Friday, 6 September 2013

ஓர் ஒலி, ஓர் எதிரொலி.

மரபின் மைந்தன் முத்தையா
எனக்கு அனுப்பி வைத்த வாழ்த்துக் கவிதை.
_____________________________________________________________

மலருக்குள் குடியிருக்கும் மகரந்தங்கள் 
மென்காற்றின் முதுகேறிப் போகும் காட்சி
சிலருக்கே புலப்படுமாம் !அவர்களுக்குள்
சித்திரமாய் அதைத்தீட்டும் சிந்தைச் சீர்மை 
சிலசிலர்க்கே சாத்தியமாம்!சிலசிலர்க்குள்
சிறுவரியில் ஒளிமின்னல் சேர்க்கும் சீலம்
நலமுடனே வாய்த்திருக்கும் நுட்பம் கொண்ட
நவகவிதான் எங்களது வண்ணதாசன்

பேரிகையாய் ஆர்ப்பரிக்கப் பிரியமின்றி
பேச்சரவம் தாங்காத அனிச்சப்பூவாய்
தாரகையின் மினுக்கமென ஒளிர்ந்திருக்கும்
தூயகுணம் கொண்டவராம்! ஓவியன்கைத்
தூரிகையின் ஒற்றையிழை மென்மை கொண்டு
துல்லியமாய் வாழ்வினிலே வண்ணம் சேர்க்கும்
சீருடைய கல்யாண்ஜி பலகாலங்கள்
சீர்செல்வம் மனநிறைவில் சிறந்து வாழ்க

பொங்கிவரும் இருளிரவைக் கடைக்கண் பார்த்து
பௌர்ணமியைப் பரிசளித்த பெரிய தேவி
எங்களன்னை அபிராமி அருள்மழைக்குள்
எழிலான மூலிகையாய் இலங்கி வாழ்க
தங்கமனம் பொலிவுறவே நலன்கள் சூழ்க
தடைகாணாத் தென்றலெனத் திகழ்ந்து வாழ்க
எங்கெங்கும் வீசுகிற சாரல் போன்ற
எழுத்தெழுதி என்றென்றும் இதமாய் வாழ்க
*
அவருக்குச் சற்று முன் நான் அனுப்பிய
என்னுடைய நன்றிக் கவிதை.
__________________________________________________________

சிலருக்குள் பலர்கண்டு வாழும் வாழ்க்கை
சிற்றிறகில் பறவையினைக் காணும் உள்ளம்
இலருக்கும் உளருக்கும் நடுவில் நின்று
இல்லதனை உள்ளதனைத் தெளியும் தேற்றம்
மலர்நீட்டம் வெள்ளத்தின் நீட்டம் என்றே
மனநீட்டம் காணுகிற நீர்மை , இன்று
புலர்கின்ற பொழுதுக்கு ஏற்ப என்னைப்
புதுப்பித்து வருகின்றேன் அறுபத்தேழில்.

நரை தெரியும் திரை தெரியும் இன்னும் சற்று
நடந்து செலின் சிதை எரியும், தெரியும் நன்றாய்.
கரை தெரியும் நதி தெரியும், கரையோரத்தைக்
கடந்துசெலின் கடல்விரியும், தெரியும் என்றோ.
விரை தெரியும் சுரை தெரியும், எங்கே எஃதை
விதைப்பதென அறுப்பதெனத் தெரியும் கொஞ்சம்.
குறைதெரியும் நிறைதெரியும், குறை குறைத்து
கூட்டுகிறேன் நல் நிறைவை அறுபத்தேழில்.

தோட்டத்தின் வெளியேதான் பூத்தேன், எங்கோ
தொலைவில்தான் புணர்ந்தது என் இருப்புப் பாதை.
ஆட்டத்துத் திடலுக்கு வெளிய மர்ந்து
அருகம்புல் கடித்தபடி ஆட்டம் பார்க்கும்
கூட்டத்தில் தனியன் நான், உம்மைப் போலக்
கொண்டாடச் சிலபேர்கள் இருப்பதாலே
ஓட்டத்தை முடிக்காமல் விதியின் தேரை
உருட்டுகிறேன் வீதியிதாம் அறுபத்தேழில்.

நானுமக்குச் செய்ததென ஒன்றும் இல்லை
நலமெனக்கோ உம்வழியாய் மிக்க நன்றாம்
வானுமக்கு , நான் மேகம், வந்து போவேன்
வரவெனக்கு செலவுமக்கு, நேற்றும் இன்றும்
தேனுவக்கும் நறுஞானப் பாலை வார்க்கும்
திருமுலையாள் அபிராமி கடைக்கண் வைக்கும்
ஊன் உமக்கு, உயிர் உமக்கு, உந்தன் நட்பால்
ஒளிதேறிக் களிகூர்ந்தேன் அறுபத்தேழில்.

No comments:

Post a Comment