Monday, 23 June 2014

நான் சந்தோஷமாக இருக்கிறேன்.


சென்ற வாரம் ஒரு செவ்வாய்க் கிழமை பிற்பகல். சங்கரன்கோவிலில் இருந்து பஸ்ஸில் ஊர் திரும்பிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு அந்த வழியில் உள்ள ஊர்ப் பெயர்கள் – குருக்கள் பட்டி, பனைவிடலி சத்திரம், வன்னிக்கோனேந்தல், மானூர் – எல்லாம் பிடிக்கும். அது அழகிய பாண்டிய புரம் தாண்டியா, அதற்கு முன்பா தெரியவில்லை.
தன்னுடைய காட்டை அதுவரை தனியாக்க் கொத்திக்கொண்டிருந்திருக்க வேண்டும் அந்தக் கிழவி. அப்போதுதான் சாப்பிடப் போகிறாள். அவளுடைய காலத்திலேயே அவளுடைய பித்தளைத் தூக்குச் சட்டிகள் காணாமல் போய்விட்டன போலும். ஒரு வட்ட எவெர்சில்வர் சம்படத்தை எடுத்துப் பக்கத்தில் எடுத்துவைக்கிறாள். அதற்கு முன் ஒரு பெரிய, இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டிலை எடுத்து முகம் கழுவி வாய் கொப்பளிக்கிறாள்.

இப்போது தான் அது நேர்கிறது. பின்னால் அடர்ந்து வளர்ந்து கிடக்கும் நீர்க்கருவைக் காட்டில் இருந்து, வெயிலால் எய்யப்பட்ட தாகத்தின் ஒற்றை அம்பு போல அந்த மயில் ஓடிவருகிறது. கனத்த முழுவளர்ந்த தோகை தரையில் இழுபடும் மயில். தன் கனத்தை தானே தூக்கிவரும் ஒரு மயிலின் ஓட்டம் ஒரு வகையில் துயரூட்டுவது. அது வந்து அந்தக் கிழவியின் பக்கத்தில் நிற்கிறது. முகம் கழுவும் போது தானே சுருங்கிமூடும் கண்கள் மயிலைப் பார்க்கவில்லை. மயில் தன் ஈரக்குலையில் இருந்த தாகத்தை அலகுக்கு நகர்த்துவது போல கழுத்தில் தன் முழு விண்ணப்பத்தை நகர்த்தி, முகம் கழுவும் தண்ணீர் வெயிலில் சிதறுவதை ஏறிட்டுப் பார்த்தபடி அப்படியே கிழவி பக்கம் நிற்கிறது. ஒரு ஓடும் பஸ்ஸின் ஜன்னல் இவ்வளவு மட்டுமே அனுமதித்தது.

எழுதுகிறவன் சேகரித்துக்கொள்ளும் அதிகப்படியான உரிமத்தோடு, அந்த மயிலுக்குத் தன் உள்ளங்கையில் கிழவி நீர்வார்ப்பது போல ஒரு காட்சியை கவிதையாக எழுதிவிட நினைத்தேன். உங்களுக்குத்தான் தெரியுமே, நான் கவிதை எழுதுகிறதை விட காட்சியை எழுதுகிறவன் என்று.  ஆனால் ஒரு வரியில் கூட அந்தக் காட்சியின் அடிப்படை வண்ணம் திரளாமல் தொடர்ந்து நீர்த்துப் போய்க்கொண்டே இருந்தது நான் வரைய விரும்பிய சித்திரம். நான் அதிகம் முயலவில்லை. முயலுதல் அல்ல கலை.

ஆனால் ஒரு முடிதிருத்தகத்தில் காத்திருக்கையில் பார்த்த ஒரு விடுமுறைக் காலச் சிறுவனை, அவனுடைய பள்ளித் திறப்பு நாளில் பார்க்க நேர்ந்ததை, அவனும் என்னை இனம் கண்டு கையசைத்துப் போனதை, நான் எப்படி நினைத்தேனோ அப்படியே எழுதிவிட முடிந்தது. எழுதியவன் என்கிற அளவில் எனக்குச் சரியாக வந்திருக்கும் உணர்வை இப்போதும் அளிக்கிறது. அதை எத்தனை பேர் விரும்புகிறார்கள் பார்ப்போம் என்பதற்காக, இரண்டு சிறிய கவிதைகளுடன் இன்று பதிவிட்டிருக்கிறேன்.
%

அன்றாடச் சமையலுக்கு
காய்கறி வாங்கி வருகிறவன்தான்
இந்தக் கவிதையின் முதல் வரியில் நுழைகிறான்.
முடிவெட்டும் கடை பெஞ்ச்சில்
இவனுடன் காத்திருந்த சிறுவனைப் பார்க்கிறான்.
முற்றிலும் உரைநடையான இந்த வரியையே
கவிதையின் அடுத்த வரியென நம்புகிறான்.
ஆட்டோவிலிருந்து சீருடையோடு குதிக்கும்
முடிவெட்டின பையன்
காய்கறிப் பைக்காரனைப் பார்த்துச்
சிரிக்கும்போது அடுத்தவரி கீழே விழுகிறது
கத்தரிக்கோல் சத்தத்துடன்.
புடலங்காய் எட்டிப் பார்க்கும் வலது கை பையை
இடதுகைக்கு இவன் அவசரமாக மாற்றி 
வேகமான உயரத்தில் கை அசைக்கிறான்
எத்தனாவது வரி இது என்ற கவனம் இன்றி.
பதில் கை அசைக்கும் குட்டிப் பயலுடன்
பள்ளிக்கூடக் கதவுக்குள் போய்விட்டதால்
எதிர்பாராமல் முடிந்த கவிதையின் கடைசிவரி
எந்த வகுப்பில் உட்காரும் என்று 
பதற்றமாக இருந்தது முதல்வரிக்காரனுக்கு.

%

இந்தக் கவிதையை இதுவரை 69 பேர் வாசித்திருக்க, மற்ற இரண்டையும் 130 பேரும், 104 பேரும் வாசித்திருக்கிறார்கள். நான்கு பேர் இதைப் பகிர்ந்திருக்கவும் செய்கிறார்கள்.
நான் சந்தோஷமாக இருக்கிறேன்.3 comments:

 1. நான் அதிகம் முயலவில்லை. முயலுதல் அல்ல கலை.

  நான் கவிதை எழுதுகிறதை விட காட்சியை எழுதுகிறவன் என்று. Arumaiana varigal.

  ReplyDelete
 2. மயிலாடியது மனதில்

  ReplyDelete
 3. மயிலுக்கும் பாட்டிக்கும் ஒரு கவிதை கேட்டு விழைகிறது மனம். இருப்பதை ரசித்து இல்லாததையும் கேட்பது இயற்கை என்றே நினைக்கிறேன். நன்றி.

  ReplyDelete