Tuesday 19 November 2013

கீத கோவிந்தம் - 1973.அந்த எழுதுபொருளை/கடித ஏட்டை யார் எனக்கு வாங்கித் தந்தார்கள் என நினைவில்லை. 1973க்கு முந்திய பருவம் அது. நீல முகப்பு. கீத கோவிந்தம் என ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். உள்ளே ஒவ்வொரு தாளிலும் ஓரத்தில் ஆங்கிலவடிவில் ஒரு கீத கோவிந்தம் பகுதி. அதற்குப் பொருந்தும் படி ஒரு கண்ணன் ராதை படம். தெற்கத்தி பாணி இல்லை. யாரோ வடக்கத்தி ஓவியர் வரைந்தது. ராதை கிருஷ்ணன் இருவருக்குமே வடபக்கத்துச் சாயல்தான். என்னை அந்தப் படங்கள் வரையத் தூண்டவில்லை. அந்த என் 27 வயது மனம் அதில் அச்சிடப்பட்டிருந்த கீத கோவிந்தம் பகுதிகளை தமிழில் ஆக்க விரும்பியது. என்னுடைய பெரிய அத்தான் மிக அழகான, உறுதியான தாள்க்கட்டுள்ள பரிசை எனக்கு அளித்திருந்தார். அதன் துவக்கப் பக்கங்களில் நான் கீதகோவிந்தம் பகுதிகளை, அந்தந்த சமயம் எனக்குத் தோன்றிய சந்தங்களில் எழுதி மொழியாக்கினேன்.
%
விடியல் அவிழ்கின்ற வெள்ளிச் சிறுபொழுதில்
மடியில் அமர்ந்திருந்து கண்ணன்
படியப் படியக் குழல் வடிவுதிருத்துவதைப்
பார்த்து ரசித்துவிட எண்ணி
பவள விரல்சுமந்த பளிங்குவளை யிடத்துப்
படியும் எதிரொளியைப் பார்க்க
குழையக் குழையவந்து கோதை சிகை சரிந்து
கோல வளைமுகத்தைப் போர்த்தும்.
*
உன்விரலின் பூநுனிகள் பட்ட, தொட்ட
ஓ!உந்தன் வேய்ங்குழலில் கீதம் சொட்டும்.
நானந்தக் குழல் ஆனால்  உந்தன்மூச்சாம்
நாதத்தேன் பாய்ச்சாதோ இதழ்கள் என்னுள்.
*
மாயமிருக்குதடி – இந்த
மன்னவன் செய்கலையில்.
தோயத் தோய மனம்
தொட்டு இழுக்குதடி.
என்னைக் கண்ணனின்று
ஏதும் பிரித்திடவோ
உன்னில் கலந்துவிட்டால்
ஓரங்க மாகிவிட்டால்?
*
‘கண்ணிலிருந்து கண்ணா – உறக்கம்
களவு கொண்டுவிட்டாய்
இன்னும் எதற்கு குழல் – அமுதம்
எடுத்து ஊதுகிறாய்?
மோகப் பெருந்தீயில் மேனி
முற்றும் எரிகையிலே
ராகம் இசைப்பதுவோ – நானுன்
ராதை மலர் அல்லவோ
*
‘காதல் ஒன்றுதான் நித்தியம் ராதே
கனவடி மற்றவையோ.
மேலுறக் காதலே கொண்டு நமைச் செலும்
மீளத் திரும்பல் இல்லை.
மானுடக் காதலில் மட்டும் பிரிவெனும்
மயக்கம் உண்டடியோ.
ஆயின் என்? பிரிவு மீதுறின் மீண்டுமே
ஆவி கலந்திடலாம்.
*
‘ஏனடி ராதே முகம் திருப்பி
என்னைத் தவிக்கவிட்டாய்?
பாலைத் தனிமலர் போலப் பனித்துளிப்
பவனிக் கேங்கவிட்டாய்?
தாகம் எடுத்து நான் தவித்துக் கிடப்பது
தட்டுப் படவில்லையோ?
மோகம் தணித்திட, மேனி அணைத்திட
முற்றும் மனமில்லையோ?
*
‘கண்ணா உன் கருவிழிக்கு எத்தனை ஆழம்
காட்டுதடா கணம் கணமும் ஆயிரம் கோலம்
*
‘மன்னிக்க வேண்டுமடி மானஸ ராதே
மறுபடியும் மறுபடியுன் கண்விழி போதைக்
கடலினையே பார்த்திருந்தால் உறக்கமுமில்லை
கங்குல் வரும், போகும் உனை மறப்பதுமில்லை
*
‘கொஞ்சமும் வெட்கமின்றி உன்
கோலக் கரங்களினால்
பஞ்சுக் குழம்பெடுத்து – எந்தன்
பாதம் அலங்கரித்தாய்.
என்ன இனிமை கண்ணா, காதல்
என்னும் விளையாட்டு.
முன்னில் முழுமை கண்டோம் – ராதை
மோகனக் கண்ணன் என.
*
‘எப்படி உலகில் விழிக்க – நான்
எங்கே போய்முகம் ஒளிக்க?
கண்ணனின் கீதத்தில் நனைந்தேன் – அவன்
காதலிலே மனம் கரைந்தேன்
துகிலும் நழுவ நடந்தேன் – அவன்
தோளைத் தழுவிக் கிடந்தேன்.
தலைவன் இடத்துப் பறந்தேன் – என்
தண்ணீர்க் குடத்தை மறந்தேன்.
எப்படி உலகில் விழிக்க – நான்
எங்கே போய்முகம் ஒளிக்க?
*
‘நாமாட, கைகோர்த்து நம்முடன் இயற்கையும்
நாட்டியம் ஆடுது கண்ணா.
பருவத்தின் அற்புத பாவங்கள் காட்டியே
பக்கம் வந்தாடுது கண்ணா.
செம்மலர்க் கன்னங்கள் பின்னும் சிவந்திடச்
சேர்ந்துவந்தாடுது கண்ணா
வளர்மயில் தோகையின் நீலத்தில் வான் நிறம்
வந்துவந்தாடுது கண்ணா.
நாமாட, கைகோர்த்து நம்முடன் இயற்கையும்
நாட்டியம் ஆடுது கண்ணா
*
‘அன்பனே என்னிதழகள் – உனை
ஆயிரமாய் அழைக்க
என்னென்ன தொல்லையடி – காதல்
என்னும் விளையாட்டில்
என்னைப் பழிப்பதுவோ – கண்ணா
என்னைப் பழிப்பதுவோ?
உன்னுடைக் காதலினால் – இதயம்
உன்மத்தம் ஆகிவிட்டால்?
*
கொஞ்சம் விழிக்கடையில் பார்த்தால்
கவிதை
கோடி வரி திரும்பும் ராதே!
பஞ்சு விழிமலர்த்தும் மௌனம்
காதல்
பாடல் மதுச் சரிக்கும் ராதே!
ஏகச் சுதந்திரத்துப் பிரேமை
நம்மை
இறுகப் பிணைக்குதடி ராதே!
ஏதும் பிரித்திடுதற் கில்லை
என்று
இறுகத் தழுவிடடி ராதே
*
73ல் எழுதிய இந்த கீதகோவிந்தம் பெயர்ப்பை, என் 95-99 சென்னைப் பருவத்தில் என் நண்பர் ஆ. ஆனந்தனுக்குப் பிரதியெடுத்து என் கையெழுத்தில் கொடுத்திருக்கிறேன். ஒரு சலிப்பில் இருந்த மனநிலையில் அத்துடன் ஒரு ஆங்கில நறுக்கு வேறு.
          ‘Dear Ananthan,
                          Those ‘geeth-govind’ lines, which I translated during the year 1973.
                   Just go through and throw it to the wind, as the intervening life during these
                   22 years has thrown the pep,fervor and romantic flair within me, to the dust,
                   Off late, to the dust of the city, now.
                  Kalyaani.s.
*
இதையும் ஆனந்தன் தன்னுடைய 07.11.13 கடிதத்துடன் தான் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். சில சமயங்களில் தபாலில் இப்படிப் பழுப்பு நிறத்தாளில்  பொதியப்பட்ட பொக்கிஷங்கள் வந்துசேர்கின்றன.No comments:

Post a Comment