Thursday, 16 November 2017

வெயிலை வரைவதுஒரு சாப்பாட்டு மேஜையை வரைவது என்று தீர்மானித்தாயிற்று.
நான்கு மர நாற்காலிகளை வரைவது நான்கு காடுகளை வரைவது.
ஒரு காடு போதுமென ஒரே ஒரு மர நாற்காலி மட்டும்.
துணிச் சுருக்கங்களை வரையும் கை நேர்த்தி எனக்குக் குறைவு.
கற்பனையில் எட்டிப் பார்த்த பூப் போட்ட மேஜை விரிப்பைத்
தவிர்த்துவிட்டேன்.
கண்ணாடிப் பழ ஜாடிகளையும் திரட்சி மினுங்கும் ஆப்பிள்,
திராட்சைக்குலைகளையும் அப்புறப் படுத்தினேன்,
தினசரிப் பார்வையில் பதிந்த  அன்றாட ஏனங்கள், தட்டு, தம்ளர்,
கரண்டிகள் மட்டுமே.
செவ்வியல் ஓவியங்களில்  எப்போதும் சாப்பாட்டு மேஜையின்
கீழ் ஒரு பூனை உட்கார்ந்திருக்கும்.
அசையா ஒன்றை வரைகையில் அசையும் ஒன்று தரும்  சுரீரென்ற
உயிர்ப்புக்காக  அதையும் வரைந்தாயிற்று.
தூரிகை நுனிக்கு வர, இறுதிவரத் தன்னை  அனுமதிக்க மறுத்தது
பக்கவாட்டிலிருந்து சாய்ந்து
மேஜையில் இடது ஓரம் விழுந்து மஞ்சள் திரவமாக மடிந்து கீழே
வழிந்துகொண்டு இருந்த வெயில் தான்.
ஒப்புக் கொள்கிறேன், வெயிலை வரைவது என்பது வெயிலிடம்
தோற்பதே.

Monday, 13 November 2017

தானியப் பறவைகள்.இந்த வீட்டிற்கு வந்த இரண்டாம் நாள் அந்தச் சிறுபறவை
(கடைசி வரி வரை அதைச் சிறு பறவை என்றே வைத்துக் கொள்வோம்).
பூந்தொட்டி விளிம்பில் உட்கார்ந்திருந்தது.
தேவைக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்தது போல்
கண்ணை மூடியே இருந்தது.
பகலைப் பார்ப்பதில்லை என்ற அதன் வைராக்கியத்திற்குக்
காரணங்கள் இருக்கலாம்.
கிட்டத் தட்ட அதன் அலகுக்கு எட்டும் நெருக்கத்தில்
இந்த வீட்டின் மிக இளைய நபர்  வைத்த சிறுதானியங்களை
மிக உறுதியாக அது அலட்சியப்படுத்தியது.
அவனுடைய இரவு வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
காலை வணக்கமும் தெரிவிக்காமல் பறந்துபோயிருந்தது.
முற்றிலும் அது வந்து போனதை மறந்து போகும் படி
சதா ஒரு மழையிருட்டில் நாட்கள் இருந்தன.
இன்றைய சன்னல் திறப்பில்  உள்நுழைந்த குளிர்வெயிலில்
 தொட்டிச் செடி ஒருமுழு நீள இலையை
இடுப்பிலிருந்து உருவி வீசித் தனிப்பயிற்சியில் இருந்தது.
நிராயுதத்துடன் நெருங்கிப் பார்க்கையில்
மேலும் நிகழ்ந்திருந்தன சில பச்சை அதிசயங்கள்.
இந்த வீட்டின் மிக இளைய நபரின் பெயரை
அடுத்தடுத்துச் சொன்ன அதிர்வில் அந்த நொடி நெளிந்தது.
‘சிறு பறவை வந்துவிட்டதா மறுபடியும்?’
தொட்டி வரிசைக்கு ஓடிவந்தவனிடம்  காட்டினேன்
“பார், எத்தனை சிறிய பறவைகள்!”.
சிற்றிலைகளுடன், பறவையினும் அதி பறவையென
முளைவிட்டிருந்தன  அவன் சிறுகை அளாவி வீசிய
அன்றிரவின் சென்னிறச் சிறு தானியங்கள்.

Saturday, 11 November 2017

ஆற்றுக்குத் திரும்பிய மீன்


 இந்த மீனை எப்படிப் பிடித்தாய்?'
'நீங்கள் தூண்டிலை இரவல் தந்தீர்கள். மீன் தானாக விழுந்தது'
' முதன் முறையிலே மீன் விழும் ரகசியம் என்ன?'
' மீனின் ரகசியத்தை ஆற்றிடம் தான் கேட்கவேண்டும்'
' மீன் விழும் என நீ எப்படி நம்பினாய்'
' விழும் என்றும், விழாதென்றும் நான் நம்பவே இல்லை'
' தக்கையின் சலனம் எப்படிப் பிடிபட்டது'
' நீரின் பாடலை மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தேன்'
' மீனைக் குடுவையில் போட்டுவிட்டாயா?'
' அப்போதே அது ஆற்றுக்குத் திரும்பிவிட்டதே'


%

வில்லியம் சரோயன் என்கிற பெயரை முதன் முதலில் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் மூலமாக அறிந்தேன். சரோயன் என்கிற பின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. நிறைய வெவ்வேறு - வாசிப்புத் தொடர்பற்ற - தனிமைகளில் ‘வில்லியம் சரோயன்’ என்று குடும்ப நபரைக் கூப்பிடும் குரலில்
சொல்லிப் பார்த்திருக்கிறேன்..
இப்போது தான் வில்லியம் சரோயன் கதைகளை வாசிக்க வாய்த்தது. இவ்வளவு தூரம் வந்த பின் வாசிக்க வேண்டிய கதைகளே அவை.
நண்பர் பாவண்ணன் தான் ‘ என் பெயர் ஆரம்’ என்ற தொகுப்பைக் கொடுத்தார். வில்லியம் சரோயனின் 14 கதைகள். 2005 டிசம்பரில் ’அகல்’ வெளியிட்டு இருக்கிறது. பஷீர் மொழி பெயர்த்திருக்கிறார். தமிழினி வசந்தகுமாருக்கு வடிவமைப்புச் செய்து தரும் பஷீராகத்தான் இருக்கும். முகவரியும் தமிழினியுடையதே.
30.06.1940 என்று வில்லியம் சரோயன் அவருடைய முன்னுரையில் தேதியிட்டு இருக்கிறார்.எங்கோ ஒரு தூர தேச அடுக்ககத்தின் ஐந்தாம் தளத் தனிமையில் 11.11.2017ல் வாசிக்கும் ஒருவனிடம் ஓர் அகரம் மாறாமல் அப்படியே அந்த ஆரம் எனும் பெயருடையவனின் உலகும் வாழ்வும் வந்து சேர்கின்றன.
அழகிய வெண் புரவியுடன் ஒரு கோடைக்காலம்,
மாதுளை மரங்கள், ஒரு அருமையான பழைய பாணிக் காதல், மாதா கோவில் பாடகர்கள், சர்க்கஸ், மூன்று நீச்சல்காரர்களும் யேல் நகர மளிகை வியாபாரியும்,லோகோமோட்டிவ் 36, ஓஜிப்வே எனும் அற்புதக் கதைகளால், நெருக்கமான மொழி பெயர்ப்பால் நான் நிரம்பியிருக்கிறேன்.
அப்படி ஒரு நிரம்பிய மன நிலையின் இடையே, ‘என் பெயர் ஆரம். வாசித்து முடித்துத் ததும்பிய வெளியில் தான், ;இந்த மீனை எப்படிப் பிடித்தாய்?’ என்ற வரிகளில் துவங்கும் பதிவை எழுதினேன். ‘மூன்று நீச்சல்காரர்களும் யேல் நகர மளிகை வியாபாரியும்’ கதையை வாசித்துக்கொண்டு இருக்கும் போதே, அந்த மீனும் ஆறும் தெரிந்துவிட்டது.
புழுவைப் பற்றிக் கேட்டிருக்கும் நல்ல நண்பரே,
தூண்டிலில் விழுந்தும் ஆற்றுக்குத் திரும்புகிற மீனுக்குப் புழு எல்லாம் வேண்டியதில்லை. முள்ளில் செருகப்பட்டிருக்கும் தூண்டில் காரனையே அது விரும்பி வருகிறது.

LikeShow More Reactions
Comment