Tuesday 24 April 2012

பரண் பொருள்


அந்த ட்ரங்க் பெட்டியை ரொம்பத் தேடுகிறது.
ட்ரங்க் பெட்டி என்றால் ரொம்பப் பெருசு எல்லாம் இல்லை.
கல்யாணப் பெண்ணுக்கு எல்லாம் அந்தக் காலத்தில்
வாங்கிக் கொடுப்பார்களே அந்த அளவு பெரியதில்லை.
இந்த வேப்பம் பூ வாசனை அடிக்கிற, பொசு பொசு என்று
தூறல் விழுந்திருக்கிற சித்திரை மாத செவ்வாய்க் கிழமை
இரவில், என்னைப் போல அறுபத்தைந்து, அறுபத்தாறு வயது
நடக்கிற ஒருத்தர், முக்கியமாக சீப்பிலிருந்து நரைமுடியை
விரலில் சுற்றியெடுத்துக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு
ஜன்னல் வெளியே வீசுவதற்குத் தயங்கி  நிற்கிற ஒருத்தி, 
அப்படி ஒரு பெட்டியை அவருடைய பரணிலிருந்து இறக்கி
வைக்க நினைத்துக் கொண்டிருப்பார்.
அவரவர் அம்மா வீட்டுப் பரணில் அந்த ட்ரங்க் பெட்டியும்,
சோழிகளும் தவழும் வெங்கல கிருஷ்ணரும் இருக்கும்
‘போளப் பெட்டி’யும், இன்னும் பத்திரமாக இருக்கும் என
தங்கமோ தென்றலோ இடையிடையே பார்த்துக் கொண்டு
அவர்கள் நம்புகிறார்கள்.
எனக்கும் பரண்பொருள்களின் மீதான நம்பிக்கைக்குக்
குறைவில்லை. முக்கியமாக, புகையடித்தது போல நெளிவுகள்
வரையப் பட்ட, அந்த சிமெண்ட் கலர் ட்ரங்க் பெட்டி மேல்.
அதில் தான் என்னுடைய முதல் கதை, இரண்டாம் கதை,
மூன்றாம் கதை எல்லாம் ஆண்டுக்கொன்றாக் வெளிவந்த
‘புதுமை” இதழ்கள் இருக்கின்றன. குறிஞ்சி நெடுமாறன் என
அப்போது அறியப்பட்ட, மரியாதைக்குரிய திரு.ப.நெடுமாறனின்
குறிஞ்சியில் வெளிவந்த ‘மூட்டை தூக்கி” என்ற கதை இருக்கும்.
மாலை முரசில் வெளிவந்த, ‘தீப் பிடித்த நோட்டுக்கள், கூட
இருக்கலாம். கண்ணதாசனில் வெளிவந்த ‘கங்கா”, சிவ.கல்யாண
சுந்தரம் என்ற பெயரில் நான் எழுதிய(கவிஞர் நா.காமராசனுக்குப்
பிடித்த) அந்தக் கவிதை இருக்கும். ‘கொடிமலரில் எரிமலைகள்’
என்ற கவிதையை, அந்தக் ’கடிதம்’ இதழ் வெளிவந்து எத்தனையோ
ஆண்டுகளுக்குப் பின், மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில்
வைத்து மருத்துவர். அருணகீதாயன் ஒப்பித்ததன் பிறழாத அடிகள்
 உட்பக்கம் மட்டிக் காவிக்கலர் அடிக்கப்பட்ட அந்த பெட்டிக்குள்,
வெயில் படாமல் வெளிறின முளைப்பாரி ஈர்ப்புடன் அசையலாம்.
தாமரையில் வெளிவந்த, ‘இங்கோர் பெண் ஓடையில் குளிக்கிறாள்’,
’பாதியில் நிற்கும் பாடல்களுக்காய்’, ’கொஞ்சம் இந்நாட்டைக் குலுக்குங்கள்’ எல்லாம் அக் பரந்தாமனின் அழகான கோலங்கள் நிறைந்த பக்கங்களில் நிரம்பி வழிந்துகொண்டிருக்கலாம்.
இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக, அம்மாவின் மறைவிற்குப் பின்
வீட்டை எல்லாம் ஒதுங்க வைத்த சமயத்தில்,  அந்தப் பெட்டியும்
ஒதுங்கவைக்கப் பட்டிருக்கலாம்.
தங்கராஜ் குர்த்தாவை இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டு, தங்கராஜ்
வீட்டில் தொங்குகிற ரவி வர்மா ஓவிய நகல்களைப் பின்னணியாக்கி
எடுக்கப் பட்ட நரைத்த தாடிப் படங்கள் தொலைந்து போவதில் கூடப்
பெரிய வருத்தம் இல்லை.  சபாபதி சார்வா கையோடு கூட்டிப் போய், மாரார் ஸ்டுடியோவில் என் எட்டாவது வயதில் எடுக்கப்பட்ட குடும்பப்
புகைப்படம், மாட்டுத் தொழுவத்தில் செல்லரித்துக் கிடப்பதைப் பார்க்க
நேர்ந்தவனுக்கு, அந்த ட்ரங்க் பெட்டி தொலைந்து போகாமல் பரணில்
இருக்கும் என்பதை நம்புவதில் எவ்வளவு கேள்விகள் இருக்கும்?

நன்றாகத் தெரியும் அந்தப் பெட்டியை நான் ஒருபோதும் பூட்டி வைத்ததே
இல்லை. ஒருவேளை, என்னைத் தவிர யாராவது அதில் என்ன இருக்கிறது
எனத் திறந்து பார்த்திருந்தால், அந்த அத்தனை வரிகளில் சிலவற்றை வாசித்திருந்தால், நிச்சயம் அவர்கள் அந்தப் பெட்டியைப் பூட்டி, பத்திரமாக
பரணில் வைத்திருப்பார்கள்,
ஒரு தொய்ந்த பிரம்புத் தொட்டிலோடு, ஒரு கால் உடைந்த மரக் குதிரையோடு, இரண்டு நடை வண்டிகளோடு என்னுடைய அந்த ட்ரங்க்
பெட்டியும் இருக்கும் எனில் எனக்கு சந்தோஷம்தான்.


3 comments:

 1. ithai vaasikkum intha iravu nerathil ennakum trunk petti kaana aasaiya ullathu. santhya en veedirkku vantha pothu konduvantha trunk pettiyil pudavakaludan thalambu madalum, sivappu colour neil polish iruntha ninaivu vanthathu.

  ReplyDelete
 2. ட்ரன்க் பெட்டி அல்ல சார்
  விலை மதிக்க முடியா படைப்புக்களை உடைய
  இலக்கியப் பெட்டகம் அது

  ReplyDelete
 3. ட்ரங்குப் பேட்டிகள் ஒவ்வொரு வீட்டிலும் பீரோ தலைச்சும்மாடுகளாகவே காட்சி தரும்...உள்ளே அம்மாவின் முகூர்த்தச் சீலைக்குள் செல்லரித்த பழம்புகைப்படங்கள் ஒன்றிரண்டு தென்படக்கூடும்...இப்படி ஒவ்வொருவர் வீட்டிலும் அடுத்த தலைமுறை அலட்சியப் படுத்தும் கருப்பு வெள்ளைகள் ஏராளம்!...வண்ணதாசனின் படைப்பு பொதிந்த ட்ரங்குப் பெட்டி மீதான நம்பிக்கைகள் ...அப்படியே பரண்களில் வாசம் செய்யட்டும்...

  ReplyDelete