Wednesday 9 October 2013

முக நக - 23.



மேற்குப் பார்த்து அமர்ந்திருக்கிறது ஒரு நாய்.
கிழக்குப் பார்த்துச் செல்கிறேன் நான்.
அவரவர்க்கு அவரவர் திசைகள்.
%
வளைந்து செல்லும் பாம்பின் முன்னும்
பாதையாக ஒரு நேர்கோடே இருக்கிறது.
%
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஜாகிங் போகிறவரைப்
பார்த்தால், ‘பருவமே புதிய பாடல் பாடுஎன்று இளையராஜாதான்
நெஞ்சத்தைக் கிள்ளுகிறார்.
%
நுங்கு, பதநீர் விற்கும் அறிவரசனின் சிரிப்பு பச்சைப் பனையோலை
நிறத்தில் இருக்கிறது. அவரவர் சிரிப்பு அவரவர் நில மரங்களிடம்
இருந்து பெறுவது. என் சிரிப்பை எங்கள் வீட்டு முருங்கைமரம்
அல்லது வேப்பமரம் தந்திருக்கலாம்.
%
மாயனேரிஎன்ற பெயர்ப்பலகையுடன் ஒரு டவுண் பஸ் போகிறது.
நன்றாகத்தான் இருக்கும், மாயன் வெட்டிய ஏரியில் நீச்சலடித்து
மயன் கட்டிய வீட்டில் துணி உலர்த்துவது.
%
நீண்ட வருடங்களாக உபயோகத்தில் இருந்த ஒரு நைந்த கைப்பெட்டியை குப்பையில் வீசியிருக்கிறார்கள். ரகசியங்களின் மூடி திறந்து கிடக்கிறது அது. யார் கண்ணிலும் படாமல் ஒளித்துவைக்கப் பட்டிருந்த ஒரு பழுப்புக் கடிதத்தை வாசிப்பது போல் வெயில் அதன் மேல் விழுந்துகொண்டிருக்கிறது.
%
என் சமீபத்திய கதைகளில் நம்பிக்கையின்மை தெரிகிறது, மரணம் நிறைய வருகிறது என்கிறீர்கள். மரணம் கூட ஒரு நம்பிக்கைதான்.
அசைக்கமுடியாத நம்பிக்கை.
%
அந்த மரத்திற்கு என்ன வயது?’ என ஆள் ஆளாக மயானத்திற்கு வந்தவரிடம் கேட்டவன் மரணபோதையில் இருந்திருக்க வேண்டும். எல்லா மயான மரங்களும் அவனிடம் ஒரு வயதிலி உரையாடலை நிகழ்த்த விரும்புகின்றன.
%
நாம் தான் பார்ப்பதில்லை.
இலை அழகாகவே உதிர்கிறது.
%

1 comment:

  1. தங்கள் எழுத்தின் வழி இலை உதிர்வதையும், பூ மலர்வதையும் வாசித்து அதைக்காணவே விழைகிறோம். ஒவ்வொன்றும் அற்புதமான வரிகள்.

    ReplyDelete