் வழியாக மட்டும் அறியப்பட்ட இன்னும் ஏழெட்டுப் பேர்கள், யாவரும் எழுதினோம். குறையொன்றுமில்லை.

தொடர்ந்து சூதாடுவது போல, அதிலும் ஜெயிப்பது போல ஒரு இடையறாத அழைப்பு இருந்துகொண்டே இருந்தது. இந்த இரண்டு வருடங்களில் அதில் எழுதியவை, கடந்த இருபது வருடங்களில் எழுதிய மொத்தக் கவிதைகளையும் விட அதிகம். எண்ணிக்கை சார்ந்து மட்டும் அல்ல, தரம் சார்ந்துமே இவை கூடுதல்தான்.  என் தரம் அல்லது என் எழுத்தின் தரம் என்பதை மற்றெவரையும் விட, முதலில் அறிகிறவன் நானே என்பதால், என்னுடைய நிர்ணயங்களை இங்கே இப்படி முன்வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இதே தயக்கமின்மையோடுதான், கிட்டத் தட்ட நூற்றுத் தொண்ணூறைத் தொடுகிற அளவில் முகநூலில் பதிவேறிய கவிதைகளை, இவை தொகுப்பு ஆகிறபோது உண்டாக்கக் கூடிய வாசக அனுபவங்களையும் வாசிப்பு மன நிலைகளையும் கவனத்தில்கொண்டும் கவனித்துக் கொண்டும், நானே கணிசமாகக் குறைத்துக் கொண்டேன். அன்று எழுதி மறுநாளில் நூற்றுப்பேர் விருப்பத்திற்கு உரியதாக இருந்த, இதைத் தொகுக்கும் போது வாசிக்கும் நேரத்திலும் விருப்பத்திற்கு உரியதாகவே இன்னும் இருக்கிற பல கவிதைகளை, என்னுடைய இன்றைய தேர்வு செய்யும் மன ஒருமையில், சாய்ந்தொரு பால் கோடாமல், சால மிகுக்காமல் பார்த்துக் கொண்டேன்.

இக் கவிதைகளை, இவ்வளவு எண்ணிக்கையில், எந்தெந்த தினங்களில் இருந்து எந்தெந்த திசைகளைப் பார்த்தோ, அல்லது யார் யாராகவோ இருந்து எதை எதையோ அறிந்தோ, மலர்ந்தோ, கனிந்தோ, உதிர்ந்தோ எப்படி எழுதினேன் என்பது ஒரு மாய வியப்பாகவே இருக்கிறது. தனிப்பட்ட முறையில் மிகுந்த நெருக்கடியும், வாதையும், தனிமையும், பகிர்ந்துகொள்ள இயலாத துயரும் சிக்கலும் நிறைந்த ஒரு வாழ்நிலையின் இடையே, சிறு ஒற்றைப் பேனாவின் நிழலில் நான் எவ்வளவு தகிப்பாறி இருக்கிறேன் என்பதும், வெவ்வேறு அழுத்தமான குரல்களில், இதுவரையற்ற நீண்ட வடிவங்களில், அதே பரிவோடும், அதைவிடக் கூர்மையோடும், கனிவின் திரட்சியோடும், காம்பைவிட்டுக் கழன்று உதிரும் ஞானத்தோடும் இவை அமைந்திருக்கின்றன என்பதும் உணர்ந்து, இந்தக் கவிதைகளை அவையே என்னைக் குளிர்ந்து போகாது வெதுவெதுப்போடு வைத்திருப்பதால் என் நெஞ்சோடும் அடிவயிற்றோடும் அவற்றை சேர்த்தணைத்துக் கொள்கிறேன்.

இக்கணம் நான் உயிரோடு இருப்பதற்கும் உயிர்ப்போடு இருப்பதற்கும் இவையே காரணிகள் என்பதால், என் இரு கைகளிலும் அருவமான அகல்களைப் போல இவற்றை ஏந்திக் கொள்கிறேன். அந்தச் சிறு மீன் போல, நொடி நேர அரைவட்டம் உண்டாக்கி, காலாதீதமாகப் பொங்கிப் பெருகும் கவிதையின் மகா நதியில், நான் வெயிலில் துள்ளி, மறுபடி நீருள் துளாவி நீந்திச் செல்கிறேன்.

இந்த்த் தொகுப்பை யார் யாருக்கெல்லாமோ சமர்ப்பிக்கலாம். எனக்கு முந்தியும் , என்னை முந்தியும் செல்கிற எத்தனையோ மூத்த, சம, இளைய தலைமுறைக் கவிஞர்களின் அடர்த்தியான பட்டியலுக்கு நான் மரியாதை செய்ய மிகவும் விரும்புவதுண்டு.

தேவ தச்சனுக்கு அல்லது மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அறியப்பட்ட அவர்களுக்கு எந்தப் புதிய பூச் செண்டையும் நான் அளித்துவிட முடியாது. அவர்கள் கவிதைகளின் வெளிச்சமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

முகுந்த் நாகராஜனும் அறியப்படாதவரோ, வெளிச்சம் பெறாதவரோ அல்ல தான். உரைநடையில் அசோகமித்திரனிடம் உணர்கிற ஒரு அபூர்வமான, பெருநகரம் சார்ந்த மானுட உணர்வை, என்னிடம் தன் கவிதைகளின் வழியாகத் தொடர்ந்து உண்டாக்குகிறவராக முகுந்த நாகராஜன் இருக்கிறார். ரயில்பயணம் சார்ந்த, குழந்தைகள் வாழும் அவருடைய சித்திரங்கள் அசலான பிரத்தியேகம் உடையவை. ஒரு சப்-வே வழியாக நம்மைக் கூட்டிச் செல்ல அவர் வரிகளால் முடிந்திருக்கிறது.

அவருக்கு நினைவு இருக்குமோ என்னவோ?. இருக்கும். எதையும் மறக்கிற ஒருவனால் இப்படி கவிதைகள் எழுத முடியாது. அது ஒரு உயிர்மைப் பதிப்பக புத்தக வெளியீடு. சில வருடங்களுக்கு முன் தேவ நேயப் பாவாணர் அரங்கில் நடந்தது. முகுந்த் நாகராஜனின் கவிதைத் தொகுப்பை அன்று வெளியிட இருந்தவர் வரவில்லை. தற்செயலாக அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த என்னை, அதை வெளியிடச் சொல்லி ஹமீத் கேட்டுக்கொண்டார். நான் வெளியிட்டேன். முகுந்த் நாகராஜனும் நானும் ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளவில்லை. மேடையிலும் மேடைக்கு வெளியிலும் நானும் அவரும் ஒரே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை

இப்போது மட்டும் பேசிக் கொள்ளப் போகிறோமா என்ன? ஒரு சொல்லும் அற்ற அன்புடன், இந்தத் தொகுப்பை முகுந்த் நாகராஜன் கைகளில் தருகிறேன்.
பேச வாய்க்கும் வரை பேசாது இருப்போம்.
முழுவட்டம் அப்படித்தான் இருக்கும்.

கல்யாணி. சி.
15-10.2014.


1 comment:

  1. உண்மையைச் சிரித்துக்கொண்டேதான் கேட்கவேண்டியது இருக்கிறது. என்ன? கொஞ்சம் உப்புக் கைத்த சிரிப்பு.

    ஒரு சப்-வே வழியாக நம்மைக் கூட்டிச் செல்ல அவர் வரிகளால் முடிந்திருக்கிறது.


    பேச வாய்க்கும் வரை பேசாது இருப்போம்.
    முழுவட்டம் அப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete