முக நக - 11.
இன்று சிட்டுக் குருவிகள் தினமா?
காணாமல் போனவர்கள் அறிவிப்பு மாதிரி இருக்கிறது. இந்த தினத்தின்
ஞாபகம் எல்லாம் இல்லாமல் இன்று நான் ஏழு சகோதரிக் குருவிகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
அவை அடைக்கலாங் குருவிகள் எனும் இந்தச் சிட்டுக் குருவிகளின் பெரிய வடிவம்.
முன்பெல்லாம் இந்தப் பக்கத்தில் அதிகம் பார்க்க முடியும். தரையில் ஏழெட்டாகக்
குதித்துக் குதித்து இரை தேடும். பூனைகளுக்குப் பயந்து அவை இடும் கூட்டுக் குரலில் ஒரு தினத்தின் பிற்பகல் அமைதி நடுங்கும்.
அதிகம் உயரமற்ற வீட்டுச் செடிகளில், மரங்களில் உட்கார்ந்து சத்தமிடும். பறக்கும். ஒரு வீட்டின் முற்றத்தில்
பறவைகளுக்கான இடத்தை அவை தன் சிறகுகளால் கருணையுடன் நிரப்பும். நாம் மூச்சு
விடுகிற காற்றைத் தவிர, இப்படிச் சிறுபறவைகளின் குறுக்கே பறக்கும்
சிறகுகளால் வகிர்ந்து செல்லப்படும் காற்றின் நுட்பமான ஒரு ‘விர்ர்ர்ர்’
நமக்குத் தேவை. அதை அந்த ஏழு சகோதரிக் குருவிகள் எங்களுக்குச்
செய்தன.
அப்புறம் மைனாக்கள். ஒரு நாளை
மைனாக்களின் குரலைக் கொண்டு துவக்க எங்களால் முடிந்தது. எளிய வாழ்வின்
தாழ்வாரங்களில் எளிய பறவைகளின் நிபந்தனையற்ற குரல்கள் நிரம்பிவழிகின்றன.
நந்தியாவட்டை போன்ற, வாசனையற்ற வெண்பூக்கள் தவிர வேறு எந்தத்
தாவர வசீகரமும் அற்ற ஒரு குறு மரத்திற்கு அருளப்பட்டவை மைனாக்களும் கடுத்தான்
எறும்புகளும்தான். இந்தக் கடுத்தான் எறும்புகள், பனிவரைகளில்
சேகண்டி அடித்து வரிசையாகச் செல்லும் பிக்குகள் என, தன்
வாழ்வு தீரும் வரை நந்தியாவட்டையில் ஊர்ந்தபடி இருக்கின்றன. உங்களுக்குத் தூக்கம்
தப்பிய ஒரு பின்னிலவு நிசியில், உங்களின் தனிமையை வடித்துக்
கொள்ள, உங்களைத் தொந்தரவு எதுவும் செய்யாத உயிர்ப்புள்ள நகர்வு
எதுவும் அவசியப்பட்டால், நீங்கள் அவற்றை நம்பலாம். அவை அப்போதும்
வரிசை குலையாது ஏகிச் செல்லும்.
இப்போது சமீபமாக மைனாக்களும் அருகி
வருகின்றன. கண்ணில் படும் மைனாக்களிடமும் ஏதோ ஒரு ஊட்டச் சத்துக் குறைவு. அவற்றின்
கண்களில் காணாமல் போன மண்புழுக்களைப் பற்றிய ஏக்கம் உண்டு. இன்னும் சிறிது
காலத்தில், அதன் அலகு நுனி மஞ்சள் பொட்டும் உதிர்ந்து
போகுமெனில் எவ்வளவு துயரமானது. மைனாக்களின் சாயல் அற்ற மைனாக்களைப் பற்றிய முதல்
கவிதையை எழுதும் பேனா எனக்குக் கிடைத்துவிடக் கூடாது.
இப்போது ஒருவகைக் கருங்குருவிகள்
தென்படுகின்றன. தேன் சிட்டுகளை விடச் சற்றுப் பருமனானது. வாழ்வின் முழு ஆனந்தமும்
வசப்பட்ட அந்த ‘விட்டு விடுதலை’ அவற்றிடம்
இருக்கிறது. வால் நுனியை அவ்வப்போது உயரத் தூக்கித் தணிக்கின்றன. அதன் எடையின்
சமன், பறத்தலின் விசை அந்த வாலசைவில் இருக்கலாம். இந்தக்
கருப்பு உற்சாகம் நமக்கு இன்னும் எத்தனை தின்ங்களுக்கு எனத் தெரியவில்லை.
ஒரு வருட்த்தின் 365 தினங்களையும் நாம் 365 பறவைகளின் தினங்களாக அறிவிக்க
நேர்ந்துவிடக் கூடாது என்பதே என் சிட்டுக் குருவிகள் தினப் பிரார்த்தனையாக
இருக்கிறது. இது அப்படியொன்றும் எளிய பிரார்த்தனை அல்ல.
No comments:
Post a Comment