நான் விதைக்கவே இல்லை. என் மீது முளைத்திருக்கின்றன எல்லாமும்.
* நினைவுகளின் டிஸம்பர் பனி. சொப்பனங்களின் போர்வையால் மூடமுடியவில்லை நடுங்கும் காயங்களை. * என் கையில் எடுத்தேன் அதை. எடுப்பதற்கு முன் அது சௌரஸ்யாவின் புல்லாங்குழலாக இருந்தது. இசை பூத்திருந்தது இரண்டுக்குமான இடைவெளியில். * கோரைப்பற்களுடன் பாய்ந்து வந்தது. கோரைப்பற்களுடன்
பாய்ந்துசென்றுவிட்டது. நான் இங்கேயேதான்
நின்றுகொண்டிருக்கிறேன் எந்தக் கீறலும் இன்றி. * அந்த நிலையத்தில் ஏறி இந்த நிலையத்தில் இறங்கினேன். எந்த நிலையத்தை விட்டும் எங்கோ தூரத்தில் இருந்தது வீடு. * மணலைத் துடைத்துவிட்ட பின் கடல் ஒட்டிக்கொண்டிருந்தது அலை நுரைக்கிற முத்தத்தில். * தோட்டத்தில் பிடித்த வண்ணத்துப்
பூச்சி. என் மேல் பறக்கவிட்டுப் பார்த்தேன். செடியின் சிரிப்புச் சத்தம் வெளியே. * மூங்கில் கழி மேல் ஏறிப் போகிறேன். பீர்க்கம் பூவில் அவள்
படுத்திருக்கிறாள். * ஒற்றைப் புறாச் சிறகு. குனிந்து எடுத்தேன். வானிலிருந்து பார்க்க அழகாக இருந்தது எங்கள் வீடு. * பேரங்காடிக் கண்ணாடிக் கதவுக்கு வெளியே நிறைய காலணிகள். அவளுடையதைப் போலவே இருந்தன அவளைப் போல இல்லாத ஒருத்தியின் இரண்டு. * இந்த வரிகளை எல்லாம், 24.12.10 ல் எழுதியிருக்கிறேன். இவற்றில் இரண்டோ மூன்றோ கவிஞர் அறிவுமதியின் ’தை’ இதழில் வெளிவந்த நினைவு. நான் எதையும் குறித்துவைக்கிற.
கோப்பில் சேர்க்கிற பழக்கம் இல்லாதவன்.
No comments:
Post a Comment