Sunday, 4 August 2013

ஆத்ய திதியும் ஆனந்த பரமனும்..






'ஆள் கூட்டத்தில் தனியே ‘ என்ற தொடரை எழுத்துக்கு எழுத்து உணர்ந்தது பரமனின் மறைவுக்குப் பின்னர்தான். ஒரு வருடம் ஆகப் போகிறது, ஆகஸ்ட் 8/9 வந்தால். பாபநாசத்தில் ஆட்டத் திதி . கோவிலுக்குப் பின்னால் தென் பக்கம் ஒரு ஆற்றோரக் கல் மண்டபத்தில் சாஸ்திரபூர்வமாக எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறது. புகைப்படத்தில் பரமன் .வரிசையாக பக்கத்துப் புகைப்படங்களாக, பரமனின் அப்பா, அம்மா, மாமா, அத்தை எல்லோரும். உடன் வாழ்ந்தவர்களை, இப்படிச் சட்டமிட்ட, குங்குமம் வைத்த புகைப்படங்களாகப் பார்க்கவே கூடாது. மாணிக்கவாசகத்தின், கணபதி அண்ணனின் படமுகங்கள் போல, பரமனும் இதற்கு முன் சொல்லாததை எல்லாம் என்னிடம் சொல்லிக்கொண்டு இருந்தான். நான் ஆற்றையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

தலைக் காவேரி போல, தலைப் பொருநை அது. பொதிகை மலையில் இருந்து இறங்கி தாமிரபரணி அங்கிருந்துதான் பொங்கிச் சுழித்துப் புறப்படுகிறது. அறுபது வருடங்களுக்கு முன்பு கோவில் படித்துறையில் புரண்டு துள்ளிய மீன்களை இந்த தினத்தில் நான் தேடிக்கொண்டு இருந்தேன். பாறையும் சுழிப்புமாக மீனற்ற நதி தெளிந்தோடிக்கொண்டு இருந்தது. துக்கம் அல்லது இறுக்கத்தின் போது எனக்கு எதிரே இப்படி ஒரு பிரவாகம் பார்க்கக் கிடைத்தது பெறும் ஆறுதல். தண்ணீர் என்னை அழைத்துக்கொண்டு இருந்தது.என் போல, நீச்சல் தெரியாதவர்களை அது அதிகம் அழைக்கும் போலும்.

அதற்கு முன்பும், அப்போதும் அந்த இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் குளித்துவிட்டுப் போனார்கள். ஒரு முதிர்ந்த ஆச்சி பச்சைக் கோப்பையால் கோதிக் கோதிக் குளித்துவிட்டுப் போனாள். குரங்கு விரட்டுவதற்குப் போட்ட வெடிச் சத்தத்திற்குப் பயந்து, உயர்த்தின பச்சைக் கோப்பை தலைக்கு மேல் அப்படியே நிற்க, பயம் கலைந்து அவர் சிரித்த சிரிப்பை நானும் ஆறும் பார்த்தோம்.

இப்போதுதான் அது நிகழ்கிறது. எப்போது நிகழ்ந்தது என நாம் அறியாதே நமக்கு முன் ஒன்று நிகழுமே அப்படி. அந்த இளைஞன் என் பார்வையை மீறிஎப்போது ஆற்றுக்குள் இறங்கினான் எனத் தெரியவில்லை. கருப்புத் தலைப்பிரட்டை போல நீரிடை நீந்திக் கொண்டிருந்த மாயமீன் ஒன்று பேருருக்கொண்டு அவனாகத் திரண்டுவிட்டிருந்தது. இருபது இருபத்திரண்டு வயது இருக்கலாம். அப்படி ஒரு வாகாக இடுப்பில் இருந்து ஒரு வனமரம் போல மார்பு விரிந்து தோள் அகன்று கிளை கிளையாகப் புடைத்திருந்தது. ஆழமே அற்றது போலவும், ஆழங்கள் ஒரு பொருட்டல்ல என்பதாகவும் இப்படி ஒரு ஆழமும் வேகமும் அவனுக்குத் தேவைப்பட்டதாகவும் அவன் நீரில் அமிழ்ந்து அமிழ்ந்து, குடைந்து குடைந்து, திளைத்துத் திளைத்து, தாமிரபரணியின் ஒரே மீன் போல நீந்திக்கொண்டு இருந்தான். வாய்கொப்பளிப்பில் வானவில். காலடிப்பில் நீர் உடைந்து தெறிக்கும் கண்ணாடிப் பாளம். ஒரு ஈரமான இசை போல அவனுடைய முதுகுப் பள்ளத்தில் வழியும் நீர். சுதந்திரம், ஆனந்தம் என எந்தச் சொல்லாகவும் அவனை வர்ணிக்கலாம். விட்டு விடுதலையாதல் எனின் அந் நிலையே.
இரண்டு கைகளாலும் நீரை அள்ளி வெயிலைப் பார்க்க வீசி அர்ப்பணித்துவிட்டு அவன் சிரித்த சிரிப்பு, அடுத்த கணம் அப்படியே நதியில் மிதந்து செம்பருத்தியாகவும் செவ்வரளியாகவும் போய்க் கொண்டிருந்தது.

சங்கும் சேகண்டியும் ஒலிக்கிற சப்தம். பதினோரு சன்னியாசிகளில் யாரோ ஒருவர் விம்மிவிம்மிச் சங்கொலிக்கிறார். யார் கைச் சேகண்டியோ அதிர்ந்து அதிர்ந்து சிலிர்க்க வைக்கிறது. அந்த ஆத்ய திதி நேரம் கூடித் திரண்டு விட்டது. நான் பரமனின் முகத்தைப் பார்க்க விரும்பினேன்.

ஆற்றைப் பார்த்தேன். அந்த ஆனந்த இளைஞனைப் பார்த்தேன். இதுவரை யாரையும் பார்க்காது ஆறோடு ஆறாக இருந்த அவன் என்னைப் பார்த்தான். ஒரு மின்னல் பொழுது என்னைப் பார்த்துச் சிரித்தான்.

அச்சு அசல் அவன் முகமும் சிரிப்பும் பரமன் போலவே இருந்தது.

2 comments:

  1. சட்டத்தில் இருப்பவனை இப்படி இழுத்துவந்து
    இளைஞனாக்கி ஆற்றுக்குள் பாய்ச்சியது உங்கள் எண்ணமும் எழுத்தும்.
    அவன் நீச்சலில் சிதறிய நீர்த்திவலைகள் எங்களின்
    கண்ணோரத்தில் இந்த கணநேரத்தில்.......அது உங்கள் எழுத்தால் மட்டுமே..

    ReplyDelete
  2. ஆடி அம்மாவாசை தருணத்தில்
    பரமனையும், பாபனாசத்தையும்
    உங்கள் வரிகளின் மூலம்
    கண்ணுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள் .
    லோகநாயகி சகாயம்

    ReplyDelete