Monday, 29 September 2014

02-09-2014.






நான் நாட் குறிப்பு எழுதும் பழக்கம் உடையவன் அல்ல. எனினும்
இவை  02-09-2014  எனும் என்னுடைய நாளைப் பற்றியதே,

‘நாளை மற்றும் ஒரு நாள்’ ஆக இருக்குமோ என்னவோ, 02-09-2014  எனக்கு மற்றும் ஒரு நாளாக  இருக்கவில்லை. நானும் என்னைப் போல ஒருவனாக
இருந்திருக்கவில்லை போல.

%
யாருமற்ற தனிமையில் அல்ல, எல்லோரும் இருக்கிறார்கள் என்று உணரும் தனிமையில், ஆளற்ற வீட்டில் துவங்கும்  காலையில் ஒரு புனிதம் இருக்கிறது.
*
புங்கை இலைச் சருகுகளைக் கூட்டிக் கையால் அள்ளினேன். ஒரு வனத்தைத் தழுவிக்கொண்டது போல இருக்கிறது.
*
அயர்ன் பண்ணித் தருகிற செல்லப்பா வந்து, நேற்று சலவை செய்தவைகளை எடுத்துப் போகிறார். அவருக்கு என்னையும், அவரை எனக்கும் பிடிக்கும்.
*
நேற்று இதே போல, ‘சந்திரகலா ட்ரைக்ளீனர்ஸ்’ கடைக்கு  ஒன்றரை மாதங்களுக்கு முன்னால் கொடுத்த உருப்படிகளை வாங்கப் போனேன். காலில் கட்டுப் போட்டிருந்தார். ‘காலிலே என்ன?’ என்று கேட்டேன். என்னைப் போல வேறு சிலரும் கேட்டிருக்கலாம். நானும் கேட்டேன். அது அவருக்கு இதமாக இருந்தது போல. மீதிப் பணத்தைத் தரும்போது அவர் சிரித்த சிரிப்பில், அவருடைய கால் காயம் பெரும்பாலும் ஆறிவிட்டிருந்தது தெரிந்தது.
*
பூவிலும் மெல்லியதாய் ஒரு பூதான் இருக்கமுடியும்.
*
பட்டுத் தூசியும் தண்ணீரும் சேர்ந்த வினோத வாசனை எழுகிறது துடைத்துவிட்டுப் போன தளத்தில் இருந்து.
*
பொரிகடலை மிட்டாயை இன்னும் உலகத்தில் இருந்து ஒழித்துவிடவில்லை. நிம்மதியாக இருக்கிறது. சாப்பிட்டுக்கொண்டு ஜெயகாந்தனைப் பார்க்கிறேன். ஜெயகாந்தனைப் படிப்பது என்பது ஜெயகாந்தனைப் பார்ப்பது போலத்தான்.
*
ஒரு தினம் இலைப் புழு போல அழகாக நகர்கிறது, யாருக்கும் எந்தக் கெடுதலும் இல்லாமல்.
*
சமையல் செய்யவேண்டும் போல இருக்கிறது. எனக்கு சமையல் நன்றாக வந்துவிடும் என நம்புகிறேன்.
*
அவரவர்க்கு அவரவர் வாழ்வே காணி நிலம்.
*
நான் அயர்ந்து தூங்கிவிடுகிறேன்.  ஆனால் நான், ‘கொடுத்துவைத்தவன்’ அல்ல.
*
இதுவரை ஒரு கவிதை எழுதாத, ஒரே ஒரு கவிதை கூட  வாசிக்காத எத்தனையோ பேர் இருக்கிறார்கள், அதுவும் சந்தோஷமாக.
*
சோளம் அறியும் சோளக் ‘கருது’ எடையும், கருங்குருவி எடையும் , காற்றின் எடையின்மையும்.
*
ரதி சிலையின் மார்பு இடுக்கில் துடைக்கப் படா மன்மதத் தூசி.
*
நெருப்புக்கும் நீல நிறம் அழகு.
*
ஒரு கம்பிக் கொடிக்கும், ஈரத் துணிக்கும், இளம் வெயிலுக்கும் எத்தனை அழகிய உறவு.
*
நான் ஏன் இன்னும் இருக்கிறேன், ---- ---க்குக் கூடப் பிடிக்காதவனாக?
(மறு தினம் இதை வாசித்துக் காட்டிய போது, ஆர். பாலு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த எழுத்தாள நண்பரின் பெயரை எடுத்து விட்டேன்).
*
காவித் துண்டால் துடைத்துக் கொண்டாலும், கண்ணீர் கண்ணீர்தான்.
*
ஒரு செடி தானாக வாடுவது, ஒரு மனுஷி அனாதையாகச் சாவது போலத் தானே.
*
கிழவன் சாந்தியாகோ, உன் 85ம் நாளில் கடலில் போராடிப் பிடித்த உனக்கும், கரைக்கு வரும்போது வெறும் எலும்புக் கூடே மிஞ்சியது.
*
இதே மனநிலையின் ஆன்மீகத்துடன் ஜோனதான் லிவிங்ஸ்டனின் ‘sea gull'
படிக்க முடிந்தால் எத்தனை நல்லது.
*
தேவாலயங்களில் அல்லது ஓவியங்களில் சிறகுகளுடன் பறக்கும் குழந்தைகள் பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தைகள் ஒன்றிற்கு என் சாயல் இருந்திருக்குமோ?
*
தகடு போல் இரு கரை தொட்டுப் பெருகும் ஒரு பேராற்றை ஏதேனும் ஒரு நிசியில் பார்த்து அமரும் தனிமை வாய்க்குமா என் மரணத்திற்கு முன்?
*
ஒரு மீன் குஞ்சு, மீன்குஞ்சு, மீன்குஞ்சு எங்கள் சங்கரி. அவள் தண்ணீரால் ஆசீர்வதிக்கப் படட்டும்.
*
ஒரே ஒரு மயிரிழைதான். தாண்டவே முடியவில்லை யாருக்கும்.

%