Thursday 9 November 2017

நினைவின் இரண்டாவது பொத்தான்.








அந்த டேபிள் ஃபேன் நினைவு வந்துவிட்டது.
கடைசி வரை அம்மாவின் தலைமாட்டில்
ஒரு ஸ்டூலில் சுற்றிக்கொண்டு இருந்தது.
(இப்போது அந்த மரஸ்டூலின் நினைவைத்
தவிர்க்க முடியவில்லை.
எல்லா நினைவுகளும் அதனதன் கச்சிதமான
வர்ணனைகள் உடையவை)
சிவப்பு இலைகளும் கம்பி வலைத்தடுப்பும்
காலத்தைச் சுழற்றிக் கடகடப்பிடும்.
நான்கு பொத்தான்களில் இரண்டாவது
மிதமான வேகத்திற்கு விசைகூட்டுவது.
அம்மா விரல் அழுத்தலில் அதன் குப்பி கழன்று
உலோக எலும்பு துருத்தியிருக்கும் அதில்.
ராமையா மாமா  கடைக்கு எடுத்துப் போய்
பழுது பார்த்து வருவதாக ஏற்பாடு.
’ஓடுகிறவரை ஓடட்டும், போதும்’
திட்டமாக அம்மா சொல்லிவிட்டாள்.
அது சற்றுக் குளிர்ந்த ஒரு மார்கழிப் பின்னிரவு.
அம்மாதான் முதலில் ஓட்டத்தை நிறுத்தினாள்.
அதற்குப் பின் அந்தச் சிவப்பு இலைகளை
நாங்கள்  யாரும்  சுழல விடவே இல்லை.
நினைவின் கடகடப்பு கேட்கிற இப் பிற்பகலில்
அந்த இரண்டாவது பொத்தானை  அழுத்த முடிந்தால்
மீதி இருக்கும் வியாழனுடன்
அந்த மர ஸ்டூல்  பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்..

2 comments:

  1. //அந்த டேபிள் ஃபேன் நினைவு வந்துவிட்டது.//

    //எல்லா நினைவுகளும் அதனதன் கச்சிதமான
    வர்ணனைகள் உடையவை//
    வாசித்தவுடன் அவரவர் மனசடியில் புதைந்து கிடந்த பலவற்றையும் அசைத்தெழுப்புகிறது கவிதை தந்த விரல்கள்...

    ReplyDelete
  2. அருமை , இம்மாதிரி காந்தி நேரு பாரதி அருங்காட்சியகப் பொருட்களின் பின்புலத் தகவல்கள் எழுதி வைத்து இருந்தால் வசதியாக இருக்கும்

    ReplyDelete