Saturday 28 April 2012இது சித்திரை மாசம் மாதிரியே இல்லை.
ஐப்பசி, கார்த்திகை மாதிரி இருக்கிறது இரண்டு நாட்களாக.  அனேகமாக
வெயிலே இல்லை. மத்தியானம் கொஞ்சம் தூறல். தூறல் என்பதை விட
‘தூத்தல்” என்று சொன்னால் தான் மழையும் ஈரமும் அந்தச் சொல்லில்
இருந்து சொட்டுகிற மாதிரி இருக்கிறது திருநெல்வேலி உள்ளங்கைக்கு.
'எங்கேயாவது போகலாம்’ என எப்போது தோன்றிற்று எனச் சரியாய்ச் சொல்ல முடியவில்லை. இப்படிச் சரியாகச்  சொல்ல முடியாத நிறையப்
புள்ளிகள் நம்மைச் சுற்றி உதிர்ந்து கிடக்கின்றன.
ஒரு வேளை வாசல் பக்கம், பொங்கலுக்கு நான் போட்ட கரும்பும் சூரியனும் மழையில் நனைந்து கிடப்பதைப் பார்த்ததில் இருந்து. (’ நனைந்த சூரியன்’ என்று முந்தின வரியில் உதித்திருக்கிற  சொல் வெளிச்சம் இந்த வரியில் எனக்குப் பிடித்திருக்கிறது.) பச்சைக் குடத்தைத் தோளில் வைத்துக்கொண்டு, வலது கையில் மஞ்சள் குடத்தில் தண்ணீர் எடுத்துப் போகிற அந்த ராஜபாளையத்துக் கட்டிடத் தொழிலாளியின் முதுகு,  அல்லது கல்வெட்டாங்குழி அருகில் கொட்டப்பட்டிருக்கிற மாமிசக் கழிவுகளைக் குறிவைத்துத் தரையிறங்க வட்டமிடுகிற கள்ளப் பருந்துகள், இதையெல்லாம் விட இந்த ஈரமான பிற்பகலில் எவ்வி எவ்விக் கூப்பிடும் அக்காக் குருவி இவற்றில் ஏதோ ஒன்று என்னை எங்கேயாவது போகச்
சொல்லியிருக்கலாம்.
பாரதி பேரனைப் பார்க்கலாம். அவள் என் சித்தப்பா மகள். எனக்கு  ஒன்றுவிட்ட தங்கச்சி. அவளுக்குப் பேரன் பிறந்து நான்கு மாதங்கள் கூட இருக்கும்.
பொதுவாக,நான்  பிறந்த குழந்தைகளை, ‘அறைக்குள்ளேயே”  பார்க்க விரும்புவேன். பார்க்கக் கூட அல்ல. கைகளில் அப்படியே ஏந்தி எடுத்துக்
கொள்ள. ஒரு களங்கமின்மையை பௌதிகமாக ஏந்துவது என்பது ஒரு
பிறந்த் குழந்தையை இப்படித் தொப்புள் கொடி விழுவதற்கு முன் ஏந்துவது தான்.  ஒரு வெளிச்சத்தை வாங்கிக் கொள்வது போல, இசையை இரண்டு கைகளிலும் அள்ளிக் கொள்வது போல என எப்படியும் சொல்லிக் கொண்டு போகலாம். குழந்தையைக் குழந்தையாகவே வாங்கிக் கொள்ள
நிறையப் பேருக்குத் தெரியாத்தால்தான் இப்படியெல்லாம் சொல்ல வேண்டியதிருக்கிறது.
காப்பியைக் குடித்த கையோடு புறப்பட்டு விட்டோம். எனக்கு வெளியே
சொல்லாமல் இரண்டு தீர்மானங்கள் இருந்தன. இந்த சீண்ட்ரம் பிடித்த ஹெல்மெட்டை கையில் வைத்திருப்பது ஆனால் போடுவதில்ல. அப்புறம்
மழை வந்தால் எங்கேயும் ஒதுங்கக் கூடாது, நனைந்துகொண்டே வர
வேண்டும். காற்றை வகிர்ந்து அல்லது மழையினூடு செல்கிற வாகனம் தருகிற புத்துணர்வு தனி.
 இரண்டு கரையிருக்கிற கடலில் நுரை ஒதுங்கப் பார்த்தால் எப்படி யிருக்கும்? ஆளற்ற சேவியர் தெரு அப்படித்தான் இருந்தது பாத்திகட்டிய மாதிரி ஒதுங்கிய வேப்பம் பூக்களுடன். இந்தப் பாதையில் நான் மட்டும் நடந்து செல்கையில், நீங்கள் அல்லது யார் வந்தாலும் இந்த வேப்பம் பூக்களை அள்ளி அப்படியே கொடுத்து விடவே
எனக்குத் தோன்றுகிறது. இந்த வாழ்வின் உன்னதமான சந்தோஷமாகவும்
துக்கமாகவும் அவை மலர்ந்தும் உதிர்ந்தும் கிடக்கின்றன. அனேகமாக
எப்போதேனும், என் கனவில் கூட, ஒரு சில நட்சத்திரம் என் கையில்
உதிரும் எனில், அதன் விஞ்ஞான உண்மைகளையும் தாண்டி, அவை இப்படி எடையற்றும் வெள்ளையின் உண்மையுடனுமே இருக்கும் எனத்
திடமாக நம்புகிறேன்.
அடைக்கலாங்குருவிகள் இடம் பெயர்ந்த பிறகு, ஒரு கம்பி போன்று வால்
நுனியில் நீட்டிக் கொண்டிருக்கிற அழகிய குருவிகள் அடைவதை இந்த இரண்டு வேப்ப மரங்களிலும் தான் பார்க்கிறேன் எனச் சொல்ல நினைத்தேன். எந்தக் குருவியையும் காணோம். பறவைகளின் கடிகாரம் துல்லியமானது. அதன் வலசைத் திசைகள் மாலுமிகளுக்குக் கற்றுக் கொடுக்க வல்லது.  இன்னும் நேரம் இருக்கிறது கிளைகளுக்குத் திரும்ப என அவை அறியும். மழைகளை முன்னிட்ட விடுமுறைகள் அவற்றின் பள்ளிக்கூடங்களுக்கு இல்லை. 
பின் இருக்கையில் இருக்கிற சங்கரியம்மாவுக்கு, பொன் விழா நகருக்கு நான் போகிற வழி சரிதானா என்ற சந்தேகம்.  அவரவர் மனம் தனக்குள் அவரவர் பாதையொன்றை வைத்திருக்கிறது அல்லவா.  ’முக்குல ஒரு ஆத்துத் தண்ணீர்க் குழாய் உடைந்து தெரு பூராவும் போன தடவை வம்பாப் போயிக்கிட்டு இருந்தது ஞாபகம் இருக்கா? என்று கேட்டால் நான் என்ன சொல்ல?  ’மேடு மாதிரி ஏறி ஒரு பள்ளத்துக்குள்ளே இறங்கும் போது நான் கூட பையப் போகப் பிடாதா’ண்ணு சத்தம் போட்டேனே!
எனக்கு எதுவும் நினைவில்லை. 
ஆனால் சரியாக வீட்டுக்கு முன்னால் போய் பைக்கை நிறுத்திவிட்டேன்.
வீட்டுக்கு முன்னால் பத்தமடை பட்டுப் பாய் விரித்தது போல, வேப்பம்
பூ. வீட்டுக்குள்ளே போகவே மனசில்லை. எனக்கு மாத்திரமில்லை. சங்கரியம்மாவுக்கும்தான்.  சில எளிய அழகுகள் ஒருத்தர் பாக்கியில்லாமல் இப்படி எல்லோரையும் அப்படியே கட்டிப் போட்டு விடும்.
‘எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க’ - வீட்டுக்குள் நுழைந்தவரிடமிருந்து
குரல் வருகிறது. வண்டியை ஸ்டாண்ட் போட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு உலகிலேயே தொந்தரவு பண்ணக் கூடாத மற்றவர்களின் நேரம் அவர்கள் தூங்கும் பொழுதுகள் தான்.  பழக்கத்தால், முதுமையால், நோய் காரணமாய், அயர்வு மேலிட்டு, துக்கத்தின் ஊமைவலியுடன், அடைந்த அன்றைய சந்தோஷத்தின் நிம்மதியுடன் யார் எப்படித் தூங்கினாலும் எனக்குப் பிடிக்கும். சத்யஜித் ரே, வரைந்திருந்த தூங்கும் பெண் ஒருத்தியின் கோட்டுப்படத்தை நான் இன்னும் எங்கேயோ வைத்திருக்கிறேன். நான் அப்படியொரு படத்தை வரைந்துவிட முடியும்
என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் வரைய நினைத்து வரையாதிருக்கிற நிறைய ஓவியங்களுடன் சுழன்றுகொண்டே இருக்கின்றன சில மாயக் கித்தான்கள்.
‘சத்தம் போடாம, பைய்ய வாங்க” -  பாதி சைகையும் பாதி குரலுமாக
வீட்டு வாசல் பக்கமிருந்து கை அசைகிறது.  மனிதர்கள் மனிதர்களாகவேவா எப்போதும் இருக்கிறோம்? இல்லையே. மிருகங்கள் ஆவதில், இன்று இப்படியோர் பூனைக்குட்டி ஆவதில் ஒன்றும் பழுதில்லை தான். பதுங்கிப் பதுங்கிப் போகிறோம்.
ஒரு நெகிழி நார்க் கட்டில் காலியாக் கிடக்கிறது முதலில், இடது பக்கம் அந்த முதிர்ந்த மனுஷி அயர்ந்துறங்குகிறார்( இது வரை வாழ்க்கை முழுவதும் சேலை தவிர வேறொன்றும் கட்டியிராத நம் அம்மைகளும் அத்தைகளும் ஆச்சிகளும் பைப் அடியிலோ, கழிவறையிலோ சறுக்கி விழுந்து அடிபட்டு, இப்படி முதல் முறையாக ‘நைட்டி’ எனப் படும் தேசிய, சர்வ தேசீய உடையை அணிய நேர்வதும், அதை முதல் முறையாக நாம் பார்க்க நேர்வதும் எத்தனை கஷ்டம் தெரியுமா?)
(இந்தப் பதிவை மூன்றாவது முறையாக முயல்கிறேன், நேற்றிரவில் இருந்து. மூன்று முறையும் அறிவிப்பற்ற மின்தடவை. அந்தத் ‘தும்பம்’  கூடப் பழகி விட்டது, எல்லாத் துன்பங்களும் போல. அதை விடப் பெரிய
துன்பம், இம்சை ஒவ்வொரு முறையும் நான் எழுதின கடைசிப் பத்தி, கணினியில் சேமிக்கப்படாமல், காற்றோடு போய்விடுவது. நான் நிச்சயமாக நம்புகிறேன், ஒரே ஆற்றில் இருமுறை குளிக்க முடியாது என்று. ஒரு அரசிலை அதே போலக் காற்றில் இரண்டாவது முறை அசையாது என்று. மொழி என்பது என்னுடைய மன நிலையின் உச்ச நீசங்களைப் பொறுத்தே அதன் தாழ்ச்சி உயர்ச்சிகளை அடைகிறது. அது ஒரு வகையில் நேர் விகிதம் அல்ல. தலைகீழ் விகிதம். நான் பள்ளத்தில் கிடக்கையில் என் சொல் சிகரத்தில் வட்டமிடும் ஒரு பறவையின் சிறகிலிருந்து தரை நோக்கி உதிர்கிறது.  நான் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஏற்றிவிட்டு வந்த கார்த்திகை அகல்,  ஆன் இரண்டாவது படி இறங்குவதற்குள் எந்த  வெளிச்சமுமற்றதாக என் வார்த்தையைஇருட்டில் எறிந்துவிடுகிறது. 
நான் மூன்று முறைகளாக இழந்த வரிகளை அதே உயிர்ப்புடன் மீண்டும் எந்த ஜென்மத்திலும் அடைந்துவிட முடியாது.
அந்தந்தச் சொல்லுக்கு அதனதன் பிறவி. அந்தந்த அம்புக்கு அதனதன் வேட்டை.  புதிய சோப்புக் குமிழிகளை ஊதிப்பறக்க விடாது தடுக்கின்றன
ஏற்கனவே தன் வானவில்களை உடைத்துச் சிதறிக்கொண்ட முந்திய குமிழிகள்.)
ஒரு காலை பக்கவாட்டு அறைக்குள்ளும் ஒரு காலை முன்னறையிலும் வைத்துக் கொண்டு,  மருத்துவமனைக் காத்திருப்புச் சுவரில் ‘உஷ்ஷ்’
என்று உதட்டில் விரல் வைத்து எச்சரிக்கை செய்கிற புகைப்படக் குழந்தை போல, கையை அசைத்து, ‘பைய்ய்ய பைய்ய்ய’ வரச் சொல்லிக் கொண்டிருந்தாள்.  நான் மாறவேண்டும் என நினைத்த உத்தேசப் பூனைக் குட்டி கூட,  சத்தங்கேட்காமல் பாதம் பதித்து நான் நடக்கிற ‘அழகைப்’
பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கும்.
சிறிது வெளிச்சம் அந்தக் காட்சியை உன்னதப் படுத்தியிருந்தது.
ஹ!  அவ்வளவுதான் சொல்லமுடியும்
உள்ளே கட்டிலில் தங்கச்சி கணவர் குப்புறப் படுத்திருக்கிறார்.  இந்த
வாழ்வில் கடந்த அறுபது ஆண்டுகளில் அவர் சுமந்த பாரங்களின் எந்தத்
தடயமும் இன்றி, அந்த வயதின் தளர்வுடன் இருந்தது தோளும் முதுகும்.
அதையெல்லாம் விட, அவருடைய வலது கை, ‘செண்டு போல’ க் கிடந்த
அணைப்புக்குள் அந்த நான்குமாதச் சிசு உறங்கிக் கொண்டிருந்தது.  இந்த
‘தாயும் ஆன’ நிலையை நான் வணங்கினேன். இன்னும் கொஞ்ச நேரம்
பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றியது. இந்த அறைக்குள் பரவியிருந்த
வெளிச்சம் என் மேல் கரைந்துகொண்டே இருந்தது. இருவரில் யாராவது ஒருவர் கூட விழித்துவிடக் கூடாது என்றும் இருந்தது. ‘ரெண்டு பேர்ல
யாராவது ஒருத்தர் முழிச்சா நல்லா இருக்குமே’ என்றும் இருந்தது.
’என்ன பண்ணிக்கிட்டு இருக்கே அடுப்பாங்கரையில? இங்க் கடுவாம் பூனை
மாதிரி ரெண்டு பேர் வந்து நடமாடிக்கிட்டு இருக்கோம்  பத்து நிமிஷமா.”
ஒரு உரையாடலை எந்தப் புள்ளியில் இருந்தும், ஒரு கதையின் சரியான
முதல் வரி மாதிரி இந்தப் பெண்களால் சுலபமாகத் துவக்கிவிட முடிகிறது எப்போதுமே.
‘வாங்க வாங்க. கவனிக்கவே இல்ல”  - பாரதி சிரித்துக் கொண்டே வந்தாள். தெற்றுப் பல் சிரிப்பு. ஒரே ஒரு பல் மட்டும் வேறு கலரில் இருக்கும் பழுப்பாக.   வரிசையாக, பச்சரிசி மாதிரி இருக்கிற பலவரிசைகளை விடவும் பிரியமான சிரிப்புக்களை இதுபோன்ற தெற்றுப் பல் தங்கச்சிகளே அளிக்கிறார்கள்.
இரண்டு பெண்கள் பேச ஆரம்பிக்கிற முதல் சொல்லில், மூன்றாவது ஆண்
உடனடியாகத் தனிமைப் படுத்தப் படுகிறான்.  அவன் காணாமல் போகிறானா, அப்படி ஒரு நிலைக்கு அப்புறப் படுத்தப் பட்டுவிடுகிறானா என்று யாராலும் சொல்லவே முடியாது.  நமக்காகத்தானே டி.வி மேல் புகைப்படங்கள், சுவரில் காலண்டர்கள், ஷோகேஸில்  பொம்மைகள் எல்லாம் இருக்கின்றன. பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். இந்த ஹெல்மெட்டை வாங்கி எவ்வளவோ காலம் இருக்கும். இந்த பைக் சாவி தொங்கும் கொத்தை உபயோகிக்க ஆரம்பித்து ‘கொள்ளை நாள்’ இருக்கும். இப்போதுதான் முதல் முதலாக என்பது போல அதையெல்லாம் ’ஆராய்ச்சி’ பண்ணவேண்டும்.
முதலில் புரண்டு படுக்கிற சத்தம் கேட்டது. அப்புறம் அவரே எழுந்திருந்து வந்தார். ‘இந்தப் பய கூட விளையாடிக்கிட்டு இருந்தேன். அசந்துட்டுது” என்று சிரித்தார்.  சட்டை போடாமல் விருந்தாட்களுடன் பேசலாமா? கூடாது இல்லையா? ஒரு கையை மாட்டி, இன்னொரு கையை சட்டைக்குள் விட்ட வாறே மறுபடி வந்தார். ‘பய சிணுங்குத மாதிரி இருக்கு’ என மீண்டும் உள்ளே போனார். ‘முழிச்சிட்டாரு மைனரு’ என தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே வந்தார். ‘ இந்தா பாரு இஷான்.  தாத்தா. தா...த்த்..தா’. அவன் ஏற்கனவே அழுதுகொண்டிருந்தான். என்னைப் பார்த்தால் நிச்சயம் மேற்கொண்டு அழுவான்.
பூட்டன் அழுகைச் சத்தம் அல்லவா? தூங்க முடியுமா? ஒரு அருவமான
கையால் தொட்டு எழுப்பினது போல, நைட்டியில் பச்சைப் பிள்ளை மாதிரி, நாங்கள் வந்தது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த பெரிய மனுஷி எழுந்திருக்கிறார். எங்களைப் பார்த்ததும் ஒரு வெட்கம், ஒரு சிரிப்பு. தன்னறியாமல் நைட்டியை கரண்டை வரை இழுத்துவிட்டுக் கொண்டு, எப்ப வந்திய? எல்லாரும் நல்லா இருக்கேள் ளா?’ என்ற விசாரிப்பு.
‘’ஏ. லேசா என்னத் தூக்கி உக்காத்தி வையுப்பா’ என மகனிடம். அந்தப் பக்கம் மகனிடம் அப்படிச் சொல்லிக் கொண்டே பூட்டனிடம், ‘உம்மை யாரு இங்க விருந்துக்கு அழைச்சா?  வந்திருக்கேரு. ம்ம்?’ என்று கொஞ்சல்.
என்னிடம் கொடுக்கும் போதே, ‘ஒண்ணுக்குப் போனாலும் போவான்’ என்கிறார். இது பொறுக்கவில்லை பூட்டியாளுக்கு, ‘கொடுத்து வச்சிருக்கணுமே அதுக்கு’ என்று இருந்த இடத்தில் இருந்தே ஐந்துவிரல்களையும் கூட்டி தன் உதட்டில் வைத்து ஒரு முத்தம்.  சந்ததிக் கண்ணியில் இருந்து சந்ததிகள் மாறி மாறிச் செல்கையில் மனிதர்கள் எப்படிக் கனிந்து விடுகிறார்கள். ஒரு மரத்திற்குள்ளேயே, கிளை மாறிக்
கிளை மாறி உட்காரும் ஒரு பறவை போல அவர்கள் சிறகடிக்கிற விதம் என்ன?  உலகத்தில் என்னவோ ஒன்பது ரசம், ஒன்பது பாவம் என்று சொல்வதற்குள்ளே எல்லாம், இந்தக் கணத்தில் அந்த மனுஷியின் கண்கள் இடுங்கிப் பெருகும் சொற்கள் வருமா?  ‘பிடிச்சக் கள்ளாளி’ என்றால் என்ன அர்த்தம்?    பிடித்த கயவாளியே என்பதன் திரிபெனில், முன்னதைப் போலவா பின்னது அழகு.  திரியட்டுமே. தேயட்டுமே. இப்படி ஒரு சொல், பிரியத்தின் உச்சியிலிருந்து, ஒரு நாலாம் தலைமுறை நரை முடியில் துவங்கி, இன்னும் பத்து நாட்களில் அரபு நாடுகளில் ஏதோ ஒன்றுக்கு எமிரேட்ஸ் விமானம் ஏறப் போகிற ஒரு நான்கு மாதப் பூட்டனின் தொப்புள் குழியுள் விழுமுன் ஒரு மகா நதி உருட்டின கூழாங்கல் போல் உருவிழக்கும்  எனில்,  இருக்கட்டுமே. சொல்லப் போனால், மொழி உருமாறத்தானே செய்கிறது, உருவிழக்கவில்லையே.
பாதித் தூக்கத்தில், பையன் அழுகைச் சத்தம் கேட்டு எழுந்து வந்திருப்பாள் போல அம்மைக்காரி. பேறுகாலத்தின் சோர்வும், பேற்றுக்குப் பிந்தைய ஓய்வின் ஊட்டத்துடன் கனிந்திருக்கிறது அந்த முகம். வரும் போதே, ‘வேண்டாண்டா, வேண்டாண்டா” என்று சொல்லி வருகிறவளிடம். ‘நல்லா இருக்கியாம்மா” என்று கேட்கிறோம்.  அவள் ஒரு சொட்டு மாதிரி லேசாக சிரிக்கிறாள்.
ஒரு எணபது, இரண்டு அறுபத்தைந்துகள், இரண்டு அறுபதை இப்போதுதான் நிரம்பினவர்கள், இவனைப் பெற்றிருக்கிற அந்த இருபத்தைந்து, இஷான் என்கிற இந்த நான்கு மாத நல்வரவு இத்தனை பேரும் இந்த ஒரே அறைக்குள். மிஞ்சிப் போனால் பதினாலுக்கு பன்னிரெண்டு இருக்கும். அதற்குள் இரண்டு கட்டில்கள், ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு நாற்காலிகள், இரண்டு ஸ்டூல்கள் அப்புறம் இந்த அனைவரும்.
உலகம் எவ்வளவு பெரியது. அல்லது எவ்வளவு சிறியது. ஒரு வீட்டின் நான்கு சுவர்கள் சில சமயம் எவ்வளவு அழகாகி விடுகிறது இப்படிச் சிலர் உள்ளிருக்கும் போது.
நீண்ட இடைவெளிக்குப் பின், நான் நான்கு தலைமுறைகளை ஒரே இடத்தில் பார்க்கிறேன். ஒவ்வொரு முகமாக, ஒரு சுற்று வருவது போல. எல்லா முகமும் அழகாக, பேரழகாக் இருக்கின்றன.
எல்லோர் கையையும் தோளையும் பிடிக்கவும் தொடவும் ஏன் முத்தமிடவும் கூட எனக்குத் தோன்றுகிறது.
இஷானின் பாதத்தை மட்டும் தொடுகிறேன். வருடுகிறேன். முத்தம் இடுகிறேன்.  நிரம்பி விட்டது போல இருக்கிறது. அதற்கு மேல் அந்த இடத்தில் இருக்கமுடியாது, வெடித்துவிடுவேன் என்று தெரிகிறது. 
‘உடம்பைப் பார்த்துக் கிடுங்க’ என்று அந்த மனுஷியிடம் சொல்கிறேன்.
வரட்டுமா என்று என்னால் சொல்ல முடியவில்லை.
வாரோம் என்று பின்னால் சங்கரியம்மா சொல்வது கேட்கிறது.
‘ஜு..ஜு.ஜூ.ஜ்ஜுஜு ச்சூ’  என்று ஒரு சத்தம் . அது யாருடையது எனக்குத் தெரியும் .
ஆதிக் குழந்தையைக் கொஞ்சுகிற ஒரு ஆதித் தாயினுடையது. தகப்பனுடையது. என்னுடையது. உங்களுடையது.


3 comments:

 1. சந்ததிக் கண்ணியில் இருந்து சந்ததிகள் மாறி மாறிச் செல்கையில் மனிதர்கள் எப்படிக் கனிந்து விடுகிறார்கள். ஒரு மரத்திற்குள்ளேயே, கிளை மாறிக்
  கிளை மாறி உட்காரும் ஒரு பறவை போல

  ReplyDelete
 2. ஒரு உரையாடலை எந்தப் புள்ளியில் இருந்தும், ஒரு கதையின் சரியான
  முதல் வரி மாதிரி இந்தப் பெண்களால் சுலபமாகத் துவக்கிவிட முடிகிறது எப்போதுமே.


  இந்தப் பதிவு முதல் வரி முதல் முடிவு வரி வரை, அற்புதமான நடை சார்

  ReplyDelete
 3. எந்தப் பின்னூட்டமும்இந்தப்பதிவை சிதைத்து விடக்கூடும்...அத்தனை சுவை!...

  ReplyDelete