Monday, 2 February 2015

மீண்டும் இறகுகள்.

மீண்டும் இறகுகள் தான்.

துயரம் சார்ந்த மன நெருக்கடி மிகுந்த நாட்களில், ‘மீண்டும்’ என்ற ஒரு சொல்லையும் ‘மறுபடியும்’ என்ற சொல்லையும் அதிகம் உபயோகிக்க நேரும் போல.

மீண்டும் நான் இன்று இறகு பொறுக்கினேன். ஒன்றல்ல நான்கு இறகுகள். அதற்கு மேலும் சிதறிக் கிடந்தன. அதிலிருந்து நான் நான்கை மட்டும் எடுத்துக் கொண்டேன். வழக்கமாக எனக்கு அருளப்படும் காக்கைச் சிறகோ புறாச் சிறகோ அல்ல இது. இது பெயர் தெரியாத பறவை ஒன்றின் உடையது. நானும் தான் எங்கள் நிலக்கோட்டைக் காலத்தில் இருந்து ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை. என்ற சொற்றொடரை எத்தனை முறைகள் உச்சரித்து வருகிறேன். இந்தப் பறவைக்கும் பெயர் தெரியவில்லை.

உதிர்ந்தவை அல்ல. பிடுங்கப் பட்ட அடையாளமும் இல்லை. வேட்டையாடப் பட்டிருக்கலாம். இந்த அதிகாலைக் குளிருக்கு முந்திய இரவில் தைப்பூச நிலா வெளிச்சத்தில் ஏதோ ஒரு பறவை ஏதோ ஒரு மிருகத்தால்  தாக்கப் பட்டிருக்கலாம். தலைகுப்புறக் கவிழ்த்தப் பட்ட வானம் போலப் பரந்து கிடக்கிற, அவுரி போன்ற குத்துச் செடிகள் நிறைந்த மைதானத்தில் அப்படி ஒரு இரவு சாத்தியம் உடையது.

கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் மூன்றில் இரண்டான மேற்பகுதி பழுப்பாகவும் இருக்கிற இறகுடைய அந்தப் பறவையை என்னால் வரைய முடியவில்லை. இந்தப் பகுதியில் இரண்டு மூன்று வருடங்களாக, தனித்தலையும் ஒரு செம்போத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். இந்த மைதானத்தில் அது தன் முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால் அதன் வாழிடம் வேறு. அது தென்றல் நகர்ப் பக்கத்துக் குத்துச்செடியோரம் தன் காப்பகத்தை வைத்திருக்கும்.

இந்த இறகுகள் ஒரு புற நகர்க் குப்பைக் கிடங்கை ஒட்டிக் கிடந்தன. . அதிகமாகிக் கொண்டு வரும் மது போத்தல்களும், நெகிழி நீர்ப்பைகளும் போலக் கிடந்த ஏழெட்டு இறகுகளில் இருந்து நான் நான்கே நான்கை மட்டுமே ஏன் எடுத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை. விபத்தில் தவிப்பவர் இடையே அழகிய முகங்களை உடையவரை மட்டும் காப்பாற்றுபவனாகவே நான் இருப்பேன் போல. நான் பிசிறற்ற, கச்சிதமான தன் வடிவத்தை இழக்காத, வெவ்வேறு அளவுகள் உடைய நான்கு இறகுகளை மட்டும் குனிந்து எடுத்துக்கொண்டேன். அதற்கு மேல் பொறுக்க விடாமல் என் மேல் படைபடையாக காக்கைக் குரல்கள் கவிய ஆரம்பித்தன. நான் பறவைகளால் சினேகிக்கப்படுவேன் என்று நினைத்தது பொய்யாயிற்று. நான் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் அந்தக் காக்கைகளால் சந்தேகிக்கப் பட்டேன். ’அது காக்கை இல்லை. ஆனால் அது ஒரு பறவை. அதை நீயே கொன்றாய். நாங்கள் அறிவோம்’ என்ற கூர்மையுடன் கருத்த பறவையின் மினுமினுக்கும் அலகுகள்  வியூகம் அமைத்துவிட்டதை நான் உணர்ந்தேன்.

அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன். இன்னும் குறைந்தது முப்பது நிமிடங்களின் நடை பாக்கி இருந்தது வீடு அடைய. ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். வானத்தில் கலைந்து கலைந்து கதறும் பறவைகளின் சித்திரம் என்னை விரட்டியது. வெறும் நான்கே நான்கு இறகுகள் மிகுந்த பாரம் அடைந்தன. இதை எப்படி வீடு வரை கொண்டு சேர்க்கப் போகிறேன் என்று தோன்றுகிற அளவுக்குக் கனத்தன. இடது, வலது கைவிரல்களுக்கு மாறி மாறி மாற்றிக்கொண்டேன். காற்றின் வீச்சில் அந்த இறகுகளின் அடுக்கு சிதைந்துவிடக் கூடாது என்ற பதற்றம் எனக்கு இருந்தது.

மீதி இருந்த நடை தூரத்தில் நான் அமைதியற்றவனாகி இருந்தேன். ஒரு பறவையின் இரவு மரணம் என்றும் ஒரு இரவுப் பறவையின் மரணம் என்றும் நான், எனக்கே கேட்கும் அளவுக்கு சற்று உரக்கச் சொல்லியிருப்பேன் கூட. தப்பித்துச் செல்வது போல, பதுங்கி மறைவதாகக் கூட என் அசைவுகள் இருந்திருக்கலாம். சப்தமே எழுப்பாத பாதங்களுடன் தான் வீட்டில் நுழைந்தேன். வாசல் கதவுகளுக்குக் கூட என் மேல் பரிவு இருந்தது. அதன் வழக்கமான இரும்புச் சத்தத்தை இன்று இடவில்லை/

இறகுகளுடன் நுழையும் என் பைத்தியக்காரத்தனம் புதிது இல்லை என்பதால், ‘என்ன, இன்னைக்கு நாலைந்து வருது?’ என்ற கேள்வியுடன் வீடு என்னை அனுமதித்தது. வீடு என்பது இடவாகு பெயர் என்பது உங்களுக்குத் தெரியாதா?

ஏற்கனவே ஏழெட்டு இறகுகள் சேமிக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தில், ஒரு சிறுவனைப் போல இந்த நான்கு இறகுகளையும், ஒளித்துவைத்தேன். அந்தப் பறவையின் பெயர் என்னவாக இருக்கும் என்ற கேள்வியின் ஓயாத திமிறலைத் தணிக்கமுடியவில்லை.

தற்காலிகமாக, என்னுடைய பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். அந்த நான்கு இறகுகளும் இதை ஆட்சேபிக்காமல் இருக்கவேண்டும்.


3 comments:

 1. பிரியமான ஒவ்வொரு பொருளாலும் நம்முள் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது.வெற்றிடத்தை ஏற்படுத்திய பொருளால் தானே வெற்றிடத்தை நிரப்ப முடியும்? அந்த வகையில் அது விலை மதிப்பில்லாதது.இங்கு சில இறகுகள்.

  ReplyDelete
 2. உதிர்த்த பறவையின் வரலாற்றுச் சின்னமாய் உங்களிடமே அந்த இறகுகள் பத்திரமாய் இருக்கட்டுமென கரைந்திருக்குமோ அக்காகங்கள்...?!
  பெயர் தெரியாத மரங்களும் பெயர் தெரியாத பறவைகளும் நம் அறிவை விரிவு செய்ய ஆவல் தூண்டுவதாய்.

  ReplyDelete
 3. இனிமேல் மறுபடியும் அல்லது மீண்டும்
  சொல்லும் போதெல்லாம் இந்த இறகுகள்
  நியாபகம் சில நேரம் வருமென்று தோன்றுகிறது.

  ReplyDelete