’சுந்தரி வீடு வந்துட்டுதும்மா’ வண்டியை எங்கள்
வீட்டு முன்பு நிறுத்தும் போதே சுப்பு குரல் கேட்ட்து.
இத்தனைக்கும் அது
பெரிய வண்டிதான். இறங்குவதற்குத் தோதுவாகத்தான் சுப்பு வண்டியை
நிறுத்தியிருக்கிறாள். ஸ்டியரிங் பக்கத்துக் கதவைச் சாத்திவிட்டுச்
சுற்றிவருவதற்குள் பின் பக்க இடது கதவைத் திறந்தாயிற்று. ’மெதுவா இறங்குங்கோ’ என்று ஹரி
நின்றாலும் போதவில்லை. ‘அவளை எங்கே?’ என்று சத்தம் வருகிறது. ‘குஞ்சு, அம்மா கூப்பிடறா’ என்பதற்குள் ‘வந்துட்டேம்மா’ என்று சுப்பு குரல் கொடுக்கிறாள்.
எங்களுக்கு
ஆஃபீசில்தான் சுப்பு. சுப்புலட்சுமி. கே. ஆர்., கல்லிடைக்குரிச்சி ராமமூர்த்தி சுப்புலட்சுமி.
வீட்டில் எல்லோர்க்கும் குஞ்சுதான். எல்லோர்க்கும் என்ன, இதோ காரில் இருந்து
இறங்குகிற தயாரிப்பில் இருக்கிற சுப்புவின் அம்மாவுக்கும், எப்போதும் போல ஒரு பழைய
முழுக்கைச் சட்டையைப் போட்டுக்கொண்டு சவரம் செய்யாத முகத்துடன், பிடித்துத்
தள்ளினால் ஒடிந்துவிடுவது போல இருக்கிற ஹரி இரண்டு பேருக்கும் குஞ்சுதான்.
இந்த இரண்டு பேர்
தவிர மூன்றாவதாக ஒருத்தியாக சுப்புவுடைய தங்கை ரமணி இருந்தாள். பி.காம்
பரீட்சையில் தேறி எம்.காம் சேர விண்ணப்பம் எல்லாம் வாங்கி வைத்திருந்தாள். ஹரி
மாமா மாதிரியோ குஞ்சு அக்கா மாதிரியோ அவள் பாங்க் வேலைக்குப் போக மாட்டாளாம். காலேஜ் லெக்சரர் வேலைக்குத்தான் போவாளாம். இப்படி எல்லாம் சொன்னவள் ஏன் அப்படிச் செய்தாள்
என்று தெரியவில்லை.
ரொம்ப நாள்
புத்திசுவாதீனம் இல்லாமல் இருந்து ரமணிக்கு நான்கு வயதாக இருக்கும் போதே உத்தரக்
கட்டையில் தொங்கிவிட்ட அவளுடைய அப்பா வழியையே அவள் எடுத்துக்கொண்டாள். முந்தின
நாள்தான் கை கொள்ளாமல் மருதாணி வைத்திருக்கிறாள். ஆற்றுத் தண்ணீர் பிடித்துவைத்த
செப்புப் பானை மூடியில் ‘தெறிக்கிற மாதிரி’ விளைந்த ஏழெட்டு நெல்லிக்காய்கள். கிருஷ்ணன்
கோவில் வரை நடந்தே போய்விட்டு வந்திருக்கிறாள். ‘மாமா திருந்தறதாவே இல்லையாம்மா?’ என்று ஹரியை சாராயக் கடைப்பக்கம் பார்த்ததற்கு வருத்தப்பட்டிருக்கிறாள்.
ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாய் அதிகம் என்று தனியாக ஒரு சின்னத் தட்டில் அதை
எடுத்துவைத்திருக்கிறாள். மாக்கல் சட்டியில் பருக்கையும் மோரும் இன்றிக் கழுவிக் கவிழ்த்தியாயிற்று.
அடுக்களைக் கதவைச் சாத்தும் போது ‘அரிசி டின்னுக்குள்ளே சுண்டெலி விழுந்து
கல்கல்னு அரிசியைச் சிதற அடிச்சுக் குதிக்கிறது. கார்த்தால வரைக்கும் சதிர்க்
கச்சேரி நடக்கட்டும்’ என்று சொன்னவள், அம்மாவிடம் ‘தூக்கம் வரலையாம்மா?’ என்று கேட்டிருக்கிறாள். ‘இன்னிக்கு என்ன கிழமை?’ என்று கேட்ட
அம்மாவிடம் . ’சித்தே கண்ணை அசந்தேள்னா முழிச்சுப் பார்க்கிறச்சே
புதன் கிழமை. புத வார்’ என்று சிரித்திருக்கிறாள். ஆனால் மறுநாள் காலை
பார்த்தால், முக்காலி உருண்டுகிடக்கிறது.
சிலம்பு மாதிரி மருதாணி அப்பின கால் தரைக்கு நாலடி உயரத்தில்
முறுக்கிக்கொண்டு திரும்புகிறது.
பாங்கிற்குத்தான்
ஃபோன் வந்தது. இன்னும் எல்லா கவுண்ட்டர்கள் முன்னாலும் ஆட்கள் வரக்கூட இல்லை. நானும்
சுப்புவும் காசாளர்கள். இரண்டு பேரும்தான் எதிரே வீஃபோரஸ் கடைக்குப் போயிருந்தோம்.
அவர்களுமே அப்போதுதான் திறந்திருந்தார்கள். சாயந்திரம் வருவதாகவும் பேரீச்சம்
பழங்கள், பிஸ்கட் வகைகள், வறுத்த முந்திரி தவிர காலி வட்ட பிஸ்கட் டப்பாக்கள்
இருந்தால் இரண்டோ மூன்றோ வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தோம்.
’பிஸ்கட்களும் பேரீச்சையும் அம்மாவுக்கு. ஹரி இஷ்டமா முந்திரி
சாப்பிடும். செங்கோட்டைக்குப் போனா கொல்லாம் பழம் வாங்கிட்டு வந்து, ஒவ்வொரு
கொட்டையா சுருசுருண்ணு எண்ணெய் வடியச் சுட்டு எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டு
இருக்கும். வட்ட பிஸ்கட் டப்பா எல்லாம் ரமணிக்கு வளையல் போட. அது ஒரு வளையல்
கிறுக்கு. யாராவது ஒரு வளையல் செட்டியைத்தான் கட்டிவைக்கணும் அதுக்கு’ - சுப்பு யார் யாருக்கு எது என்று சொல்லிக்கொண்டே
வரும்போது மாரியப்பன் சிரித்தான். பஸ் ஸ்டாப்பிற்குக் கீழ்பக்கம் மருத மரத்து
நிழலில் கூடை கூடையாக மாம்பழங்கள்.
பொதுவாக நான்தான்
நிறைய மாம்பழம் வாங்குவேன். ‘மல்கோவா நல்லாருக்கு. எல்லாம் தெக்குமேடு, புளியரை
தோப்புக் குத்தகையில் எடுத்தது’ என்று அவன் சொன்னதும் என்னைப் பார்த்துத் தான்.
சுப்புவுக்கு என்ன தோன்றிற்றோ, தினசரி அவனிடம் பேசுகிறது போல, ‘மாரியப்பா, சுந்தரி
அம்மாவுக்குத் தர்ரா மாதிரி எனக்கும் நல்லதா ஒரு அரை டஜன் எடுத்து வை. சாயுங்காலம்
போறச்சே வாங்கிக்கறேன். சரியா?’ என்றாள். எதைச் சொன்னாலும், ‘சரியா? என்பது
சுப்புலட்சுமியின் பழக்கம்.
எனக்குக் கூட ஞாபகம்
இல்லை. அந்தத் தந்திக் கம்பத்தைக் கடந்து போகும் போது சுப்புதான் சொன்னாள்,
‘இந்தப் போஸ்ட்ல தானே அந்தப் பையனைக் கட்டிவச்சு போறவா வாறவா எல்லோரும் ஆளாளுக்கு உதைச்சா? அந்தப் பொட்டிக்கடைப்
பாட்டையாவுக்கு என்ன வந்தது? ரொம்ப சிரத்தையா ஒரு வாழைத்தார் காம்பைத் தூக்கியாந்து
மொத்துறார். கடைவாய்ப் பல்லு தெறிச்சு அங்கேர்ந்து ரத்தம் வழியறது. பார்க்கவே
கண்ட்றாவியா இருக்கு. என்ன பசியோ. சாபமோ, நீட்டத் தெரியாம கையை நீட்டியிருக்கான்.
தப்புதான். அதுக்கு இப்படியா? குன்னி முத்து மாதிரி ரத்தம் ஒரு சொட்டு இப்போ
விழட்டுமா அப்புறம் விழட்டுமாண்ணு உதட்டில தொங்கித்து. ‘ – எல்லாம் ஏதோ இன்றைக்கு
நடக்கிறது போல சுப்பு ரோட்டின் குறுக்கே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே
வந்தாள். நைட் டூட்டி முடிந்து போகிற
வாட்ச் மேன் சூடன் பொருத்தி கருப்பசாமியைக் கும்பிட்டு எங்களையும் கும்பிடுகிறார்.
கதலிப் பழத்தில் குத்திவைத்த சர்வோதயா பத்தி கருப்பசாமியை விட்டு விலகி எங்களைப்
பார்த்து நாடாவாக நெளிகிறது.
‘டூட்டி முடிஞ்சுதா
வடிவேலு?’ – சுப்பு சிரிக்கிறாள்.
‘இன்றைக்கு என்ன,
எல்லாத்தையும் பேரைச் சொல்லி அட்டெண்டென்ஸ் எடுக்கிறதா உத்தேசமா?’ – நான் கேட்கிறேன்.
‘இன்னிக்கு என்னமோ
எல்லோரையும் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பேசணும்னு தோண்றது சுந்தரி” என்று என் தோளில் கை வைத்தாள். இப்படித் தோளிலே
கை வைப்பது சுப்புவின் இன்னொரு பழக்கம். அதிகம் சிரிக்கும்படி யாராவது பேசினால்
பக்கத்தில் நிற்கிறவர் தோளில் முகத்தை வைத்துக் குனிந்து கொள்வாள். ஏதாவது ஒரு
பெயர், தொலைபேசி எண் ஞாபகம் வரவில்லை என்றால் கூட அப்படித்தான். சுப்பு அதே மாதிரி என் தோளில் முகம் வைத்து
அழக்கூடிய தூரத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம் என்று அப்போது தெரியாது.
ஹெட் கேஷியர்
மேஜையில்தான் தொலைபேசி உண்டு. அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போடவந்த
செல்லப் பெருமாள்தான், ’ சுப்புலட்சுமி மேடம், ஃபோன்’ என்று சத்தம் கொடுத்துவிட்டு அவருடைய நாற்காலிக்குப்
போனார்.
ஒரு நாற்பது ஐம்பது
வருடத்திற்கு முந்திய அகலமான மேஜையில், ஒரு இன் அவுட் ட்ரே, ஒரு வருகைப் பதிவேடு,
ஒரு டெல் டேல் ரிஜிஸ்தர் தவிர படுக்கை வசத்தில் இருக்கும் ஒரு கருத்த தொலைபேசி
ரிசீவர். அதன் மறு முனையில் இருந்து என்னென்னவெல்லாம் பரவும்?
‘குஞ்சுவா?’ என்று கேட்டவுடன் ஹரி நேரடியாகவே விஷயத்தைச் சொல்லிவிட்டிருப்பார் போல. ‘
எப்போ? எப்போ?’ என்று மட்டும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு
சுப்பு பெரும் குரலில் அழ ஆரம்பித்திருந்தாள். யாரோ நாற்காலியை இழுத்துப் போட்டு
அவளை உட்காரச் சொன்னார்கள். தண்ணீர் டம்ளரைக் கொண்டுவந்து குடிக்கச் சொன்னார்கள்.
என்னுடைய கையை மட்டும் மிக அழுத்தமாக சுப்பு பிடித்துக்கொண்டாள். வாடிக்கையாளர்கள்
சிலர் வாசலில் நின்று எட்டிபார்த்துக்கொண்டு இருந்தார்கள். பக்கத்துத் தியேட்டரில்
இருந்து பணம் செலுத்த வருகிறவர் வழக்கமாக சுப்புலட்சுமி கவுண்ட்டரில்தான்
நிற்பார். நெற்றியில் மிகப் பெரிய வட்டமாக அவர் வைக்கிற குங்குமம் கவலையில்
சுருங்கி உதிர்ந்து அவர் மூக்குத் தண்டில் கிடந்தது.
முத்தரசுதான்
சுப்புவிடம் நம்பரை வாங்கி ஹரியிடம் பேசினார்.
விபரம் கேட்டார். உடனே பொது மருத்துவ மனை, காவல் துறை என்று யார் யாரிடமோ
பேசினார். ஒரு வாடகைக் கார் ஏற்பாடு
செய்தார். ‘சுந்தரி மேடம் நீங்க இவங்க கூடப் போகலாம் இல்லையா?’ என்று கேட்டார். சுப்புலட்சுமி வாடகைக்கு இருந்த உறவினர் வீட்டு வழியாக,
என் வீட்டுக்குக்குப் போய் தகவல் சொல்லிவிட்டு, பத்திரமாகப் போக வேண்டும் என்று
டாக்ஸி டிரைவரிடம் வழி சொன்னார். காஃபி வாங்கிவரச் சொல்லி எங்கள் இருவரையும்
குடிக்கக் கேட்டுக்கொண்டார். நாங்கள் குடிக்கவில்லை. ’முடிந்தால் ஃபோன்
செய்யுங்கள் சுந்தரி’ என்றார். டாக்ஸி டிரைவரைப் பார்த்து, ’போய்ச் சேர்ந்ததும் பேங்குக்குப் பேசுறீங்களா? நம்பர் இருக்கா, வேணுமா?’ என்று கேட்டுக் கொண்டார். அதுவும்
போதாதது போல, ‘ஹரி ஸார் கிட்டே பேசிக்கிறேன். புறப்படுங்க’ என்று முத்தரசு
சொன்னார்.
‘ஹரி ஸாராம் இல்லே,
ஹரி ஸார்’ என்று கதவைப் பெருஞ் சத்தத்துடன் அடைத்தபோது டிரைவர்
திரும்பிப் பார்த்தார். ‘புழுத்த நாயி.
புழுத்த நாயி. இன்னும் எத்தனை பேரு உனக்கு வேணும்?’ என்று உரக்க முனங்கினாள். முன் சீட்டை மாறி மாறி ஓங்கி அடித்தாள்.
டிரைவர் ஒரு கம்பியில் கோர்க்கப்பட்ட்து போல விரைப்பாக அமர்ந்து ஓட்டத் துவங்கினார்.
அதிக வேகம் அடைந்திருந்தது வாகனம்.
‘நாயி. நாயி’ என்று முன் சீட் விளிம்பில் நெற்றியை வைத்துக் குனிந்தபடியே திரும்பத்
திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தாள். நான் அவள் தலையை நீவி விட்டேன். முதுகைத்
தட்டிக் கொடுத்தேன். அவளுடைய வலது பக்கத் தோள்பட்டையில் சற்றுக் கையை
வைத்திருந்தேன். ‘சுப்பு, சுப்பு’ என்று சொன்னபடி தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அவள்
சொல்வது எனக்கு ஏதோ புரிந்த மாதிரியும்
புரியாத மாதிரியும் இருந்தது. அந்த
புரிந்த, புரியாத நிலையில் சுப்புவை நெருக்கமாகத் தொடுவதில் நானே வேறொரு பரபரப்பான
உணர்வை அடைந்துகொண்டு இருந்தேன்.. தேவையற்று அவள் முதுகில் கை வைத்திருப்பது
போலவும் இவ்வளவு நீண்ட நேரம் சுப்புவின் தொடையில் நீவி ஆறுதல் சொல்ல அவசியம் இல்லை
என்பதாகவும் தோன்றியது. ‘நாயி, நாயி’ என்று சுப்பு குனிந்துகொண்டே அருவெறுக்கிற போது, அவளைச்
சுற்றி நிற்கிற நாய்களில் ஒன்றாக நானே ஆகிவிட்ட்து போல இருந்த்து. அப்புறம் வீடு
வருகிற வரை, சுப்புவின் இடது கையை மட்டும் என் கையில் வைத்திருந்ததோடு சரி.
அலுவலகத்தில் இருந்து
வேறு யாரும் வரவில்லை. இந்த மாதிரியான சாவுக்கு எதற்கு உடனடியாக என்று தள்ளிப்
போட்டிருந்தார்கள். முத்தரசு மட்டும்
பைக்கில் அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்திருந்தார். அம்மாவைப் பார்க்கலாமா என்று கேட்டார். பக்கத்தில் இருந்தவர்கள் அவரைப் பார்த்தபடி எழுந்திருந்து
போனார்கள். சுப்பு அம்மாவை எழுப்பி உட்கார வைத்தாள். அம்மாவுக்கு சுப்புவின் அப்பா
போனது பாரம். தம்பி ஹரியுடன் இரண்டு பெண் குழந்தைகளையும் இதே வீட்டில் இருந்து
ஆளாக்கியது பாரம். அதையெல்லாம் விட அவளுடைய உடம்பே அவளுக்கு ஆகப் பெரிய பாரம்.
கன்னம் தொங்கும். கழுத்துச் சதை அப்படி. மேல் புஜம், முன் கை இப்படி கால்
சுண்டுவிரல் வரைக்கும் சொல்லிக்கொண்டே போகலாம்.
அம்மா எழுந்திருந்து
உட்கார்கையில் மர பெஞ்ச் மூச்சுவிட்டது. பாதம் வரை சேலையை இழுத்துவிட்டுக் கொண்டு
சுப்பு முத்தரசுவை அம்மாவிடம் சொல்லிவைத்தாள். ‘ அம்மா. இவா எங்க ஆஃபீஸில ஒர்க்
பண்றா. எல்லாத்துக்கும் உதவி. அதிலும் இன்னிக்கு எனக்குப் பெரும் ஒத்தாசை. ஊரு
வாயை அடைக்க முடியறதோ இல்லையோ? போலீஸ்காரா வாயி, அறுத்துத் தெச்சி ஓலப் பாயில்
சுருட்டிக் கொடுப்பாளே அவா வாயி எல்லாத்தியும், திறக்கறதுக்கு முன்னமே போறுமா போறுமாண்ணு
அடைச்சி வச்சது இவா தான்’ – சுப்பு அழ ஆரம்பித்தாள். சுப்புவின் அம்மா அழவில்லை. எத்தனை
காலம்தான் எது எதற்கெல்லாம்தான் ஒரு மனுஷி அழுவாள்? ஆயுசு பூராவும் அழ யாரால்
முடியும்? முத்தரசுவைப் பார்த்துக் கூப்பின கையை அப்படியே தன்னுடைய முகத்தை
மூடுகிற மாதிரி வைத்துக் கொண்டு அப்படியே இருந்தார்.
யாருமே கொஞ்ச நேரம்
பேச வில்லை. கொஞ்சநேரம் கூட இல்லை. சற்று அதிக நேரம் தான். துளைபோடுகிற மாதிரியான
அந்த மௌனம் என்னவோ செய்தது.
’ஹரி ஸார் எங்கே?’ என்று முத்தரசு கேட்டார். சுப்புலட்சுமி
ஒன்றும் சொல்லவில்லை. மூக்கு விடைக்க ஆரம்பித்திருந்தது. நான் ஸ்டோர் ரூம் பக்கம்
கையைக் காட்டினேன்.
‘இருட்டிக் கிடக்கு.
லைட் ஒண்ணும் காணோம்” – முத்தரசு எழுந்தார். அவர் சட்டையெல்லாம்
வியர்த்திருந்தது. வலது கையை ஜன்னல் விளிம்பில் ஊன்றியிருந்தார் இவ்வளவு நேரம்.
முழங்கைப் பக்கத்து ஈரத்தில் ஏதோ தாள் கிழிசல் ஒட்டியிருந்த்து.
‘படுத்திருப்பார்னு
நினைக்கிறேன்’ என்றேன்.
‘குடிச்சுட்டு
விழுந்து கிடக்கிறா ன்னு நேரா சொல்லு சுந்தரி’ – சுப்பு கண்களை அகட்டினாள். சுப்புவின் அம்மா லேசாக சுப்புவை நிமிர்ந்து
பார்த்துவிட்டு மறுபடி குனிந்தாள். இதுவரை வராத கண்ணீர் இப்போது இறங்கிக்கொண்டு
இருந்தது.
முத்தரசு ஸ்விட்சை
வலது பக்கம் தேடினார். அவரவர் வீட்டில் புழங்கின ஞாபகத்தில் தானே இருட்டில் கை
போகும்.
‘லெஃப்டிலே இருக்கும்
ஸார்’ – சுப்பு சத்தம் கொடுத்தாள். முடிப்பதற்குள் அடுத்த அறை
கருப்பு இருட்டிலிருந்து மஞ்சள் இருட்டுக்கு மாறியது. ஹரி எழுந்திருந்து
உட்கார்ந்தார். மேல் சட்டையில்லை. துண்டை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.
குடித்திருந்தது உண்மைதான். ஆனால் நிதானம். நீண்ட காலம் குடிக்கிறவர்களுக்கு
வருகிற நிதானம் மட்டும் இல்லை. ரமணியின் இந்தக் காரியம் சார்ந்த துயரம் உண்டாக்கிய
நிதானம்.
முத்தரசு அவர்
பக்கத்தில் போய் உட்கார்ந்து லேசாக ஹரியின் தோளில் கை வைத்தார். ஹரி குலுங்கிக்
குலுங்கி அழ ஆரம்பித்தார்.
‘குஞ்சு நினைக்கிறா
மாதிரி அப்படியொண்ணும் நான் கேடுகெட்டவன் இல்லை’ என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். அந்த மஞ்சள்
வெளிச்சம் மட்டும் ஒரு ஆறு போல் சகலதிசைகளிலும் ஓடிக்கொண்டு இருந்தது. படித்துறையில்
உட்கார்ந்து பார்த்தபடி இருப்பது போல முத்தரசுவும் ஹரியும் தரையையே
பார்த்துக்கொண்டு இருந்தார்கள். செக்கடியில் இருக்கிற ஒரு எண்ணெய் மக்கு வாடை எங்கிருந்தோ வந்துகொண்டிருந்தது.
‘இப்போ அம்பது ஆகிறது
எனக்கு. அப்போ நாப்பது இருக்கும். தூக்கத்தில புரண்டு படுக்கும் போது நம்மை அறியாம
கைகால் பட்டு தலைமாட்டில் இருக்கற செம்பு ஜலம் கொட்டிப் போறா மாதிரி ஏதோ ஆயிப்
போச்சு. குஞ்சு அதை நினைக்கலாம். நினைக்கக் கூடாதுன்னு சொல்லலை. ஆனா அதையே
நினைச்சுக்கிட்டு எல்லாத்தையும் பார்த்தா எப்படி? ‘
முத்தரசு
கேட்டுக்கொண்டே இருந்தார். குண்டு பல்புக்கும் முறுக்கு வயருக்கும் இடையே தொங்கிய
நூலாம்படையின் நிழல் எதிர்ச் சுவரில் அரூபச் சித்திரங்களை வரைந்து வரைந்து
விலகியது.
‘காக்கா கொட்டினதா
ஒரு ஆற்றைச் சொல்றா. அது வேணும்னு கொட்டித்தா, வேண்டாம்னு கொட்டித்தா தெரியலை. ஆனா
இன்னிய தேதிக்கு அதில இறங்கி நிண்ணா கரண்டைக்குக் கூட ஜலம் இல்லை. ஜலத்தை
விடுங்கோ. குனிஞ்சு அள்ளிடலாம்னு பார்த்தா ஒரு குத்து மணல் இல்லை. இதைக் கொட்டின
கணக்கில் சேர்க்கிறதா, அள்ளின கணக்கில் சேர்க்கிறதா?’
இங்கே ஹரி பேசுகிற சத்தத்தைக்கேட்டு
சுப்புலட்சுமி கோபத்தோடு எழுந்தது போல இருந்தது. மடியில் இருந்ததோ என்னவோ,
அமிர்தாஞ்சன் டப்பி விழுந்து உருண்டு மூடி திறந்து விரீர் என்று அறை முழுவதுக்கும்
தைலம் பூசியது. நான் சுப்பு பின்னாலேயே போனேன்.
‘நான் ஒண்ணு உங்ககிட்டே கேட்கலாமா ?’ என்றார் முத்தரசு. ஹரி அவர் முகத்தையே பார்த்தார். நாங்கள் வாசல் நடைக்கு
இந்தப் புறமே நின்றோம்.
‘சுப்புலட்சுமியை
நான் கட்டிக்கிடலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை உண்டா? சொல்லுங்க. அடுத்த வாரமோ அடுத்த மாசமோ கேட்கணும்னு இருந்ததை இப்பவே
கேட்டுரலாம்னு தோணிட்டுது. அதுக்கு, கொஞ்ச நேரத்துக்கு முந்தி நீங்க பேசினது
அல்லது அந்த நூலாம்படை நிழல், இந்த குண்டு பல்ப் வெளிச்சம், உங்களோட லிக்கர் வாடை,
என்னுடைய வேர்வை வாடை எது வேணும்னாலும் காரணமா இருந்துட்டுப் போகட்டும்’
முத்தரசு ஹரியின் முகத்தையே
பார்த்துக்கொண்டு இருந்தார். தன்னுடைய
அமைதிக்குள் அமிழ்ந்தபடி ஹரி. ஒரு சிறு நொடியில் அவர் பெரும் தூரத்தைத் தாண்ட வேண்டியிருந்தது.
‘சுந்தரி’ என்று சுப்பு
என்னை இழுத்தாள். வழக்கமாக அவள் செய்கிறது போல என் தோளின் மீது முகத்தை வைத்துக்
குனிந்துகொண்டே நின்றாள். எத்தனையோ காலத்திற்கு முந்திய இந்த நிலைவாசலும் எத்தனையோ
காலமாக வந்துவந்து நீங்கும் இருட்டுமாக இருக்கிற இந்த இடத்தில் சுப்புவை எனக்கு
அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. ‘சுந்தரி’ என்று சுப்பு
மீண்டும் சொல்லி விசும்பும் சமயம் நான் இன்று காரில் புறப்படும்போது இருந்த அதே
பரபரப்பில் இருந்தேன். சுப்பு ஒரு ஈரமான வாடையுடன் இருந்தாள்.
இத்தனை
வருஷங்களுக்குப் பிறகும் தாண்டவே முடியாத, உலரவே உலராத ஈர வாடை.
‘பார்த்து வாங்கோ.
ஈரமாக் கிடக்கறது’ என்று ஹரி சொன்னார்.
‘இந்தப் பக்கம்
தண்ணீர்க் கஷ்டம்னு சொல்றா. சுந்தரி ஆத்துல அரளிச்செடி வரைக்கும் குளிப்பாட்டி
ஆகிறதே” என்று சுப்பு, அம்மாவின் இடது புஜத்தைப் பிடித்தாள்.
‘குஞ்சு, முதல்’லே பாத் ரூம் போகணம் குழந்தே’ - சுப்புவின் அம்மா வெளிப்படையாகவே சொன்னார். ஒரு
வயதில் எல்லாம் வெளிப்படையாகி விடுகிறது.
‘ஒன்பது வருஷத்துக்கு
மின்னாடி முதல் முதல் சுந்தரி வீட்டுக்கு வரச்சேயும். ‘பாத் ரூம் எங்கே இருக்கு’ ன்னுதான் சுந்தரியோட ஆத்துக்காரர் கிட்டே கேட்டே’
‘ இப்போ எங்கே அவரை?’ என்று கேட்ட
சுப்பு அம்மா அதற்குப் பதிலை
எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சுப்பு சொன்னாள் சிரித்துக்கொண்டே, ‘நாம அரசுவையும்
பசங்களையும் அழைச்சுண்டு வராததுலே கோவமாம். அவரையும் பொண்ணையும் கண் காணாம ஒளிச்சு
வச்சிருக்கா சுந்தரி’. இதைக் கேட்டோ அல்லது வேறு எதற்கோ சுப்பு அம்மா
சிரித்தார். கொஞ்சம் குனிந்து வாசலில் இருக்கிற
சிறு கல்திண்ணையைத் தடவினார். மேல் கைச் சதை கொளகொளவென்று அசைந்தது.
‘வழவழண்ணு இருக்கறதே.
இங்கே சித்தே உட்கார்ந்துக்கட்டுமா? ரெண்டு பேர் மட்டும் உட்காரதுக்குன்னு அளவா
பண்ணியிருப்பா போல. எனக்கு ஒருத்திக்கே பத்தலை’ என்று உட்கார்ந்தார்.
‘ரெண்டு பேர் இட்த்தை
ரெண்டு பேர் நிரப்புகிறதுல என்ன இருக்கு. ஒரே ஒருத்தர், இப்படி ரெண்டு பேர் இடத்தை
அஞ்சு பேர் இடத்தை பத்து பேர் இடத்தை நிரப்புகிறதுதானே விஷேசம்.’ - நான் சுப்புவின் கையைப் பிடித்துகொண்டே சொன்னேன்.
‘அப்படியா சொல்றாய்?’ என்று சுப்புவின அம்மா கேட்டார்.’ யாரை யாரால நிரப்ப முடியறது’ என்று சுப்புவைப் பார்த்தார். சுப்பு ஒன்றும்
சொல்லவில்லை. ஒரு பதில் வேண்டியிருந்தது போல சுப்புவின் அம்மாவுக்கு. ‘நீ என்னடா
சொல்றே ஹரி’ என்று கேட்டுவிட்டுப் பதில் வராததும், ’அவனே எங்கே காணோம் குஞ்சு?’ என்றார்.
‘வீடுகட்டியிருக்கோம்ணு
கூப்பிட வந்துட்டு இப்படி வாசக் கல்லுலேயே நாம உக்காந்துண்டுட்டா எப்படி? இன்விடேஷன்
எடுக்கப் போயிருக்கான். காரில தானே இருக்கறது எல்லாம்’ - சுப்பு அம்மாவிடம் சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்து ’ஹரி சிகரெட் பிடித்துவிட்டு வருவார்’ என்று அவளே பாவனையாகப் புகை இழுத்துச் சைகை
காட்டிச் சிரித்தாள்.
எனக்கு சுப்பு
எப்போது வீட்டுக்குள் வருவாள் என்று இருந்தது. இப்படிச் சிரித்தபடியே வந்து
என்னுடைய தோளில் முகத்தை வைத்துக்கொண்டால் சரிதான்.
%
உயிர் எழுத்து
மே - 2013.