Friday 31 January 2014

ஐடியல் பூ













நிறைய மஞ்சள் பூ பூக்கிற, உதிர்க்கிற மரம் இது.
பெயர் தெரியவில்லை. 

நான் படித்த ஷாஃப்டெர் உயர்நிலைப் பள்ளியில்தான்  முதலில், இன்னமும் கூட அதன் தாவர இயல் பெயரோ, வழங்கு பெயரோ தெரியாத, இந்த மரத்தைப் பார்த்தேன். அது 62ம் வருட மார்ச், ஏப்ரில் ஆக இருக்கலாம். ஸ்டடி ஹாலிடேஸ் நாட்கள் அவை. லாலா மணி என்று நாங்கள் பின்னால் அழைத்த கே.எஸ்.மணி (அப்பா பெயர் கேசவ ராம் சிங். இந்தப் பெயரை வைத்திருக்கிற இரண்டாவது மனிதரை நான் இன்னும் சந்திக்கவில்லை.). அவன் தான், வலது சிறகில் பேஸ் கட் பால் கிரவுண்ட்பக்கம் நின்ற முதல் மரமாக பூத்துச் சொரிந்த இதன் கீழ் அமர்ந்து, கொட்டிக் கிடந்த மஞ்சள் பூக்களால் தரையில். ‘GOD IS LOVE’  எழுதிக்கொண்டு இருந்தான். சின்னு முதல் சின்னு வரை கதை இவனுடையதுதான். இப்போது ஒருவேளை மேலே எங்கோ இருந்து கொண்டு, ‘LOVE IS GOD’  என்று எழுதிக்கொண்டு  இருக்கலாம்.

இது பிரிட்டிஷ் வம்சாவளியுடைய மரமாக இருக்கலாம். பின்னால் எத்தனையோ பள்ளிக்கூட, கல்லூரி, அரசு அலுவலக வளாகங்களில் இதன் பூ வாசத்தை உணர்ந்திருக்கிறேன். லேசில் வர்ணிக்க முடியாத தனித்த வாசம். இளவேனில் காலத்தில் பூக்கத் துவங்கும். கோடை மழை பெய்கையில், பெய்கையில் அல்ல, பெய்த பிறகு இந்த மரத்தடியில் அமர்ந்து அந்த வினோத வாசத்தை நுகரவேண்டும். அந்த மரத்தடி இருப்பை முற்றிலும் மனோகரமாக்கி விட வல்லது அது.

ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன், கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் ‘வைகறை நஞ்சப்பன் வீட்டின் முன், அவருடைய ‘ஐடியல் பள்ளிவளாகத்தில் முளைத்துக் கிடந்த நாற்றுகளில் ஒன்றை ஜான்ஸியும் புவனாம்மாவும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். இங்கே எங்கள் தலை வாசலில், முன்பு இருந்த அரளிச் செடி மூட்டுக்கும் பி.எஸ்.என். எல் கம்பத்திற்கும் அடுத்து நட்டு வைத்தோம். வளர்ந்தது, வளர்ந்தது,வளர்ந்தது. என்னைப் போல நெடுநெடுவென்ற வளர்த்தி. வீட்டு மனிதர்கள் ஜாடை அவர்கள் வளர்க்கும் தாவரங்களுக்கும் வந்து விடும் போல.

ஒவ்வொரு இளவேனில் காலம் நெருங்கும் போதும் எதிர்பார்ப்பேன். அந்த கே.எஸ்.மணி அதனடியில் உட்கார்ந்து ‘அன்பே கடவுள்எழுதும் காட்சியை நான் நிறைய முறை வரைந்து பார்த்திருக்கிறேன். அது மெய்ப்படவே இல்லை. தட்டுத் தட்டாக, அடர் இலைகளுடன், பூத்தும் உதிர்க்கும் நிற்கிற அந்த முதல் மரத்தின் காட்சி நினைவிலிருந்து வெளிறிக்கொண்டே போனது. எதிர்பார்த்தல் தானாகவே நின்றுவிட்ட்து. நமக்குத் தெரிந்தது தான் ‘பூப் பூத்தல் அதன் இஷ்டம், போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்என்பது.

கடந்த மூன்று வாரங்கள் ஊரில் இல்லை. வந்த அன்று தொட்டிச் செடிகள் வாடாமல் இருக்கிறதா என்று பார்த்தோம். முன்னால், பக்க வாட்டில் இருக்கிற மரங்களை ஏறிடவில்லை. மரங்களை நாம் நம்பலாம். அவை ஓரளவு வளர்ந்த பின் எந்தப் புகாரும் செய்யாது. அதன் நீரை அது தேடிக் கொள்ளும். அதன் ஒளிச்சேர்க்கையை அது நிகழ்த்திக் கொள்ளும்.

மறுநாள் காலை வாசல் தெளித்துக் கோலம் இடுகிற சங்கரியம்மாவிடம் இருந்து ஒரு குரல். ‘இங்க வந்து பாருங்கஎன்ற அந்தக் குரல் மஞ்சளாக இருந்தது. வெளியே போய்ப் பார்த்தால், உச்சிக் கிளையில் அந்தக் குரல் பறந்து போய் அமர்ந்திருந்தது.. இரண்டு மூன்று கொத்துகளாக பூக்கள். ஒரு ‘ஏரோப்ளேன்பார்க்கிற போது, நிலா பார்க்கிற போது, இப்படி, தான் வளர்த்த மரம் அதன் முதல் வசந்தத்தில் இருக்கிறதை அண்ணாந்து பார்க்கிற போது எல்லாம் நாம் எத்தனை அழகாகிவிடுகிறோம். நாங்கள் அந்தக் கணம் எங்களை விட அழகாக இருந்திருக்க வேண்டும்.

கீழே பூ உதிர்ந்திருக்கிறதா என்று பார்த்தேன். பூத்திருக்கிறதா என்று பார்ப்பது போய், உதிர்ந்திருக்கிறதா என்று பார்க்கிற நிலை எனக்கு. இன்னும் பூ உதிரத் துவங்கவில்லை. உதிர்ந்திருந்தால் பொறுக்கி எடுத்திருப்பேன். கை நிறைய ஏந்தி ‘வைகறைநஞ்சப்பனுக்கு சமர்ப்பித்திருப்பேன். அவர் வீட்டு முன் இருந்து எடுத்துவந்த நாற்று மரமாகிப் பூத்த முதல் பூக்களால் அவருக்கு மலரஞ்சலி செய்திருப்போம்.

‘ஜான்ஸி’, ‘புவனாம்மாஉங்களை நினைத்துக்கொள்கிறோம்.

இந்த மரத்தின் பெயர் இப்போதும் எனக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பூவின் பெயர்  ‘வைகறை’  நஞ்சப்பன்.

‘ஐடியல்என்று இந்தப் பூவுக்குப் பெயர் இட்டிருக்கிறோம் என்று சொன்னால், நஞ்சப்பனுக்கு இன்னும் சந்தோஷமாக இருக்கும்.

%



1 comment:

  1. மரங்களை நாம் நம்பலாம். அவை ஓரளவு வளர்ந்த பின் எந்தப் புகாரும் செய்யாது. அதன் நீரை அது தேடிக் கொள்ளும். அதன் ஒளிச்சேர்க்கையை அது நிகழ்த்திக் கொள்ளும்.

    ReplyDelete