Thursday 15 August 2013

முக நக - 6.










11.
என்னுடைய கைபேசியில் சிறு பழுது. நீக்கக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். ஒரு தகப்பன் தன் எட்டுவயதுப் பெண் குழந்தைக்குக் கைக் கடிகாரம் வாங்கிக் கொடுக்க வந்தான். 189/- ரூபாய் விலைக்கு அழகழகான சீனத் தயாரிப்புகள். தகப்பன் தன் மகளின் தேர்வுக்கே விடுகிறான். ஏழு எட்டை நிராகரித்து, இரண்டு கடிகாரங்களில் ஒன்றைத் தேர்ந்து எடுத்து அப்பாவிடம், ‘இது நல்லா இருக்கா ப்பா?’ என்று ஒப்புதல் கேட்கிறது. காரில் வந்திருப்பார்கள் போல. இவள் கடிகாரத்தைப் பார்த்ததும் தனக்கும் வேண்டும் என அவளுடைய தம்பியும் கேட்க. தகப்பன், அக்கா, தம்பி வருகிறார்கள். அக்காவுடையது போலவே வேண்டும் என்கிறான் தம்பி. அழவில்லை. பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆனால் உறுதியாக.

தகப்பன் விலகி நிற்க, அக்கா தன் தம்பியிடம், உரையாடத் துவங்குகிறாள். அக்கா கையை விட அவனுடைய கை குட்டியாம். அதனால் குட்டிக் கடிகாரம்தான் நன்றாக இருக்குமாம். கடைக்காரருக்கு ஏற்கனவே மலர்ச்சியான முகம். அவர் மேலும் சில சிறிய கடிகாரங்களை கண்ணாடித் தடுப்பில் வைக்கிறார். இது நன்றாக இருக்கும் உனக்குஎன்று அவன் மணிக்கட்டில் வைத்துப் பார்க்கிறாள். நல்லா இருக்கா?’ என்று தம்பியிடம் கேட்கிறாள். அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது தலையை ஒப்புதலாக அசைக்கையில்.
தகப்பன் விலை கேட்கவில்லை. அக்கா கேட்கிறாள். நைண்ட்டிஎன்கிறார் விற்பனையாளர். மணிக்கட்டில் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன், ‘நைண்ட்டின்னா தொண்ணூறு தானே ப்பாஎன்கிறான். நான் அவனுடைய உச்சிச் சிகையைக் கலைத்து விடுகிறேன்.

இவ்வளவு பேசி, தீர்மானித்து, தேர்ந்தெடுத்து அந்தச் சிறுமி இதுவரை செய்தது எல்லாம் பெரிதில்லை. அப்பா கொடுத்த ருபாயை வாங்கிக் கடைக்காரரிடம் கொடுக்கிறது. வாங்குகிறவர் கைவிரல்களில் ஒரு விரல் நகத்தில் ரத்தம் கட்டி நீலமாக இருக்கிறது.
கையில் அடிபட்டுவிட்டதா அங்க்கிள்என்று கேட்கிறது. சரியாப் போச்சு அதெல்லாம்’ - விசாரிப்புக்கு பதில் சொல்லும் அவர் முகம் கனிந்து நெகிழ்கிறது..

எல்லாம் சரியாகத்தானே போகும், இப்படி அக்கறையாகக் கேட்க ஒரு எட்டு வயதுச் சிறுமி இன்னும் நம்மோடு இருக்கும் போது.

 

4 comments:

  1. எல்லாம் சரியாகத்தானே போகும், இப்படி அக்கறையாகக் கேட்க ஒரு எட்டு வயதுச் சிறுமி இன்னும் நம்மோடு இருக்கும் போது.

    ReplyDelete
  2. நூறு நன்னெறிப் பாடல்கள் அல்லது பாகவதப் பாடல்கள்
    சொல்ல முயலும் மனிதத்தை / உன்னதத்தை
    கடைசி இரண்டு பத்திகள் தெளிவாகவும், எளிதாகவும்
    சொல்லி விடுகின்றன

    ReplyDelete
  3. அந்த சிறுமி ந்ல்ல பெற்றோர்களைக் கொண்டுள்ளது.

    ReplyDelete