Friday, 6 September 2013

முக நக - 18.









அதே சூரியன் தான். அதே வானம் தான். ஆனால் ஏப்ரல் மாதச் சூரியன் தன்னை உருப்பெருக்கிக்கொண்டு வேகமாகச் சுழன்று தன்னை ஒரு ஆம்புலன்ஸ் அவசரத்துடன் வானத்தில் இருந்து கிழித்துக்கொண்டு வெளியேறுகிறது போல இருக்கிறது. மேற்குப் பக்க வானம் தன் மேகங்களை வேறுவிதமாக வடிவமைப்பதைத் தொடங்கிவிட்டது. கோடை காலத்திற்கான தன்னுடைய பருத்தி ஆடைகளை அது உலர்த்துகிறது, முக்கியமாக மாலை நேரங்களில்.
மைதானம் முழுவதும் அக்டோபர் நவம்பர் மழையில் முளைத்துக் கிடந்த அத்தனை புல்லும் காய்ந்துவிட்டன. புல்லின் இதழ்கள் எத்தனை அழகோ புல்லின் பூக்களும் அத்தனை அழகு. திட்டுத் திட்டாக நாணல் பூப்பதைப் பார்த்திருப்போம். தரையோடு தரையாகப் பூத்துக் காய்ந்து அவை உதய வெயிலில் மினுங்குவதை நடக்கிறவர்களில் எத்தனை பேர் குனிந்து பார்த்திருப்பார்கள். ஒரு பசும் புல் செய்கிற அத்தனை காரியத்தையும் காய்ந்து மினுங்கும் புல்லும் செய்து கொண்டே இருக்கிறது. சிறு பறவைகளுக்கு காய்ந்த புற்கள் எதையோ உண்ணத் தருகின்றன. அல்லது அவை முட்டையிட்டு இனம் பெருக்க இந்தக் காய்ந்த புற்கள் மெத்தையிடுகின்றன. சொந்தவீட்டில் புழங்குவது போன்ற துள்ளலுடன் சிறுபறவைகள் நரைத்த புற்களுக்குள் தத்துவதை, மீன் தொட்டி பார்த்து அசையாது அமர்ந்திருக்கும் சிறுவனாக, அங்கங்கே பூத்துக்கிடக்கும் அவுரியின் மஞ்சள் பூக்களிடம் தன்னை ஒப்படைத்துவிட்ட வெயில் பார்த்து ரசிக்கிறது.
இது போன்ற ஏழெட்டு வருடங்களுக்கு முந்திய கோடையில்தான் பாண்டியராஜுவும் நானும் இதே பகுதியில் நடந்துகொண்டு இருந்தோம். வீட்டில் இருந்து பேசுவதை விடப் பாண்டிய ராஜுவுக்கு நடந்துகொண்டே பேசுவது பிடிக்கும். நீண்ட காலமாக கோடம்பாக்கத்தின் திசையில் ஒரு புள்ளியைத் தேடி அலைந்துகொண்டே இருக்கிற கால்கள் தன் சலனத்தை நிறுத்த விரும்புவது இல்லை. ஏதோ ஒரு கொரியத் திரைப்படம், ஈரான் திரைப்படம் பற்றித்தான் என்னிடம் பேசிக்கொண்டு வந்திருப்பார். இதே போலக் காய்ந்த புற்கள் மினுங்கும் ஒரு மாலைப் பொழுதுதான் அதுவும்.
ஒரு மா நகரம் அல்லது திரைப்பட்த்தின் திசை சார்ந்து அலைந்துதிரிகிற வாழ்வு ஒருவனுடைய கவனத்தைச் சகல திசையிலும் கூர்மைப்படுத்திவிடும் போல. அவர் கதை சொல்கிறார். ஒரு மன நிலை தவறிய ஒருவனைப் பற்றிய அந்தக் கதையை, கிட்டத்தட்ட ஒரு மனநில தவறியவனின் உடல்மொழியோடு சொல்லிக்கொண்டு வருகிறார். பாண்டிய ராஜு எனும் ஒருவன் தொலைந்து காணாமல் போய் ஒரு மனநிலை பிறழ்ந்தவனுடன் மட்டுமே நான் நடந்துகொண்டு இருந்தேன். சட்டென்று அவர் பாண்டிய ராஜு ஆகிறார். என்னை நிற்கச் சொல்கிறார். அப்படியே நில்லுங்க என்கிறார். நிற்கிறேன்.ஒண்ணுமில்ல, சின்னப் பூச்சி போய்க்கிட்டு இருந்ததுஎன்கிறார். கீழே பார்க்கிறேன், ஒரு சிறு பாம்புக்குட்டி நான் இதற்கு முன்பு வைத்திருக்கவேண்டிய காலடிக்குள் இருந்து காய்ந்த புற்களுக்குள் போய்க் கொண்டு இருந்தது.
அன்றிரவு மழை பெய்ததா என்று ஞாபகம் இல்லை. அந்தக் கதையை அன்று இரவே எழுதினேனா என்றும் சொல்லமுடியவில்லை. ஆனால் பெய்தலும் ஓய்தலும்என்கிற அந்தக் கதையில் ஒரு மன நிலை தவறிய மனிதர் வந்து அமர்ந்திருந்தார். காய்ந்த புல்லும் அந்த சின்னப் பூச்சியும் எங்கே போயிருக்கும் எனத் தெரியவில்லை.
இந்த காய்ந்த புற்களையும் கோடையையும் பார்க்கையில் நான் பாண்டிய ராஜுவைத் தேடுகிறேன். இத்தனை நீண்ட காலத்திற்கு அப்புறமும் பாண்டிய ராஜு என்னிடம் இன்னும் ஒரு கதையைச் சொல்லக் கூடியவராகவே தான் கோடம்பாக்கம் வைத்திருக்கிறது. அவரை நிற்கச் சொன்னாலும் நிற்க மாட்டார்.
அவர் இதைவிடக் காய்ந்த புற்களையும் இதைவிடப் பெரிய பூச்சிகளையும் பார்த்திருக்கக் கூடும்.

1 comment:

  1. Pandiarajuvum,...neengalum..oru nandhavanathil ula selvathu pondru netruthaan kanavu kanden...

    ReplyDelete