முக நக - 8.
13.
அந்தத் தெருப்பக்கம் போய் அதிக காலம் ஆயிற்று.
எப்போதும் ஒரு அரசு வாகனம் காத்துக் கிடக்கும் அந்த வீட்டை
எல்லோர்க்கும் தெரியும். சொந்த வீடு. மாடியும் கீழுமாகப் பெரியது. அவ்வளவு பெரிய
வீட்டில் முன்னால் பின்னால் எந்த மரமும் கிடையாது. ஒரு செடிகொடி இல்லை. புல்
பூண்டு முளைத்தால் கூடக் கருகிப் போய்விடும் ஒரு பாழ்மை. உட்காரக் கிளையின்றி,
காகம் மேல்நிலைத் தொட்டியில் இருந்துதான் கத்த வேண்டும். வீடு தன்
அத்தனை காயங்களையும் நக்கிக்கொண்டு வெயிலில்
படுத்திருக்கும்.
அதன் பிரசித்தம் சற்று உவர்ப்பானது.
வீட்டு அதிகாரி கொஞ்சம் அப்படி இப்படி. அந்த ஊரில், இந்த
விடுதியில் என்று நிறையப் பேச்சு. இப்போது அவரிடம் அடி உதை படுவது அவருடைய
இரண்டாம் தாரம் என்கிறார்கள். ஒரு வதைபடும் மிருகம் போல அந்தப் பெண் அலறும்.
உடுத்தின உடையோடு ரத்தக் காயத்தோடு தெருவில் ஓடும். முன் பல் தானாக உடைந்திருக்க
வாய்ப்பில்லை. மூன்று பிள்ளைகளோடு காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறது. ஒரு
தடவை மருந்தைக் குடித்திருக்கிறது. அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
வீட்டில் என்ன நடந்தாலும் யாருக்கும்
தெரியாது. தெரிந்தாலும் அவருக்குக் கவலையில்லை. சஃபாரி அணிந்து அலுங்காமல் அலுவலக
வாகனத்தில் போவார், வருவார். வேலையில் கெட்டிக்காரர்.
துறையில் பெயரும் செல்வாக்கும் அதிகம். மாலையும் சால்வையும் பூச்செண்டுமாக
பெட்டியைத் தூக்கிக்கொண்டு வாகன ஓட்டுநர் பின்னால் போவதை அவ்வப்போது பார்க்க
முடியும். அந்த மாலையைத் தூக்கி எறிந்திருந்தால் கூட நான்கைந்து வாடாமல்லி,
இரண்டு கேந்தி என்று தானாக முளைத்திருக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று போகும்
போது அந்த ஆச்சரியம் நிகழ்ந்திருந்தது . வாசலில் பாத்தி போல நித்யகல்யாணிப்
பூக்கள். சுற்றுச் சுவருக்கு வெளியே அசைந்து தெரியும் கட்டிகட்டியான கேந்திப்
பூக்கள். மாடிக் கதவு திறந்திருந்த்து. வெளிப்பக்கம் உலரும் துணிகள். அசையும்
நைலான் கொடி. நான்காவது படியில் ஒரு பூனைக்குட்டி. மீண்டும் பூஞ்செடிகளைப்
பார்த்தேன். முதல் தலைமுறைத் தாவரம் என்று பூக்களில் எழுதப்பட்டிருந்தது .
சில சமயங்களில் எளிதில் விடை
கிடைத்துவிடுகின்றன. கூரியர் கொடுப்பவர் அந்த வீட்டின் முன் சைக்கிளை
நிறுத்தினார். எல்லாத் தகவல்களும் அவருடையவை. மாடியில் இருப்பது அந்த அதிகாரியின்
தங்கை. டீச்சர் வேலை. சொற்ப வயதில் சமீபத்தில் கணவர் இறந்து போனார். ‘சார் இன்ஃபுளுயன்ஸில் தங்கச்சிக்கு இங்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கி தன் வீட்டு
மாடியிலயே குடிவச்சுட்டார். பார்த்தாலேயே தெரியுமே. முன்னால பூஞ்செடி அது இதுண்ணு.
எல்லாம் அந்த அம்மா வச்சதுதான். விடிஞ்சதும் இந்தப் பக்கம் நீங்க வந்தா பாக்கலாம்.
ஒண்ணு விடாம எல்லாத்துக்கும் தண்ணி ஊத்திக்கிட்டு இருப்பாங்க’.
நான் தண்ணீர் வார்க்கிற மாடி வீட்டுப்
பெண்ணைக் கற்பனை செய்துகொண்டேன். கூடவே செடிகளோடு செடிகளாக அந்தக் கீழ் வீட்டுப்
பெண்ணின் முகத்தையும், அதில் இனிமேல் வந்து சேரப் போகும்
சிரிப்பையும்.
உடைந்த பல்லோடு சிரிக்கக் கூடாது என்று
யார் சொன்னார்கள்?
இது மீள் பதிவுதானே?
ReplyDeleteஎன்மனதில் அப்படியே இருக்கிறது
நான் அன்றே படித்த தடம்.
நானும் ஒருமுறை உடைந்த பல்லோடு சிரித்துக்கொள்கிறேன்
ReplyDeleteகல்யாணி அண்ணாச்சி