நேற்று கடல் பார்த்தேன். இது வரை பார்த்த கடல் இல்லை. வேறு மாதிரி இருந்தது.அனேகமாக நீலத்தைத் தொலைத்திருந்தது. கடைசி விளிம்பில் ஒரு இழை போல ஒட்டிக்கொண்டிருந்த நீலத்தில் அடங்காமல் கடல் மழைக்காலக்
குளம் போல மண் நிறத்தில் புரண்டுகொண்டிருப்பதை அதிக நேரம் பார்த்துக் கொண்டு நிற்கமுடியவில்லை. நிஜமாகவே என் காலகளுக்குக் கீழ் இருந்த நிலத்தை அது உருவியது மணல் பறித்து. ஒரு பயத்துடனும் துக்கத்துடனும் நான் பின் வாங்கினேன். கடலுக்குள் இறங்கப் பயப்பட்ட தன்னுடைய சினேகிதியின் கையைப் பிடித்து இழுத்து, காலடியில் அலைவரக் காத்திருந்த அந்த சோனகன் விளை முகத்துச் சிரிப்பை நின்று ரசிக்க இயலவில்லை. பயந்த கொலுசுக் கால்களின் மங்கல் வெள்ளி மினுக்கத்தின் மீது உப்புக் கரிக்கும் முன்பு நான் கடலில் இருந்து விலகிவிட்டேன்.
சற்று மேடான பகுதியில் இருந்து வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் போதும் கடலின் அந்த மண் நிறம் துன்புறுத்தியது. அது என்னை விடவும் ஒரு பெரும் வலியில் புரள்வதாகவே நினைத்தேன். ஒரு பொது மருத்துவ மனைக் கட்டிலில் தன் தீக்காயங்களின் இறுதி அவஸ்தையில் தன் ஞாபகமற்று முனங்கிய முகம் மறுபடியும் தோல் பொசுங்கிக் துடித்தது. இதுவரை கடல் என சேமித்துவைத்திருந்த அத்தனை நீலச் சித்திரத்தையும் அது அழித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை, அதற்கு முந்திய நாள் கரைகடந்த ‘நீலம்’ புயலின் தூரத்துப் பாதிப்பாகக் கூட அது இருக்கலாம். கடல் என்னிடம் அது குறித்து ஏதும் சொல்ல விரும்பியிருக்குமோ.? நான் தான் நின்று கேட்காமல்
கடலின் வாதை நிரம்பிய குரலைப் புறக்கணித்து விட்டேனோ?
%
வீடு திரும்பிய பிறகும் கடலின் கலங்கல் நிறம் மங்கவில்லை.
அர்ச்சனைப் பிரசாதம் வைத்துக்கொடுத்திருந்த அந்த சிவப்பு விளிம்பு ஓலைக் கொட்டானில், திருநீறு வாசம் அடிக்கிற தேங்காய்ப் பிளவில், வதங்கல் பூ வாடைக்கே உரிய ஈர்ப்புடன் தொய்ந்துகிடக்கும் மாலையில் எல்லாம் அந்தக் கலங்கல் கடல் மிச்சம் இருந்தது. ஒலியற்று ஓடும் திரைப்படம் போல என் எட்டுத் திக்கிலும் ஒரு பழுப்பு நிற அலையடிப்பு இருப்பதையும், நான் அதில் கால் நனையாமல் கரைவாங்குவதையும் யாரும் அறிந்திருக்கவில்லை.
அன்று முழுவதும் எட்டிப் பார்த்திராத முகப் புத்தகத்தை திருப்பும் போது, மிகத் தற்செயலாக, அந்த நிலைத் தகவலும் வண்ணப்படமும் வெளி ரெங்கராஜன் அவர்களால் இடப்பட்டிருந்தது. ‘தமிழால் இணைவோம் ...’ என்ற தலைப்பில் திரு. ட்டி. செல்வகுமார் எடுத்திருந்த அந்த அற்புதமான படம் என்னை ஒரே கணத்தில் கடலில் இருந்து அகற்றிவிட்டது.
இரண்டு தப்பாட்டக் கலைஞர்கள், தங்களை மறந்த லயத்துடன், ஒரு பெரும் நடனமாக ஒத்திசையும் உடலசைவுகளுடன்,வியர்வை மினுமினுங்க, புல் தரைக்கு மேல் ஒரு சாண் உயரத்தில் அவர்களின் சலங்கை கட்டிய கால்கள் அந்தரத்தில் மிதக்கிறார்கள். எனக்குத் தப்பாட்ட நுணுக்கமும் தெரியாது. கலை என்ற அளவுகோலுடன் புகைப்பட நுணுக்கங்களும் தெரியாது. ஆனால் நான் தப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன், அந்தப் படத்தில் இல்லாத மூன்றாவது மனிதனாக. எனக்குப் பறையொலி கேட்டது. சலங்கை ஒலி கேட்டது. என் உடல் வியர்த்திருந்தது. சற்று அந்தரத்தில் உடலை வீசியிருக்கும் என்னை வாங்கிக் கொள்ள, புற்கள் பச்சையாக அண்ணாந்து நிற்பதை உணரமுடிந்தது.
பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் கலையிரவில் முதல் முதல் பார்த்த தப்பாட்டம் - சக்தி குழுவா அது? - மறுபடி, மின்சாரம் தவறிய இந்த சிதம்பர நகர் தெருவில் பெருந்துள்ளலுடன் நிகழ்ந்தது.இரண்டு விரல்களைக் கடைவாயில் செருகி அடிக்கிற ‘சீட்டி’ ஒலியில், தொலைபேசி இழையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு ஆந்தை பறந்து போனது.
எனக்கு அந்தப் பைத்தியக்காரி நினைவுக்கு வந்தாள். அதுவும் மதுரைதான். எஸ்.எஸ்.காலனியில் என் நண்பர் சந்திரனின் தேவன் மெடிக்கல்ஸ் கடை வாசலில் நிற்கிறேன். எதிரே என்ன நல்லதோ, கெட்டதோ தெரியவில்லை. வைக்கோல் துரும்பை எரித்து, அதில் தப்பு வாசிப்பதற்கு முந்திய ஏற்பாடாக, ‘பறை காய்ச்சு’கிறார்கள். அகலாது அணுகாது தீக்காய்ந்து, தப்புவினுடைய தோலுக்கு முறுக்கேற்றுகிறார்கள். இடையிடையே கண்கண்ணென்று சுண்டிப்பார்த்துக் கொள்கிறார்கள். அந்த ஆரஞ்சு நிறத் தீயையும், அவர்கள் பறை காயச்சுவதையும் அந்தப் பைத்தியக்காரி அசையாமல் பார்த்தபடி அப்படியே நிற்கிறாள். பித்தின் அந்தப் பெருநிலை அவளைப் பேரழகியாக்கி இருந்தது. ஒருவேளை பித்தம் தெளிந்த கணமாகக் கூட அது இருந்திருக்கும்.
அக்கணம் அவள் அழகி. அத் தீ அழகு.
%
இன்று அதிகாலை அந்த விகடன் கட்டுரையை வாசித்திருக்கக் கூடாது. “நேற்று நான் விடுதலைப் போராளி. இன்று ...பாலியல் தொழிலாளி” என்ற
அந்தப் பெண்புலியின் வாக்கு மூலம், ஏற்கனவே வெவ்வேறு விதமாகச் சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருக்கிற மனநிலையுடைய என்னைப் போன்றவர்களை முற்றிலும் நிலைகுலைக்கிறது ஒவ்வொரு வரியும்.
ஒரே ஒரு பெண்ணுடைய,பிரசுரத்திற்குரிய வகையில் தணிக்கைசெய்யப் பட்டிருக்கும் வாய்ப்புள்ள, வாக்குமூலமே இப்படி இருக்கும் எனில், இதை விட வெளிப்படையான, ஒளித்துவைக்கப்பட்ட,முடக்கப்பட்ட, புதைந்துபோன ஆயிரமாயிரம் குரல்கள் எப்படியிருக்கும்?
பெயர் மாற்றப்பட்ட அந்தப் பெயரை , மறைத்துவைக்கப்பட்டிருக்கும் அந்த முகத்தை ‘உணர’முடிகிறது. ஈழப்போரை, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ,பிரபாகரனை, பெண் போராளிகளை, அந்த முள்ளிவாய்க்கால் தினத்தின் பெண் போராளிகள் அடைந்த கோரச்சிதைவுகளை,சிங்களப் பேரினவாத மிருகத்தனங்களை எல்லாம், இந்த ஒரே பதிவின் மூலம் என்னால் முழுதாகஅறிந்து கொள்ள முடிகிறது. அடக்கமுடியாது பெருகுகிற கண்ணீரையும் விட வேறு எந்த வரிவடிவ ஆவணங்களும் அவசியமில்லை,
பாரதி ஏற்கனவே சொல்லிவிட்டான். “ சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும், சிந்தை இரங்காரடி கிளியே, செம்மை மறந்தாரடி” என்று.
நாம் நம்முடைய நடிப்புச் சுதேசிப் பாரம்பரியத்தை இப்போதும் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆன்மாவை விற்பதற்கு நமக்கு சற்றும் எந்தத் தயக்கமும் இல்லை. சரியான விலை படிந்தால் சரிதான். அந்த விலை ‘வித்யாராணி’யாக இருந்தால் கூட.
%
கலங்கிய கடல், அந்தர அசைவுகளுடைய அந்த தப்பாட்டம், கொந்தளிப்பு நிறைந்த இந்த வித்யாராணியின் சொற்கள் ... யோசித்துப் பார்த்தால், மூன்றும்
வேறுவேறு அல்ல. ஒன்றுதான் என்று தோன்றுகிறது.
நான் நேற்றுப் பார்த்தது அச்சடிப்பதற்கு முந்திய, கலங்கிய கடலாக இருக்கும்.
*