முக நக - 16, 17.
23.
நேற்று ‘மேலும்’
வெளியீட்டகம் ஒழுங்கு செய்திருந்த கூட்டம். பேராசிரியர் தனஞ்செயன்,
பேராசிரியர் கட்டளை.கைலாசம் பணிஓய்வு பெறுவதை முன்னிட்டு அவர்களுக்குப்
பாராட்டு. கவிஞர். சுகுமாரன் படைப்பிலக்கியப் போக்குகள் என்பது பற்றிப் பேச,
நான் என் கவிதைகளை வாசிப்பதாக ஏற்பாடு.
ஐந்து மணிக்கு என்று போட்டு ஐந்துமணிக்கே கூட்டத்தை ஆரம்பித்து
விட்டார்கள். சொன்ன நேரத்துக்கு இலக்கியக் கூட்டம் எல்லாம் ஆரம்பித்து நான் பார்த்ததே இல்லை.
கவிதை வாசிப்பு என்பதே
திருநெல்வேலிக்கு மட்டும் அல்ல, எனக்குமே புதியது. என்
கவிதைகளை ஒரு கூட்டத்தில் நான் இதற்கு முன் வாசித்ததே இல்லை. கவிதையை ஒரே ஒரு
வாசிப்பில், எதிரே இருப்பவர்கள் கேட்டுப்
புரிந்துகொள்வார்களா என்ற கேள்வி சிவசு சாருக்கும் இருந்திருக்கும் போல. அவர்,
ஃபிப்ரவரியில் முகப்புத்தகத்தில் தொடர்ந்து எழுதிய ஐம்பத்தாறு
கவிதைகளில் இருபத்தைந்தைத் தேர்ந்தெடுத்து சிறு பிரசுரமாக எல்லோர்கையிலும்
கொடுத்துவிட்டார். தேவாலயங்களில் ஆராதனைப் பாடல்களின் எண்ணை,அல்லது
விவிலிய அதிகாரத்தையும் வசனத்தையும் சொல்லி வாசிப்பது போல, நான்
என் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அன்று ஏற்கனவே ‘நல்ல
வெள்ளிக்கிழமை’ ஆகவும் இருந்தது.
சுகுமாரன் போன்ற நல்ல, நிலைகொண்ட கவிஞர் முன்னால் என் கவிதைகளை வாசிக்க முதலில் கூச்சமும்
தயக்கமும் இருந்தது உண்மைதான். ஆனால், வாசிக்க வாசிக்க,
வாசிப்புக்கு இடையே, முன்பின் என நான் பேசப்
பேச, அந்தத் தயக்கமும் கூச்சமும் விலகி.
ஒரு கவிதை அதை எழுதியவனால்
வாசிக்கப்படும் நேரத்தின் உணர்வை எதிரே இருக்கிறவர்கள் அடையச் செய்யும் இடத்தை
நான் கண்டடைந்திருந்தேன்.
எனக்கு என் கவிதை வாசிப்புப்
பிடித்திருந்தது. எதிரே
இருந்து கேட்டவர்களுக்கு, கவிதையை விடவும் நான் அதன் இணைப்பாகப் பேசியவை பிடித்திருக்கும் போல.
அதனால் என்ன? அதுவும் என்னுடையவை தானே. அல்லது அதுவும்
நான்தானே.
24.
தங்கராஜ் வீட்டுக்குப் போகிற பாதையில், அந்தத் திருப்பத்தில், மஞ்சள் கொன்றை
மரத்துக்குக் கீழ் இரண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்தப் பாம்பு இறந்து கிடக்கிறதாம்.
பருமன் இல்லையாம். பொடியாகத்தான் இருக்கிறதாம். ஆனால் ஒவ்வொரு துண்டும் ஒரு பாகம்
நீளம் இருக்குமாம். என்னிடம் தகவல் சொன்னவர் இரண்டு கையையும் அகல நீட்டிக்கொண்டு
இருந்தார்.
எங்கள் குடியிருப்புக்குப் பக்கம், இரண்டு
வீடுகள் தள்ளி, மூன்று ஆண்டுகளுக்கு முன் நடமாடிக்கொண்டு இருந்த ஒன்றா அது என்று தெரியவில்லை.
சரியாக காலை எட்டு எட்டே கால் மணிக்கு அது தென் பக்கத்தில் இருந்து வடபக்கமாக எந்த
அவசரமும் இன்றி ஊர்ந்து போகும். அதனுடைய வலசைப் பாதையை உயிரிகள் அதற்கு இடைஞ்சல் வராதவரை
எப்போதும் எளிதில் விட்டுவிலகுவதில்லை.
என்னுடைய கவனக் குறைவால் ஒரு தடவை
அதனுடைய வால் நுனி முன் சக்கரத்தில் நசுங்க இருந்தது. ‘பார்த்து
போ’ என்று சொல்வது போல அது அதன் பாதையில் போய்க்கொண்டே
இருந்தது. அது சற்றுப் பருமனானது. சாரையா நல்லதா என்று எங்களில் யார்க்கும் கண்டுபிடிக்கத்
தெரியவில்லை. சமீபத்தில் இங்கே அனேகமாக வீடுகள் வந்த பிறகு, நீர்க்கருவை
மரங்கள், வேலிப்பருத்திக் கொடிகள், ஒரு
சிறு உடைமரம், இலந்தம் புதர்கள் எல்லாம் அகற்றப்பட்ட பின்
அதனுடைய நடமாட்டம் இந்தப் பக்கத்தில் இல்லை.
அதுவாகத்தான் இருக்குமோ என்று சொல்கிறார்கள்.
எனக்கென்னவோ அதுவாக இருக்காது என்று படுகிறது. எனக்கு வேண்டிய ஒருவர், எனக்குத் தெரியாமல் இறந்தால் கூட, ஏதோ ஒரு வகையில்
எனக்குத் தெரிந்துவிடும் என்றுதான் நம்புகிறேன்.
போய்ப் பார்க்கவும் எனக்கு மனம் இல்லை.
எனக்கு வேண்டிய ஒருவரோ, ஒன்றோ, இரண்டு
நாட்களாக அதே இடத்தில் அப்படிக் கிடப்பதைப் பார்த்து அடையாளம் சொல்ல எனக்கு இயலாது,
மேலும் அடையாளம் என்பது, என்னைப் பொறுத்தவரை, முதன் முதலில் கண்டவுடன்,
மற்றவர்களுக்கு நாமே சொல்வதுதான். அது எப்போதுமே, ஒரு புலன் விசாரணைக்கு நிரூபணம் சேர்ப்பது அல்ல.
//மேலும் அடையாளம் என்பது, என்னைப் பொறுத்தவரை, முதன் முதலில் கண்டவுடன், மற்றவர்களுக்கு நாமே சொல்வதுதான். //
ReplyDeleteஅனைத்து உயிர்களுக்கும் இது பொருந்தவே செய்கிறது. உங்கள் பதிவுகளின் மூலம் உலகினை ரசிக்கக் கற்றுக் கொண்டு வருகிறேன்.
மேலும் அடையாளம் என்பது, என்னைப் பொறுத்தவரை, முதன் முதலில் கண்டவுடன், மற்றவர்களுக்கு நாமே சொல்வதுதான். அது எப்போதுமே, ஒரு புலன் விசாரணைக்கு நிரூபணம் சேர்ப்பது அல்ல.//
ReplyDeleteஅடையாளம் என்ற வார்த்தைக்கு இப்படியொரு வர்ணமா? அருமை..