Tuesday, 17 September 2013

ஞாபக மரங்கள்.










அபாக்கஸ் வீடு என்றுதான் முன்பு அடையாளம் சொல்வார்கள். அந்த வீட்டில் இரண்டு மாமரங்கள் உண்டு. ஒன்று கிளிமூக்கு ஜாதி. இன்னொன்று உருட்டு வகை. கிட்டத்தட்ட பட்டணஞ் ஜாதியோடு சேர்த்துக்கொள்ளலாம். ஆமாம். மாம்பழத்திலும் ஜாதி எல்லாம் உண்டு. தாழ்ச்சி உயர்ச்சி உண்டு. அந்த வீட்டுக்காரர் இறந்து போனார். இரண்டு வருடங்கள் இருக்கும். அதற்காக மாமரங்கள் காய்க்காமலா போகும். இரண்டும் ரோட்டுப் பக்கமே கிளை சாய்ந்திருக்கின்றன. காய்த்துக் கிடப்பதும் அப்படித்தான். இந்த வகைக்குப் பெயர்தான் கிளி மூக்கே தவிர, கிளிகள் கடிப்பது எல்லாம் அந்த இன்னொரு உருட்டு வகையைத்தான்.
ரொம்ப நாட்களுக்குப் பின் இன்று கிளிச்சத்தம் கேட்க வாய்த்தது. கிளிச் சத்தம் பறத்தல் உடையது. கோவில் பிரகாரங்களில் கிளிபறக்கும் போதும், பறந்த பின்பும் கிளிச்சத்தம் பறந்துகொண்டிருக்கும். கிளிச் சத்தத்திற்கு நீங்கள் எந்த நிறமும் இட்டுக் கொள்ளமுடியும். அதன் பஞ்ச வர்ணம் அந்தக் கணம் நம்முடைய மனதின் சிறகுகளுடைய நிறத்தை அனுசரித்துக் கொள்ளும். இன்று நான் கேட்ட கிளிச்சத்தத்தின் நிறம் பச்சை.
அந்த மாமரத்தில் ஒரு தேர்ந்தெடுத்த., காயை விடப் பழுத்த, பழத்தை விடக் காயாக இருக்கிற ஒன்றை ஒரு கிளி கடித்துக் கொண்டிருக்கிறது. கிளியை. கிளி அசைவுகளுடன், கிளிச் சூழலில் பார்க்கவேண்டும் எனில், அதை நான் இப்போது பார்ப்பது முற்றிலும் சரியானது. ஒரு தலைகீழ்க் கிளியாக அது காம்பில் பாதி கிளையில் பாதி இருந்தது. தன்னுடைய எடை, காம்பின் தாங்கு சக்தி. கடிக்கப்படுவதன் எடையும் கடித்துமுடிப்பதற்கு எடுக்கக் கூடிய உத்தேச நேரமும் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்ட ஒரு துல்லியச் செயல்பாட்டுடன் கிளி இயங்கிக் கொண்டிருந்தது. பின்னணி இசைக் கோர்வை போல இன்னொரு கிளி சத்தமிட்டுக்கொண்டிருந்த இடம் தெரியக் காணோம். ஒரு சிறு நொடி அத்தனை மா இலைகளும் கிளியாகி. மறு நொடியில் அத்தனை பச்சைக்கிளிகளும் இலையாகிவிட்டிருந்தன.
நேற்றுத்தான் ஒரு தொலைபேச்சில் பேசுகிற எதிர் முனைக் குரலுடன் கிளிச்சத்தமும் கேட்டது. அவர்களுடைய வீட்டிற்கு எதிரே நிற்கும் மரங்களில் ஐம்பது அறுபது கிளிகள் கூட்டமாக இருக்கிறதாம். அடைகிற நேரத்தில் எல்லாக் கிளிகளும் இடும் சத்தம்தான் அப்போது கேட்பதுவாம். நான் நம்புகிறேன்.
இப்படி நூற்றுக் கணக்கில் கிளிகள் வசிக்கும் ஒரு பெரும் அரசமரத்தை பெங்களூரு பக்கத்தில் உள்ள ஹென்னூர்பெண்டே என்ற இடத்தில் பார்த்திருக்கிறேன். அங்கேதான் எங்கள் வங்கியின் பயிற்சி மையம் ஒருகாலத்தில் இருந்தது. தினசரி ஹென்னூர்பெண்டேயில் இருந்து லிங்கராஜபுரம் வரை நடந்து வருவோம். ஒரு நாள் தவறாமல் அவ்வளவு தூரம் நடப்பதற்குச் சிலருக்குத் திடமான காரணங்கள் இருந்தன. ஒரு மிக முக்கிய காரணம் லிங்கராஜபுரத்தின் சாராயக் கடை.
நான் மறுபடியும் கிளிகள்என்று ஒரு கதை அந்தப் பயிற்சிக்குப் பிந்திய கால குங்குமம்இதழ் ஒன்றில் எழுதினேன். என் தொகுப்பு எதிலும் இதுவரை சேராத, என்னிடம் பிரதி கூட இல்லாத ஒரு கதை அது. மிக அடர்த்தியான தலைமுடியுடன், மிக அடர்த்தியான மீசையுடன், நேர்த்தியான கதர் ஜிப்பா அணிந்திருக்கும் என்னுடைய அழகான புகைப்படம் ஒன்றையும் கதையுடன் பிரசுரித்திருந்தார்கள்.
கிளிகள் மாம்பழத்தைக் கடிக்கின்றன. என்னைப் போன்றவர்கள் ஞாபகத்தைக் கடிக்கிறோம். இந்த உலகத்தில் எத்தனை மாமரங்கள் உண்டோ, அத்தனை ஞாபக மரங்களும் உண்டு அல்லவாvvvv

1 comment:

  1. "அந்த மாமரத்தில் ஒரு தேர்ந்தெடுத்த., காயை விடப் பழுத்த, பழத்தை விடக் காயாக இருக்கிற ஒன்றை ஒரு கிளி கடித்துக் கொண்டிருக்கிறது. கிளியை. கிளி அசைவுகளுடன், கிளிச் சூழலில் பார்க்கவேண்டும் எனில், அதை நான் இப்போது பார்ப்பது முற்றிலும் சரியானது. ஒரு தலைகீழ்க் கிளியாக அது காம்பில் பாதி கிளையில் பாதி இருந்தது. தன்னுடைய எடை, காம்பின் தாங்கு சக்தி. கடிக்கப்படுவதன் எடையும் கடித்துமுடிப்பதற்கு எடுக்கக் கூடிய உத்தேச நேரமும் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்ட ஒரு துல்லியச் செயல்பாட்டுடன் கிளி இயங்கிக் கொண்டிருந்தது. " - வார்த்தைகளைத் தொடுக்கிறீர்கள் அப்படியே .

    உங்கள் வரிகள் என்னுள் பதிந்து விட்டது. இந்த வரிகளையே கடித்துக் கொண்டு இருப்பேன் வாழ் நாள் முழுதும் மறவாமல்

    ReplyDelete