Saturday, 15 June 2013

கல்பனா ஸ்டுடியோவில் ஒரு ஃபோட்டோ.







பிரமநாயகம்தான் ஃபோனில் கூப்பிட்டான்.
‘அகஸ்தியர்பட்டி வரைக்கும் ஒரு லோடு இருக்கு. வார வியாழக்கிழமை போகணும். சந்திப்பிள்ளையார் முக்குல வந்து ஏறிக்கிடுதியா? கரெக்டா எட்டு மணிக்கு வந்து நில்லு. லேட்டாக்கியிரக் கூடாது’  என்றான்.
பிரமுவிடம் பேச்சுவாக்கில் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.  ‘அம்பாசமுத்திரத்துக்கு ஏதாவது லோடு அடித்தால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லு டேஎன்று சொல்லும்போது அவன் வழுதூர்ப்பிள்ளை நூல்கடை முன்னால் நின்றான்.  ‘தனபேரின்பம்லாரிப்பக்கம் இருந்து பிரமுதான் என்னைக் கூப்பிட்டான். கட்டுக் கட்டாக நூல் இறங்கிப் போய்க்கொண்டிருந்தது.  நான் லாலாக் கடையில் நின்றுகொண்டு இருந்தேன். நம்மை யார் பெயரைச் சொல்லி இந்த நேரத்தில் கூப்பிடப் போகிறார்கள் என்று காரச் சேவுக்கும் பக்கோடாவுக்கும் காசு கொடுத்துவிட்டு, ‘வரட்டுமா முதலாளி. பார்ப்போம்’  என்று நகர்கையில், ‘கைலாசம்’  என்று மறுபடி தெளிவாக என் பெயரைச் சொல்வது கேட்டது.  சண்முகா ஒலிபெருக்கி முதலாளி பையனைத் தெரியும். அவராக இருக்குமோ என்று மேலே பார்த்தால், இவன், பிரமநாயகம். ‘சரியான செவிட்டு மட்டை. எத்தனை மட்டம் கூப்பிட்டாச்சு.  நான் நிக்கித திசையைத் தவிர மத்த எல்லாத் திசையையும் பார்க்கியே தவிர, என்னைப் பார்க்க மாட்டேங்கியே மாப்பிளே’  என்று பிரமு வந்து என் முதுகில் ஒரு அடி அடித்தான்.  முதுகில் அடிக்காமல் பிரமுவால் பேச்சை ஆரம்பிக்கவே முடியாது,
‘இது நகைக்கடைக்காரர் வீடுல்லா?நான் பிரமுவிடம் கேட்டேன்.  பழுப்பு நிறத்தில் பேல் பேலாக இறங்கிக்கொண்டிருக்கும் நூல் வாசனை நன்றாக இருந்தது. அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  ‘நூல் வாசனை நல்லா இருக்கு’  என்று பிரமுவிடம் சொன்னேன்.  அவன் அதைக் கவனிக்கவில்லை.
‘ஊரு உலகத்தில எவ்வளவு நடந்துக்கிட்டு இருக்கு. கண்ணை மூடிக் கண்ணைத் திறக்கிறதுக்குள்ளே கடல் கரைக்கு வந்திருது. கரை கடலுக்குள்ளே போயிருது’  என்று சொல்லிவிட்டு பிரமு அந்த வீட்டு முகப்புச் சுவரின் நெற்றியையே பார்த்தான். எம்.என்.எம் என்ற பெயர் எப்போதோ அடித்த நீலச் சாயத்துடன் அப்படியே இருந்தது. எம்.என்.எம் சீல் இருந்தால் ஒருகாலத்தில் நகைக்கடை பஜாரில் அப்படி ஒரு பெயர். சினிமா ஸ்லைடு போடும்போது கூட, ‘ மக்களின் நம்பிக்கைக்கு உரியது எம்.என்.எம் சீல். மாற்றுக்குறையாத தங்கத்துக்கு என்றென்றும் மாறாத உத்தரவாதம் எம்.என்.எம் சீல்என்று ராகம் போட்டு வாசிப்பார்கள். ஓவல்  வடிவத்தில், டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி ஒருத்தர் கும்பிட்டுக்கொண்டு இருப்பார் படத்தில்.
‘நகைக்கடை நூல் கடை ஆகிட்டுது. அடுத்த வீடு தெரியுதா? அரியகுளம் பண்ணையார் வீடு. மேற்படி புள்ளிக்காரியை ஞாபகம் இருக்கா? -  ‘மேற்படிஎன்று சொல்லும்போது கண்ணைச் சிமிட்டினான். நெஞ்சு மட்டத்திற்குக் கை இருந்தது. – அவளுக்கு எழுதிவச்சது. பண்ணையாரும் சரி. அவளையும் சரி. அட்ரெஸ்ஸையே காணோம். வடக்கத்தி சேட் வாங்கிட்டான். தேரடியில பிளாஸ்டிக் சாமான் கடை போட்டிருக்கான் லா, அவந்தான்.என்று பிரமு சிரித்தான். 
ஒருகாலத்தில் இப்போது பிரமு குறிப்பிட்ட மூன்று வீட்டுப் பெண்களைப் பற்றியும் பிரமு என்னிடம் அப்படிப் பேசியிருக்கிறான். நகைக்கடைக்காரர் மகள் அவனுடன் இந்து எலிமெண்டரி பாடசாலையில் படித்ததாகவும்,  ‘அந்தப் பிள்ளையை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெரிய லட்சணம் எல்லாம் கிடையாது. ஆளு இம்புட்டுப் போல நறுங்கிப் போய்த்தான் இருக்கும். ஆனாலும் அதுகிட்ட என்னமோ இருந்தது. என்னண்ணு சொல்லத் தெரியலை’  என்பான். ‘சேட் வீட்டில ஏறிக்குதிச்சு அந்த வெள்ளைப் பாச்சாவை ஒரு நாள் அம்பாசிடர்ல தூக்கிட்டுப் போகாட்டா நான் பிரமு இல்லைஎன்று சொல்லும் போது பிரமநாயகம் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தான்.  அரியகுளம் பண்ணையார் வர,போக இருந்த அந்த வீட்டுப் பெண் அதிகமாக வெளியே கூட வருவது இல்லை. பிரமநாயகம் அவளை எங்கே பார்த்தானோ தெரியவில்லை.  அந்தப் பெண் மேல் அவ்வளவு பெரிய ஈடுபாடு அவனுக்கு. ‘எப்படி இருப்பா தெரியுமா?என்பான். ‘என்னமோ உலகத்தில இல்லாத ஜாமான் அவள்கிட்டே இருக்கிற மாதிரியில்லா அலட்டிக்கிடுதா.என்பான். இன்னும் ஒரு படி கூடுதலாக, ‘எங்கேயாவது கண்ணுல படாமலா போவா. அப்படி என்ன வச்சிருக்கிறதா நினப்புண்ணு கேட்டு அப்படியே ரெண்டா வகுந்திருதேன்என்று அவன் சொல்லும்போது உச்ச போகத்தில் இருக்கிற மாதிரி அவன் முகம் இருக்கும்.
இப்படி எத்தனை பேரை, விழுகிறதையும் எழுந்திரிக்கிறதையும் நாம பார்த்திருப்போம்.  இனிமேயும் பார்க்கப் போறோம். பிரமநாயகம் சொல்லிவிட்டு, ‘அப்புறம் மாப்பிளை’  என்று மறுபடியும் தோளில் கையை வைத்தான். நான் பிரமுவையே பார்த்தேன். நெற்றியில் திருநீறு இட்டு ஐம்பது பைசா அகலத்துக்குக் குங்குமம் புருவமத்தியில் வைத்திருந்தான். ‘பிரமு, சிவப்பழமா இருக்கியே ப்பாஎன்று சிரித்தேன். ‘பட்டை போட்டா சிவப்பழமா மாப்பிளை? சிவப் பழம் எல்லாம் இல்லை. ஆனால் பழம். எவ்வளவோ பழுத்தாச்சு. கனிஞ்சாச்சு. நாட்டுப் பழம்னா தாரிலே இருந்து பிய்ச்சு இழுக்கணும். கோழிக்கூடுன்னா காம்பிலே இருந்து தானாக் கழண்டு கையோடு வந்திரும். அது பெட்டிக்கடைக்காரன் கையில இல்லை. ‘பழம் எப்படி?ன்னு தொங்குகிற தாரைப் பார்த்துக்கிட்டே வாங்க வருவாம்லா அவனைப் பொறுத்தது அது  
‘ஓடுதது லாரியில. ஆனால் பேச்சுப் பூராவும் பெட்டிக்கடைக்காரன் மாதிரி’   நான் இதைச் சொல்லும்போது பாதியிலேயே பிரமு ஆரம்பித்தான்.
‘உனக்கு ராமையா தெரியுமா? சிவத்த ராமையா இல்லை. கருத்த ராமையா. அவன் படிச்சு நல்லா முன்னிலைக்கு வந்திட்டான். கால் மேல கால் போட்டுக்கிட்டு மெட்ராஸில உட்கார்ந்த இடத்தில் சம்பாத்தியம் பண்ணிக்கிட்டு இருக்கான். என்னை அவன் எப்போ எங்கன  பார்த்தாலும், ‘இது என்ன டே செத்த பிழைப்பு இங்கே. பேசாமல் ஊரில வந்து ஒரு பொட்டிக்கடை வச்சிருந்தால் கூட நல்லா இருந்திருக்கும். கோயில் வாசலில் ஒரு சவுரி, குங்குமம் கடை போட்டால் கூட போதாதா, நிம்மதியா இருந்திரலாம்பான். இப்படிச் சொல்லும்போது என் காலில் போட்டிருக்கிற கட்டைப் பிரமு பார்த்தான். என்னை அறியாமல் இடது காலின் மேல் உட்கார்கிற ஈயை வலது காலை மடக்கி விரட்டியது அவனை அங்கே பார்க்க வைத்திருக்கும். ஈயா அல்லது பழைய வேட்டியைக் கிழித்துப் போட்டிருக்கிற துணிக்கட்டில் நீளமாகத் தொங்கிக்கொண்டு இருந்த நூல் படுகிற கூச்சமா தெரியவில்லை. கால் முடியில் படுவது ஈ உட்கார்கிற மாதிரிதான் இருந்தது.
‘இன்னும் புண்ணு சரியா வரமாட்டேங்குது போல பிரமு அப்படிச் சட்டென்று கீழே உட்கார்ந்து என் இடதுகாலைத் தொட்டுப் பார்ப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் அப்படித் தொட்டுப்பார்த்தது பிடித்திருந்தது.  பிரமு கால் பாதத்தின் மேல் பகுதியை ஒரு விரலால் அமுக்கிப் பார்த்தான். ‘நல்லா வீக்கம் இருக்கேஎன்று சொல்லியபடி எழுந்திருந்தான். ‘ வலி இருக்கோ?என்று கேட்டவன், ‘உனக்கு இது வேண்டாம். என்னை மாதிரிக் கூட்டாளின்னாவாவது போகிற இடம் வருகிற இடம்னு செய்யாத சேட்டை இல்லை. நேத்து அவள் கூட, இன்னைக்கு இவள் கூடண்ணு தெரிஞ்சு பாதி தெரியாமல் பாதிண்ணு எல்லாத் தப்பும் பண்ணியாச்சு. நீ அப்பிராணி. உனக்கு எதுக்கு இதுண்ணு தெரியலையே கைலாசம் பிரமுவுக்கு குரல் கம்மியது. வெற்றிலை போட்டிருந்த நாக்கால், பொய்யாகத் துளாவி, இல்லாத பாக்கைத் துப்புவது போல வாருகால் பக்கம் போனான். அதிர அதிர இரண்டு நாசியையும் சிந்திவிட்டு வந்தான்.
அவனுக்கே அவன் கண் கலங்கியது தேவையில்லாதது போலப் பட்டிருக்கும் போல. பிரமு சிரித்துக்கொண்டே பேச்சை மாற்றினான். எனக்கும் வேறு ஏதாவது பேசவேண்டும் போல இருந்தது. ‘பக்கடா சாப்பிடுதியா பிரமு?என்று கேட்டேன்.
பிரமுவிடம் சிரிப்பு அப்படியே இருந்தது. முன்னைவிட அழகாக இருப்பது போலக்கூடத் தோன்றியது. ‘வயசாக வயசாக மைனர் மாதிரியே இருக்கியே ப்பாஎன்றேன்.
மைனர்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. இப்போ யாருகிட்டே காலைக் காட்டிக்கிட்டு இருக்கே. உன்னால மச்சுப்படி ஏறமுடியுமா? வெயிலுப்பிள்ளை அண்ணாச்சி பையன்கிட்டே எதுக்கும் காட்டீருவமா? என்ன கள்ளத்தனம் பண்ணியிருக்கான் கைலாசம், யாரு மைனர்னு எனக்கும் தெரிஞ்சு போகும் இல்லையா?என்று சிரித்தான்.
நூல்கடையின் கணக்குப் பிள்ளை எல்லாவற்றையும் இறக்கி ஆயிற்றா என்று பார்த்துவிட்டு, பிரமுவைப் பார்த்து, ‘நல்லா இருக்கியா டே?என்று கேட்டுவிட்டு உள்ளே போனார். கோவணம் பாய்ச்சி அதன் மேல் வேட்டி கட்டியிருப்பார் போல இருக்கிறது. நடு இடுப்பில் முடிச்சுத் தெரிந்தது. ‘சித்தே நில்லு கைலாசம். சிட்டையில கையெழுத்து வாங்கிட்டு வந்திருதேன் என்று பிரமுவும் அவர் பின்னால் போனான்.
நூல்கட்டுகளை இறக்கிவைத்துவிட்டு வந்த லோட்மேன்களில் இருவர் வெளியே வந்து பீடியைப் பற்றவைத்தார்கள். இவ்வளவு நேரம் நான் பிரமுவுடன் பேசிக்கொண்டு நின்றதைப் பார்த்திருப்பார்கள் போல. எனக்கு ஏதோ மரியாதை கொடுக்கிற மாதிரி, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு என் முன்னால் புகைக்காமல் விலகி, அந்த அரியகுளம் பண்ணையார் வீட்டுப்பக்கம் போனார்கள். நூல் கடைக்கும் அந்த வீட்டுக்கும் இடையில் இருந்த சாக்கடையின் மேல் பனங்கட்டைகளால் ஒன்றோடு ஒன்றாகத் தைத்து மூடி போட்டிருந்த இடத்தில்நின்று புகைக்க ஆரம்பித்த அவர்களிடம் ஏதாவது நான் சொல்லவேண்டும் போல இருந்த்து. ‘கீழே சாக்கடை. பார்த்து..என்று சொன்னேன். இவ்வளவு சொல்லமுடிந்தது குறித்து எனக்கும், இப்படி நான் சொன்னது அவர்களுக்கும் போதுமானதாக இருந்தது.
இப்போது சேட் வாங்கிவிட்டதாகப் பிரமு சொன்ன பண்ணையார் வீட்டையே பார்த்தேன். வாஸ்தவம்தான். அந்தப் பெண் அப்படித்தான் இருப்பாள். பிரமு எல்லாவற்றையும் வாய்விட்டுச் சொல்லிவிடுகிறான். எனக்கு முடியவில்லை. ஆனால் அந்த வீட்டுத் திரையை விலக்கிவிட்டு இப்போது அவள் என்னைவந்து பார்க்க மாட்டாளா என்றுதான் இருந்தது. நானும் பிரமுவும் பார்க்க, அவளுக்கு அப்போதே நாற்பது வயதுப் பக்கம் இருக்கும். உயரம் கம்மிதான். ஆனால் முன்னாலும் பின்னாலும் அப்படி. திருப்பித் திருப்பிப் பார்க்க வைக்கிறதுக்குப் பெயர் அழகா? ஒரு தடவை பார்த்தால் இரண்டாவது தடவை பார்க்கமுடியாமல் அப்படியே திகைக்க வைத்துவிட வேண்டும். அதுதான் அழகு. ஒரு தடவை வாகையடி முக்கில் தேர் திரும்புகிறது. அந்த வீட்டுத் தட்டோட்டியில் ஒரு மாம்பழக்கலர் பட்டுச் சேலையைக் கட்டிக்கொண்டு அவள் நின்றாள். திருவிழாக் கூட்டத்தில் பாதிப் பேர் தேரையும் பாதிப் பேர் அவளையும்தான் பார்த்திருக்கவேண்டும். யார் அந்தப் பக்கம் பார்த்து எச்சில் மாங்கொட்டையை வீசினார்கள் என்று தெரியவில்லை. பார்க்கிற எல்லோரையும் ஏதாவது இப்படிச் செய்யத் தூண்டிவிடுகிற மாதிரித்தான் அவள் பார்க்கவைத்துக்கொண்டிருந்தாள். அங்கேதான் இந்த ஊர்ப் பெண்பிள்ளைகளுக்கும் அவளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்படி எறிந்ததை ஏதோ பாராட்டு நடத்தியது மாதிரி ஒரு சிரிப்பு சிரித்தாள். சிரித்தபடியே திரும்பி மச்சுக்குள் போய்விட்டாள். போகும்போது பின்பக்கம் ஏதோ பட்டுச்சேலையில் தூசி இருப்பது மாதிரி ஒரு தடவல் வேறு.
நான் மேலே பார்த்துக்கொண்டு இருக்கையில் பிரமநாயகம் வந்தான். ‘என்ன? சேட்டு எத்தனை நாற்காலி வாங்கி அடுக்கியிருக்கான்னு இங்கே இருந்தே எண்ணிப்பார்த்துக்கிட்டு இருக்கியா? ஜவுளிக்கடை கணக்குப்பிள்ளை புத்தி போகாதுல்லா. கடையைப் பூட்டிச் சாவியைக் கொடுத்தமா, வடக்கு ரதவீதியோட கழுதையை அங்கனயே விட்டுட்டு வந்தோம்னு இராமல், உன் கூடவே சுந்தரத்தான்முடுக்கு வரை அதைக் கூட்டிக்கிட்டே போவியோ? பிரமு கேட்டான். நான் சாதாரணமாகவே அதை எடுத்துக்கொண்டேன். நான் ஏதாவது தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவசரமாக ‘காரச் சேவு யாருக்கு, பேத்தியாளுக்கா?என்று சகஜப்படுத்தினான். எந்தச் சிறு இடைவெளியிலும் நான் பதிலுக்காக யோசனையில் தடுக்கி நின்றுவிடக்கூடாது என்பதற்காக, ‘வடிவு எப்படி இருக்கா? இப்பவும் தையல் எல்லாம் தச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்காளா? கெட்டிக்காரப் பிள்ளையில்லா அதுஎன்று என் மருமகளைச் சிலாகித்தான்.
‘சுடுசோறோ, தண்ணி ஊத்துனதோ, பொம்பளையாள் இல்லாத நமக்கு தட்டில போட்டு, ரெண்டு உப்புக்கல்லும் ஊறுகாயும் கண்ணுல காட்டிச் சாப்பிடச் சொல்லுததுக்கு இந்தக் காலத்துல ஒரு மனசு வேணும்லா இதைச் சொல்லும் போது எனக்குத் தொண்டை கம்மி மரகதம் ஞாபகம் வந்துவிட்டது.

சரி.கைலாசம், சரிஎன்று சொன்னவன், மினி லாரியின் விலாவில் இருந்த தூசியில்  ‘வடிவுஎன்று எழுதி, உடனே அதை அழித்துவிட்டு முன் விரல்களில் அப்பியிருந்த தூசியையே பார்த்துக்கொண்டு சொன்னான் – ‘உனக்காவது இருந்தாள், போனாள்னு சொல்கிறதுக்கு ரெண்டு வருஷம் முன்னால வரை ஒருத்தி இருந்தா. எனக்கு அப்படியா? கிளப்புக் கடை செட்டியார் மகன் இப்படீ ஊர் ஊராக ஏறி இறங்கி லோல் படுவேன்னு எங்க அம்மை கண்டிருப்பாளா? உன் கிட்டே இண்ணைக்குச் சொல்லுதேன் மாப்பிளை. டெல்லி பாம்பேன்னு கூட அசராம போயிட்டு வந்திருவேன். இங்கனைக்கு உள்ளே இருக்கிற கங்கை கொண்டானைத் தாண்டும் போது நேற்று வரைக்கும் படபடண்ணுதான் வருது’ -  பிரமு அழுத்தியதில் என் தோள்ப்பட்டை வலித்தது. எதையோ தேடுவது போல எங்களைச் சுற்றி அப்படியே பார்த்துவிட்டு அது அகப்படாதது போல, மறுபடி ரோட்டுக்கு எதிரே கையை உயர்த்தி நீட்டினான். ‘ இந்தா எதுத்தாப்ல இருக்கிற கல்பனா ஸ்டுடியோவுல மாப்பிளையும் பொண்ணுமா ரெண்டு பேரா நிண்ணு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிடுததுக்குத் துப்பில்லாமப் போச்சு எனக்குஎன்றான். கை இன்னும் முழுதாகத் தணியாமல் அப்படியே அந்தரத்தில் நின்றது. அவன் காட்டின திசை பூராவும் பிரமநாயகமும், பக்கத்தில் முகமே இல்லாத ஒரு  அருவமான பெண்ணுமாகச் சட்டமிடப்பட்ட படங்கள் ஆயிரம் ஆயிரமாக அந்தரத்தில் தொங்கின.
பிரமுவுக்குக் கங்கைகொண்டானில் பெண் பார்த்திருந்தார்கள். கல்யாணம் அங்கே வைத்துதான். வீட்டில் விளக்குக்கு முன்னால் வைத்துத் தாலிகட்டுவதாக ஏற்பாடு.  மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் லயன் கம்பெனி பஸ்ஸில் முடிந்துவிட்டது. பெண்ணுடைய சொந்தக்காரர் ஒருத்தருடைய வீட்டில் பிரமநாயகத்தையும் என்னையும் தங்க வைத்திருந்தார்கள். இரண்டு பேரும் பள்ளிக்கூட வாத்தியார்கள். அந்த டீச்சர் ரொம்பப் பிரியமாக இருந்தார்கள். பிரமநாயகத்தை விட என்னிடமே அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதே தெருவில் இன்னும் ஒரு கல்யாணவீடு போல. ‘விழியே கதை எழுது’, ‘தொட்டால் பூ மலரும்’, ‘நீல நயனங்களில்என்று ஒரே எம்.ஜி.ஆர் பாட்டாகப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அந்த டீச்சர், ஒவ்வொரு பாட்டுப் போடப் போட, அவர்களுக்கு மட்டும் வெளியே கேட்கும்படி வீட்டுக்குள் பாடிக்கொண்டே நடமாடினார்கள். கல்யாண வீட்டுக்கு வாங்கின இரண்டு மூன்று கதலிப் பழக் குலை மூலையில் சாத்தியிருந்தன. இலைக்கட்டு வாசனை அடித்தது இருட்டுக்குள். அது வரை எல்லாம் சரி.
அதே டீச்சர்தான் பெரிய ஈய இட்லிக்கொப்பரையில் இட்லி வெந்து தட்டிக்கொண்டிருந்த ஒரு ஓலைத் தடுப்புப் பக்கம் என்னை அழைத்துப் போய் அதைச் சொன்னார்கள். பிரமுவுக்குப் பார்த்திருந்த பெண் காணாமல் போயிருந்ததை, ‘எல்லா இடத்திலும் ஒண்ணு பாக்கியில்லாமல்  தேடிப் பார்த்தாச்சுஎன்று சொல்ல ஆரம்பித்தார்கள். ‘தகராறு எதுவும் இல்லாமல் நீ தான்யா பார்த்துக்கிடணும். உன் கையைப் பிடிச்சுக் கேட்டுக்கிடுதேன்என்று கெஞ்சினார்கள். பிரமுவிடம் விஷயத்தைச் சொன்னேன். கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான். ‘சரிதான் மாப்பிளேஎன்று மட்டும் சொன்னான். எதற்கு அப்படிச் சொன்னான் என்று தெரியவில்லை. துக்கத்தை எப்படிச் சரிதான் என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது?
துக்கத்திற்கான ஆறுதலையும் அவன் அப்படியேதான் சொல்கிறவனாக இருக்கிறான். கொஞ்ச நேரத்திற்கு முன், ‘சரி, கைலாசம், சரிஎன்று என்னிடம் சொன்னது ஆறுதல் அல்லாமல் வேறென்ன? நான் அவன் வார்த்தைகளை அவனிடமே சொல்ல வேண்டும் என்று திட்டம் எல்லாம் இடவில்லை. ஆனால் என்னையறியாமல் அப்படித்தான் வந்தது.
‘சரி. பிரமு இருக்கட்டும். சரி.சரி’  என்று சொன்னேன். இந்த இடத்தில் அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லமுடியவில்லை. ஒப்பிடுவது போல அவனுடைய கால் விரல்களையும் என்னுடைய கால் விரல்களையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். இன்னும் முகமற்ற பெண்ணுடன் அந்தரத்தில் பிரமுவின் ஃபோட்டோ மிதப்பது போலவே இருந்தது. இறகு உதிர்வது போல எங்கள் காலைச் சுற்றி அதில் ஒன்றிரண்டு விழக்கூடும் என்று கூட நினைத்துக் கொண்டு நிஜமாகவே சிறிது நகர்ந்ததில் என் கால் கட்டின் வெள்ளைக்குள் முள்குத்தினது போல லேசாக வலித்தது. கால் புண்ணின் ஞாபகம் வந்தது.
‘ஒண்ணு செய்வியா பிரமுஎன்று ஆரம்பித்தேன். லேத் பட்டறை வைத்திருக்கிற பெரியசாமியைப் பார்த்ததையும் நம்முடன் படித்த கோவிந்தனின் பையன், (கோவிந்தன் யாரு என்று பிரமு கேட்டு அவனுக்கு விபரம் சொல்லவேண்டியிருந்தது), இப்போது அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரியில் டாக்டராக இருப்பதாகவும் யார் போனாலும் நல்லபடியாகப் பார்த்து அனுப்புவதாகவும், பெரியசாமியின் வீட்டுக்காரிக்குக் காட்டினதில் இப்போது வள்ளிசாகக் குணமாகிவிட்டது என்றும், வேண்டுமானால் நானும் போய்ப் பார்ப்பது நல்லது என்று சொன்னதாகவும் தெரிவித்தேன்.
‘அதுக்கு நான் என்ன பண்ணனும்?
‘இப்போ ட்ரெய்ன் ஓடலைல்லா
அதுக்கு? பிரமு மறுபடியும் என்னைக் கேட்டான்.
‘ நீ அந்தப் பக்கம் ஜோலியாப் போனேண்ணா, உன் கூடப் போயிட்டு லாரியில உன் கூடவே வந்திரலாம்னு தோணுச்சு
‘அது வரைக்கும் காலை இப்படியே ஈ அரிக்க வச்சுக்கிட்டு இருக்கப் போறியா?’  பிரமு என் காலைப் பார்த்தான். அவன் பார்வையே ஒரு ஈ மாதிரிப் பறந்து பறந்து உட்கார்கிற மாதிரி இருந்தது.
%
‘பூக் கடைப் பக்கம் இறக்கிவிடுதேன். கோர்ட்டு, தாலுகா ஆபீஸ் எல்லாம் இருக்கிற மாதிரி ஆஸ்பத்திரியும் அங்கனைக்குள்ளேதான் இருக்கும். விசாரிச்சா தெரியும். டாக்டர்கிட்டே காண்பிச்சு என்ன ஏதுண்ணு விபரம் கேட்டுக்கோ. மறுபடியும் எப்ப கொண்டாந்து காட்டணும்? இல்லை, நம்ம ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியிலேயே சொல்லி மருந்து வாங்கிக்கிடமுடியுமாண்ணு வாயைத் திறந்து கேளு.  இதையெல்லாம் கேக்க, நான் கூட வரணும்னாலும் சொல்லு. என்னை இறக்கிவிட, வண்டியை ஒரு பக்கமாக ஒதுக்கும் போது சங்கு ஊதுகிற சத்தம் கேட்டது.
தீச்சட்டியும் ஈரவேட்டியுமாக இரண்டு மூன்று பேர் முன்னால் போக, சிவப்புப் பட்டுப் போர்த்தின பாடை கடந்து போனது. நடந்து போகிறவர்கள், பக்கவாட்டில் சைக்கிளைத் தள்ளினபடி பேசிக்கொண்டு செல்பவர்களுடன் ஒரு பத்து இருபது நிமிடங்கள் அந்தப் பாதையே முற்றிலும் வேறுவிதமாக மாறிவிட்ட ஒரு நகர்வை அடைந்திருந்தது. பிரமு ஓரமாக நின்று செருப்பைக் கழற்றி, கைலியைத் தளர்த்திவிட்டு, கைகளைப் பூட்டியபடி கிட்டத்தட்ட கடைசி ஆள் போய்முடிகிறவரை ஒரு சொல் கூடப் பேசாமல் கும்பிட்டான். தலையில் துண்டை வெயிலுக்கு மடித்துப் போட்டு, காலைச் சுழற்றி இடது தொடையில் கை ஊன்றித் தாங்கித்தாங்கி போகிற ஒருத்தரைப் பார்த்ததும் கையை நெஞ்சோடு பொத்தி, அவரைப் பாராட்டுகிறதாக அப்படியே நின்றான். எனக்கென்னவோ பள்ளத்துக்குள் இறங்குகிற மழைத் தண்ணீர் மாதிரி அத்தனை பேரும் ஒரு சரிவுக்குள் பாய்ந்து அப்படியே காணாமல் போய்விட்டதாகவே தோன்றியது.
‘அப்போ நான் வரட்டுமா? எனக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் பன்னிரண்டு  ஒரு மணிக்குள்ளே ஜோலி முடிஞ்சிரும். உனக்கு சீக்கிரம் முடிஞ்சுதுண்ணா நீ ரெகு விலாஸ் பக்கம் நில்லு. எனக்கு முடிஞ்சுதுண்ணா நான் வந்து நிக்கேன். சரியா?என்று வண்டியை எடுத்தான். ஒடுக்கமான அந்த பஜாரில், நான் இதுவரை முன்பக்கம் உட்கார்ந்து வந்த வண்டி கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகி மறையத் துவங்குவது பிடித்திருந்தது. யாராவது சுமைகாரர்களாக இருக்க வேண்டும். கமலா ஸ்டோர்ஸ் பக்கம் வரை லாரி பின்னாலேயே ஓடித் தொத்தி ஏறிக்கொண்டார்கள்.  கொஞ்சம் வேகம் குறைத்து அவர்கள் ஏறிக்கொண்டதை அங்கீகரித்து பிரமு நகர்கிற சமயம் , எதிரே வருகிற பாபநாசம் வண்டி வைத்த விரலை எடுக்காமல் ஹார்ன் அடித்தது.
%
பூக்கடை முக்கு வாழைப்பழ மண்டிப் பக்கம் வந்துவிடும் என்று சாயவேட்டி கட்டின ஒருத்தர் நீண்ட கம்பினால் தரையைத் தட்டிக்கொண்டு இருக்க, ஏழு எட்டு எண்ணிக்கை உள்ள அந்தக் குரங்குக் குடும்பம் ஒவ்வொரு கடையாகத் தாண்டி, சர்வோதயா கடைக்கு மேல் உட்கார்ந்திருந்த போது, அதற்கு அடுத்த மெடிக்கல் ஸ்டோர் பையன் வெளியே வந்து ரோட்டுக்கு நடுவில் நின்று மேலே பார்த்துக் கையை வீசி விரட்டினான். எதிர்த்த கடை முதலாளி சத்தம் கொடுத்தார், ‘ ஏ. முருகேசா. பார்த்துடே. எல்லாரும் உங்க முதலாளிக்கு பெந்துக்கள். அவங்களை எப்படி விரட்டப் போச்சுண்ணு உன் சீட்டைக் கிழிச்சிரப் போறாரு. பார்த்துக்க. சொல்லிட்டேன் டேஎன்று சொல்லும் போது நான் இங்கிருந்தே அதைக்கேட்டுச் சிரித்துக் கொண்டேன். அந்த மருந்துக்கடை முதலாளி நான்தான் என்றுகூடத் தோன்றியது. என்ன வகை என்று தெரியாமல் ஒரு சந்தோஷம் வந்து சேர்ந்திருந்தது.
இன்று இவ்வளவு தூரம் புறப்பட்டு வந்து பார்த்தால்,  அந்த டாக்டர் வராதது, என் காலைக் காட்டாதது என்பது எல்லாம் ஒரு பெரிய ஏமாற்றமாகவே தெரியாத அளவுக்கு தரையில் அசைகிற நிழலைப் பார்ப்பது மாதிரி இருந்தது. இந்தக் காலோடு எவ்வளவு தூரமும் நடக்க முடியும் என்று தோன்றியது. ஊரில் தினசரி நான்கு ரதவீதியிலும் கிட்டத்தட்ட நடக்கிறவன் இங்கே நடக்க மாட்டேனா என்ன?
செத்த பாடைக்குத் தெரு முழுவதும் வீசிக்கொண்டு போயிருக்கும் பூவை அடையாளமாக வைத்துக் கூடவே போனால் கூட மேலப்பாளையம் தெருவுக்குப் போய்விடலாம். மேலப்பாளையம் தெருவில்தான் மரகதத்தின் அக்கா இருக்கிறாள். செண்பகத்தக்காவை மரகதம் செம்பாக்கா என்றுதான் சொல்வாள். செம்பாக்கா என்றால் அவளுக்கு உயிர். மரகதத்தின் ஆட்டத் திவசத்திற்கு அப்புறம் செம்பாவைப் பார்க்கவே இல்லை. செம்பாவுக்கு ஆண்பிள்ளை மாதிரிக் குரல். அந்தக் குரலை எதனாலோ எனக்குப் பிடித்திருந்தது. அதைக் கேட்டால், மரகதத்தைக் கட்டின புதிதில் விறுவிறுவென்று விஷம் ஏறினது மாதிரிக் கூட இருந்தது உண்டு.
கடையில் பற்று எழுதி, வருஷக் கழிவில் கனகாம்பரக் கலரில் ஒரு பட்டுச் சேலை கூட செம்பாவுக்கு எடுத்துக்கொடுத்திருக்கிறேன். ‘கொழுந்தன் எடுத்துக் கொடுத்தோஎன்று அதைக் கட்டின நேரம் எல்லாம் செம்பா எல்லோரிடமும் சொல்வதாக மரகதம் என்னிடம் சொல்வாள். மரகதத்திற்கு எல்லாம் தெரியும். செம்பாவிற்கு எல்லாம் தெரியும். எல்லோர்க்கும் எல்லாம் தெரிந்துதான் இருக்கிறது.
செம்பா அதே குச்சு வீட்டில்தான் இருந்தாள். இரண்டு மூன்று பேராக காலை நீட்டிச் சுளவில் பீடி சுற்றிக் கொண்டு இருந்தார்கள். எஃப்.எம் ரேடியோ பாடிக்கொண்டு இருந்தது. பக்கத்து வீட்டில் படம் வரைகிறவர்கள் யாரோ இருக்கிறார்கள் போல. பழைய கொண்டையா ராஜு வரைந்த முருகனைப் பிரதி பண்ணின ஒன்று சுவரில் ஈரமாகச் சாய்ந்திருந்தது. ஆண்டாள் அல்லது மீனாட்சியாக இருக்க வேண்டும். பச்சை நிறத்தில் பாதியாகப் பிறந்து நின்றவள் தோளில் கிளி அமர்ந்திருந்தது.
‘அண்ணாச்சி இல்லையா?என்றுதான் சத்தம் கொடுத்தேன். இரண்டு மூன்று பேருக்கு மத்தியில் இருக்கும்போது ‘செம்பாஎன்று பெயர் சொல்லிக் கூப்பிடமுடியாது அல்லவா. ஒரு நிமிஷம் செம்பாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. ‘எப்போ வந்தியோ?என்று சிரித்தபடி எழுந்தாள். நீட்டிக்கொண்டிருந்த காலை மடக்கி எழுந்திருக்கும் போது என்னைப் பார்க்கவில்லை. முகம் கீழே பார்க்க இருக்க சத்தம் மட்டும் கேட்டது. பீடி இலை நெடியை இவ்வளவு பக்கத்தில் உணர்ந்தது இல்லை. அது தொந்தரவு செய்தது. ‘அண்ணாச்சி இல்லையா?என்று மறுபடி கேட்டேன். இல்லாவிட்டால் நல்லது என்கிறது மாதிரித்தான் அந்தக் கேள்வி இருந்தது.
‘அவ்வொ ரெண்டு மாசமா ஸ்கூல் வேனில் கண்டக்டரா ஓடுதாக. பெரிய முதலாளி பழக்கம். சும்மா ஒரு ஆள் பேருக்கு இருக்கட்டும்னு போட்டுக்கொடுத்திருக்கோ.  வயசாயிட்டு வருதுல்லா  செம்பா இப்போது என்னைப் பார்க்க ஆரம்பித்து இருந்தாள். குரல் சுண்ணாம்புச் சுவரில் உரசினது போலக் கரகரவென்று என்னவோ செய்தது.
‘என்ன? அண்ணாச்சிக்கு என்னை விட ரெண்டு மூணு வயசு கூடுதல் இருக்குமா?
‘ஆனா, உங்களுக்கு வயசு தெரியலை செம்பா இப்படி இதைச் சொல்லவேண்டும் என்று ரொம்ப நாட்கள் சேகரித்துவைத்திருந்தது போல இருந்தது. அந்த கனகாம்பரக் கலர் சேலையைக் கட்டியதும் அவிழ்த்ததும் அதை அப்படிச் சொன்ன நேரத்துக்குள் நிகழ்ந்து முடிந்து விட்டது என்பதே நிஜம். எனக்குப் போதும் என்று ஆகிவிட்டது. புறப்பட ஆரம்பித்தேன்.
‘எல்லாரும் நல்லா இருக்காங்களா?என்று செம்பா கேட்டாள்.
‘வேறு ஒரு ஜோலியா வந்தேன். எட்டிப் பார்த்துட்டுப் போலாம்னு தோணுச்சுஎன்று எங்கும் பார்க்க முடியாமல், அவளுடைய இடது கை மணிக்கட்டில் துருத்தியிருந்த எலும்பைப் பார்த்தேன். ஒரே ஒரு எலும்புத் துருத்தலில் முழுச் செம்பாவையும் பார்த்துவிடமுடிவதாக அந்த நேரம் இருந்தது.
‘அண்ணாச்சி கிட்டே சொல்லுங்கஎன்று செருப்பை மாட்டும் போது
‘காலில என்ன கட்டு?’ என்று செம்பா கேட்டாள். சாக்கடையை வழித்துப் போட்ட கருஞ்சகதியில்  ஒரு செத்த பெருச்சாளி கிடந்தது.
‘அது ஒண்ணுமில்லை’  என்று நடக்க ஆரம்பித்தேன்.
%
செம்பாவைப் பார்த்ததைச் சொல்லவேண்டும். பிரமுவை ரொம்ப நேரமாக எதிர்பார்த்தேன். வெயில் ஜாஸ்தி. ஒரு கூறு வெள்ளரிப் பிஞ்சு வாங்கினேன். இன்னும்  தரையில் சாக்கு விரித்து வெள்ளரிப் பிஞ்சு விற்கிற அதே முகத்தை எல்லா ஊர்களிலும் பார்க்க முடிவது எப்படி என்று தெரியவில்லை. ஒரு நன்னாரி சர்பத் குடித்தாயிற்று. இன்னும் வாயில் வந்த எலுமிச்சம்பழக் கொட்டையைத் துப்பக் கூட இல்லை. வாய்க்குள் அது வழுவழுவென்று நகர்வது நன்றாக இருந்தது. எதிர்த்த ஹோட்டலில் ‘சாப்பாடு ரெடி; என்கிற போர்டைக் கூரை மாதிரி இரண்டுபக்கமும் பிளந்து வைத்துவிட்டுப் போனார்கள்.. சாம்பார் வாசனையை நினைத்தால் இப்போது நிச்சயம் சாம்பார் வாசனை அடிக்கும். அவியல் வாசனையை நினைத்தால் அவியல்.
‘ரொம்ப நேரமா வெயில்ல நிக்கியோ. யாரையோ எதிர்பார்க்கியோ போல. அவ்வொளுக்கு என்ன ஜோலியோ? என்ன அர்ஜெண்டோ? வார நேரத்துக்கு வரட்டும். சந்தை நாள் வேறே. முன்னைப் பின்னே ஆகும். பேசாம அந்த நடையில உட்காருங்க. ஏற்கனவே காலில என்னமோ கெட்டு வேறே போட்டிருக்கியோ. எதுக்கு நட்டமா நிண்ணுக்கிட்டு இருக்கணும்? வெள்ளரிப் பிஞ்சு விற்கிற அம்மாதான் சொன்னாள். எனக்கு என்னவோ செம்பாதான் இவ்வளவு தூரம் பின்னாலேயெ வந்து சொல்வது போல இருந்த்து. சொன்ன மரியாதைக்கு நடை சாத்தியிருந்த அம்மன் கோவில் பட்டியல் கல்லில் உட்கார்ந்தேன்.
‘வெயிலடிச்ச கல்லு. சுடப் போகுது. துண்டு கிண்டு இருந்தா போட்டுக்கிடலாம்லா’ -  இதையும் அந்த அம்மாதான்  சொல்லியது.
ஹார்ன் அடிக்கிற சத்தம் கேட்டது. தெரியாதா, தனபேரின்பம் லாரிதான். இடதுபக்கம் ஓரமாக ஒதுக்கி நின்றுகொண்டு மறுபடியும் ஹார்ன் அடித்தான். பிரமு எப்படி ஹார்ன் அடிப்பான் என்பது எனக்குப் பிடிபட்டிருந்தது. ‘கைலாசம்’  என்று டிரைவர் சீட் கதவைத் திறந்து கூப்பிட்டான். பெரிய லாலா கடையில் கருப்புக் கோட்டைக் கையில் மடித்துப் போட்டுக்கொண்டு நின்ற வக்கீல் ஒருத்தர் லாரிக்குள் பார்த்துக்கொண்டே எதையோ வாயில் போட்டார். பிரமு பக்கத்தில் யாரோ உட்கார்ந்திருந்தார்கள்.  சேலை கட்டி, பூ வைத்த ஒருத்தி முன்சீட்டில் லாரியில் இருந்தால் வக்கீல் என்ன போலீஸ்காரர் கூட அப்படிப்  பார்க்கத்தான் செய்வார்கள்.
‘ரோட்டைக் க்ராஸ் பண்ணி வா மாப்பிளே பிரமு சந்தோஷமாக இருந்தான். அந்த மனுஷி முகமும் அப்படித்தான் இருந்தது. செம்பா, அந்த வெள்ளரிப் பிஞ்சு விற்றவள். பிரமு பக்கத்தில் இருக்கிற இவள் எல்லோருமே ஒன்றுபோல ஒரே ஜாடையில் ஒரே மாதிரி கருணையும் சிரிப்புமாக இருப்பது போல இருந்தது.
‘இது கைலாசம். நம்ம மாப்பிள்ளை. உனக்கு அண்ணன்னு வச்சுக்கயேன்’  என்று என்னைப் பார்த்ததும் அவளிடம் சொல்லி அவளுடைய தோளில் இடது கையால் அடித்தான். ‘உம்ம தங்கச்சி சந்தை வாசலில் மரச் சீனிக்கிழங்கு வித்துக்கிட்டு உட்கார்ந்து இருந்தா. பார்த்ததுதான் தாம்சம். ஏறு வண்டியிலேண்ணு சொல்லீட்டேன்என்று என்னைப் பார்த்துச் சொன்னான். அவள் சிரித்த மாதிரியே நானும் சிரித்தேன். இந்த மாதிரி சமயங்களில் வழக்கமாக நான் சொல்கிற ‘நல்லதுஎன்கிற வார்த்தை வாய் வரை வந்தது. சொல்லவில்லை. எல்லாம் சரியாகவே இருக்கிறது இன்றைக்கு.
‘ஒண்ணு பண்ணு மாப்பிளே. ஒரு பஸ் பிடிச்சு கல்லிடக்குரிச்சிக்கு வந்திரு. பஞ்சாயத்து போர்டு இல்லை. ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப்புண்ணு கேட்டு இறங்கு. இவளை இறக்கிவிட்டுட்டு வெயிட் பண்ணுதேன். தப்பா நினைச்சுக்கிடாத மாப்பிளே. அப்புறம் விபரம் சொல்லுதேன் என்றான் .  இதுவரை உறுமிக்கொண்டிருந்த வண்டி நகர ஆரம்பித்த போதும் அந்த மனுஷி சிரித்தாள். எனக்கு கும்பிடத் தோன்றியது. கும்பிட்டேன்.
வண்டி நகர்ந்து பத்தடி முன்னால் போனது. ரஹ்மத் ஹோட்டல் தாண்டி, குமார் பழக்கடை தாண்டி, முருகன் பழமுதிர்சோலை தாண்டி, அம்மையப்பர் கோவில் போகிற முடுக்குப் பக்கம் நின்றது. பிரமு இறங்கி என்னைப்பார்க்க வருவது போலத்தான் இருந்தது.
.‘அங்கேயே நில்லுஎன்பது போலச் சைகை காட்டினேன். பிரமு நிற்கவில்லை. கோர்ட் பக்கம் செருப்புத் தைக்கிறவர், இளநீர் விற்கிறவர் எல்லாவற்றுக்கும் அப்பால் பிளாட்பாரத்தில் கடைபோட்டு சின்னக் குழந்தைகள் ஜட்டி பனியன் வியாபாரம் செய்கிறவர் பக்கம் நான் போகிறபோது, பிரமு வலமும் இடமும் பார்த்து ரோட்டின் குறுக்கே இளம் ஓட்டமாக என்னைப் பார்த்து  ஓடிவந்தான்.  சாம்பாரோ சால்னாவோ ரப்பர் முடிச்சுப்போட்டு வாங்கிப் போன ஜவ்வுத்தாள் பை ரோட்டில் தவறிவிழுந்து வெயிலில் மினுங்கிகொண்டு இருந்தது.
வந்ததும் வராததுமாக பிரமு என் கையைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். அவன் அப்படி நட்ட நடுவில்தான் அதைச் சொல்லத் துவங்கியிருக்கவும் முடியும்.
‘பதினாறு பதினேழு வயசுப் பையன் கல்லிடைக்குரிச்சியில புரோட்டா கடையில நிக்கானாம். அவன் எனக்குப் பிறந்தவனாம். அவ சொல்லுதா மாப்பிளேஎன்று மேலும் அழ ஆரம்பித்தான். நான் தூரத்தில் நிற்கிற  லாரியைப் பார்த்தேன். ஒரு களங்கமற்ற ரகசியம் போல முன்னால் நகர்வதற்குத் தயாராக அது அதிர்ந்துகொண்டு இருந்தது. நான் மெதுவாக  பிரமுவைத் தட்டிக் கொடுத்தேன்.
எனக்குப் புரிந்தது. இது இப்படித்தான் இருக்கும். எனக்கு வேறு எதையும் பிரமுவிடம் கேட்கத் தோன்றவில்லை. இப்போது  நான் கேட்க வேண்டியது கல்பனா ஸ்டுடியோக்காரரிடம்.
பிரமுவையும் அவளையும் ஒரு ஃபோட்டோ எடுக்கவேண்டும் என்று சொன்னால் அவர்கள் மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்கள்?

%

 உயிர் எழுத்து
ஜூன் 2013 இதழ்.





2 comments:

  1. அப்படியே மனதை நெல்லை டவுணை சுற்ற வைத்து விட்டது.கள்ளங்கபடமற்ற எளியவர்களின் வாழ்க்கையை கல்பனா ஸ்டுடியோவில் படமாக்கி விட்டீர்கள்,செம்பாக்காவை பார்க்க விரும்புவதும் அவர்களிடையே உரையாடலும் வெகு இயல்பான நெல்லைக்கே உரிய பேச்சு வழக்குடன் மிகவும் ரசித்தேன்.
    "இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது கடைசியில்

    ReplyDelete
  2. ungalkalyana photovai kalpana studiovila nanum pathu irukken!!!petchiappan enakku friendula!!appo nan pakkumpothu ithai vachchu neenga oru katha eluthvelnnu naan ninachi kooda pakkala!!!adengappa ethnai varusam achchu antha fotovai patthu!!!!by the by unga thambi sethuvum eppadi irukkar???college padikkum pothu avaru nan ellam onna busla povum,,,naan thekku puthu theru pillai erugira busla than eruven,,,,appo athu conventla padichchathu,,,

    ReplyDelete