நான் நாய் வளர்த்ததில்லை.
எப்போதோ என் பள்ளிப் பிராயத்தில் முயல்கள் வளர்த்திருக்கிறேன். அதைக் கூட நான் வளர்த்தேன் என்று சொல்ல முடியாது. அண்ணன் வளர்த்தான். நான் அதற்கு முள்முருங்கை இலைகள் பறித்துவந்து போட்டேன். அண்ணன் வளர்த்தவைகளுடன் நானும் ஒரு செல்லப் பிராணியாக வளர்ந்தேன் என்றும் சொல்லலாம்.
நான் நாய்களுக்கு பயப்படுகிறேன் என்று தோன்றவில்லை. எனக்கும் அவற்றிற்கும் ஒரு புரிதல் இருக்கிறது. ஒரு முந்திரித் தோட்டக் கடன் ஆய்வுக்குப் போயிருந்த சமய என் பணிக்காலத்தில் அந்த முரட்டு வளர்ப்பு நாயின் உச்சியில் நான் தடவிக் கொடுத்ததைப் பார்த்து அந்த முந்திரிக்காரர், அதற்கு முந்திய நிமிடத்தை விட, என்னை வேறு விதமாக நடத்தினார். நான் உயர் ரக நாய்கள் வளர்த்துப் பழகியவன் என்ற நெருக்கம் அவருக்கு உண்டாகி, கடன் வசூலிக்க வந்த வங்கி அதிகாரி மேல் உண்டாகும் எரிச்சலில் இருந்து முற்றிலும் அகன்றிருந்தார். நான் அப்போது அங்கிருந்த ஒரு மரத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கையில், கனிவு நிரம்பியவராக,’வாங்க. உள்ளே உட்கார்ந்து பேசலாம்’ என நல்ல ஆங்கிலத்தில் உபசரித்தார்.
அதே போலத்தான், இந்தக் கவிதையில் வருகிற நாயையும் நான் உச்சியில் தடவிக் கொடுத்தேன். இது வீட்டு நாய் அல்ல. தெரு நாய். நாலைந்து வயதிற்கு மேல் இருக்கும். தடவிக்கொடுக்கையில் முதுகும் உடலும் கனத்துத் தளர்ந்திருந்தது. சமீப நாட்களில் என் பின்னாலேயே வருகிறது. என்னை முகர்ந்து பார்க்கிறது. என் வலது கையை அது பார்க்கிற பார்வையைத் தாங்க முடியவில்லை. வீட்டுக்கு வெளியே சுற்றிச் சுற்றி வருகிறது. ‘என்ன வேணும் உனக்கு?’ என்று கேட்டுக் கூடப் பார்த்துவிட்டேன். நான் தெருவில் எதிர்ப்படும் பூனைகளிடம், நாய்களிடம், கன்றுகுட்டிகளிடம் பேசுகிறவன் தான். இதனுடன் சற்று அதிகம் பேசவேண்டியதாயிற்று.
’வெளியே தள்ளிக் கதவைச் சாத்திட்டான்’ என்பார்கள். நான் அதையே செய்தேன். கதவுக்கு வெளியே போக மறுக்கும் அதனுடன் தலை வருடிக் கொஞ்சி அனுப்ப வேண்டியதிருந்தது. நேற்றும் மழை பெய்த இரவு. கதவைச் சாத்தப் போகும் போது, அது வாசல் இடது புறம் உட்கார்ந்திருந்தது. அசையாமல் சிலையாக. ஒரு பூனை படுக்கும் தோற்றத்தில் ஒரு நாய் இருக்கிறதாகப் பட்டது
. காலையில் கதவைத் திறக்கும் போதும் அதே நிலை. அதே சிலை. புராணக் கதைகளின் மாயமும், சாபம் பெற்ற முனிசிரேஷ்டர்களின் முகமும் அது அடைந்திருந்தது. சமீபத்தில், பங்குனி உத்தரத்திற்கு சாஸ்தா கோவில் போன இடத்தில் முதல் முதல் பார்த்த ‘சாமி வந்த’ அசைவுகள் இதனிடம் தெரிகிறதா எனப் பார்த்தேன். காசியில் தென்பட்ட கழுத்து முழுக்க அடர்த்தியான மஞ்சள் மாலைகள் அணிந்த பைரவர்களை நினைத்துக் கொண்டேன். சிறு தெய்வம் வந்து எங்கள் வீட்டு வாசலில் பூடங்கொண்டுவிட்டது என்று யாரும் சொன்னால் நான் மறுத்திருக்க வாய்ப்பில்லை.
இந்த மனநிலையில் தான் அதை எழுதினேன். எங்கள் வீட்டின் நிச்சய அடையாளமாக இருந்த அரளிச்செடிகள் இப்போது இல்லை. எழுத்தின் வசதிக்காக, அதே இடத்தில் அரளியை வளர்த்துக்கொண்டேன்.
மற்றப்படி, மறுபடியும் வாசலில் வந்து இன்று அமரும் எனில், சொல்ல முடியாது, நான் இந்த வரிகளை அதனிடம் சொல்லவும் சொல்வேன்.
%
அந்தக் கவிதையை இணைப்பது நல்லது எனத் தோன்றுகிறது.
%
இரவு கதவைப் பூட்டுகையில்
அரளிச்செடி மூட்டில்
பின்கால்கள் மடக்கி, முன் கால்கள் ஊன்றி
நாயால் செய்த பூனைச் சிலை போல்
அமர்ந்திருந்தது அது.
காலையில்திறக்கும் போதும்
கண்மூடிய நிலையில், குரைப்பின்றி
அப்படியே அசையாமல்
அரளிப்பூ சிவந்த காட்டத்திற்கு
’ஆராதனை வந்தது’ போல்.
இன்னும் ஒரு சிறு தெய்வம் வாசலில்
எழுந்தருளியிருக்கும் பதற்றத்தில்
இந்த நாளுக்கான தேதியைக்
கிழிக்க முடியவில்லை எனக்கு.
%