Thursday, 2 November 2017

அற்ற ஒரு சுடராய்













மழை கொஞ்சம் வெறித்திருந்தது.

எங்கேயாவது போய், யாரையாவது பார்க்கலாம் என்று தோன்றியது. என் வயதில் என் வயதுக்காரனைத்தானே பார்க்க முடியும்.

செருப்பில் செம்மண் அப்பிய கனம். 19ம் நம்பர் வீடு ரொம்ப தூரமில்லை. அவன் வீட்டிலும் உதிர்ந்து கிடந்த பன்னீர்ப் பூ. ஊடே நகரும் முதல் வளையல் பூச்சி.

புறவாசலில் இருக்கிறதாகச் சொன்னார்கள். வீட்டைச் சுற்றிப் போய்க் கொள்கிறேன். கதவைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இன்னும் பைக் ஓட்டுகிறான். ஆனால் துடைக்கவே மாட்டான் போல. பின் என்ன? வெளியூருக்குப் போனால் முன் விளக்கு அடைப்பில் பறவை முட்டை இடத்தான் செய்யும்.

செருப்புச் சத்தத்தைக் கேட்டே,’வா சுந்தரம்’ என்றான். காதும் மூக்கும் அத்தனை கூர்மை. அவன் ஒரு மிருகமாம். அவனே,’நான் மிருக ஷ்ரீச நட்சத்திரம்’ என்று சிரிப்பான். ‘என்ன நடக்கு? உங்க ஊரில மழை உண்டா?’ என்ற பழைய பாணி உரையாடலைத் துவக்கினேன். அந்தந்தப் பருவத்திற்கு அந்தந்த உரையாடல். அதில் தப்பில்லை.

கூடுமானவரை வெயில் அடிக்கிற இடத்தில் கல்யாணி குத்த வைத்து உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் ஒரு வெங்கல விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. பச்சை, சிவப்பு தீப்பெட்டி மத்தாப்புப் பெட்டிகள் நாலைந்து. கூடுதலாகவே இருக்கும்.

ஒவ்வொரு குச்சியாய் மத்தாப்பை எடுத்து, விளக்குச் சுடரில் பொருத்தி, கண் மட்டத்திற்கு உயர்த்தி அணையும் வரை வைத்திருந்து கீழே போட்டான். மறுபடி ஒன்றைப் பொருத்தி என் பக்கம் உயர்த்தி, ‘பச்சைக்கலர் மத்தாப்பு; நல்லாருக்கா என்றான்?’

நான் சிரித்துக்கொண்டே பக்கத்தில் புறவாசல் நடையில் உட்கார்ந்தேன். ‘நீ பொருத்துதியா?’ என்று என் பக்கம் ஒரு பெட்டியை நீட்டினான். அது சிவப்பு மத்தாப்புத் தீப்பெட்டி. ‘தீவாளிக்குப் பிள்ளைகள் வந்திருக்கும் போது வாங்குனதுல மிச்சம்’ என்று அவனே சொன்னான்.

நான் ஒரு குச்சியை எடுத்துப் பக்கவாட்டில் உரசினேன். பிடிக்கவில்லை. மறுபடி உரசினேன். ‘எல்லாம் நயத்துப் போச்சு. இங்கே வா’ என்றான். நான் அவன் பக்கம் போய் விளக்கில் பொருத்தினேன். சுருசுரு என்கிற கருப்புப் பாகம் நுரைத்து முடிந்து சிவப்பு நுனியில் அடர்த்தியாக ஒளிர்ந்தது.’ பச்சையை விட சிவப்பு நல்லா எரியுது’ என்றேன்.

‘நல்லாப் பாரு சுந்தரம் சிவப்பு எரியும் போது உச்சியிலே லேசா ஒரு பச்சை தெரியும். அது சிவப்பை விட பாக்க நல்லா இருக்கும்’ என்று கையில் கொழுத்திய பச்சை மத்தாப்புடன் சிரித்தான்.

நான் இன்னும் கொஞ்சம் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து, அவன் கொழுத்தி வைத்திருக்கும் பச்சை மத்தாப்பில் என் சிவப்பு மத்தாப்பைக் கொழுத்தினேன். ஒன்றிலிருந்து ஒன்று பற்றி, சிவப்பைப் பச்சையாக்கி, பச்சையைச் சிவப்பாக்கி, சிவப்பும் பச்சையும் அற்ற ஒரு சுடராய் மலர்ந்தது.

‘நல்லாருக்கில்லா?’ என்று அவனும் சொன்னான்.


‘நல்லாருக்கு’ என்று அதே சமயத்தில் நானும் சொன்னேன்.

2 comments:

  1. படித்ததும் மத்தாப்பாய் ஒளிர்கிறேன்

    ReplyDelete
  2. பக்கத்தில் போனதால் தான் பச்சை தெரிந்தது. அதையும் தாண்டிய சிவப்பும் பச்சையுமற்ற சுடர் அறிதலின் உச்சம்.

    ReplyDelete