முக நக - 9.
14.
கோடை துவங்கிவிட்டது என நினைக்கிறேன். அந்தோணி
தென்படுகிறாள்.
அவளை அந்தோணி என்கிறார்கள். கிறுக்கி என்கிறார்கள். இல்லை
காரியக்காரி என்கிறார்கள். மூன்றாம் மனிதர், ஏன் இரண்டாம்
மனிதர்கள் கூட யார் என்று நிதானிக்க என்னால் இயலாது. யாராலும்தான். நான்
வேறுவிதமாக அவளை வரைந்திருக்கிறேன். அவள் வந்தால் கடும் கோடை அல்லது தண்ணீர்ப்
பஞ்சம் வரப் போகிறது. அதை முன்னுணர்த்துகிறவள் ஆகவே அவள் வெயில் காலங்களில்
நடமாடுவாள். பழுத்து உதிர்ந்த வேப்பிலைகளுக்கு ஊடாக
அவளுடைய ஒற்றையடி பாதையை இட்டுக் கொள்கிறாள். தண்ணீர் மட்டம் குறைந்துவிட்ட, மஞ்சணத்தியும் மருதாணியும் பூத்திருக்க்கிற
கல் வெட்டாங்குழியில் வாழும் நூற்றாண்டு ஆமை மேலேறி வந்து அவளுடன் பங்குனி
இரவுகளில் வாடத் துவங்கியிருக்கும் தும்பைச் செடிகளுக்கு இடையில் பேசுவதாக நான்
நம்புகிறேன்.
தண்ணீரில் குதித்தோ அல்லது தாகம் தீராது
தவித்தோ இறந்துபோன ஒருத்தியின் கண்கள் அவளிடம் உண்டு. அவள் எப்போதும் கைகளில்,
இடுப்பில் இரண்டு மூன்று ஜவுளிக்கடைப் பைகளை வைத்திருக்கிறாள்.
அதில் சிறியதும் பெரியதுமாக காலி தண்ணீர் பாட்டில்கள்,. யார்
வீட்டு வாசலிலும் வந்து அவள் கொடுப்பாள். நம்மைப் பார்த்துக் கும்பிடுவாள்.
பதிலுக்கு நாம் கும்பிட்டால், கூடாது என்பாள். நாம் கும்பிட்டதற்கு
அவள் மன்னிப்புக் கேட்பாள். பசிக்கிறது என்றோ சாப்பாடு வேண்டும் என்றோ கேட்டதில்லை.
குழாயில் தண்ணீர் பிடித்துக் கொள்கிறேன் என்பதே வேண்டுதல். நம் ஒப்புதலுக்கு நம்மை
வணங்குவாள். ஆற்றுத் தண்ணீரா உப்புத் தண்ணீரா என நம்மிடம் உறுதிசெய்து கொள்வாள்.
தன்னிடம் இருக்கும் அத்தனை பாட்டில்களையும் கழுவி, நிரப்பிப்
பைகளில் வைத்துக் கொள்வாள்.
வெயில் அதிகமாக அதிகமாக, இரண்டு மூன்று தடவைகள் கூடப் பிடித்துச் செல்வாள். வழியில் எங்காவது
எதிர்ப்பட்டால், அவ்வளவு பைகளையும் கீழே வைத்துவிட்டுக் கும்பிடுவாள்.
கோடைகாலம் முடிந்தால் கண்ணிலேயே பட மாட்டாள். ஒரு இரவு நம்மிடமிருந்து வெயிலை
உருவிக்கொள்வது போல அந்தோணியைக் காலம் உருவி அப்புறப்படுத்திவிடும்.
இன்று அந்த மாமரத்தடியில் அந்தோணியைப் பார்த்தேன்.
மேலே ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே நின்றாள்.ஒரு பத்து நிமிட தூரத்தில் நான் அவளைக்
கடக்கிறவரை அப்படியே பார்த்துக்கொண்டு நின்றாள். கழுத்து கூட வலியெடுத்திருக்கும்.
“என்ன அந்தோணி. மாங்கா பறிக்கப் போறியா?”
என்றேன். உதட்டில் கையை வைத்து என் பேச்சை அடக்கிவிட்டு, என்னையும் மேலே பார்க்கச் சொல்லித் திசையைக் காட்டினாள்.
முக்கு வீட்டு மா மரத்தில், இரண்டு ஜாண் நீளக் காம்பில் ஒரு மாம்பழம். தலை கீழாகக் காம்பில் தொங்கிக்
கொண்டு, ஒரு அணில் கடித்துக் கொண்டிருந்தது. கிட்டத் தட்ட
பாதி சாப்பிட்டுவிட்ட நிலை. அசையாமல் அந்தோணி மேலே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
அணில் கடித்துக்கொண்டிருப்பது கூட
திரண்டு வரும் கோடை காலத்தைத் தான் போல.
No comments:
Post a Comment