நேற்றுக் கூடத் தென்காசியில் சாரல் விழுந்து கொண்டு இருந்தது. ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தோம். கோமா வீட்டில்தான் தங்கல். கோமா என் அலுவலக சகா. அதை விடவும் அருமையான சினேகிதர். இரண்டு மகன்கள் , மருமகள்கள், பேரக் குழந்தைகள் என்று, நான் சமீபத்தில் பார்க்க முடிகிற சந்தோஷமும் நிறைவும் மிகுந்த கூட்டுக் குடும்பம்.
கோமாவின் நகைச் சுவை அவர் பையன்களிடமும் உண்டு. கோமாவின் கலகலப்பு அவர் மருமகள்களிடமும் எப்போதும். அவர் பேரன் பேத்திகள் அவரிடம் காட்டும் பிரியத்தை எங்களிடமும் காட்டும்.
பொதுவாக அதிகம் பேசாத என்னை அவர்களின் மற்றும் அந்த வீட்டின் இதம் சற்றுக் கூடுதலாகப் பேச வைக்கும். சிரிக்க வைக்கும். நாதஸ்வரத்தில் மூத்த கலைஞர் வாசிப்பதை, அவர் துணைக் கலைஞர் ‘வாங்கி’ வாசிப்பது போல, அவர்கள் சொல்லும் நகைச்சுவையின் அதே இழைகளில் நானும் அதே குரலில் திருப்பிச் சொன்னவை ஒரு நல்ல அலையை நேற்று எங்களுக்குள் உண்டாக்கியிருந்தன. நான் அதிகம் பேசினேன். அதிகம் சிரித்தேன்.
ஊர் திரும்ப வந்துகொண்டிருந்தோம். பேருந்து நிலையத்தில் எங்களைத் தன்னுடைய வாகனத்தில் விட்டுவிட்டு வர, அவர் தன் பையனையே அனுப்பியிருந்தார். அவனுடனும், காரை விட்டு இறங்கும் வரை நான் சிரித்துக்கொண்டும்,அவனைச் சிரிக்க வைத்துக்கொண்டும் வந்தேன். எனக்கே நான் வேறு விதமாக இருந்தேன். என்னைப் புதிதாகக் கண்டுபிடித்தது போலவும் இருந்தது. அதிகம் பேசாத என்னை விட, இப்படிச் சற்று அதிகம் பேசும் என்னைப் பிடித்திருந்தது.
பேருந்து நிலையத்தின் பக்கம் போக்குவரத்து அதிகம். ஒரு வளைவு. திரும்புவதற்காக நிறைய வாகனங்கள். நாங்கள் சற்று முன்னால் இறங்கிக் கொண்டோம். கதவை மூடுகிறவரை நான் அதிகம் பேசுகிறவனாக இருக்கும் சந்தோஷம். கையில் இருக்கும் கல்யாண வீட்டுத் தாம்பூலைப் பையைப் பார்த்தால் கூடச் சந்தோஷமாக இருந்தது. அதனுள் உருளும் தேங்காயுடன் கூட என்னால் பேசமுடியும் போல இருந்தது.
அப்போதுதான் எங்களுக்கு முன்னால் உறுமிக்கொண்டு நின்ற அந்த ஷேர் ஆட்டோவைப் பார்த்தேன். எந்த ஷேர் ஆட்டோவில் குறைவாக ஆள் ஏற்றுவார்கள்? வழிய வழிய உள் இருக்கைகள் போக , வெளிப்பக்கமாகவும் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஆணும் பெண்ணுமாக உட்கார்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டு இருந்தார்கள். முதலில் இறங்கியவர் அடுத்தவரை இறங்கச் சொல்லிக்கொண்டு இருந்தார். அடுத்து இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள். அவர்கள் இறங்கினார்கள். அப்படி அடுத்தடுத்து பத்துப் பன்னிரண்டு பேர். ஒரு ஷேர் ஆட்டோவில் இருந்து குற்றாலம் போய்விட்டு தென்காசி பஸ் ஸ்டாண்டில் இப்படி இறங்குவது புதிய காட்சியே அல்ல.
அவர்கள் சைகைகளில் பேசினார்கள், சைகைகளில் சிரித்தார்கள், சைகைகளில் ஓரமாக வந்து நிற்கச் சொன்னார்கள். பைகளை எடுத்தாகிவிட்டதா என்று சைகைகளில் கேட்டுக்கொண்டார்கள். யாரையோ தேடி, அவர் இறங்கிவிட்டாரா என, சைகையால் கேட்டு உறுதி செய்துகொண்டார்கள். பக்கத்தில்தான் பேருந்து நிலையம் என ஒருவருக்கொருவர் சைகையால் தெரிவித்துக்கொண்டார்கள். தேநீரருந்தலாமா, யாருக்காவது வேண்டுமாக எனச் சைகையால் கேட்டுக்கொண்டார்கள். நான் நானாக நினைத்துக்கொள்கிறேன். அந்தப் பெண்களில் யாராவது ஒருவர், செண்பகப் பூ கிடைக்குமா எனச் சைகையில் கேட்டிருப்பார் என.
சட்டென்று எனக்குள் எல்லாம் வடிந்து போயிற்று. நான் சற்று அதிகம் பேசுகிறவனாக வடிவெடுத்து இருந்ததில் இதற்கு முந்திய கணம் வரை அடைந்திருந்த அத்தனை சந்தோஷமும் காணாமல் போயிற்று.
அவர்களையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்களை விட ஒன்றும் நான் அதிகம் பேசிவிட முடியாது.அவசியமும் இல்லை. ஒரு அருவியை அவர்களால் மட்டுமே சரியாக வர்ணிக்க முடியும். விழுகிற சாரலை அவர்களின் சைகைகள் உச்சரிப்பது போல ஒருபோதும் என் எச்சில் செய்துவிடாது.
ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நான் என் கைகளையும் விரல்களையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவற்றின் பேச்சை அவை துவங்கியிருந்தன.

No comments:
Post a Comment