எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
ஒன்று, எல்லா மீன் வியாபாரிகளும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் பரதவராக இருக்க அவசியமில்லை எனினும் அவர்களிடம் கடல் இருக்கிறது, உப்பிருக்கிறது. இரண்டு, எல்லா மீன்வியாபாரிகளும் பூனைகளிடம் பிரியமாக இருக்கிறார்கள். தங்கள் இஷ்ட பூனைகளுக்கு அளிப்பதற்கென்றே சில பிரத்யேக மீன்களை அவர்களின் பிரப்பங்கூடையில் எடுத்துவருகிறார்கள். அந்த நாவல் மரத்தடி வீட்டுப்பக்கம் வரும்போதே சைக்கிளுக்குப் பின்னால் கருப்புப் பூனை வர ஆரம்பித்துவிடுகிறது. ‘இரு, இரு’ என்று ஒரு செல்லப் பெயரையும் சொல்லி அந்த வளைவில் திரும்புகிறார். சைக்கிள் டயர் தெரு மணலில் பிருபிருக்கிற சத்தத்தை அந்தப் பூனைக்குப் பிடித்திருக்கிறது. நாவல் பழங்கள் சிதைந்து கருஞ்சிவப்பு நசுங்கலாக்க் கிடக்கும் காற்றுக் காலங்களில் அந்த மணல் உராய்வை விரும்பும் கருத்தபூனையின் கண்களை யாருக்குமே பிடித்துப் போகும். அவரவருக்கு மனதில் இருக்கிறவர்களின் பிரியம்நிறைந்த கண்களாகியிருக்கும் அவை.
இன்று நான் பார்த்தது அந்தப் பூனையை அல்ல. அந்த மீன்காரரையும் அல்ல. இவர் சைக்கிளில் விற்பவர் கிடையாது. புனித தோமா தெரு முனையில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கடை போடுகிறவர். வியாபாரம் துவங்கு முன்பு அவர் அதற்குத் தயாராவது நன்றாக இருக்கும். முழுவதும் நின்று பார்க்க வாய்க்கவில்லை. துண்டு துண்டான அவர் தயார் நிலைகளை நான் ஒட்டவைத்திருக்கிறேன்.
அவருடைய பைக்கில் இருந்து மீன் கூடையை இறக்கிவைத்துவிட்டு பைக்கை பக்கத்தில் பாம்பு அடைந்துகிடக்கும் வேலிக்குஅருகில் நிறுத்துவார். மீன் வியாபாரிக்கும் மீன் வாங்குபவருக்கும் நெருக்கம் இல்லாதா போகும். அப்படி ஒரு நெருக்கமான வீட்டில் தன்னுடைய இரண்டு பிளாஸ்டிக் வாளிகளிலும் தண்ணீர் பிடித்துக்கொண்டுவந்து வைப்பார். ஒரு சிகரெட்டைப் பொருத்திப் புகைத்தபடி செல்ஃபோனில் பேச ஆரம்பிப்பார். அவர் பேசி முடிப்பதற்குள் அந்தப் பெரியவர் சைக்கிளில் வந்து ஓரமாக இறங்குவார். இவருக்கு ஒத்தாசைக்கு அவர். ஏற்கனவே அவரும் மீன் விற்றவராகத்தான் இருக்கவேண்டும். தண்ணீருக்குத் தவிக்கிற, காற்றில் சுவாசத்திற்குப் பிரயாசைப்படுகிற மீனின் திறந்தவாய் அவருக்கும் இருந்தது.
அவர்தான் மீன்களைக் கழுவி கீழே உட்கார்ந்து அரிவாள் மணையில் அரிந்து சுத்தப்படுத்தி கருப்பு பாலித்தீன் பையில் இட்டு வாடிக்கையாளரிடம் கொடுப்பார். அப்படிக்கொடுக்கும்போது அவர் பேசமாட்டார். முன் பற்கள் இல்லாது கருஞ்சிவப்பு ஈறு மினுங்க அவர் சிரிப்பதே பேச்சுதான. அவரையே அந்த நோஞ்சான் பூனை சுற்றிச் சுற்றி வரும்.
நோஞ்சானாக இருப்பதால் கருவுறக் கூடாது என்று இருக்கிறதா என்ன? நோஞ்சான் சூலிப்பூனையை அந்தப் பெரியவர் சீராட்டுவதை நான் முன்பே பார்த்திருக்கிறேன். நான் மீன் வாங்கவில்லையே தவிர, இந்த மீன்காரப் பெரியவரைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன் சில காலமாக.
எந்த ஜீவராசிகளிடம்
நாம் மனதாரப் பழகுகிறோமோ அவர்களின் அடையாளம், அவற்றின் மந்தைக்கு மத்தியிலும்
நமக்குப் பிடிபட்டுவிடுகிறது. எறும்புச் சாரியில் ஒரு குறிப்பிட்ட எறும்பை
அடையாளம் சொல்லக் கூடியவர்கள் இருக்கக் கூடும். எனக்கு இரண்டு மூன்று பூனைகளுக்கு
இடையில் இந்த நோஞ்சான் பூனையை, ‘எங்கே ஆளைக் காணோம்?’ என்று கேட்கிற
அளவுக்கு முடிந்தது. அப்படி முடியாமலே இருந்திருக்கலாம் என இப்போது படுகிறது.
வாசல் இரும்புக்கதவில் பிறை நட்சத்திரச் சின்னம் போட்டிருக்கிற முன்னாள் பட்டாளத்துக்காரரின் வீடு தாண்டியதும் ஒரு காலி மனை. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறு வேப்பமரம். மரம் கூட அல்ல. கன்று. அதன் அருகில் குப்பையோடு குப்பையாக்க் கிடந்தது அந்தப் பூனை. ஒரு வளர்ந்த வேப்பமரத்தின் அடியில் கிடந்தால் கூட அது வேறு மாதிரியாக இருந்திருக்கும். அசையும் தாமிரத் துளிர்கள் உள்ள வேப்பங்கன்றின் கீழ் அது மீன்களையும் மீன்காரத் தாத்தாவையும் விட்டு வெகுதூரம் விலகிப் போய் அப்படிக் கிடந்தது பெரும் துக்கம் உண்டாக்கியது. ஏதோ தளரத் தளர படுத்துத் தூங்குவது போலவும், நெட்டி முறித்து சற்று நேரத்தில் அது எழுந்து வெயிலில் புரண்டு உடம்பு நக்கி இன்றைய திசை நோக்கி நகர்ந்துவிடும் என்றும் தோன்றியது. மரணமடையாத பார்வையுடன் அந்தக் கண்கள் என்னையே பார்த்தன. இறப்பின் சாயல் எந்த மிருகத்தின் கண்களிலும் வந்து சேராது அவை திரிந்த ஆதிவனம் வடிகட்டிவிடும் போல.
என்னை அதற்கு நிச்சயம் அடையாளம் தெரிந்திருக்காது. அடையாளம் தெரியவேண்டும் எனில் நான் அந்த மீன்காரப் பெரியவராக இருந்திருக்க வேண்டும்.
நான் இதுவரை வேறு எவராகவும் இருக்கவிரும்பியதில்லை. இக்கணம் அந்த மீன்காரராக இருக்க விரும்புகிறேன்.
%
அன்பில்லாவரையும் அன்புகொள்ள வைக்கும் எழுத்துநடை.பூனைக்கு உங்களை கண்டிப்பாக தெரிந்திருக்கும் அங்குள்ள மற்ற பறவைகளும் அந்த வேப்பங்கன்றும் சொல்லியிருக்கக் கூடும்.
ReplyDeleteவார்த்தைகளால் காட்சிகளை வரைவதோடு அல்லாமல்
ReplyDeleteஅன்பு நெகிழ்ச்சி ஆகியவற்றை பரிமாறுகிறீர்கள்.
படித்து முடித்ததும் இக்கணத்தில் இருந்து
மீன் விற்பவர் கருவாடு விற்பவர், கீரை விற்பவர்,
கோலம் பொடி விற்பவர், இஸ்தரி வண்டிக் காரர் களிடம்
அன்பும் கருணையும் காட்ட வேண்டும் என்ற எண்ணம்
உருவாகி விட்டது.