Friday 1 November 2013

தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள்.











காந்தி டீச்சர் மாதிரி இருக்கு இல்லையா கஸ்தூரி? நமசு கேட்டுக்கொண்டே தண்டவாளங்கள் பக்கம் கையை நீட்டினான். கஸ்தூரி வேறு எங்கோ பார்த்தாள். நல்ல வெயில். எதிர்ப்பக்கம் இருந்த பெரிய அரசமரத்தின் இலைகள் மினுமினுவென்று புரள்வது மட்டும் தெரிந்தது அவளுக்கு.
‘தெரியுதா? அச்சு அசல் அப்படியே இருக்கு நமசு சொல்லச் சொல்ல கஸ்தூரிக்கு இப்போது அந்த உருவம் தண்டவாளம் தாண்டிப் போவது பிடிபட்டது. ‘ஆமாங்கஎன்று சொன்னாள். முதுகுப் பக்கம் தெரிவதை வைத்து உறுதியாக அடையாளம் சொல்ல முடியவில்லை.  ஒரு செவலை நாய் எதிர்ப்பக்கம் இருந்து இங்கே வருவதைப் பார்க்க ஆரம்பித்தாள்.
இந்தத் தண்டவாளங்கள் குறுக்கு மறுக்காகக் கிடந்து ஒரு இடத்தில் விலகி, வெகுதூரம் போவது நன்றாக இருக்கும். இப்படி யாராவது தண்டவாளங்களை, சரல் கற்களை, தும்பைச் செடியை எல்லாம் தாண்டி, ஒற்றை ஆளாக நகர்ந்து மறைவது என்னவோ செய்கிறது. அதுவும் அப்படிப் போகிறவர் நமக்குத் தெரிந்த ஒருவர் என்றால் கேட்கவே வேண்டாம்.
‘டீச்சர் மாதிரியே இருக்கு அல்லவா?
கஸ்தூரி நமசுவின் அந்தக் கேள்வியையே விட்டுவிட்டாள். வேறொரு புள்ளியில் இருந்து ஆரம்பித்தாள். முதல் முதல் அவங்களைப் பார்த்தது தான் ஞாபகம் வருது’  என்று கஸ்தூரி சிரித்தாள். ஆறு ஏழு மாதச் சூலின் வயிறு மேடிட்டு, பருத்திச் சேலைக்குள் இருந்து விம்மிக்கொண்டு இருக்க, சாயுங்கால வெயிலில் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை ஒன்றிலிருந்து சிரிக்கிற அந்தச் சிரிப்பை நமசுவுக்குப் பிடித்திருந்தது. அவள் பக்கம் வந்து, கஸ்தூரியின் கையை லேசாகப் பிடித்துக் கொண்டான். கஸ்தூரி ஒன்றுமே கேட்கவில்லை. ஆனால் நமசு, ‘ஒண்ணுமில்லைஎன்று சொன்னான். அப்படி அவன் சொன்னது கஸ்தூரிக்கும் பிடித்திருந்தது. அவள் நமசுவைப் பார்த்து, ‘ஒரு யானையையே அல்லவா வீட்டுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்திட்டாங்கஎன்றாள்.
%
யானை பிளிறுகிற சத்தம் கேட்ட்து.
நமசுவுக்குக் கல்யாணம் ஆன புதிது. நமசுவின் அக்காவும் பிள்ளையுமாய் லீவுக்கு வந்திருந்தார்கள். அம்மா, அக்கா, கஸ்தூரி எல்லோரும் அடுக்களையில் இருந்து பேசுகிறார்கள். பட்டாசலோ, இரண்டாம் கட்டோ,அடுக்களையோ, புறவாசலோ எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பேச விஷயம் இருக்கிறது. அப்படி என்ன பேசுவார்கள் என்று தெரியவில்லை. இடையில் இடையில் சிரிப்பு . கஸ்தூரியும் அக்காவும் மட்டும் இருக்கிற சமயம் இந்தச் சிரிப்பு வேறு மாதிரிக் கேட்கிறது. ஒரு சோப்புக் கொப்புளம் பெட்ரோல் நீலமும் வாடாமல்லிச் சிவப்பும் படித்துறையில் உரசின மஞ்சளுமாகத் திரண்டு பெரியதாகி, எல்லாப் பக்கங்களிலும் வர்ணங்களைச் சிதறி வெடிக்கிறது போல அது. சரசு அக்காவுக்குச் சிரித்தால் கண்ணீர் வந்துவிடும். கண்ணீரைப் புறங்கையால் தேய்த்துத் துடைத்துக்கொண்டே அக்கா மேலும் சிரிப்பாள். இப்போது அப்படி ஒரு சிரிப்புச் சத்தம் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் நல்லதுதான்.
நமசு முருங்கைப் பூவின் மேல் சுழன்று சுழன்று, மகுடி நாகம் போல ஆடிக் கொண்டு இருக்கும் கருவண்டையே ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு இருக்கையில், யானை பிளிறுகிற சத்தம் மறுபடியும் கேட்டது.
அப்பாதான் கடைசி அறையில் இருந்து வேடிக்கை காட்டுகிறார் போல. அக்கா பையனுக்குச் சொல்கிற கதையில் யானை வந்தால் அப்பா யானை போலப் பிளிறுவார். சிங்கம் வந்தால் கர்ஜிப்பார். சி.எஸ்.ஜெயராமன் மாதிரிப் பாடுவார். உசிலை மணி மாதிரிச் சிரிப்பார். ‘அப்பமொடு அவல் பொரிஎன்று ஆரம்பித்து, ‘மெய்யன்பர்களேஎன்று பேச ஆரம்பித்தால், அப்படியே வாரியார் சுவாமிகள் மாதிரி இருக்கும். இந்தப் பிளிறல் அப்பாவுடையதுதான் என நமசு தீர்மானித்து, ஜன்னலைப் பார்த்தான். கரு வண்டு காணாமல் போயிருந்தது. அதே இடத்தில், முருங்கைப் பூக் கொத்தை அணில்குஞ்சு கொறித்து தலை கீழாகத் தொங்கியது.
ஜன்னல் வழியாகத் தும்பிக்கை துளாவி. மூச்சுவிட்ட போது நமசு பயந்தே போய்விட்டான். ‘யப்பா; என்று அவன் போட்ட சத்தம் பயத்தில் வெளியே கேட்கவே இல்லை. ஜன்னலுக்கு அந்தப்புறம் காந்தி டீச்சர்  நின்றாள். ‘பயப்படாதே. பயப்படாதே’  என்று அவள் சிரிப்பதைக் கண்டு நமசுக்கு ஒரே கோபம். ஒன்று, இரண்டு என யானை ஜன்னல் பக்கத்தில் இருந்து பின்பக்கமாக நகர்ந்ததில், மணிச்சத்தம் கேட்டது. பக்கத்தில் தலைப்பாகை கட்டிக்கொண்டு சின்னப் பையன் களையுடன் நிற்கிற மாவுத்தனின் கட்டம் போட்ட சட்டை தெரிந்தது.  யானை வாடையாகத்தான் இருக்கும். மக்கிய கூரைப் பனையோலை மாதிரி அப்படியொரு வாடை. வெயில் போன்று இந்த வாடை வீடு முழுக்க ஒரே விரல் சொடுக்கில்  பரவி விட்டது. எல்லோரும் வாசலுக்கு வந்தார்கள்.
அம்மாதான் முதலில் நடையை விட்டு இறங்கினாள். ‘எல்லாம் உன் வேலைதானா?’  என்பது போல காந்தி டீச்சரின் தோளைத் தட்டினாள். அப்புறம் கையைப் பிடித்துக்கொண்டாள். பக்கத்தில், தன்னுடைய வீட்டுக்கு முன்னால் இவ்வளவு பெரிய யானை நிற்பதைக்கூட அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எங்கள் வீட்டு வாசலின் வெவ்வேறு இடங்களில் நாங்கள் நின்றது போல, தெருவிலும் ஏழெட்டுப் பேர், ஹெட் மாஸ்டர் வீட்டில் யானை வந்து இருப்பதைப் பார்த்து நின்றார்கள்.  அப்பா சரசு அக்கா மகன் சந்திரனைத் தூக்கிக் கையில் வைத்துக்கொண்டு, ‘என்ன டீச்சர் விளையாட்டு இது?’  என்றார். கோபமாகச் சொல்வது போல் வெளிக்குத் தெரிந்தாலும். அதில் ஒரு சிரிப்பு இருந்தது.
காந்தி டீச்சர் அப்பா முகத்தைப் பார்த்தது போலவும் பார்க்காதது போலவும் நமசுவுக்கு இருந்தது. பார்த்த அந்த ஒரே ஒரு நிமிடத்தின் பிரகாசத்தை எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுப்பதாக, எல்லோரையும் பார்த்து டீச்சர் சிரித்தாள். எங்கிருந்தாவது பேச்சைத் துவங்க வேண்டும் இல்லையா? அதற்காக, ‘நமசைத்தான் கொஞ்சம் பயப்பட வச்சுட்டேன்என்று சொல்கையில், கஸ்தூரியைப் பார்த்தாள். கஸ்தூரி குனிந்தபடி நின்று, சரசக்கா கையைப் பிடித்துக்கொண்டாள்.
‘பரமானந்தம் என் கிட்டே எட்டாம் வகுப்புப் படிச்சவன். கடையத்துப் பையன்என்று யானைப் பக்கம் நின்ற மாவுத்தனைக் காட்டினாள். ‘ அவனுடைய அப்பாவுக்கும் இதே காரியம் தான். பரம்பரையா கை மாறி வருகிற அங்குசம். கீழே வச்சிர வேண்டாம்னு அப்பா கையிலே இருந்து இவன் வாங்கிக்கிட்டான். நல்லா இருக்கான்.என்று டீச்சர் அறிமுகம் பண்ணும்போது யானை துதிக்கையைச் சுருட்டிச் சுருட்டிச் சுழற்றி, தரைக்கு ஒரு அடி உயரத்தில் ஒரு மாயத் தாமரையை வரைந்துகொண்டிருந்தது.
‘ரைஸ் மில்காரர் தோப்புல இரண்டு பேரும் நிண்ணாங்க. பஸ்ஸில் இருந்து  இறங்கும்போதே யானையைப் பார்த்துட்டேன். யானையைப் பார்த்தபிறகு யாராவது நிண்ணு பார்க்காமல் வருவாங்களா?என்று அக்கா பையனைப் பார்த்தாள். ‘ வரமுடியுமா, நீ சொல்லுஎன்று கேட்டாள். விரலை வாயில் போட்டுக்கொண்டே அவன் தாத்தாவை ஏறிட்டுப் பார்த்தான்.
‘பக்கத்தில போய்ப் பார்த்தால் இவன். எனக்குக் கூட முதலில் அடையாளம் தெரியலை. அவந்தான், ‘நான் ஆனந்தம்லா டீச்சர்என்றான். ‘நீங்க ஒருத்தர் தான் டீச்சர் என்னை ஆனந்தம்னு கூப்பிடுவீங்கஎன்று சந்தோஷப்பட்டான். சட்டுண்ணு தோணுச்சு. ஆனையைக் கூட்டிக்கிட்டு என் கூட ஒரு இடத்துக்கு வாரியா ண்ணு கேட்டேன்.  எங்கேன்னு கூடக் கேட்கலை. புறப்பட்டுட்டான்
காந்தி டீச்சர் சொல்வதை எல்லாம் சரி என்பது போல காதை ஆட்டி ஆட்டி யானை கேட்டுக்கொண்டு இருந்தது. அம்மா, காந்தி டீச்சர் பக்கம் இருந்துகொண்டே அக்காவிடம் எப்போது சொன்னாளோ? அக்கா ஒரு சுளவில் பச்சரிசியும் மண்டை வெல்லமும் கொண்டு வந்தாள். கனமாக இருந்திருக்கும். படி இறங்கும் போது கஸ்தூரியும் ஒரு கை தாங்கி அதை வாங்கியது நமசுவுக்குப் பிடித்திருந்தது.
சரசக்கா பையனும் சரி, தெருப்பையன் ஒருவனும் சரி யானை முதுகில் ஏறுவதற்குப் பயப்பட்டார்கள்.  கொப்பரையைத் தூக்க முடியவில்லை. இரண்டு வாளிகளில் தண்ணீர் வைத்ததை யானை துதிக்கையால் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி, எல்லோர் மேலும் பீச்சியது. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருத்தர் அழகாக இருப்பதாக நமசு நினைத்தான். யானை விசிறுகிற தண்ணீரை விட்டு முகத்தை விலக்கிக் கைகளை உயர்த்திய படி, கண் சுருக்கி, மூக்குச் சுழித்து நின்ற அப்பாவை ரொம்பப் பிடித்திருந்தது அவனுக்கு.
%
சரசக்காவும் நமசுவும் ஒருதடவை அப்பாவுடன் காந்தி டீச்சர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அப்பா அம்மாவிடம், ‘ டீச்சர் வீட்டுக்குப் போயிட்டு வந்து விடுகிறோம்’  என்று சொல்வார். காந்தி டீச்சர் என்று பெயரைச் சொல்ல மாட்டார். அதே போல, டீச்சர் வீட்டுக்குப் போனால், ‘ காந்தி, அப்பாவை எங்கே காணோம்?என்று கேட்பார். பெயரைத் தவிர ஒரு தடவை கூட டீச்சர் என்று சொல்ல மாட்டார்.
டீச்சருடைய அப்பாவுக்கு யார் மாதிரியோ முகம். ‘ யார் மாதிரியோ இருக்காங்க அந்தத் தாத்தா’  என்று அப்பாவிடம் நமசு சொல்லிக்கொண்டு இருக்க, அப்பா சிரிப்பார். ‘காமெடியன் ஜானிவாக்கர் மாதிரி டா. வடக்கத்தி ஆளு. ஒனக்கு எங்கே அவரைத் தெரியும்?என்று சொல்கிற அப்பாவின் தோளை காந்தி டீச்சர் லேசாகத் தட்டுவார். அது என்ன தட்டல், அது என்ன சிரிப்பு என்று தெரியாது.
‘தாத்தா நிறைய மியூசிக் எல்லாம் போடுவாரு. கேக்கறீங்களா? ‘ என்று காந்தி டீச்சர்  நமசுவையும் சரசுவையும் அவரிடம் கூட்டிக்கொண்டு போய் விடுவார். அந்த அறையில் சிகரெட் வாடை அடிக்கும். அப்போதுதான் நடக்க ஆரம்பிக்கிற குழந்தையை, வா, வா, வா என்று மூன்று நடு விரல்களையும் மடக்கி அசைத்துக் கூப்பிடுவது போல, இரண்டு பேரையும் பக்கத்தில் வரச் சொல்வார்.
புல்புல் தாராவை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பார். என்ன பாட்டு அது என இரண்டு பேருக்கும் தெரியாது. ஆனால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு பாட்டு முடியும் போதும், ‘ நல்லா இருக்கா குட்டி?’  என்று நமசுவின் கன்னத்தை அல்லது சரசுவின் கன்னத்தைத் தடவி முத்துவார். வானம் மீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே. நீயும் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவேஎன்ற பாட்டை அவர் வாசிக்கையில் அப்பா அவருடைய பக்கத்தில் போய் நிற்பார். அசையாமல் அப்படியே நிற்பதன் மூலம் ஒரு பெரிய மரியாதையை அவர் அளிப்பது நன்றாகத் தெரியும்.
காந்திடீச்சரின் அப்பா ஒரு தடவை பக்கத்தில் அப்படி நிற்கிறவரைப் பார்த்து, அவருடைய மரியாதையை அங்கீகரிப்பது போலத் தலையசைத்துவிட்டு மறுபடியும் புல்புல் தாராவில் விரல்களை ஓடவிடுவார்.
நமசு சரசுவின் பக்கத்தில் போய், ‘தாத்தா காதில எல்லாம் முடி முளைச்சிருக்குஎன்று வாயைப் பொத்திக்கொண்டு ரகசியமாகச் சொல்வான்.
%
அது ராஜபாளையமா வேறு ஊரா தெரியவில்லை. முழுப் பரீட்சை லீவு. நமசு சரசுவுடன் அம்மா வந்திருந்தாள். டீச்சருடைய அப்பாவோடு, பக்கத்தில் இன்னொருவரும் ரொம்பக் குள்ளமாக இருந்தார். காந்தி டீச்சருடைய தாய் மாமாவாம். ஒரு பிரபலமான சர்க்கஸ் கம்பெனியில் கோமாளியாகச் சேர்ந்து ரொம்ப காலமாக அங்கேயே இருந்துவிட்டதாக டீச்சர்தான் சொன்னாள். பாம்பே சர்க்கஸா, கமலா சர்க்கஸா என்று ஞாபகமில்லை. நமசு சின்ன வயதில் பார்த்தது. அதிலும் இப்படி இரண்டு பேர் இருந்தார்கள். இவர் ஜாடையேதான் இருந்தது. சர்க்கஸில் சேர்ந்துவிட்டால், எல்லாச் சிங்கமும் ஒரே மாதிரித்தான் தெரிகிறது. எல்லாப் புலியும் ஒரே மாதிரித்தான் தெரிகிறது. இப்படிக் குள்ளமாகத் தொப்பி வைத்துக்கொண்டு வேடிக்கை செய்கிறவர்களும் ஒரே மாதிரி ஆகிவிடுகிறார்கள். சர்க்கஸ் கூடாரம் எல்லா ஜாடைகளையும் சர்க்கஸ் ஜாடையாக ஆக்கிவிடும் போல.
வயதாகிவிட்டதால் சர்க்கஸ் வேலை போதும் என்று வந்துவிட்டதாகத் தெரிகிறது. அம்மாவையும் மற்றவர்களையும் காந்தி டீச்சர் அறிமுகம் செய்துவைத்தாள். தாத்தா பெயரைச் சொல்லி, ‘எங்க ஹெச்.எம் குடும்பத்தினர்என்று சொல்லும் போது, ‘தாத்தாவை அவங்களுக்குத் தெரியுமா?என்று நமசு,  டீச்சரிடம் கேட்டான். ‘உங்க தாத்தா என்ன மாதிரி ரொம்ப ஃபேமஸ்என்று அவர் சிரித்தார். நீளக் குறைவான கைகளை உயர்த்தி, ‘ரொம்ப ஃபேமஸ்என்று அவர் சொன்னது கண்ணுக்குள் இருக்கிறது.
இதில் ஒரு துயரம் என்ன என்றால், அம்மா, நமசு, சரசு எல்லோரும் டீச்சர் வீட்டில் இருக்கும் போதே அவர் இறந்து போனார். டீச்சர் அப்பா படுத்திருக்கும் கட்டிலை ஒட்டி, ஒரு பிரம்பு சோபாவில், போர்வையை விரித்து அவர் தூங்கினவாக்கில் உயிர் பிரிந்திருந்தது. சர்க்கஸ் கம்பெனியில் இருந்து, மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் வந்து அழுதுகொண்டு ரொம்ப உயர்வாக அவரைப் பற்றிச் சொன்னார்கள். சிங்கங்களைப் பழக்குவதிலும், சிங்கங்களுக்கு உண்டாகும் உபாதைகளுக்கு மருத்துவம் செய்வதிலும் அவர் அவ்வளவு கெட்டிக்காரராம். ஒரு சிவப்பாக உயரமாக இருந்தவர் சொன்னார்.  அவரைப் போல ட்ரப்பீஸ் விளையாட யாரும் இல்லையென்றும், ஷோவில் ஒரு தடவை கூட பாரில் இருந்து கை தவறி வலையில் விழுந்து அவரைப் பார்த்ததே கிடையாது என்றும் அந்தப் பெண் மலையாளத்தில் சொல்லியது. அம்மா அதை முற்றிலும் விளங்கிக்கொண்ட்து போல, அழுதுகொண்டே நின்றாள்
ரொம்ப நாட்களுக்குப் பிறகு, சரசு அக்கா கல்லூரி விடுதியில் இருக்கையில் ஒரு சொப்பனம் கண்டதாகவும், அதில் முழு சர்க்கஸ் கோமாளி உடையில் அவர் வந்ததாகவும், பாம்பு உரித்த சட்டை போல ஒன்றைக் கையில் தொங்கப் போட்டுக்கொண்டே, பாறை பாறையாக மேலே ஏறிப் போவதாகவும் ஞாபகம் இருப்பதாக, அக்கா காந்தி டீச்சருக்கு லெட்டர் எழுதியிருந்தாள் போல.
காந்தி டீச்சர் அப்பாவிடமும் அம்மாவிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டிக்கொண்டு இருந்தாள்.எனக்கு ஒரு லெட்டர் எழுதணும்னு இதுவரை அதுக்குத் தோணலை பாருஎன்று அம்மா சொன்னாள்.
%
இதுவும் சரசு அக்கா சம்பந்தப்பட்டதுதான்.
நமசு எஞ்சினீயரிங் முதல் வருடம் சேர்ந்து விட்டானா அல்லது ப்ளஸ் 2 படிக்கிறானா என்று ஞாபகம் இல்லை. அம்மா கவலையாகவே எப்போதும் இருந்தாள். அப்பா சத்தம் சற்று உரக்கவும், அம்மா அழுவது போலவும் அடுத்த அறையில் இருந்து நமசுவுக்குக் கேட்கும். என்ன விபரம் என்று தெரியவில்லை. சரஸ்வதி என்று அப்பா சத்தமாகச் சொல்வதைப் பார்க்கிற போது, சரசக்கா விஷயம் என்று தெரிகிறது.
அம்மா படிப்பை நிறுத்திவிடலாம் என்கிறாள். அப்பா,படிப்பு ஒன்றுதான் சொத்து. அதை நிறுத்த முடியாதுஎன்கிறார். ஒவ்வொரு சனி, ஞாயிறும் காந்தி டீச்சர் வீட்டுக்கு வந்துவிடுகிறார். மூவரும் உட்கார்ந்து உட்கார்ந்து நெடு நேரம் பேசுகிறார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை முழுவதும் பகலில் யாருமே சாப்பிடவில்லை. அன்று இரவு காந்தி டீச்சர்தான் நமசு வீட்டு அடுக்களையில் நின்று உப்புமா கிண்டினாள்.
எல்லோரும் ஒன்றாகத்தான் சாப்பிட்டார்கள்.. அப்பா குனிந்து உட்கார்ந்து தட்டில் இருப்பதையே பார்த்துக்கொண்டு இருந்தார். ஒரு வாய் கூடச் சாப்பிடவில்லை. அடக்க முடியாமல் சொட்டென்று கண்ணீர் வந்ததும், அப்பா சாப்பிடாமல் எழுந்து அறைக்குள் போய்விட்டார். அம்மா சாப்பிடும் கையோடு அழுதுகொண்டிருந்தாள். காந்தி டீச்சர் அப்பாவை சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே அப்பாவின் பின்னே போனார்.
வாய் கொப்பளித்து விட்டு, துடைக்கத் துண்டை கொடியில் இருந்து எடுக்கப் போகும்போது, அப்பா குலுங்கிக் குலுங்கி மேஜை மேல் கையை ஊன்றிக்கொண்டு அழ, டீச்சர் அப்பாவின் தோளைத் தட்டிக்கொடுப்பதை நமசு பார்த்தான். முண்டா பனியன் போட்டிருக்கும் அப்பாவின் தோளை லேசாகத் தட்டிக் கொடுத்தபடி, காந்தி டீச்சர் ஒரு மை ஊதா நிறப் புடவையில் நின்ற தோற்றத்தை நமசு இப்போதும் மறக்கவில்லை.
விஷயம் இதுதான். சரசு அவளுடன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்த ஒரு பையனை விரும்புகிறாள். அவன் ப்ளஸ் 2 தேறவில்லை. செவன் ஸ்டார் டீக்கடை முன் சிகரெட் குடித்துக்கொண்டு நாலைந்து பையன்களுடன் நிற்கிறான். விடுதியில் இருந்துகொண்டு அவனுக்கு சரசு கடிதம் எழுதுவது, போனில் பேசுவது எல்லாம் தெரிந்துவிட்டது. சரசு ஒரே பிடிவாதமாக இருக்கிறாள். கடைசியில் பூஜா விடுமுறையில் காந்தி டீச்சர் நேரடியாக சரசுவை விடுதியில் இருந்து தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.
சரஸ்வதி பூஜைக்குக் கூட வரவில்லை. சரசு அக்காவின் பழைய புத்தகங்களையும் நமசுவின் புத்தகங்களையும் வைத்துதான் ஏடு அடுக்கினார்கள். அம்மா தன்னுடைய கோல நோட்டு, திருவிளக்கு வழிபாடு, தேவாரத் திரட்டு எதையும் தரமாட்டேன் என்றாள். அப்பா அதை எடுத்துக் கொடுத்தபோது ஒன்றும் சொல்லவில்லை. நமசுதான் தீபாராதனை எல்லாம் பண்ணினான். அம்மா தொட்டுக் கும்பிடும்போது சூடன் அணைந்துவிடுமோ என்று கவலையாக இருந்தது அவனுக்கு.
காந்தி டீச்சர் என்ன சொன்னார்களோ, எப்படி மனதை மாற்றினார்களோ தெரியவில்லை. சரசு அக்கா வேறு ஆளாக வந்தாள். காந்தி டீச்சரின் சேலையைத்தான் அன்றைக்கு சரசு கட்டியிருந்தாள். ஒரு மாதிரி வெங்காய நிறப் புடவை அது. இதற்கு முன்பே சரசு அக்கா ஒன்றிரண்டு முறை புடவை கட்டியிருக்கிறாள் என்றாலும், இந்தப் புடவையில் அவள் அழகாக இருந்தாள். தான் முற்றிலும் டீச்சரின் யோசனைகளை ஏற்றுக்கொண்டதையே சரசு அப்படித் தெரிவித்திருக்க வேண்டும்.
அன்று இரவு சரசுதான் அப்பாவுக்குத் தோசை சுட்டுப் போட்டாள். அம்மாவும் டீச்சரும் அடுக்களையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அப்பா சரசுவை தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். ஒரு டம்ளரில் கொண்டுபோனாள். டீச்சர் , ‘இது அப்பாவுக்குக் காணாது. செம்புல கொண்டு போஎன்றாள். அக்கா செம்பிலும் எடுத்துக் கொண்டாள். அப்பா தண்ணீரை வாங்கிக் குடித்தார். நீ சாப்பிட்டாச்சா சரஸ்வதி?’ என்று கேட்டார். சாப்பிட்டுவிட்டதாக சரசு அக்கா தலையை ஆட்டினாள். ‘இப்படி உட்கார்என்று ஊஞ்சலில் அவருக்கு இடது புறத்தைத் தட்டினார். சரசு அக்கா அப்பா பக்கத்தில் உட்கார்ந்தாள். அப்பா அக்காவைத் தோளோடு இழுத்து அணைத்துக்கொண்டார். ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது.
இதைப் பார்த்துக்கொண்டு இருந்த அம்மா, சாப்பிடுகிற கையோடு டீச்சர் மடியில் படுத்துக்கொண்டு, ‘பாவி, பாவிஎன்று அழ ஆரம்பித்தாள். ஒரு பூனைக் குட்டியைத் தடவுவது போல, அம்மா முதுகை டீச்சர் தடவிக்கொண்டு இருப்பதை நமசு பார்த்துக்கொண்டே இருந்தான்.
%
சரசு அக்காவுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் ஆகிவிட்டது. நமசுவுக்கும் கஸ்தூரிக்கும் கல்யாணம் ஆனபிறகுதானே காந்தி டீச்சர் யானையை எல்லாம் வீட்டு வாசலுக்குக் கூட்டிவந்தது.
இதற்கு இடையில் காந்தி டீச்சர் ஓய்வு பெற்றுவிட்டார். சரசு அக்கா தமிழில் ஆரம்பித்து, அது கவிதையாம், அப்புறம் ஆங்கிலத்தில் தொடர்ந்து நீளமாக எழுதியிருந்த வாழ்த்துச் செய்தியை வாசித்ததாக அப்பா சந்தோஷமாகச் சொன்னார். அம்மா வெறுமனே கேட்டுக்கொண்டாள். ‘நீங்களும் நானும் அதை விடப் பெருசா, அதை விட நீட்டமா  எழுதணும், சரசுவைக் கரையேத்தி விட்ட புண்ணியத்துக்குஎன்றாள்.
‘நான் எழுதுகிறது இருக்கட்டும். உனக்கு எழுதணும்னு தோணுச்சுண்ணா எழுதேன்என்றார்.
அம்மா கோடு போட்ட நாற்பது பக்கம் நோட்டு ஒன்று புதிதாக வாங்கினாள். பேனா வேண்டாம் என்று பென்சிலைச் சீவி வைத்துக் கொண்டாள். அப்பாவின் ஒரு பழைய சவர பிளேடைக் கொண்டு, அங்கங்கே நின்று அம்மா பென்சிலைக் கூர்தீட்டுகிற தோற்றம் அப்பாவுக்குப் பிடித்திருந்தது. அதிலும் அப்படி அவ்வப்போது சீவுகிற துகள்களை முகர்ந்துகொண்டும், ‘நல்லா இருக்கு பாருங்கஎன்று அப்பா முகத்துக்கு நேரே நீட்டுவதும் நன்றாக இருந்தது. உலகத்திலேயே மிகவும் ரம்மியமான மணம் எதுவென்றால், அது அந்தப் பென்சில் சிராய்களுடையதே என்று அவரும் சொல்லத் தயாராக இருந்தார்.
விளக்கு மாடத்தின் முன் உட்கார்ந்து கொண்டு, நோட்டின் மேல் கவிழ்ந்து படுத்து, தலையணையை முதுகுக்கு அண்டை கொடுத்தபடி அவள் ஏழு எட்டு நாட்களாக எழுதிக்கொண்டிருந்தாள். எழுதிமுடிக்கலையா?’  என்றால், ‘எழுத எழுத வந்துக்கிட்டே இருக்குஎன்று சிரித்தாள். ‘கொண்டா படிச்சுப் பார்க்கேன்என்று அப்பா கேட்டால், ‘அய்யோ வந்தது போனது, சொன்னது சொல்லக் கூடாதது  என்று எல்லாத்தையும் என்னென்னமோ அதில கிறுக்கிவச்சிருக்கேன்என்று கொடுக்கவே இல்லை. ‘என்னா டீச்சருக்கு அனுப்பலையா?என்று கேட்டுப் பார்த்தார். ‘எழுதணும்னு தோணுச்சு, எழுதினேன். அனுப்பணும்னு கட்டாயமா என்ன?என்று அம்மா பதிலுக்குக் கேட்டாள்.
கட்டாயம் ஒன்றுமில்லை என்றுதான் அவருக்கும் தோன்றிற்று.
%
காந்தி டீச்சருடைய அப்பா தன்னுடைய எண்பத்தோராவது பிறந்த நாளில் இறந்தார். தகவல் வந்தபோது அப்பா மட்டும் புறப்பட்டார். நானும் கண்டிப்பாக வருவேன் என்று அம்மா சொல்லிவிட, ஒரு டாக்ஸியை வரவழைக்க வேண்டியது ஆயிற்று. சரசு வந்துவிட்டாள். நமசு வரமுடியவில்லை.
ரொம்பப் பெரிய கூட்டம் இல்லை. குறைந்த ஆட்களே வந்திருந்தார்கள். அவர்களும் மறு நாள் காரியம் முடிந்ததும் போய்விட்டார்கள். ஒரு துக்க வீட்டில் இரண்டாம் நாள் இரவில் யாருமே இல்லாமல் போவது ஆச்சரியமாக இருந்தது. ‘நீங்கதான் எல்லோரும் இருக்கீங்களேஎன்று சரசுவின் கையை டீச்சர் பிடித்துக் கொண்டாள். அம்மா சரசுவின் கைப் பிள்ளையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துகொண்டே ஒவ்வொரு அறையாக நடந்துகொண்டு இருந்தாள்.
நமசுவின் அப்பா இன்னொரு அறையில் நின்றுகொண்டு இருந்தார். அப்படியே அசையாமல் நின்றுவிட அவருக்கு விருப்பமாக இருந்தது. இன்னும் இந்த அறையில் சிகரெட் வாடை இருப்பதாக உணர்ந்தார். பிரிந்து போன மனிதர்களை இப்படி ஏதோ ஒரு வாசனை மூலம் நம் பக்கத்தில் வைத்துக் கொள்ளமுடியும் என்பதில் அவருக்கு வந்த நம்பிக்கையில் டீச்சருடைய அப்பாவின் பல்வேறு முகங்களை அவர் அவரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் சிகரெட் புகைப்பதைக் கடைசி வரை நிறுத்தவே இல்லை. மரணத்தின் முதல் தடத்தை அவர் சிவந்த சிகரெட்டின் நுனியால் தேடிக்கொண்டே இருந்திருப்பார் போல.
டீச்சரிடம் சரசு, ‘எங்க வீட்டுக்கு வந்து இருங்கஎன்றாள். காந்தி டீச்சர் சிரிக்கவில்லை. வருத்தப் படவும் இல்லை. எதுவும் அற்ற ஒரு குரல் அவருக்கு வாய்த்திருந்தது. ‘எங்கேயாவது போயிரப் போறேன்என்று மட்டும் டீச்சர் சொன்னாள். அப்படி அதைச் சொல்லும் போது, அது மட்டும் கேட்கும் படி, பிற சத்தங்கள் அனைத்தையும் காற்று வேறெங்கோ ஒதுக்கிக்கொண்டு போய்விட்டிருந்தது.
அனேகமாக அந்த வீட்டின் எல்லாச் சுவர்களின் ஓரமாகவும் அம்மா நடந்து முடித்திருந்தாள். தோளில் கிடந்த குழந்தை தூங்கிவிட்டது. ‘எங்கேயாவது போய்விடப் போகிறேன்என்று டீச்சர் சொன்னது போலவே, தானும் சொல்ல வேண்டும் என்று நமசுவின் அம்மாவுக்குத் தோன்றியது. ஆனால் அப்படி எதுவும் சொல்ல முடியாமல் பெரும் துக்கமும் அழுகையும் உண்டாயிற்று.
டீச்சருடைய அப்பாவின் அறையில் இருந்து, இசையாகக் கோர்த்துவிடப் படாமல், தரையில் பாசி மணிகள் சிதறினது போல, இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளின் சத்தம் துண்டு துண்டாகக் கேட்டது. நமசுவின் அப்பா கட்டிலில் உட்கார்ந்திருந்தார். டீச்சருடைய அப்பா உபயோகிக்கும் ஒரு சாம்பல் நிற கதர் சால்வையை அவர் போர்த்தியிருந்தார். மடியில் புல்புல் தாரா இருந்தது. ‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்என்ற பாடலை வாசிக்க அவர் முயல்கிறார் என்பதை யூகிக்க முடிந்தது.
எந்த வாத்தியம் என்றாலும் அவரவருக்குப் பிடித்ததைத்தான்  முதலில் இசைக்கத் தோன்றும் போல இருக்கிறது. திரும்பத் திரும்ப, ‘நான் மலரோடு தனியாக’  என்ற முதல் சொற்கள் சுண்டித் தெறித்து விழுந்துகொண்டிருக்க, அவர் அமர்ந்திருக்கிற கோணத்தின் மேல் சாய்கிற ஜன்னல் வெளிச்சம் அதை விட ஆழ்ந்த இசையாக அதை மாற்றிக்கொண்டு இருந்தது.
%
ஸ்டேஷனில் இருந்து வீடு வரும்வரை நமசுவுக்கு அந்தத் தணடவாளங்களும், அதைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்த டீச்சரின் தோற்றமும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தது.
ஏற்கனவே அப்பாவிடம் ஒருத்தர் வந்து, ‘டீச்சரைத் திருவண்ணாமலையில் பார்த்தேன்.காவி எல்லாம் உடுத்திக்கிட்டு சாமியார் மாதிரிப் போயிக்கிட்டு இருந்தாங்க.என்று சொல்லியிருந்தார்கள். அப்பா என்ன சொல்ல இருக்கிறது இதில்? ஒன்றும் சொல்லவில்லை.
‘அதெப்படி உங்க குடும்பத்துக்குத் தாக்கல் சொல்லாமப் போயிருப்பாங்க?என்று மேலும் கேட்டிருக்கிறார்.
‘எல்லாத்தையும் விட்டுட்டுப் போகிறவங்க எல்லார் கிட்டேயும் சொல்லிக்கிட்டா போவாங்க?என்று அப்பா பதிலுக்குக் கேட்டதாக அம்மா சொன்னாள்.
இப்படி அம்மா சொன்னதைக் கஸ்தூரியிடம் நமசு சொன்னான். ஆட்டோ சத்தத்தில் இதை இரண்டு முறைகள் சொல்ல வேண்டியது இருந்தது. ‘கொஞ்சம் மெதுவா போங்கஎன்று ஆட்டோ ஓட்டுகிறவரிடம் சொன்னான். கஸ்தூரி சற்று அசௌகரியமாக மடங்கினாற் போல உட்கார்ந்திருந்தவள், ஆட்டோ சற்று மெதுவாகப் போகத் துவங்கியதும் தன்னை நகர்த்திச் சரி செய்துகொண்டாள். ‘அப்படி என்றால், நாம பார்த்தது அவங்களாகக் கூட இருக்கும்’  என்று கஸ்தூரி சாலையைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். ஒரு நீண்ட கம்பின் நுனியில் பஞ்சு மிட்டாய்ப் பொட்டலங்களைத் தோளில் சாய்த்தபடியே நடந்து போகிறவன் மேலேயே அவள் பார்வை இருந்தது.  ‘அவங்கதான்என்று நிச்சயமாக அவள் சொல்லியிருக்கலாம் என்று நமசு நினைத்தான்.
‘ஒருவேளை அப்பாவையும் அம்மாவையும் வீட்டில் வந்து பார்த்துவிட்டுத் தான் டீச்சர் போகிறாளோ?’  நமசு ஏதோ பிடி கிடைத்தது போலச் சொன்னான். இதுவரை மங்கியிருந்த வெயில் பளீர் என்று எல்லாத் திசைகளையும் வெளிச்சமாக்கியது. கஸ்தூரி கண்களைச் சுருக்கிக்கொண்டாள். ஒன்றும் சொல்லவில்லை.
ஸ்டேஷனில் டீச்சரைப் பார்த்தோமா, பார்க்கவில்லையா என்ற விஷயம் இரண்டு பேரிடமும் இருந்து எப்போது உதிர்ந்தது என்று தெரியவில்லை. வெயில் நாலா பக்கமும் ஒரு நதியைப் போலச் சுழித்து ஓடிக்கொண்டிருக்க, ஆட்டோவில் இருந்து குனிந்து இரு கைகளிலும் வெயிலை அள்ளிப் பருகிவிடலாம் போல இருந்தது. தார்ச் சாலையும் பதித்திருந்த எதிரொளிச் சிவப்பு வரிசையும், மஞ்சள் வெள்ளைப் பட்டைகளும் வேகமாகப் பின்னால் உருவப்படுவதில் ஒரு கிளர்ச்சி உண்டாயிற்று.
வீடு வந்ததே தெரியவில்லை.
அம்மாதான் கதவைத் திறந்தாள். கேட்பதற்கு முன்பே, ‘அப்பா உள்ளே படுத்திருக்கா. நல்லா உறங்குதாஎன்று சொன்னாள். திறக்கும் போது கேட்ட தாழ்பாள் சத்தம் பூட்டும்போது வேறு மாதிரி இருந்தது.
கஸ்தூரி வயிற்றைத் தடவிவிட்டுக்கொண்டே பின் பக்கம் போனாள். மறுபடியும் அடுக்களைக்குள் போய் தண்ணீர் குடித்துவிட்டு, அங்கிருந்தே,உங்களுக்குத் தண்ணி வேணுமா?என்று நமசுவைக் கேட்டாள். இந்த வீட்டுக்குள் அவளுடைய குரலில் பிரியம் கூடிவிட்டது போல அவனுக்கு இருந்தது.
‘வெயில் நேரத்தில் இது என்ன கேள்வி? கொண்டு வாஎன்று அம்மா சொன்னாள். ஆனால் நமசுவுக்கு அப்போது தண்ணீர் வேண்டியிருக்கவில்லை. அவனுக்கு, அதைவிட, அம்மாவிடம் ஸ்டேஷனில் பார்த்ததைச் சொல்ல வேண்டும்.
‘காந்தி டீச்சர் மாதிரியே இருந்ததும்மா. தண்டவாளத்தைத் தாண்டிப் போயிக்கிட்டு இருந்தா. நம்ம வீட்டுக்குத்தான் வந்துட்டுப் போகிறாங்க போலேண்ணு நினைச்சுக்கிட்டோம்
அம்மா ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். கஸ்தூரி வரும் போது தண்ணீர் அலம்பித் தரையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் சிதறியது. அப்பா நாங்கள் பேசுகிற சத்தம் கேட்டு எழுந்துவந்து கொண்டிருந்தார். தலையணைச் சுருக்கம் முகச் சதையில் விழுந்திருந்தது
அப்பாவிடம் யாரோ சொன்ன தகவல் ஞாபகம் வந்தது. நமசுவுக்கு டீச்சரை திருவண்ணாமலையில் காவி உடையில் பார்த்தார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.
அப்பா பக்கத்தில் வந்ததும், ‘ஏன் பா? டீச்சர் சாமியாராகப் போயிருப்பாங்க?என்று கேட்டான். அப்பா லேசாகச் சிரித்தார். சிறிதாக ஒரு பெருமூச்சு விட்டார்.
‘போதும்ணு தோணி இருக்கும் இதைச் சொல்லிவிட்டு பறவை வட்டம் இடுவது போல, அம்மா, கஸ்தூரி, நமசு மூவரையும் ஒரு சுற்றாகப் பார்த்துவிட்டு அப்படியே நின்றார்.
‘எது போதும்னு தோணியிருக்கும் என்று கேட்கப் போகிறாயா நமசு?அம்மா கேட்டுவிட்டு அம்மாவே பதிலும் சொன்னாள், ‘எல்லாம் தான்’.
அப்பா அம்மாவைப் பார்த்தார். ஒன்றும் சொல்லாமல் அறையைப்பார்க்கத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார். கீழே தண்ணீர் சிந்திக் கிடப்பதைப் பார்த்திருப்பார் போல. சற்று அகலமாக அடுத்த எட்டு வைத்து அதைத் தாண்டிப் போனார்.
தண்டவாளங்களைத் தாண்டிப் போவது போலத்தான் அது இருந்தது.

% % % % %

ஆனந்த விகடன் - தீபாவளி மலர். 2013.




1 comment:

  1. யானையின் வாசனை சிறுவனாக இருக்கும் போது அனுபவித்தது.
    இது மனிதர்களின் வாசனையையும் விளக்குகிறது.
    தெளிவான நீரோடையில் நடப்பது போன்ற கதை

    ReplyDelete