Tuesday, 25 November 2014

தருகிறவர்கள், பெறுகிறவர்கள்.
தூரத்தில் இருந்து பார்க்கும் போதே அது வேறு ஒரு காட்சியாக இருந்தது.

மழைப் புல் மேயும் பசுவின் முதுகில் உண்ணி பொறுக்கும் நாரை. பக்கவாட்டில் சாய்த்து நிறுத்தப்பட்ட ஒரு கனத்த பைக். முப்பதடிகள் தள்ளி, புல் இதழ்களின் விளிம்பில் இருந்து துவங்கும் செம்மண்  பாதையில் அந்தப் பெண். ஒரு  கவனமான ஐந்தடி இடைவெளிக்கு அப்பால் அவர்.

அந்தப் பெண்ணுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். திருமண வருடங்கள் தெரியும் வாகும் தோற்றமும். எளிய அன்றாட உடைகள் தான். ஒருவேளை, சுரிதார் நிறத்தில், துப்பட்டா அடர்வில் இந்தச் சந்திப்பிற்கான தேர்வுகள் இருந்திருக்கலாம்.

அவருக்கு நாற்பது வயது  நெருங்கியதாக அல்லது சற்று முன் விடிந்த இந்த அதிகாலையில் தாண்டியதாக. நல்ல கருப்பு. நல்ல உயரம். வரிகள் இட்ட டீ ஷர்ட்.  இடுப்பில் நேர்த்தியான இளம் நிற வளைவுகளின் மேல் அழுத்தமான கருநீலம் பரவிய ஒரு கைலி. தோலில் விறைப்பான அதிகாரம் இருந்தது. ஒரு சீருடையைக் கழற்றிவைத்துவிட்டு வந்திருப்பது தெரிந்தது. ஆனால் அந்த நெகிழ்வான புன்னகை முற்றிலும்   ஒரு மனிதனுடையது. கனிந்த அந்த பிரத்யேகமான கண்கள் ஒரு பிரியம் நிரம்பிய ஆணினுடையது.

அவர் தாழ்ந்த குரலில் இயல்பாகவும், அந்தப்  பெண் வலப்புறம் திரும்பிச் சற்று உரக்கவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.  நான் அவர்களைத் தாண்டும் போது, அந்த ஆணின் கண்களைச் சந்திக்காத, வேறு யாரும் தங்களைப் பார்க்கிறார்களா என்று நிதானித்துக் கொள்கிற தோற்ற த்துடன், “தங்கச்சி க்கு எல்லாம் கல்யாணம் ஆயிட்டுது. எல்லாரும் வேலைக்குப் போயிட்டாங்க. நான் ஒருத்திதான் சும்மா இருக்கேன்” என்று அந்தப் பெண், நான் வரும் திசையில் காற்றிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். சொல்வது என்று தீர்மானித்துவிட்டால், எதிரே நிற்கும் ஒருவரிடம் மட்டுமல்ல, என்னிடமும் இந்த உலகத்திடமுமே எப்போதும் பெண்கள் சொல்லிவிட விரும்புகிறார்கள்.

அந்த ஆணின் கையில் ஒரு அவுரிப்  பூங்கொத்து இருந்தது. பூ மட்டும் அல்ல. உருண்டை உருண்டையான  மொக்குகள், நான்கைந்து இலைகளுடன் கூடிய கொத்து அது. நான் கவனித்திருக்கிறேன். ஒரு ரோஜாவை, ஒரு அடுக்கு மல்லிப் பூவைப் பறிக்கச் சொன்னால், பெரும்பாலான ஆண்கள் அந்தப் பூவை மட்டுமே பறிக்கிறார்கள். பெண்கள் அனேகமாக, இரண்டு இலைகளுடன், நீளக் காம்புடன் சேர்த்தே பறிக்கிறார்கள். அவர்களுக்கு இலை தேவையாக இருக்கிறது. காம்பு தேவையாக இருக்கிறது.

அது அந்தப் பெண் அவரிடம் பறித்துக்கொடுத்ததாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்க நான் விரும்புகிறேன். அப்படி விரும்பியபடியே, அவர்கள் இருவரையும் தாண்டி நடக்கிறேன். ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கடக்கும் வரை, இடது பக்கம் பூராவும் அவுரி வனம். கொத்துக் கொத்தாகப் பொன்மஞ்சள் பூக்கள்.

யார் பறித்து யாரிடம் தரப் போகிறார்களோ?
இலைகளோடு அல்லது இலைகள் இன்றி, யார் தந்து , யார் பெற்றுக்கொள்ளப் போகிறார்களோ?

1 comment:

  1. சூழலின் கனத்தை இலகுவாக்க ஒரு பூச்செடியின் கிள்ளல் போதுமானதாகிறது... அது அவுரியா பாரிஜாதமா என்பதல்ல. எல்லா இடத்திலும் எல்லோருக்குமாக ஏதேனுமொரு செடி பூத்தபடியே.

    ReplyDelete