Sunday, 11 August 2013
முக நக - 2
4.
வேண்டுமானால் நேற்றிரவு அவன் அவனுடைய இருபதுக்களில்
நுழைந்திருக்கலாம். கிளிப்பச்சை, வெள்ளை, கருப்பு வரிகள் இட்ட டீ ஷர்ட்டும் நேர்த்தியான கால்சட்டையுமாக இருந்தான்.
முகத்தில் கருப்புக் கண்ணாடி. நின்ற இடம் பார்வையற்றோர் பள்ளி வெளி வாசல். அவன்
கையில் மிக வீரியமாக வளர்ந்த ஒரு நாற்று. நான் ஸ்ப்லெண்டர் வாகன விரைவில்
அவதானிக்க முடிந்த நேரத்தில், சகல திசைகளையும் பச்சையாக அது
பார்த்தபடி, கொய்யா இலை போலத் தடித்த நரம்புகளுடன்,
அவன் உடம்போடு ஒட்டிச் செல்லமாக அசைந்தது. பூச் செடியாகத்தான்
இருக்க வேண்டும். என்ன பூச் செடி என்று தெரியவில்லை. நிச்சயம் அவனுக்குத்
தெரிந்திருக்கும். சொல்லப் போனால், அது ரோஜாச் செடியாக இருந்தால்,
நம்மால் ஒரு ரோஜாப் பூவை மட்டுமே அதில் பார்க்க முடியும். உலகத்தின்
அத்தனை வகைப் பூக்களையும் அது அவனுக்குப் பூத்துக் காட்டும். எல்லாப் பூக்களையும்
அந்த ஒரே செடியில் அவன் பார்ப்பான். நம்மைப் போல அவன் வெறும் ஒரு பூ-க்காரன் அல்ல.
அது ஒரு பூ-ச் செடி அல்ல.
5.
மழை தூறிய பிற்பகல். மகப் பேறு மருத்துவ மனையில்
அல்ல. வீட்டில் போய்ப் பார்த்தோம். கடைசல் தொட்டில் கம்பு. பழஞ்சேலையில் கட்டிய
தொட்டில். குழந்தை ஒருச்சாய்ந்து தூங்கியது. தூங்கும் போதும் குழந்தைகள் அழகானவை.
6.
சபாபதி சித்தப்பா இறந்து முப்பது வருடங்களுக்கு மேல்
இருக்கும். இதோ இவரைப் பார்த்ததும் சித்தப்பா ஞாபகம் வந்துவிட்டது. சைக்கிளின்
இரண்டு ஹாண்டில் பாரையும் பிடித்து உருட்டிப் போகவில்லை. பட்டும் படாமல் இடதுபக்கக்
கைப்பிடியை மட்டும் பிடித்துக் கொண்டு நடக்கிறார். சைக்கிள் தானாக உருண்டு அவருடன்
போகிற மாதிரி இருக்கிறது. அந்த சாயுங்கால நெரிசல் போக்குவரத்தை முற்றிலும்
அலட்சியப்படுத்தி விட்ட முகம் அவரிடம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment