Friday, 29 November 2019

நிலவின் குரல்








அது ஒரு சின்ன அதிர்ஷ்டம் அல்லது சின்ன விபத்து. அப்படித்தான் அது நடக்கும்.
பெருமழை தரும் முழுத் துக்கம், முழு ஆனந்தம் இன்று. குளிர்ந்த இருட்டு ஒரு கிழிந்த சுவரொட்டி போல, வீட்டின் எல்லாச் சுவர்களிலும் நாக்கு மடித்துத் தொங்கும் போது, தசராக் காளி அவள் நாக்கை என் வாயில் நீளச் சிவக்கிறாள். வேறு ஒன்றைத் தின்னக் கேட்கிறவளுக்குத் தர இன்று என்னிடம் ஒன்றுமில்லை. ஒன்றுமில்லையெனில் எல்லாம் கேட்கிறவள் அவள்.
பாலசுப்ரமணி சடையப்பன், திரைப்படம் சார்ந்த, பாலுமகேந்திரப் பள்ளிக்கூடத்துக்காரர். இன்று ஆழ் துயரத்திலிருந்து முடிவிலி நோக்கி என்று ஒரு பதிவு.
ஸியா மொஹைதீனின் துருபத் வாத்திய, யமன் ராக, இசைப்பு. 1.10.12 என்ற நீண்ட பதிவு. இன்றைக்குக் கேட்டால் பொசுங்கிப் போய்விடக் கூடும். அதிலிருந்து நகர்த்தி நகர்ந்தேன். உஸ்தாத் ஆஸாத் அலி கானின் ருத்ர வீணை. யமன் கல்யாண் ராகம். அதுவும் 1.08.54 நேரப் பதிவு. சுல்தான் கானின் சாரங்கியில் யமன் ராகம். அதே 1.03.27.
நான் ஒரு சிறிய நேர மழைப் பாட்டம் பெய்யும் நேரத்தில், மற்றொரு பாட்டம் துவங்கும் வரை கேட்க விரும்பினேன். எதையாவது, யாரிடமிருந்தாவது பெற்றுக்கொள்ள விரும்பினேன்.
ஒரு ராகமும் ஒரு தாளமும் தெரியாமல் இரண்டு கைகளையும் நீட்டிய யாசகம். பட்டியலில் அடுத்து அனவ்ஷ்கா ஷங்கர் எனும் மாய மோகினி 'நிலவின் குரல்' என 14 நிமிட சிதார் வாசிப்பில் இருந்தது.
கேட்க ஆரம்பித்துவிட்டேன். மழை நிற்பது பெய்வது குறித்த நினைப்பில்லை. சுருள் சுருள் புரள் முடியில் புற்றகன்ற நிலவின் குரல் அனவ்ஷ்காவின் வலது நடன பாதத்தின் வழி நெளிந்திறங்கியது.
என்னுடைய காலுக்கும் கட்டிலுக்கும் கீழ் அது ஒரு 12ம் நாள் நிலவைப் பார்த்துக்கொண்டு படம் விரிக்கிறது.
%


https://youtu.be/RzoO756PvL8
https://youtu.be/RzoO756PvL8



Wednesday, 27 November 2019

சுயம்பு








தூய சவேரியர் கல்லூரியில் இன்று கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், ‘கரிசல் இலக்கிய வளம்’ என்று ஒரு கருத்தரங்கம் நடத்தியது.
ரொம்ப காலத்திற்குப் பிறகு மு. சுயம்புலிங்கத்தைப் பார்க்க முடிந்தது. எனக்கு அவர் பழக்கமில்லை. தீ மாதிரி அவர் எழுதியிருப்பவைதான் தெரியும். இன்றைக்கு எனக்கு இடப் பக்கம் இரண்டு மூன்று வரிசைக்கு முந்தித்தான் அமர்ந்திருந்தார். எனக்கு அவரிடம் பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவர் கையைப் பிடித்துக்கொள்ள நினைத்தேன்.
தே நீர் இடைவேளை என்று சொன்னதும் நான் எழுந்து அவர் பக்கம் போய் அவர் தோளில் கை வைத்துக் கூப்பிட்டேன். தோளைத் தொட்டுக் கூப்பிடுவது ஒரு பழக்கம் எனக்கு. அவர் திரும்பிப் பார்த்தார். ‘யாரடா நீ, என் தோளில் கை வைத்துக் கூப்பிடுகிறாய்?’ என்ற பார்வையுடன் திரும்பினார். என்னை அடையாளம் தெரிந்துவிடும் என்று நம்பினேன். அவருக்குத் தெரியவில்லை. சத்தம் காட்டாமல், ஒரு வணக்கம் மட்டும் செய்துவிட்டுக் கீழே வந்துவிட்டேன்.
இங்கே வந்த பிறகு இந்தக் கவிதையைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொள்கிறேன்.
தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
%
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால்நீட்டி தலைசாய்க்க
தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
%
இந்தக் கவிதையை எனக்குத் தெரியும். இந்தக் கவிதைக்கு என்னைத் தெரியும். நான் இப்போது மீண்டும் சுயம்புலிங்கத்தின் தோளில் கை வைத்துக் கூப்பிடுகிறேன். அவர் திரும்பிப் பார்க்கிறார்.
இப்போது அவருக்கு என்னைத் தெரிகிறது.
%
28.11.2015












Tuesday, 26 November 2019

விஜயம்





சிறிய இடைவெளிக்குப் பின் ஊர் திரும்புகிறோம்.
மழைக்கால அதிகாலை ரயிலில் விடிவதற்கும் முந்திய ‘விடியக் காலத்தில்’ வீடு திரும்ப இம்முறை வாய்த்தது. எங்கள் வீட்டிற்கு நாங்களே விருந்தாடிகள்.
வழக்கமாக ஆட்டோ தான் பிடிப்போம். ஆளுக்கு இரண்டு பெட்டியை இழுத்துக்கொண்டு வெளியே வருவதற்குள் விஜயன் வந்து விட்டார். வாடகைக் கார் வைத்திருக்கிறார். பழைய வெள்ளைக் கலர் அம்பாசிடர். இதற்கு முன் இரண்டு முறை அவர் வண்டியில் போயிருக்கிறேன். ‘கொடுக்கதைக் கொடுங்க’ என்பார். ‘ உங்களுக்குத் தெரியாதா?’ என்பார். ஆட்டோவில் போனால் இவ்வளவுதான் ஆகும். எதுக்கு நாங்க காரிலே வாரோம்?’ என்று கேட்டால், ‘சரி.அண்ணாச்சி.இதை ஆட்டோண்ணே நினைச்சுக்கிடுங்களேன்.’ என்று என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு, ‘ என்ன கொறைஞ்சு போகப் போது? என்னக்கா?’ என்று பக்கத்து முகத்தைப் பார்ப்பார். பேசுகிற இந்த நேரத்தில் லக்கேஜ் எல்லாம் டிக்கியில் ஏறியிருக்கும். ஏறுவதற்குத் தோதுவாகக் கதவு திறந்து ’ஒருச்சாச்சு’ வைத்திருப்பார்.
இன்றைக்கு அவருக்கு என் ஞாபகம் வரவில்லை. எங்களை விட ஒரு ஐந்து வயது குறையாகத்தான் இருக்கும். வயதுக்கும் ஞாபகத்திற்கும் என்ன இருக்கிறது. ஒவ்வொருத்தருக்கு ’சிலது’ மறக்கும். சிலது மறக்காது.
‘போவும் அண்ணாச்சி. நாந்தான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கனே’ என்றார். வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் அவரால் சொல்ல முடியாது. ஆனால் வீடு என்றால் எங்கேயாவது இங்கே தானே இருக்கும் என்று அவருக்குத் தெரியும். அவர் கூடவே டாக்சி ஸ்டாண்ட் வரை போய் ஏறிக்கொண்டோம்.
‘வண்டி இண்ணைக்குக் கரெக்ட் டயத்துக்கு வந்துட்டான்’, ‘அங்கே மழை தண்ணீ எப்படி அண்ணாச்சி? இங்கே தூத்துக்குடி வரைக்கும் ஒரு ஆஃபர் போயிருந்தேன். மூணுமணி நேரம் ஊத்து ஊத்துண்ணு ஊத்தீட்டுது’, ‘மழக் காலம் லா. ஆறே கால் ஆகப் போது. இன்னும் முகம் தெளியக் காணும்” - இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு வருகிறவர், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் வரும் போதுதான், நைசாக வீடு எங்கே இருக்கிறது என்று ஊகிப்பதற்கான அந்தக் கேள்வியைக் கேட்பார்.
‘எப்படி அண்ணாச்சி ஸ்ட்ரெய்ட்டா பை பாஸ் வழியா போயிருவமா, பாளை பஸ் ஸ்டாண்ட் வழியா விட்டிருவமா? ரெண்டும் ஃப்ரீயாத்தான் இருக்கும். ஈ,காக்கா இருக்காது இப்ப’ என்றார். இதற்கு நாம் சொல்கிற பதிலைப் பொறுத்து வீடு இருக்கிற இடத்தை அவர் உத்தேசமாக நெருங்கிவிடுவார்.
இந்த விளையாட்டுப் போதும் என்று தோன்றிவிட்டது எனக்கு. ‘ போகிற வழியில், பாளை பஸ் ஸ்டாண்ட் பக்கம் பால் வாங்கிட்டுப் போணும். பெருமாள் புரம் எல்ஷடா ஆஸ்பத்திரிக்கு ரைட்லே வீடு’ என்று சொன்னேன்.
விஜயனுக்கு அப்போதும் நினைவு வரவில்லை. ‘நாந்தான் வந்திருக்கனே அண்ணாச்சி’ என்றார் ஆவின் கடை திறக்கவில்லை. பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷன் தாண்டின பிறகும் எல் ஷடாய் மருத்துவமனை பிடிபடவில்லை. வண்டி வேகம் குறைந்தது. நான்கு சக்கரங்களும் எங்கே திரும்ப வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடுங்கள் என்றன.
‘பழைய செகண்ட் ஸ்டாப்புக்கு வலது பக்கம் டென்னிஸ்கோர்ட் எல்லாம் இருக்கும்லா விஜயன்’ என்று சொல்லும் போது, அவர் ஒன்றும் சொல்லவில்லை. ‘நேர தானே அண்ணாச்சி. இப்போதாம் லெக்குத் தெரியுது’ என்றார். தனக்கு வீடு ஞாபகம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுவிட்டதில் அவருக்கு பெரிய ஆசுவாசம் உண்டாகியிருந்தது. குரல் ஒரே ஒரு திரியில் விளக்குப் பொருத்தி எரிந்தது.
‘தூத்துக்குடி ஆஃபர் கொஞ்சம் சுணங்கீட்டுது அண்ணாச்சி. பால பாக்யா நகர்ல கொண்டாந்து அவங்களை இறக்கி விட ராத்திரி ரெண்டு ரெண்டரை ஆயிட்டு’ என்றார். முகத்தில் இனித் தன்னிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்று அவருக்கே ஒரு நிறைவு. இதுவரை நேரே பார்த்து ஓட்டிக்கொண்டு வந்தவர் என் பக்கமாகத் திரும்பிச் சின்னப் பிள்ளை மாதிரிச் சிரித்தார்.
‘சைடுல எல்லாம் இங்கியும் தண்ணி கெட்டிக் கிடக்கு. செத்த முந்திப் பெஞ்சிருக்கும் போல, கண்ணாடியா இருக்கு சுத்தமா” என்றார். வீடு வந்துவிட்டது என்பதிலும், அவருடைய பேச்சில் அவருடைய மறதியை ஒப்புக்கொண்டதும் உண்டான வெளிச்சம் எனக்குப் பிடித்திருந்ததாலும் உண்டான உணர்வில் அவர் தோளில் கைவைத்து ‘ அடுத்த லெஃப்ட்’ என்றேன்.
விஜயன் இப்போது மேலும் விஜயனாகியிருந்தார். சாமி இல்லம் தாண்டும் போது தெரு அடைத்துப் பன்னீர்ப் பூ உதிர்ந்து கிடந்தது. ‘ பாய் மாதிரிக் கிடக்கு அண்ணாச்சி’ என்றார். சத்தியமாக, விஜயன் இப்படியே இதைச் சொன்னார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘அந்த முக்கு வீடுதானே. நான் தான் வந்திருக்கனே’ என்றார்.
நான் விஜயனின் தோளில் மீண்டும் கையை மட்டும் அப்படியே வைத்தேன்.ஒரே ஒரு கையால் ஒருத்தரை அணைக்க முடியாதா என்ன?
%
27.11.2017 முக நூல் பதிவு.

Monday, 25 November 2019

அதன் போக்கில்




மனம் வனமிருகங்களைப் போல நுட்பமானது.
ஒரு சருகு உதிர்வதை, புல்லின் மீது புழு ஊர்வதை அது காதுயர்த்திக் கேட்கிறது. ஒடிபடும் கிளையின் பச்சையை, பின்கால்களால் பரபரவென்று கீறி, கழிவை மூடும் ஈரமண்ணை நாசி விரித்து உணர்கிறது. வேட்கையை, இணக்கத்தை, வேட்டையாடலை, பயத்தை வாலசைவுகளில் எதிர் மிருகத்திற்குச் சொல்கிறது.
ஒரு மான் குட்டி பிறந்திருப்பதை, பேருடலுடன் யானை சாய்ந்துவிட்டதை, எங்கோ மழை திரள்வதை, தொடர்மலையின் மறுபக்கச் சுனை பெருகுவதை, குடும்பம் குடும்பமாக முளைத்திருக்கிற காளான் குடைகளை, வேதியத் துகளாகி விட்ட சாணத்தின் மீது மொய்க்கிற இளம்பச்சை நீர் நிறப் பட்டாம் பூச்சிகளின் சிறகசையா தீப வடிவை எல்லாம் அது ஒரு கூரிய ஆதிப் புலனால் அறிகிறது.
முப்பது அடி தூரத்திற்கு அப்பால், புனித மேரி தெரு தன்னை வேறு சாயலில் வைத்திருந்தது. பின்-மழைச் சிறு தாவரங்கள் தரையோடு தரையாக இன்னொரு அமைதியில். இன்னும் நெருங்கினால், வெள்ளை வாகனம் சிவப்பு இட வல எழுத்துக்களுடன். சாயமிழந்த துணிப்பந்தலை இழுத்துக் கட்டும் இரும்பு முளைக்குத் தெருவில் குழி தோண்ட, தரை அதிர்ந்தது. தார்க் கருப்பில் பேபி ஜல்லிகள் குதித்தன. நான் மரணத்தை உணர ஆரம்பித்தேன்.
யாருடையது என அறியாமல் சுற்றிலும் நிகழ்ந்துகொண்டு இருக்கும் மரணத்தில், இது யாருடையது என அறிய விரும்பினேன். என்னைத் தாண்டி வேகமாக விரைந்துபோய் அந்த வாசல் பக்கம் நின்ற வாகனத்தில் வெளிறிய பிளாஸ்டிக் நாற்காலிகள். அந்த வீடு எனக்குப் பரிச்சயமான ஒன்று. அந்த குறிப்பிட்ட வீட்டில் இருக்கிற ஒரு பேராசிரியையும், அதற்கு அடுத்த வீட்டு ஓய்வு பெற்ற பேராசிரியரின் மனைவியும் எதிர்ச் சுற்றாக என் முன் நடந்து செல்வார்கள்.
மரணம் பைத்தியக்கார விரல்கள் உடையது. யாரையும் பறிக்கும். யாராக இருக்கும் எனத் திரும்பினேன். ஒரு சரிவான கோணத்தில் கண்ணாடிப் பேழை இன்னும் ஒரு குளிருடலை ஏந்துவதற்காக கிடத்தப்பட்டிருந்தது. வேறு யாரும் வாசலில் இல்லை. இருந்தால் கேட்டிருப்பேன். ’யாருமற்ற மரண வீடு’ என்ற தலைப்பை மனம் உச்சரித்தது.
தெருப்பக்கம் பன்னீர்ப் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. எதிர்ப் புறக் கட்டுமானத்தில் ஒரு வடக்கத்திய இளைஞன், இடது காதில் பொருத்திய கைபேசியோடு, ஒரு அலுமினியப் பாத்திரத்தில் சமையல் துவங்கியிருந்தான். மூன்று கால்களை மட்டும் ஊன்றி அந்த வெள்ளை நாய் சூரியனைப் பார்க்க ஓடிக்கொண்டு இருந்தது.
பன்னீர்ப்பூ வாசனையோடு பன்னீர்ப் பூ இருந்தது.
அதிகாலைச் சமையல் அதனுடைய கொதிப்பில் மூடியிருக்கும் ஈய வட்டத் தட்டை சிறுகுரலுடன் நகர்த்தியது.
வலப்பக்க பின் கால் தொய்வுடன் செல்லும் நாயின் வால் உயர்ந்திருந்தது.
நான் நடப்பதை நிறுத்தவில்லை.
சுற்றி நிகழ்வதை எல்லாம் அதன் போக்கில் நிகழ விடுகிறது. அது நிகழ்கிறது. மரணம் எப்போதுமே அப்படித்தான்.

Tuesday, 19 November 2019

நெளிவு







என்னுடைய கையில் சூடு தணிந்த கடும் சாய். தேன் நிறக் குவளையைப் பற்றி அருகமர்ந்த விரல்களில் சுருங்கிக் கிடந்த நீள் காலம். காலியான மரப் பெஞ்ச்சை நீவிவிட்டவர் சொன்னார்நூறு வயது இருக்கும்,யானை உரசின இந்த மரத்துக்கு


அனேகமாக ஒரு முறை கூடக் கத்தரிக்கப் படாத பழுப்பு நிற மீசைக்கருகில் சாயின் நெளியும் ஆவியை முகர்ந்துகொண்டு இருந்தவர், -‘கொழுந்து பறித்தவள் கைகளில், கணவனைப் புலி அடித்துக் கொன்ற நடுக்கம் இருந்திருக்கிறது’ - தரையைப் பார்த்தார்.


இன்னும் அவர் முதல் மடக்கை உறிஞ்சவில்லை.
கண்ணாடிக் குவளையை உயர்த்தி அடி வண்டலின்
அடர் நிறம் பார்த்துத் தலையைத் தொங்கப் போட்ட குரலில்,”எப்போதும் மழை நனைத்த உச்சிப் பாறைகள்.” “மிருகம் கழிச்சது, பறவை கழிச்சது, மரம் கழிச்சதுண்ணு எல்லா எச்சமும் துப்புரவாகி ஓடும் மலம் புழா


நான் என்பங்குக்குக் கண்ணை மூடிக் கொண்டேன். முதலில் இமைகளுக்குள் விளிம்பில் கருத்த புள்ளிகள் இட்ட பெரணிச் செடி இலைகள் அசைந்தன. இன்னும் வாட்ஸாப்பில் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரு ஐந்து தலைப் பாம்பு தெரிந்தது. முள் முருங்கை மரத்தின் செம்பூக்கள் அப்புறம். அடர் வனத்தில் ஒரு மஞ்சள் பூவை என்னால் பூக்கச் செய்ய முடியவில்லை.


காட்டில் மஞ்சட் பூவே பூக்காதா?” நான் அவரைக் கேட்க விரும்பிக் கண்ணைத் திறந்தேன். பக்கத்தில் அவரைக் காணோம். போய்விட்டிருந்தார்.


குடிக்கப்படாத அவருடைய சாய் வட்டத்தில் இன்னும் ஆவி நெளிந்துகொண்டு இருந்தது.






Thursday, 14 November 2019

ஒலிபரப்புக் கதை







வண்டு’ என்ற ஒரே ஒரு சிறு கதையைத் தான் இந்தப் பதினோரு மாதங்களில் எழுத முடிந்தது. ஒன்றை மட்டுமே எழுதியதற்கும் வேறெதுவும் எழுதாது போனதற்கும் இந்த வாழ்க்கையைக் கேள்வி கேட்க முடியாது. அது பதில் சொல்லாது. நிறைய எழுதும் போதும் அது அப்படியேதான் கையைக் கட்டிக்கொண்டு இருந்தது. அது வேடிக்கை காட்டாது. ஆனால் வேடிக்கை பார்க்கும்.
நான் அந்தக் கதையை எழுதி முடித்த மறு நாளே ‘ காணி நிலம்’ சிற்றிதழுக்கு அனுப்பினேன். அதில் வரவேண்டும் என மிக விரும்பினேன். காணி நிலம் ஒரு காலாண்டு இதழ். அரையாண்டு ஆகப் போகிற நிலை. இன்னும் இதழ் வெளிவரவில்லை.
இதற்கிடையில் நெல்லை வானொலியில் என்னிடம் கதை கேட்டார்கள். அவர்கள் என்னிடம் ஒலிபரப்புக்குக் கதை கேட்டுப் பல வருடங்கள் இருக்கும். சரி என்று சொன்னேன். பத்துப் பன்னிரண்டு நாட்களில் அனுப்பினால் போதும் என்றார்கள். எனக்கும் போதும் போலத்தான் இருந்தது. எழுதிவிடுவேன் என்றுதான் நினைத்தேன். எழுதவில்லை. எழுதமுடியவில்லை என்பதே மெய். நிறைய மன, உடல் அழுத்தங்கள்.
நவம்பர் 5க்குள் அனுப்ப வேண்டும். மூன்றாம் தேதி கூட எழுதிவிடுவேன் என்றுதான் கணினி முன் இருந்தேன். ஆனால் அந்த முதல் வரி பக்கத்தில் வரவே இல்லை. நாலாம் தேதி இரவு வரை துளாவியும் அந்த முதல் வரி தன் விடுமுறையை முடித்துத் திரும்பி வரவே இல்லை. இரவு 11 மணிக்கு, காணி நிலத்திற்கு அனுப்பிய ‘வண்டு’ கதையை ஒரு தடவை வாசித்துப் பார்த்தேன். வேகமாக வாசித்தால் 11 நிமிடங்களும், நிதானமாக வாசித்தால் 13 நிமிடங்களும் ஆயிற்று. அதையே அனுப்பிவிட்டேன்.
ஒரு நிம்மதி. ஒரு ஏமாற்றம்.
நேற்று அந்தக் கதை ஒலிபரப்பு ஆகிவிட்டது போல. நான் திருநெல்வேலியில் இல்லை. இருந்தால் கேட்டிருப்பேன். கேட்கப்படாத அந்தக் கதை காற்றில் இருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.
இன்று காலையில் என் சுவாசத்தில் நிச்சயம் அந்தக் கதையும் நுரையீரலைச் சுத்தீகரித்திருக்கும். எழுதிய கதை எழுதியவனுக்கு அதைக் கூடச் செய்யாவிட்டால் எப்படி?





Tuesday, 12 November 2019

தூவானம் அல்லது ’தூத்தல்’










நேற்றிலிருந்து இப்போது வரை மழை பெய்துகொண்டே இருக்கிறது. அறிவு மதி ‘ கடைசி மழைத் துளி’ என்று ஒரு கவிதைத் தொகுப்புக் கொண்டு வந்திருக்கிறார்.
எங்களுக்கு மிக நெருக்கமான இருவர்க்கு இது ஒருவேளை ‘கடைசி மழைக் காலம்’ ஆக இருக்கலாம்.

மழைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இடைவிடாத
ஒரு இசைக் கோர்வை போல அதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
ஒரு உன்னதை இசை கூட, துவக்கத்தில் இருந்து, அது தீர்மானித்துவைத்திருக்கிற ஒரு திருப்பத்தைத் தாண்டும் வரை நம்மை வருடிக் கொண்டும், வருடலின் நுனி அறுபடும் தருணம் ஒன்றில் ஒரு கூர் ஆயுதம் போல நம்முள் இறங்கத் துவங்கியும் விடும் போல.

பணிக்கால அலுவலகங்களின் தினத்தில் கூட, எவ்வளவு வேலை மேஜையில் இருந்தாலும், மழை பெய்யும் போது , நகர்ந்து வந்து ஒரு தாழ்வாரத்தில் அல்லது ஜன்னலோரம் நின்று விடுவேன்.
இன்று விடிந்ததில் இருந்தே, அங்கிங்கே அசையாமல் வீட்டு ஜன்னல் அருகில் தான்.

பொது மருத்துவ மனையொன்றின் வலிக்கட்டிலில் புரளும் ஒருவனுக்கு இந்த மழைச் சத்தம் கேட்குமா? அது என்ன சொல்லும், அவனிடம்/அவளிடம்?

காலையில் இருந்து குறுக்குத் துறை ஆற்றையும், அம்பா சமுத்திரம் சின்னச் சங்கரன் கோவில் ஆற்றையும் நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
ஆற்றின் மேல் பெய்கிற மழை,கடலின் மேல் பெய்கிற மழையை விட வேறொன்றாகவே இருக்கிறது . விழுந்து தெறிக்கும் குமிழிச் சில்லில் ஆற்றின் சந்தோஷம் எழுதப்படுகிறது.

ஒரு ஓய்வுபெற்ற ஆரம்பப் பள்ளி வயோதிக ஆசிரியன், மழைக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும் பள்ளிக்கூடத்தில், அவர் சொல்லித் தந்த வகுப்பில் இப்போது போய்த் தனியாக நின்றால், அந்தக் கரும்பலகையில் அவர் இப்போது என்ன எழுதுவார்? அவரால் எழுத முடியுமா எதையாவது?

நான் படித்த - நான் எங்கே படித்தேன்?- வ.உ.சி கல்லூரி முகப்பின் முன் வளாகத்தின் செம்மண் தரையில், மழைக்காலங்களில் நான் பார்த்த எண்ணிலி மண்புழுக்கள் எல்லாம் என்னவாகியிருக்கும்?
நான் துளைத்து வெளிவர அங்கு எனக்கிருக்கும் ஞாபகம் எல்லாம் இப்போது நனைந்து கிடக்கும் தானே..

மழையின் நிறம் என்ன மஞ்சளா? அது எப்போதும் தரையோரக் குறுஞ்செடிகள் அனைத்தையும் மஞ்சளாகத்தானே பூக்க வைக்கிறது. போனால் போகிறது என்ற சலுகையில், குறும் பூக்களின் மேல் பறக்க, சின்னஞ் சிறிய வெண்ணிற வண்ணத்துப் பூச்சிகள். ( எங்கள் அம்மையிடம் கேட்டால் ‘தண்ணிக் கலர்’ என்பாள்.).

இப்போது ஒரு தெற்கத்தி ஓவியன், என்ன ஓவியம் வரைந்துகொண்டு இருப்பான்? இந்த மழை நாளுக்காக அவன் தேர்ந்தெடுக்கும் பிரத்யேக நிறம் எதுவாக இருக்கும்?

இன்று ரேஷன் கடைக்கு முன்னால் சிந்திக் கிடக்கும் தானியங்கள் கொத்த , பயந்து பயந்த மைனாக்கள் வருமா? தீபாவளிச் சரவெடிகளின் சத்தத்தை அவை மறந்து விட்டனவா? அன்றன்றைக்கு எல்லாவற்றையும் மறந்துவிடும்படியான நிர்ப்பந்தத்தை அதன் சிறகுகளும் ஒப்புக்கொண்டாயிற்றா?

மூன்று சக்கர வண்டியில் செய்தித்தாள் வினியோகிக்கிற ராஜா, இந்த மழையில் வாரப் பத்திரிக்கை போட வரவில்லை என்று, எரிச்சல் பட்டுக்கொண்டே மழைக்கோட்டை அணிந்து ‘ஆபீஸ்’ கிளம்புகிற ஒருத்தர் இந்தத் தெருவில் இல்லாமலா போவார்?

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மழையின் ஒரே ஒரு துளி, சுமக்க முடியாத மிகப் பெரும் பாரம் போல, ஒரு ஈர இலை தன்னைத் தாழ்த்தி, மிகுந்த பிரயாசையுடன் அதன் நுனியில் ஏந்திக்கொண்டு, பாவலா பண்ணுவதை.

வெறித்து விட்டது மழை. வெறித்த பிறகு என்ன தோன்றும்? இன்னும் கொஞ்சம் பெய்துகொண்டு இருக்கக் கூடாதா என்றுதான்.


Wednesday, 6 November 2019

நாதக் குளத்தில் ஒரு நாபிக் கமலம்.










நான் அந்த நாகஸ்வரக் கலைஞர்களைப் படம் எடுக்கவில்லை.
எனக்குக் கைபேசியில் அல்லது டிஜிட்டல் காமெராக்களில் எடுக்க அதிக உந்துதல் வருவதில்லை. நாம் தீர்மானிக்கும் நமக்குப் பிரியமான வெளிச்சத்தை, நம் இடக் கண் சுருக்கலை அவை திருடிக்கொள்கின்றன.
ஒன்பதைக் க்ளிக் செய்து, ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில், நிராகரிப்பின் தலைகுனிவோடு மற்ற எட்டும் குப்பைக்கு நகர்வதன் வதை அது.
ஆனால் அவர்கள் வாசிப்பு அருமையாக இருந்தது. அது தஞ்சாவூர் வாசிப்பு. காவிரி ருசி.
எனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் இசையறிவு உடையவர்கள். எனக்கு இசை உணர்வு மட்டுமே. தங்கராஜுக்கு, நகலிசைக் கலைஞனுக்கு, வாழ்தல் இனிதெனும் பேரன்பனுக்கு எல்லாம் நுணுக்கம் தெரிந்த நிலை. மண்டபத்தின் மேலே இருந்து குதித்து, முங்கு நீச்சலில் போய், வட்டப்பாறை தொடுகிறவர்கள். நான் படித்துறையில் கால் தொங்கவிட்டுவிட்டு, ஆற்றைப் பார்க்கிறேன் என்று மீனை, அதன் நொடி நேர அரைவட்டத்தைப் பார்க்கிறவன்.
நான் நாகஸ்வர வாசிப்பை விட, தவில் இசையை, அதன் தாளக்கட்டுகள் எண் திசைகளிலும் சரம் தொடுப்பதை, நட்சரத்திரம் வெடித்து நட்சத்திரங்கள் சொரிவதை, மின்னல் கீற்றில் அண்ட பேரண்டம் ஒரு பூ மலர்த்திப் பூ உதிர்ப்பதை, தீ எழுப்பித் தீ அணைப்பதை உணர்ந்துகொண்டே இருந்தேன்.
எதிரே இருந்த இளைய தவில் கலைஞரை விட, முகமே தெரியாத ஒரு கோணத்திலிருந்து வாசித்த மூத்தவரின் விரல்களில் அவருடைய மொத்த வாழ்வின் சாதகமும் நோன்பும் உச்சத்திலிருந்து உச்சத்தின் பெருவெடிப்புக்குத் தாவித் தன்னை அழிக்கும் சன்னதம் அல்லது சன்னிதி.
இன்னும் என் அடிவயிற்றில் அதிர்கிறது அந்தத் தவிலிசை. நாதக் குளத்தில் மலர்கிறது ஒரு நாபிக்கமலம்.

*
முக நூல் - 07.11.2018

குளம்









அவ்வளவு பெரிய தவளையை
இதற்கு முன் பார்த்ததில்லை
அதுவும் மயானத்தில்
ஓட்டை ப்ளேட்தாத்தா வாழ்வில்
எந்தக் குறைவும் இல்லை.
ஆண்டு அனுபவித்துத்தான் போனார்.
எதையும் திருப்பித் திருப்பிச் சொல்வதால்
ஆச்சி வைத்த செல்லப் பெயர் அது.
சிதைக்குத் தீ மூட்டின பிறகு
தென்பக்கத்துக் கல் தூண் பக்கம்
அது அசையாமல் இருந்தது.
கீழ்த் தாடை விம்மித் தளரும்
ஒரு வழவழப்பான துக்கமாக.
நீ எங்கே இங்கே வந்து உட்கார்ந்திருக்கே?’
தோள்த் துண்டை மடித்து வீசின
சீரங்கம் பெரியப்பாவை
அது பாட்டில இருந்துட்டுப் போகட்டும்
தோளில் கைவைத்துச் சொன்னது
செங்குளத்து ரெங்கம்மாச்சி வீட்டுத் தாத்தா.
எனக்கு மங்கலாக ஞாபகம் வருகிறது
ரெங்கம்மாச்சி குளத்தில் கல்லைக் கட்டித்
தாழ்த்திச் செத்துப் போனது
ஓட்டைப் ப்ளேட் தாத்தா நான்கு நாட்கள்
சாப்பிடாமல் கிடந்தது எல்லாம்.