Friday, 3 May 2013

பூரணம்





அதென்னவோ கருப்பு பாலித்தீன் பையில்தான் மீனைப் போட்டுக் கொடுக்கிறார்கள்.
மீன் எடுத்துவரும் சரசு அத்தை நைட்டி கரண்டைக்கு மேல்தான் இருக்கிறது. இந்த வயதிலும் அத்தை கொலுசு போடத்தான் செய்கிறாள். அதுவும் மூன்று சலங்கை வைத்த கொலுசு. மீன் வாங்கிக் கொண்டு போகிறபோதே சத்தம் கேட்கிறதா என்றால், அப்படியெல்லாம் இல்லை. வாங்கின புதிதில் கேட்டிருக்கும். நசுங்கிப் போன ஒரு சதங்கையுடன் மூன்று முத்தோடு ஒரு கண்ணி ஏதோ ஒரு ரயில் பிரயாணத்தில் காலடியில் கிடந்து எடுத்த போது எனக்கு சரசு அத்தை கொலுசுதான் ஞாபகம் வந்தது. இதை நான் பூரணலிங்கம் மாமாவிடமே சொல்லியிருக்கிறேன்.
பூரணலிங்கம் மாமா விழுந்து விழுந்து சிரித்தார். “ ஊரு உலகத்தில எங்கன எவள் கால் கொலுசு அந்து கிடந்தாலும் உனக்கு சரசு அத்தை ஞாபகம்தான் வருது மாப்பிளை “ என்று அசோகா பாக்கும் வெற்றிலையும் கலந்த வாசத்தோடு சொன்னார்.  மாமா அன்றைக்கு குடிக்க எல்லாம் இல்லை. அதையும் சொல்ல வேண்டும். நானும் அப்படித்தான்.
சரசு அத்தை நெஞ்சுக்கு மேல் பெயருக்கு ஒரு குற்றாலம் துண்டைப் போட்டிருந்தாள். அவர்கள் வீட்டுப் பூனை,எனக்கும் சேர்த்து மீன் வாங்கி இருக்கிறாய் அல்லவா?என்று அத்தையிடம் கருத்த குரலில் கேட்டுக் கொஞ்சிக் கொண்டே கூடப் போனது. மற்ற நேரங்களில் எல்லாம் தொடையில் கிள்ளுப் பட்ட பச்சைப் பிள்ளை மாதிரி பாக்கு மரத்து மூட்டில் இருந்து கத்துகிற அது, ரொம்பவும் அடக்கமான குரலில், நகத்தை எல்லாம் பாதத்துக்குள் இழுத்து வைத்துக்கொண்டு, தெருவிலிருந்து வீட்டு நடைவரை தன்னுடைய சத்தத்தைச் சிந்திக்கொண்டே போனது.
அப்படி சரசு அத்தை துண்டை மேலே போட்டிருப்பதும், அதோடு இப்படி வெளியில் நடமாடுவதும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று பூரணலிங்கம் மாமாவிடம் சொல்லியிருக்கிறேன். “ ஆனித் திருவிழா என்றால் கொடியேத்து இருக்கும் ‘லாஎன்று மாமா லேசாகச் சிரித்துவிட்டு ‘செண்ட்ரல் டாக்கீஸில என்ன படம் மாப்ளே ஓடுது?என்று வேறு பேச்சுக்குப் போய்விடுவார்.
“உனக்கும் பூரணத்துக்கும் எப்படி டே ஒத்துப் போகுது?என்று நிறையப் பேர் என்னிடம் கேட்டுவிட்டார்கள். அதுதான் ஒத்துப் போகிறது என்று தெரிகிறதே, அப்புறம் என்ன, எப்படி என்று என்ன கேள்வி? நான் எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக் கொள்வேன்.  சிரிப்புதான் பதில். “என்னடே ஒண்ணும் சொல்ல மாட்டேங்க. சிரிச்சா எப்படி டே?என்று கேட்பார்கள்.  அப்படிக் கேட்பது அனேகமாக சொர்ணா காப்பிப் பொடிக்கடை பூமி அண்ணாத்தை. எல்லோரும் பூமி பூமி என்று சொல்கிறார்களே தவிர, அதுதான் அவருடைய பெயரா என எனக்குத் தெரியாது. இதைக் கேள்விப்பட்ட பூரணம் மாமா என்னிடம் சொன்னார், ‘ நீ சொல்ல வேண்டியது தானே மாப்பிள்ளை.  ‘உமக்கும் தொட்டிப்பாலத் தெருக்காரிக்கும் ஒத்துப் போகுதுல்லா. அதே மாதிரித்தான்என்று. ‘அது யாரு மாமா?என்றால் ‘அது உனக்கு என்னத்துக்கு. நீ பூமிகிட்டே இதைச் சொல்லு. உனக்கு யோசனையா இருந்துதுண்ணா லிங்கம் இப்படிச் சொல்லுதான்னு எம் பேரைச் சொல்லியே சொல்லேன்என்பார்.
பூரணலிங்கம் என்பதைப் பெரும்பாலும் எல்லோரும் பூரணம் என்றுதான் சொல்வோம். மாமா தன்னைப் பற்றிச் சொல்லும் போது ‘லிங்கம்என்று சொல்லிக் கொள்வார். ‘ எங்க அம்மை அப்படித்தான் கூப்பிடுவாஎன்று சொல்வார். அப்படிச் சொல்லும் போது வேறு மாதிரி ஆகிவிடுவார். மாமாவுக்கு அவருடைய அப்பாவைப் பிடிக்கவே பிடிக்காது. ‘சண்டாளன் படுத்தின பாட்டில், எங்க அம்மை வெளித் தெப்பக் குளத்தில மிதந்துட்டா. அவளுக்குப் பிடிச்ச பச்சைக் கலர் சேலையில, வயித்தில் குளவிக்கல்லைக் கட்டிக்கிட்டுக் குதிச்சிட்டா. எனக்குப் பதிமூணு வயசு. என் தங்கச்சி சீரங்கத்துக்கு ஒம்போது வயசு. ரெண்டு பேருக்கும் இடையில நாலு வயசு வித்தியாசம்
இதைச் சொன்னது எங்கே வைத்து தெரியுமா? செய்துங்க நல்லூரில் ஒரு சாராயக் கடையில். அந்தக் கடையில் வேலை பார்த்த யாரோ, மாமாவுக்குப் பழக்கம் போல. லிங்கம். வேறு ஏதாவது மேற்கொண்டுவேணுமா?என்று தற்செயலாக, மாமா பெயரின் பின் பாதியைச் சொல்லிவிட்டார். இந்த மாதிரி நேரங்களில்தான் தலையில்லாமல் வாலும், வால் இல்லாமல் தலையும் எல்லாம் பிடித்துப் போகுமே. பூரணம் மாமா சட்டென்று எழுந்து அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, ‘ எங்க அம்மைக்குப் பிறகு நீதான் என்னை லிங்கம்னு கூப்பிட்டிருக்கிற ஒரே மனுஷன்என்று முத்தம் கொடுத்தார். முதலில் அப்படித்தானே ஆரம்பிக்கும். அப்புறம் ‘லிங்கம், லிங்கம்,லிங்கம் ‘ என்று மணி அடிக்கிறது போலத் திரும்பத் திருமபச் சொன்னார். மறுபடியும் முத்தம் கொடுக்கும் போது அழ ஆரம்பித்துவிட்டார்.
இப்படி அம்மாவை நினைத்து அழுகிற பூரணலிங்கம் மாமா அப்பாவை நினைத்து ஒரு தடவை கூட அழுது நான் பார்த்ததில்லை.  மாமாவின் அப்பா கருப்பட்டிக் கடை வைத்திருந்ததாகத்தான் ஞாபகம். ஓலைச் சிப்பங்களில் கருப்பட்டி வந்து கைவண்டியில் மாமா வீட்டில் இறங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.  சில சமயம், ஒரு பெரிய மர பெஞ்சை வெயிலில் இழுத்துப் போட்டு, கசிந்து போன கருப்பட்டி வட்டுக்களைக் காய வைத்திருப்பார்கள். உலகத்திலேயே மிக அழகான கருப்பு நிறமுடைய மினுமினுப்பான கட்டெறும்புகளை நான் பூரணம் மாமா வீட்டில்தான் பார்த்திருக்கிறேன்.
ஒரு தடவை சப்பாத்தி ஹோட்டலில் நானும் பூரணம் மாமாவும் குளோப் ஜாமூன் சாப்பிடுகிறோம். இரண்டு கண்ணாடிக் கிண்ணங்களில் கெட்டியான கரண்டியைப் போட்டு முன்னால் வைத்ததை ரொம்ப நேரம் பூரணம் மாமா பார்த்துக் கொண்டே இருந்தார். கண் எல்லாம் கலங்கியது அவருக்கு. ;நானும் என் தங்கச்சியும் சமீப காலம் வரைக்கும் இதெல்லாம் சாப்பிட்டதே இல்லை. கருப்பட்டித் துண்டுதான் எங்களுக்கு ஸ்வீட்என்று சொல்லிவிட்டு அப்படியே இருந்தார். ‘நீயே சாப்பிடு மாப்பிளைஎன்று என் பக்கம் கிண்ணத்தை நகர்த்திவிட்டார். அவர் சொன்னார் என்பதற்காக சாப்பிட்டுவிட முடியுமா? நான் சாப்பிடவில்லை. அறுகோணம் போல வெளிப்பக்கத்தில் நீல  நிறப் புடைப்புகள் உள்ள அந்த கண்ணாடிக் கிண்ணத்தில், ஜீராவில் அமுங்கிக் கிடந்த அந்த உருண்டைகள் உண்டாக்கிய துக்கம் மிக்க் கூடுதலானது.
“கடைசியில் உத்தரக் கட்டையில் நாண்டுக்கிட்டு நிண்ணதுதான் மிச்சம்என்று ஒரு நாள் அப்பாவைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கணக்கப் பிள்ளை மேஜை போல் இருந்த மரச்சாய்வு மேல் உட்கார்ந்துகொண்டு பூரணலிங்கம் மாமா ஒரு சாவி வளையத்தைத் தன் இரண்டு விரல்களுக்கு இடையே ஒரு செத்த எலியைத் தூக்குவது போலப் பிடித்து ஆட்டினார். பத்துக்கு மேற்பட்ட சாவிகளும் முள் வாங்கியும் ஒரு வெள்ளிக் காது குரும்பியும் சலசலத்தன.  “ ஒரு மயித்துக்கும் பிரயோஜனம் இல்லை “ என்று அந்தச் சாவிக் கொத்தை வீசினார். அது ஒழுக்கறைப் பெட்டி, முன்பு இருந்த மூலையில் சருகிக்கொண்டு போனது. நான்கு கால்கள் இருந்த இடம் மட்டும் வெள்ளைக் கட்டங்களாக அதிர்ந்தன. எப்போதோ சிக்கெடுத்து விரலில் சுருட்டி எறிந்த தலைமுடி பயந்து தன் இடத்தை மாற்றிக்கொண்ட்து.
“ சீரங்கத்துக்கு எப்படிக் கல்யாணம் முடிஞ்சிருக்கும்னு நினைக்கே? “ பூரணம் மாமா ஒருநாள் என்னை ரயில் வே ஸ்டேஷன் பெஞ்சில் வைத்துக் கேட்டார். “அந்த ஆள் சாகும் போது எனக்கு பத்தொம்பது வயசு. சீரங்கத்துக்கு பதினாலு பதினஞ்சு இருக்கும். கல்லணை ஸ்கூலில் பத்து படிக்கா. பள்ளிக்கூடம் திறந்து முழுசா ரெண்டு மாசம் கூட இருக்காது. எத்தனை யூனிபாரம் தாவணி. எத்தனை உடுமாத்துத் தாவணின்னு எல்லாம் கிடையாது. இதுதான் அது. அதுதான் இது. ரெண்டும் ஒண்ணுதான். அப்படித்தான் இருந்துது நிலமை.பூரணம் மாமா எதிரே கிடக்கிற தண்டவாளங்களையே பார்த்துக்கொண்டு இருந்தார். சற்று முன்பு போயிருந்த ரயிலில் இருந்து வீசிய ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்தின் இலையை அலகால் பக்கவாட்டில் இழுப்பதும் பறப்பதுமாக இருந்தது ஒரு காகம். ஒரு வினோத பாதிப் பழுப்பும் பாதிப் பச்சையுமாக இழுபட்ட இலையிலிருந்து தயிர்சாதம் வழுகியும் அப்பியும் சரிந்தது.
“கடைசீல யாரு வந்து கைதூக்கி விட்டாங்க தெரியுமா? அந்த ஆளு வகையில ஒரு தாயோளி கூட எட்டிப் பார்க்கலை. எங்க அம்மையைப் பெத்த தாத்தாவுக்கு இன்னோரு குடும்பம் இருந்திருக்கும் போல. ‘செங்குளத்துப் பெரியம்மை தான் எனக்குப் பேறுகாலம் பார்த்து விட்டாஎன்று எங்க அம்மை சொல்லுவா. அவள் தான் எல்லாத்தையும் கேள்விப்பட்டு துக்கம் கேக்க வந்தா. வீட்டை ஒதுங்க வச்சா. பலசரக்கு வாங்கிப் போட்டா. பண்ட பாத்திரம் என்ன ஏதுண்ணு பார்த்துப் பார்த்து பரிமாற ஆரம்பிச்சா. அவ போறேண்ணும் சொல்லலை. நானும் சீரங்கமும் இருங்கன்னும் சொல்லலை. ஆனா, என்ன நினைச்சாளோ மகராசி, எங்க கூடவே தங்கீட்டா
பூர்ணலிங்கம் மாமா எதிரே அந்த மனுஷி நிற்பது போலக் கும்பிட்டார். “நீ பார்த்திருக்கியா செங்குளத்து அத்தையை?என்று கேட்டுவிட்டு, “பார்த்து இருக்க மாட்டே. ஆனால் பார்க்க வேண்டிய மனுஷி.. உலகத்தில எத்தனையோ அரைவாயும் கொறுவாயுமா பார்க்கிறோம்.  இடையில் இடையில் இப்படி முழுசா ஒண்ணையும் பார்க்கணும் மாப்பிளை. அப்ப தான் நிரக்கும். துருப்பிடிச்சது, கரிப்பிடிச்சது எல்லாத்தையும் ரெண்டு கையிலேயும் புழங்கின பாவத்தைக் கழுவுததுக்கு இப்படித் தட்டோட்டியிலே இருந்து விழுகுத மழைத்தண்ணி மாதிரி யாராவது வந்துரத் தானே செய்தாங்க “
பூர்ணலிங்கம் மாமா தன் உள்ளங்கைகளை காற்றில் நீட்டிக் கொண்டு இருக்கிறார்.  கைகள் திறந்து மேல் நோக்கியபடி எதையோ வாங்கத் தயாராக இருக்கின்றன. இதற்கு முன்பும் ஒருதடவை, உள்ளங்கைகளை மலர்த்தி நீட்டுகிற மாமாவைப் பார்த்திருக்கிறேன். இரண்டு பேரும் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டிருந்தோம்.  எப்படி அவ்வளவு தூரம் நடந்து அந்த வெளித் தெப்பக் குளத்திற்குப் போனோம் என்று தெரியவில்லை.
தெப்பக்குளத்தின் மேல் பக்கத்துப் படித்துறையும் தென் பக்கத்துப் படித்துறையும்தான் பொதுவாகப் புழக்கம் உடையது. வடபக்கத்தில் சுவர் வைத்து மறித்து, ஒரு பெரிய எவர்சில்வர் பட்டறை வந்து ரொம்ப காலம் ஆகிவிட்ட்து.  மாமா என்னைக் கூட்டிப்போனது கீழ்ப்பக்கத்துக்கு. படித்துறையில் மலம் பொருக்காடிக் கிடந்தது. எப்போது எந்தப் பெண்பிள்ளை இடுப்பில் இருந்து அவிழ்த்துப் போட்ட்தோ, ஒரு சிவப்புப் பழஞ்சேலைத் துண்டு கோவணம் போலக் கிடந்தது. நனைந்த துணி வெயிலில் காய்ந்து சாயம் போய் முறுக்கேறிக் கிடக்கையில் பார்க்க என்னவோ போலத்தானே இருக்கும்.
“ மாமா, இங்கே எதுக்கு உட்காரச் சொல்லுதீங்க? வேற பக்கம் போகலாம்என்கிறேன். மாமா, ‘இருடா கூதியான். இருண்ணு சொல்லுதேன்‘லஎன்கிறார். எதிரே தெப்பக்குளம் முழுவதும் நிரம்பிக் கிடக்கிற குவளையில் எல்லாம் ஒன்று போலப் பூத்துக் கருநீலமாக்க் கிடந்தது. நேற்றையப் பூவோடு நாளையப் பூ எல்லாம் சேர்ந்து இன்றைக்கு இரவு பூத்துக் கிடப்பது போல நினைத்துக் கொண்டேன். அந்தக் கருநீலப் பூக்களை ஒரு தடவை முகர்ந்து  மூச்சு இழுத்துவிட்டு ஒரே மடக்கில் மீண்டும் குடிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும் போது, மாமா ஒவ்வொரு படியாக இறங்கி கடைசிப் படியில் உட்கார்ந்து காலைத் தண்ணீருக்குள் தொங்கப் போட்டபடி, குவளையை எல்லாம் விலக்கினார்.
உனக்குத் தெரியாது மாப்பிளே. ஹைஸ்கூலில் வாங்கின எல்லா கப்பையும் இதுக்குள்ளேதான் தூக்கி எறிஞ்சுருக்கேன். சின்னது, பெருசு, சப் ஜூனியர், ஜூனியர், சீனியர்னு கப் கப்பா ஒருநாள் ராத்திரி ஒவ்வொண்ணாத் தூக்கி இதுக்குள்ளே போட்டேன். ஏன் தெரியுமா?  ஏன் தெரியுமா டா? எங்கே டா கூதியான் பார்க்கே? இங்கே என் முகத்தைப் பாருடா. . எங்க அம்மை பச்சைச் சேலையோட இங்கதான் மிதந்துக்கிட்டு இருந்தா.  வாக்கரிசிக்கு இல்லாம நானும் சீரங்கமும் நிக்கோம். அந்த கப்பு எல்லாத்தையும் வச்சு என்ன பண்ண? நாக்கு வழிக்கவா? “
பூரணலிங்கம் மாமா தெப்பக் குளம் மத்தியில் நீராழி மணடபத்தில் எரியும் நீலவிளக்கையே பார்த்துகொண்டு இருந்தாரா, பெரிய கோவில் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாரா தெரியவில்லை. அவர் எதையோ பார்த்தார் அல்லது எதையுமே பார்க்கவில்லை.
நான் ஆறு படிக்கையில் மாமா டென்த் படித்திருப்பார். மாமாவுக்கு அந்தச் சின்ன வயதிலேயே அவ்வளவு முடியும் நரைத்திருக்கும். வைக்கோல் மாதிரி ஒரு பழுப்பு நிறத்தில் இருக்கிற முடியை வலது பக்கத்தில் வகிடு எடுத்து இடது பக்கமாகச் சீவி இருப்பார். நானூறு மீட்டர் ரேஸ்,  ரிலே ரேஸில் எல்லாம் பூரணம் மாமா ஓடிவருவதைப் பார்க்க அவ்வளவு நன்றாக இருக்கும். கடைசி பத்து இருபது அடி தூரத்தில் அவர் மிதக்கிற மாதிரி வருவார். இறக்கையடிப்பதை நிறுத்திவிட்டுப் பறக்கிற ஒரு பறவை மாதிரி இருப்பார். ட்ரில் சார் கூட சொல்வார், ‘ லாஸ்ட் லாப்புல பூரணம் ஷட்டில் காக் மாதிரி வெயிட்டே இல்லாதது மாதிரி ஆகீருவான்”. பள்ளி மாகசைன் பூராவும் மாமா கப்போடு நிற்கிற படம்தான். ஸ்போர்ட்ஸ் டேயில் பரிசு கொடுக்கவந்த டாக்டர் கிருஷ்ணன், ‘ நீ இங்கேயே நில்லு. எதுக்கு இறங்கி இறங்கி ஏறுதேஎன்று சிரித்து மாமாவைத் தட்டிக் கொடுத்தது உண்டு. அந்தக் கப்களை எல்லாம் எப்படி மாமாவால் தெப்பக் குளத்தில் போட முடிந்த்து?
இதை மாத்திரம் இல்லை. மாமா இன்னும் என்ன என்ன எல்லாத்தையுமோ என்னிடம் சொல்லி இருக்கிறார். ஸ்பின்னிங் மில்லில் வேலை கேட்பதற்காக பெரிய முதலியார் வீட்டுக்குப் போயிருக்கும் போது அந்த வீட்டில் அடித்த சாம்பிராணிப் புகையையும் பற்றிச் சொல்லி இருக்கிறார். அந்த முதலியாரும் அவருடைய வைப்பாட்டியும் ( மாமா அந்தப் பெண்ணைப் பற்றி ரொம்ப அசிங்கமாக வர்ணிப்பார் இப்போது) குரும்பூர்ப் பக்கம் காரை நிறுத்திவிட்டு இளநீர் குடித்துக்கொண்டு நின்றதையும் சொல்வார். “இந்த சந்திரபாபு பாட்டு எல்லாம் எங்கியாவது மொத்தமா கிடைக்குமா மாப்பிளை. பிறக்கும் போதும் அழுகின்றான் பாட்டைக் கேட்டா செத்துரலாம்என்பார். ‘புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லைபாட்டில அவன் நடக்கிறதையும் துள்ளுகிறதையும் பார்க்கணும். அவன் முன்னால் இந்த தொட்டிப்பய எல்லாம் ஒண்ணுமே இல்லஎன்று குனிந்து ஒரு கப்பிக் கல்லை எடுத்து எதிரே இருக்கிற வால் போஸ்டர் மேல் எறிவார்.
சரசு அத்தையைப் பற்றியும் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்.  மாமா என்னிடம் சொல்லி இருக்கிறதை எல்லாம் அப்படியே வெளியில் திருப்பிச் சொல்ல முடியாது. “ என்ன மாமா, இதையெல்லாம் போய் என் கிட்டே சொல்லிக்கிட்டு?என்று சொல்வேன். ‘நிலைக் கண்ணாடி மாதிரி மாப்பிளே நீ. புது டிரஸ் போட்டுட்டும் பார்க்கலாம். அவுத்துப் போட்டுட்டும் பார்க்கலாம். உனக்குக் காட்டுததுக்கா பார்க்கிறேன்? எனக்குப் பார்க்கணும்னு தோணுது. பார்க்கிறேன். எனக்கு வலதுன்னா கண்ணாடியில இடது. அதுக்கு வலதுன்னா எனக்கு இடது. நிலைக்கண்ணாடி யாரு கிட்டே போய்ச் சொல்லப் போகுது?இதைச் சொல்லிவிட்டுப் பூரணம் மாமா சிரித்தார். ‘சில சமயம் நிலைக் கண்ணாடி சில்லுச் சில்லா உடைஞ்சு போகும். ஏன் தெரியுமா? இப்படி வெளியிலேயும் சொல்ல முடியாம, அதுக்கு உள்ளுக்குள்ளேயும் வச்சுக்கிட முடியாமத் தான்
நான் அதுவரைக்கும் பாராத ஒரு நிலைக் கண்ணாடியின் உடைந்த சில்லுகளை எனக்கும் பூரணம் மாமாவுக்கும் மத்தியில் சிதறிக் கிடப்பது மாதிரிப் பார்த்தேன். ‘அப்படி உடைஞ்சால் கூட எல்லாச் சில்லுலேயும் நானும் அத்தையும் தாண்டா இருப்போம். ஒண்ணை எடுத்தா அத்தை பூ வச்சுக்கிட்டு நிப்பா. இன்னோண்ணுல அத்தை என்னை கிஸ் அடிச்சுக்கிட்டு இருப்பா. போடா. அவ வேற மனுஷிடா. அவளைக் கொண்டாந்து என் கிட்டே சேர்த்த செங்குளம் அத்தையைக் கும்பிடணும். கோவில் கட்டினால் கூடத் தேவலை’.
மாமா ஒரு கட்டத்தில் எதை எடுத்தாலும் செங்குளம் அத்தையில் கொண்டுபோய்த்தான் முடிப்பார். சரசு அத்தையைப் பற்றிச் சொன்னதும் அப்படித்தான்.
‘இண்ணைக்கும் நாளைக்கும் லீவுதானே மாப்பிளை. புறப்படுஎன்றார் மாமா. ‘புறப்படு. புறப்படு ‘ன்னா எங்கேண்ணு சொல்லுங்க’ - ‘அட. புறப்படுரா மயிரான் என்று முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு, ‘சேஞ்சுக்கு ஒரு கைலியும் ட்ரஸ்ஸும் எடுத்துக்கோ. நீ தான் தபால்காரன் மாதிரி எப்பவும் தோள்ப்பட்டையிலேயே ஒண்ணை மாட்டிக்கிட்டு அலையுவியே, அதுல வச்சுக்கோ. வா.என்று சொல்லிவிட்டு சைக்கிளில் வாசலில் நிற்பார். எப்போதும் அப்படி அப்படியே போட்டுவிட்டுப் புறப்படும்படியாகத்தான் இருக்கும் மாமாவின் எல்லாக் காரியமும்.
நேராகப் போவதற்கு எத்தனையோ வழி இருக்கிறது.  ஜங்ஷனில் போய்க் கூட ஏறியிருக்கலாம். “ நேரா நேராய்ப் போயி என்னத்தைக் கண்டோம் மாப்பிளேஎன்று செண்பகம் பிள்ளைத் தெரு வழியாக, மந்திர மூர்த்தி ஸ்கூல் திரும்பி டவுண் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு போனார். வழி எங்கும் அறுப்புக் களமும் சூடு அடிப்புமாக இருந்த்து. “ மாப்பிளே, நினைச்சா கடலுக்குள்ளே கூட இறங்கி எண்ணைக்கும் நடந்திரலாம். இப்படி அறுப்படியிலே பச்சை வைக்கோலை மிதிச்சுக்கிட்டு நடக்கக் கொடுத்துவச்சு இருக்கணும். பிணையல் அடிக்கிற அந்த மாட்டுக் கண்ணைப் பாரு மாப்பிளே. நம்ம பாட்டன், முப்பாட்டன் பார்க்கிற மாதிரி இருக்குஎன்று சொல்லிக் கொண்டே புனலூருக்கு டிக்கெட் எடுத்தார். ஆனால் ‘இறங்கிக்கிடுவோம் மாப்பிளேஎன்று செங்கோட்டையிலேயே இறங்கிவிட்டார்.
செங்கோட்டையில் கள்ளு கிடைக்கும் இடம் அவருக்குத் தெரிந்திருந்தது. தென்னந் தோப்புகளுக்கு இடையே நடந்து  மாஞ்சருகுகளை மிதித்து மறுபடி ஒரு தென்னந்தோப்பில் இருக்கிற ஒரு குடிசையை அடைவதே நன்றாக இருந்தது. மாமா நார்க்கட்டிலில் உட்காரவில்லை. தென்ன்ங் கீற்று ஒன்றை இழுத்துப் போட்டு அதன் மேல் உட்கார்ந்தார். யோகாசனம் மாதிரி சம்மணம் போட்டு விரைப்பாக நிமிர்ந்து உட்கார்ந்தார். முதுகுத் தண்டு கோணாமல்தான் கள்ளுக் குடிக்க வேண்டும் என்று ஏற்பட்டது போல  இடதுபக்கத் தொடைக்கு மேல் நீண்டிருக்கிற பாதத்தைப் பிடித்துக் கொண்டார். கள் குடிப்பதும் பேசுவதுமாக இருந்தார். பக்கத்தில் பாடிக்கொண்டிருந்த ஒரு ட்ரான்சிஸ்டரை நிறுத்தச் சொன்னார். அதுவும் போதவில்லை.
“நீ பாட்டுக் கேள் அச்சா. நாங்கள் அந்தப் பக்கம் போய்விடுகிறோம்என்று அரை மலையாளத்தில் சொல்லிவிட்டு எழுந்தார்.  நான் அவருடைய மலையாளத்திற்குச் சிரித்தேன்.  “ என்ன சிரிப்பு? “ என்று வழக்கமானதை விட அதிகக் காட்டமான ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னார்.  “ நான் பேசுதேன். அச்சன் கேட்கிறான். இடையில் நீ என்ன? “ என்று மறுபடி அதையே சொல்லி முடித்தார்.
இப்படிச் சொல்வதற்குள் அந்த ஆற்றுக்கால் வந்திருந்த்து. எட்டடி அகலம் கூட இருக்காது. தெளிந்த தண்ணீர் ஓட்டம். எதிர்ப்பக்கம் பூராவும் தாழம் புதர். முறை வைத்தது மாதிரி, ஒன்று மாற்றி ஒரு தென்னை தண்ணீரைப் பார்க்க வளைந்திருந்தது.  பூரணம் மாமா ஒரு சாய்ந்த தென்னையில் வசமாக உட்கார்ந்து கொண்டுதான் சரசு அத்தையை எப்படிக் கல்யாணம் ஆயிற்று என்று சொன்னார்.
“ சீரங்கத்துக்கு இருபத்திரண்டு முடிஞ்சு இருபத்தி மூணு வந்திட்டுது. திசையே பிடிபடலை. எப்படி அதைக் கரையேத்தப் போகிறோம்னு நினைச்சால் தூக்கம் வராது. அத்தை, நான், தங்கச்சி மூணு பேருமே புரண்டுக்கிட்டேதான் கிடப்போம். அன்றைக்குப் புதன் கிழமைண்ணு நினைக்கேன். அது கூட செங்குளத்து அத்தை பேசின பேச்சை வச்சு சொல்லுதேன். அவதான் சொன்னா. ‘இன்னைக்கு புதன், நாளைக்கு வியாழன்னு காலமும் பொழுதும் சிட்டாப் பறந்துரும்.  நாம் இப்படி ஆளாளுக்கு ராத்திரி முழிக்கிறதுக்குப் பதிலா பகலில முழிச்சா நல்லது. எனக்கு ஒரு ரோசனை தட்டுப்படுது. என் புத்திக்குத் தெரிஞ்சு நான் தப்பா ரோசிச்சதே இல்ல “ என்று சொல்ல ஆரம்பித்தாள்.
செங்குளம் அத்தைக்குக் கூடப் பிறந்த தம்பி ஒருத்தன் இருக்கிறானாம். வாடாவழியாக அலைகிறவனாம். சரியான லௌடிப்பட்டம் கட்டி இருக்கிறானாம். ரௌடிதான் லௌடி. அவனுக்கு ஒரு தங்கமான பையன். மேல் படிப்பு எல்லாம் படித்து எட்டாம் கிளாஸ் ஒன்பதாம் கிளாஸ் வாத்தியாராக நல்லூர் வேதப் பள்ளிக்கூடத்தில். வேலை பார்க்கிறான். அப்பன் எடுத்திருக்கிற பெயர் பிள்ளைக்குப் பெண் கிடைப்பதில் தடையாக இருக்கிறது. சீரங்கத்தைத் தருகிறேன் என்று மாமா சொன்னால், அடுத்த நிமிஷமே தாலி கட்ட ஏற்பாடு பண்ண அவள் தயார். அது அவள் பொறுப்பு. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்...
செங்குளம் அத்தை சொல்வது போல பூரணம் மாமா சொல்லிக்கொண்டே வந்து இந்த இடத்தில் நிறுத்தினார்.  கொஞ்ச நேரம் தண்ணீரையே பார்த்துக் கொண்டு இருந்தார். நெஞ்சு முட்ட மூச்சை இழுத்தார். “ தாழம் பூ வாடையா. நல்ல பாம்பு வாடையா, மாப்பிளே? “ என்று என்னிடம் கேட்டார். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அவருடைய நெஞ்சில் நிரம்பினது அவருக்கு. ‘என்ன கண்டிஷன்?என்று மாமாவிடம் கேட்கவில்லை. மாமா ஒரு இடைவெளியைத் தாண்டி, தன் பேச்சில் தன்னையே மீண்டும் கோர்த்துக் கொள்கிற விதம் எனக்குப் பிடிக்கும்.
இந்தப் பேச்சை ஆரம்பித்த பின், கள்ளை ஒரு வாய் கூட அவர் குடிக்கவில்லை. தென்னையை விட்டு இறங்கி, வேட்டியை அவிழ்த்து மறுபடி கட்டிக்கொண்டார். பாதம் தெரியாதது போல தழைய இழுத்துவிட்டுக் கொண்டார்.  அதற்காகக் குனியும் போது கீழே கிடந்த ஒரு புன்னைக் கொட்டையை எடுத்துக் கையில் உருட்டினார். அந்தச் சின்னத் திரட்சியில் இருந்து அவருடைய ரகசியங்கள் கசிந்து வருவது போல, அந்த இடத்திலேயே  உட்கார்ந்து மறுபடி பேச ஆரம்பித்தார்.
“ என் தம்பிக்கு ஒரு மகன் மட்டுமில்லை. அவனுக்கு மூத்தவ ஒருத்தி இருக்கா. சரஸ்வதிண்ணு பேரு. என் தம்பியோட மூத்தவடியா பேரு அது. சரசுண்ணு கூப்பிடுவோம். சரஸ்வதின்னா சரஸ்வதிதான். அதெல்லாம் கரெக்டாத்தான் இருந்தது. ஆளு கரெக்டா இருந்தா கோளு கரெக்டா இருக்கணும்னு கட்டாயமா? எப்படிப் பழக்கமோ, என்ன சங்கதியோ? எவன் கூடவோ ராத்திரியோட ராத்திரியா புறப்பட்டுப் போயிட்டா. எங்கே போனாளோ, எங்கே இருந்தாளோ, ஒரு மூணு வருஷங் கழிச்சு, ஒரு சித்திரை விசுவுக்கு முதல் நாள் ராத்திரி மொட்டுப் போல அப்படியே வந்து நிக்கா. அலுங்கலை. குலுங்கலை. நேற்று உதயத்தில போயிட்டு மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்திட்ட மாதிரி அதே முகம். அதே சிரிப்பு. ஒரு வாடல், ஒரு வருத்தம் இல்லை. என் தம்பி ஏற்கனவே ஆட்ட பாட்டம் எல்லாம் ஆஞ்சு ஓஞ்சு கிடந்தவன் என்னவோ சரசு கிட்டே கேட்டிருக்கான். பெத்த அப்பன்னு இருந்தா அது கூடக் கேட்க மாட்டானா? சரசு திலுப்பி ஏதோ பதிலுக்கு அவனைக் கேட்டிருக்கா. அந்தானைக்கு அவன் பதிலே பேசாம எந்திருச்சுப் போயிட்டான். அன்னைக்கு ராத்திரியே மருந்தக் குடிச்சுட்டு மலந்துட்டான்.
எனக்கு பூரணம் மாமா செங்குளத்து அத்தை குரலில் சொல்லச் சொல்ல, செத்துப் போன அத்தையின் தம்பி மீது இரக்கமாக இருந்தது.
“ ஒரே கண்டிஷன். பழசு எல்லாம் உன்கிட்டே ஒளிக்கலை. மறைக்கலை. உடுத்தின துணி வரைக்கும் உதறிக் காட்டியாச்சு. சரசுக்கும் அப்பன் இல்லை. உங்க ரெண்டு பேரு கதையும் அப்படித்தான். ரெண்டு பக்கத்தையும் திராசுல வச்சா முள்ளு இங்கேயும் வாடாது. அங்கேயும் வாடாது. எச்சி நாக்குத் தான். ஆனா ரெண்டு பேருக்கும் பொதுவாச் சொல்லுதேன். சரசுவை நீ கட்டிக் கிடுதேன்னு ஒரு வார்த்தை சொல்லு. சீரங்கத்துக்கு என் தம்பி மகனை ம்கிறதுக்கு முன்னாலமுடிச்சு வைச்சுருதேன். ஒருத்தருக்கொருத்தர் ஏந்தலா இருக்கும். ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவா நானும்  ஏதோ நல்லது பன்ணிட்டேன்னு  எனக்கும் இருக்கும். இதில் அடிபிடி கட்டாயம் ஒண்ணுமில்லை. “
பூரணலிங்கம் மாமா பொம்மலாட்டம் நடத்துகிறது போல இரண்டு பேராகவும் என் முன்னால் மாறி மாறித் தோன்றிக்கொண்டிருந்தார். செங்குளத்து அத்தை முகத்தை எப்போது மாட்டுகிறார் எப்போது கழற்றுகிறார் என்றே தெரியவில்லை.
செங்குளம் அத்தை இப்படிச் சொன்னதும் நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. யோசிக்கிறதுக்கு எல்லாம் கட்டுபடியாகாது நமக்குண்ணு எப்பமோ தெரிஞ்சு போச்சு. ‘ஏற்பாடு பண்ணுங்க அத்தைஎன்று மட்டும் சொன்னேன். முதலில் என் கல்யாணம்தான் நடந்தது. இலஞ்சிக் கோவிலில் வைத்துத் தாலி கட்டிக் கூட்டியாந்தோம். நான் சரசுக்கு முதன் முதலில் கொடுத்த்து அந்தக் கோவில் பிரகாரத்தில உதிந்துகிடந்த ஒரு நாகலிங்கப் பூவைத்தான். இப்பவும் நாகலிங்கப் பூவை எங்கன பார்த்தாலும் அவளுக்கு ஒண்ணைப் பொறக்கிக்கிட்டுதான் வாரேன்”  
உண்மைதான். போன மாதமோ முந்தின மாதமோ பூரணலிங்கம் மாமாவுக்கு சோதனை பண்ண கண் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தோம். முடிஞ்சு வெளியே வந்து பார்த்தால் மாமாவைக் காணோம். கொஞ்ச நேரம் கழிச்சு மாமா நாலைந்து நாகலிங்கப் பூக்களோடு சிரித்துக் கொண்டே வந்துகொண்டு இருந்தார். நான் கேட்காமலேயே, “சைடுலே ஏழெட்டு மரம் நிக்கிண்ணு முன்னாலயே தெரியும். உங்க அத்தை இப்போ தலையில வைக்கிறதை எல்லாம் விட்டுட்டா. சாமி பட்த்துக்கு வச்சிருதாஎன்று சொல்லியிருக்கிறார்.
அதே போல, இன்னொரு சமயம் மாமா சிரித்துகொண்டே, ரொம்ப நிறைவாகச் சொன்னார். அன்றைக்கும் இதே போல சரசு அத்தை மீன் வாங்கிக் கொண்டுதான் வந்துகொண்டு இருந்தாள். தனக்குப் பின்னால் ஒரு சாம்பல் பூனை காலை மீசையால் உரசிக்கொண்டு வருவதில் அவளுக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. எங்கள் வீட்டில் காய்த்த பப்பாளிப் பழங்களை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டே, “இந்தப் பூனைக்குட்டிக்கு உங்க அத்தை என்ன பெயரு வச்சிருக்கா? தெரியுமா?என்று கேட்டார்.
ஒருவேளை என் பெயராக இருக்குமோ?  ஆனால் என் பெயரா என்று கேட்கவில்லை. ‘தெரியலையேஎன்று சிரித்தேன்.
“ என் பெயருதான் மாப்பிளே. அதுவும் எங்க அம்மை என்னைக் கூப்பிட்ட பேரு. லிங்கம்.எதுக்கெடுதாலும் லிங்கம்தான். பாலுண்ணா லிங்கம். மீனுண்ணா லிங்கம். இப்போ பூனை, மனுஷன், வஞ்சிர மீனு, நாகலிங்கப் பூவு எல்லாம் ஒண்ணாப் போயிட்டுது அத்தைக்கு. அன்னிக்கு சீரங்கமும் மாப்பிளையும் வாராங்க. இவ பூனைக்குட்டியை என் பேரு சொல்லிக் கொஞ்சிக்கிட்டு இருக்கா. யாரைக் கொஞ்சினா என்ன? எதைக் கொஞ்சினா என்ன? எல்லாத்தையும் கொஞ்சுததுக்கு ஒரு மனசு வேணும்லா? “  மாமா லேசாகக் கண் கலங்கிக்கொண்டு என் கையைப் பிடித்தார்.
எனக்கு பூரணலிங்கம் மாமாவைப் பார்க்கவேண்டும் போல இருந்த்து . இதோ இப்படியே எழுந்து சரசு அத்தை பின்னால் போய்விட்டால் என்ன?
சரசு அத்தை தெருவில் நின்றுகொண்டு யாருடனோ பேசுகிறாள். மீன் விலையைக் கேட்டிருப்பார்கள் அல்லது என்னென்ன மீன் இருக்கிறது என்று கேட்டிருப்பார்கள். மேல் துண்டை இழுத்துவிட்டுக் கொண்டே, மீன்காரர் இருக்கிற திசைப் பக்கம் கையைக் காட்டி சரசு அத்தை பதில் சொல்கிறாள். மீன் கனத்துடன் கருப்பு பாலித்தீன் பை ஒரு குலை போல கையில் அசைகிறது.
காற்றில் இழுபடும் மீன் வாசத்தில் தவித்து, கருப்புப் பூனை சிணுங்கிக் கொண்டே அத்தையின் காலில் மூச்சு விட்டிருக்கும் போல. ‘சூஎன்று அத்தை கூச்சத்தோடு விரட்டுகிறாள்.
கருப்புப் பூனை கொஞ்சம் விலகிப் பின் வாங்கி மறுபடி அத்தை கூடவே போகிறது. இந்தப் பூனையின் பெயர் என்ன என்று பூரணம் மாமாவிடம் கேட்க வேண்டும்.
அனேகமாக என் பெயராகத்தான் இருக்கும்.

%

உயிர் எழுத்து
ஏப்ரல் - 2013.







 vv

1 comment:

  1. வார்த்தைகளை வரைந்து விடுகிறீர்கள் அய்யா .
    வெளித் தெப்பக் குளத்திலேயே என் மனது நின்று விட்டது
    தாயம்மை பள்ளிக் கூடமும் ,
    சப்பாத்தி ஸ்டால் ஹோட்டல் இடமும்
    கண்ணை விட்டு மறைய வில்லை
    கூடுதலாக செய்துங்க நல்லூரும்
    பூரண லிங்கம் மாமாவை நானும் முழுதாக உணர்ந்தேன்

    ReplyDelete