டாஸ்மாக் கடைக்குத் தனியாக வருபவர் நீங்கள்.
உங்கள் அடிக்கடி வருகையால்
டாஸ்மாக் கடைக்கு இப்போது
டாஸ்மாக் கடை வாடை கிடையாதாயிற்று.
இந்த டாஸ்மாக்கிற்கு முதன் முதல் வருகையில்
தனியாக மேஜையில் இருந்தவர் உங்களை
அவருடன் ஒரு மிடறு அருந்த உபசரித்தார்.
நீங்கள் போய் அமர்கையில் அவருடைய மேஜையில்
அதற்கு முந்திய நொடியில் மலர்ந்த,
அடுத்த நொடியின் பொன் மஞ்சளுடன் பறித்த
ஒரு பூவரசம் பூ நீளக் காம்புடன் இருந்தது.
அடுத்தடுத்த எண்ணிலி மிடறுகளுக்குப் பின்
அது சிவந்திருந்ததைப் பார்த்தீர்கள்.
உங்களை உபசரித்தவரிடம் அனுமதி கேட்டு
அந்தப் பூவை வாஞ்சையுடன் கையில் எடுத்தீர்கள்.
அப்போதும் அது சொரசொரப்பாகவே இருந்தது.
‘எப்போதும் சொரசொரப்பானது இந்த வாழ்வு’ என்று
யாரோ சொல்வது போல நீங்கள் சொன்னீர்கள்.
மிக உச்ச விசையுடன் உங்கள் கன்னத்தில்
உடனடியாக உங்களை உபசரித்தவர் அறைந்தார்.
வேறெங்கும் இன்றி இந்த டாஸ்மாக் கடைக்கு மட்டுமே
நீங்கள் வரத் துவங்கியது அதற்குப் பிறகுதான்.
டாஸ்மாக் வெளியேயும் உபசரித்தவர் அறைந்த வலி மறக்க பலரும் பிரயாசைப் பட்டுக் கிடப்பதுண்டு.
ReplyDelete