Friday, 16 August 2013

முக நக - 7.










12.

எல்லோர்க்கும் தானே பெய்யும். பங்குனி மாத அதிகாலை என்றால் கூட. மழை வராது என்று நினைத்தேன். மழை வருவது போல இருக்கும் போது அப்படி நினைத்துக் கொள்வது புதியதில்லை. சென்ற வாரம் அப்படி நினைத்து, நடை போய், முற்றிலும் நனைந்திருந்தேன்.
வகுப்பறைகளில் இருந்து, ஓடும் ரயிலில் இருந்து, மருத்துவ மனை தாழ்வாரங்களில் இருந்து, திரைப்பட அரங்குகளில் இருந்து பார்த்த மழை போல, கட்டுமானம் ஆகிக்கொண்டு இருக்கும் நல் மேய்ப்பர் ஆலயத்தின் பூசப்படாத சுவர்களுக்குள் இருந்து பார்த்த மழை அது. இன்று மீண்டும் நனைய விரும்பவில்லை.
வீட்டுக்குத் திரும்புங்கள் என்பது போல, நரைத்த மீசை ஒதுங்க என்னைப் பார்த்த அவரிடம் முந்திய இரவுக் காவல் மிச்சம் இருந்தது. தோல்பட்டியைப் பிடித்துக்கொண்டு நின்றார். கனத்த உடலுடன் தரை முகர்ந்து ஒரு ஓநாய் போல தன்னுடைய இடத்தை அது தேர்ந்தெடுத்தது. அவருடைய காக்கிச் சட்டையில் மழைத்துளிகள் கனத்து ரவைகள் போலப் பாய்ந்தன. அவர் தெற்குப் பக்கம் கருத்த வானத்தைப் பார்த்தார். இப்போது அது பின்னங்கால்களில் தணிய அமர்ந்திருந்தது.
நான் அதிகம் நனையவில்லை. அடர்த்தி குறைந்துவிட்ட தலைமுடிக்குள் துளி உருண்டு நெற்றிக்கு இறங்கியது. நான் வீட்டில் அல்ல, மழையில் நுழைந்துகொண்டு இருந்தேன். மழை பார்த்தல் ஒரு அனுபவம். கனமழையின் ஆழ்ந்த ஆன்மீகம் தனியானது. மழை பார்க்க நீங்கள் துவங்கிய மறுகணம் மழை உங்களைத் தொலைத்துவிடும். காணாமல் போக்கிவிடும். நீங்கள் இல்லாமல் இருப்பீர்கள்.
முக்கால் மணி நேரம் மழை மட்டும் இருந்தது. ஓயவில்லை. முதலில் நனைந்த தெருவில், தன்னை விதைத்துக்கொண்டவள் கீரை விற்கிற கணவதி. அவளுடைய அறுபது சொச்சம் வயதும் கீரையுடன் நனைந்திருந்தது. அடுத்து சத்தம் கொடுத்து இரும்புக் கதவு வழி, பால் பைகளை நீட்டியவர் மணி. அவருடைய வலது காலில் இன்னும் கட்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட கால் பாதத்தை இழக்க வேண்டிய ஆபத்து இருந்தது. தப்பியிருந்தார். ஒரு பதினைந்து நிமிடங்களுக்குப் பின், நந்தியாவட்டையின் கீழே இருந்து, தன்னுடைய மூன்று சக்கர சைக்கிளை நிறுத்தி, தினசரிகளை என் பக்கமாக வீசிவிட்டு, ராஜா கைகளினால் பெடல் செய்தபடி, அடுத்த வாசலுக்கு நகர்கிறார்.
இதுவரை பார்த்துக் கொண்டிருந்த மழையை இனிமேலும் பார்க்க இயலாது.
எல்லோர்க்கும் எதற்குப் பெய்கிறது மழை?

No comments:

Post a Comment