Saturday, 13 December 2014

இப்படியாக...






’நீங்க நான் - ஃபிக்‌ஷன் எழுதுங்க’ என்று என்னிடம் முதலில் சொன்னது கௌரி ஷங்கர் தான். அது என்னுடைய நிலக்கோட்டை பருவத்தில். 81 – 85 ம் வருடங்களில் ஏதோ ஒரு நாளில்.

அது நான் மிகத் தீவிரமாகக் கதைகள் எழுதிக்கொண்டிருந்த காலம். ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’ தொகுப்பின் அத்தனை கதைகளிலும் நிலக்கோட்டை மண்ணின் வாசமும் மனிதர்களின் சாயலும் இருக்கும். ’வேறு வேறு அணில்கள்’ கதையில் வரும் சிலம்பாயியை அங்கே தானே பெற்றேன். அந்த, ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’யில் வரும் ரொட்டிக்காரர் இது போன்ற ஒரு மழைக்காலத்தில்தான் மரக்கதவைத் திறந்துகொண்டு வந்தார்.  மேல் கொக்கியின் உலோகச் சத்தம் இப்போது கூடக் கேட்கிறது.  அவருக்குத் தலை துவட்டக் கொடுத்த தேங்காய்ப் பூ துண்டின் ஈரக் கனம், புழுங்கல் வாடை இன்னும் அகன்றுவிடவில்லை. அந்தச் சிறு பறவை மரக்கதவு விரிசலின் தூரத்தில், மழையில் சிறகொடுக்கிக் கிடந்தது. இன்னும் எனக்கு அது பெயர் தெரியாத பறவையாகவே இருக்கிறது.

எனக்கு கௌரிஷங்கர் மீது ரொம்பக் கோபம். இப்படிக் கதை எழுதுகிற ஒருவனை, அ-கதை எழுதச் சொல்கிறாரே, இது எதனுடன் சேர்த்தி?’ என்று வருத்தம் கூட. இந்தக் கோவில்பட்டிக்காரர்களே இப்படித்தான். எதையும் சிரித்துக்கொண்டே முகத்துக்கு நேரே சொல்லிவிடுகிறார்கள். சரியாகவும் சொல்லிவிடுகிறார்களே, என்ன பண்ண? தேவ தச்சனும் இதே மாதிரி ஒரு சிரிப்புடனேயே,, கி. ராஜநாராயண மாமா மணிவிழா முடிந்து மதுரை காலேஜ் ஹவுஸ் மாடியிருந்து இறங்குகிற படிக்கட்டுகளின் டானா திருப்பத்தில், ’கடைசியாகத் தெரிந்தவர்’ கதையைப் பாராட்டிச் சொல்கிறார். அதை நம்புகிறவன் கௌரிஷங்கர் சொன்னதை எப்படி நம்பாமல் இருக்க முடியும்? ஒரு வேளை, நம்பினதால்தான்  கோபம், வருத்தம் எல்லாம் வந்ததோ என்னவோ?

அவர் அப்படிச் சொல்லிவிட்டாரே என்பதற்காக, நான் மறுநாளே, கையில் வைத்திருந்த பேனாவை மூடி வைத்துவிட்டு, வேறு பேனாவில்  வேறு நிற மை அடைத்து அ-கதைகளை எழுத ஆரம்பித்துவிடவில்லை. போன மாதம் வரை, இந்த தனுஷ்கோடி, அகஸ்தியர் அத்தை, பழனியாண்டி மாமா உட்பட, கதைகளாக மட்டுமே எழுதி வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் எந்தக் கதை முழுக்க முழுக்க கதை? எந்த எழுத்து முற்றாக முற்றிலும் புனைவு? இந்த வாழ்வு அ-கதை எனில், இந்த வாழ்வில் மனிதர்க்கு நிகழ்வதெல்லாம் அ-புனைவு எனில், எழுதப்பட்ட கதைகளும், எழுதப்படப் போகிற கதைகளும் அ-கதை அன்றி வேறென்ன?

அப்படிப் பார்த்தால், நான் எத்தனையோ காலம் காலமாக, முன்பு கதைகள் என்ற பெயரில் அ-கதைகளையும், இப்போது அ-கதைகள் என்ற பெயரில் கதைகளையும் தானே எழுதிவந்துகொண்டு இருக்கிறேன்.

ஜெயகாந்தன் எழுதிய, ‘உன்னைப் போல் ஒருவனும்’ ‘பிரளயமும்’ கதையெனில், அவர் எழுதிய ‘சிலர் உள்ளே இருக்கிறார்கள்’ கதைகளே அல்லவா? அவர் எழுதிய ‘நினைத்துப் பார்க்கிறேன்’ அ-புனைவு எனில், ‘ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம்’ மட்டும் புனைவாகி விடுமா என்ன? எல்லோரும் நினைத்துத்தான் பார்க்கிறோம். எழுதுகிற எழுத்தெல்லாம் நினைத்துப் பார்க்கப் படுபவைதான்.  நினைவு என்பது நனவின் மீள் பார்வை. ‘உதய சூரியனும்; ‘நடந்தாய் வாழி காவேரியும்’  எழுதின தி.ஜானகிராமன் ‘உயிர்த்தேனும்’ ‘செம்பருத்தியும்’ எழுதுவார். லா.ச.ரா ‘அபிதா’ எழுதி ‘சிந்தா நதியும்’ எழுதுவார். அ.முத்துலிங்கத்துக்கு, ‘அங்கே இப்போது என்ன நேரமும்’ ‘மஹாராஜாவின் ரயில் வண்டியும்’ ஒரே திசைத் தண்டவாளங்களில் ஓடுபவைதான். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணை எழுத்து’வும் ‘நெடுங்குருதி’யும் மல்லாங் கிணற்று வேப்பங்காற்றுப் பட்டவைதான். கலாப்ரியாவின் ‘எட்டயபுரமும்’ ‘நினைவின் தாழ்வாரங்களும்’ கவிதையா, அ-கவிதையா? இதில் புனைவென்ன கதை என்ன? அ-புனைவு, அ-கதையின் முதல் எழுத்தாக வரும் ஆனா ஆவன்னாவுக்கு எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் எல்லாம் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஒரே அர்த்தம் தான். உண்மை என்ற அர்த்தம் வாழ்வு என்ற ஒரே பெரும் அர்த்தம். அவள் என்று சொல்வதெலாம் அவனைத்தானே. சிவன் என்று சொல்வதெலாம் உமையைத் தானே.

நான் முன்பே சொன்னது போல, எல்லோரும் கோடற்ற ஒரு கோட்டின் மேல் தான் எழுதிக்கொண்டு வருகிறோம். காட்டில் விழுகிற ஒற்றையடிப்பாதை தான் கடலிலும் நமக்கு விழுகிறது. மண் புழுவுக்கு ஒரு வலசை. மடப் பிடிக்கு ஒரு வலசை. எல்லாம் இந்த ஈர நிலத்தின் உள்ளும் வெளியிலும் தான். இன்றைக்கு வர்ம சிகிட்சை வரிசையில் எனக்கு இடப்புறம் இருந்த இளைஞன் பிசகிச் சிரித்த சிரிப்பு என்னைப் பார்த்து அல்ல, அவனைப் பார்த்தே. தங்கவேல் பழமுதிர் சோலையில், தாழிப் பெருவயிறும், கூடு கொம்புமாய், மிச்சப் பழத்தோல் வீசப்படக் காத்திருக்கும் கிழட்டுக் பசுவின் கண்களைப் பார்க்கும் போது, ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, எங்கள் தெருவில் நடந்த ஒரு கல்யாண வீட்டு வாசலில் சோறு வாங்குவதற்கு நின்ற முதிய நரிக்குறவனின் மினுமினுத்த கண்கள் தானே ஞாபகம் வருகின்றது. அவருக்கும் இப்படி ஒரு பசித்த பெரு வயிறு கோவணத்திற்கு மேல் இறங்கிக் கிடந்தது.

நான் அருகிருக்க, ஒரு உறவினர், வேப்பிலையில் பொதிந்த அவருடைய பச்சைப் பிள்ளையைக் குழிக்குள் வைக்கும் போது, துளியளவு மஞ்சள் நிற நாசியுடன் சுண்டு விரல் பருமனுக்கு ஒரு வெள்ளைக் குண்டலப் புழு கண்ணில் பட்டது இன்னும் ஏன் ஞாபகம் இருக்கிறது? இரண்டு தினங்களுக்கு முன், நான் இதுவரை பார்த்திராத ஒரு மிருகச்சாவின் தோற்றத்தில், மல்லாந்து, நான்கு கால்களும் மேலே உயர்த்தி விறைத்துக்கிடந்த ஒரு செவலை நாய் ஏன் தீயில் பொசுக்கப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கீழ்வெண்மணிச் சாவையும் ராமையாவின் குடிசையையும் நினைவில் விம்ம வைத்தது?

ஏதோ இந்த உலகின் மொத்தப் பரப்பிலும் முழுக்கப் படர்ந்து தழுவிவிடுவது போன்ற களங்கமற்ற ஆசையில், மழைக்குப் பிந்திய படர் தாவரங்கள் அதனதன் குறுநீலப் பூக்களுடனும் பச்சைப் பேதைமையுடனும் சாலையோர மண்ணிலிருந்து தார்ப் பாதையின் எட்டுத் திசைகளிலும் கைவீசி இருக்கிறதே. பத்து நாட்களுக்கு இடையில் ஒரு காக்கை இறகு அல்லது புறாத் தூவி எப்படியும் எனக்குக் கிடைத்து விடுகிறதே. எத்தனை பேர் கவனித்தும் கவனியாமலும் என்னைத் தாண்டிப் போகிறார்கள்? எத்தனை பேரை கவனித்தும் களிகூர்ந்தும் நான் கடந்து செல்கிறேன்?
இவற்றை, இவர்களை எழுதினால், இவை புனைவா, அ-புனைவா? கதையா, அ-கதையா? எதுவாகினும் சரி. இவற்றை, இவர்களைப் பற்றி நான் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக, , என்னுடைய ‘சமவெளி’ எனும் வலைப் பூவிலும், முகநூல் பக்கங்களிலும், ஆரம்பத்தில் தொடர்ந்தும், இடையில் அவ்வப்போதும், இப்போது எப்போதாவதும் எழுதிவந்தேன், வருகிறேன்.

பெரிதினும் பெரிதை எல்லாம் நான் எழுதிவிடவில்லை. சிறிதினும் சிறிதையே எழுதினேன். அந்தச் சிறிதினும் சிறிதில் பெரிதினும் பெரிதை உணர்கிறவனாக நான் இருக்கிறேன். எனக்குச் சின்ன விஷயங்களே பெரிய விஷயங்கள்.

ஒருவெள்ளைத் தும்பைப் பூ, ஒரு சிறிய கழச்சிக் கல், ஒரு மணல் பரல், ஒரு உப்புக் கல், ஒரு துளிக் கண்ணீர், ஒரு ஈரச் சிறகுதறல், ஒரு நுனிப் பீடிச் செங்கங்கு, லச்சுமியின் உச்சி நரைச் சிகையில் கிடக்கும் ஒற்றை வேப்பம் பூ, தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் பாட்டிலில் நடனமிட்டுச் சுழலும் ஒற்றை நீள் மயிர்,, பென்சில் சீவும் நேரப் பெருவிரல் ரத்தச் சொட்டு. சாம்பல் பூத்துக் கிடக்கும் லீலாச் சின்னம்மையின் சிதை எலும்பு, காலில் மிதிபடும் தக்காளி விதைச் சிதறல், எரிந்தணைந்த கார்த்திகை விளக்கு, ஜன்னலுக்கு வெளியே வளரும் பேரீச்சைச் செடி,, இருட்டுக் கட்டிலில் படுத்திருந்த ஒரு முதிய பெண்ணின் உள்ளங்கையில் உறைந்தும் உருகியும் கிடந்த அவரின் வாழ்வு, ஆனந்த விகடனில் எழுதிய ‘நசுங்கிப் போனவை, போல, எழுதப் படாமல் என்னைச் சுற்றி மிச்சமிருக்கும் ‘நசுங்கிப் போகாதவை’ எல்லாமும் தான் நான் இப்படிச் சின்னச் சின்னதாக என் வாழ்வில் கண்டடைந்தவை. அல்லது இவைகளின் ஊடாகவே நான் என் வாழ்வைக் கண்டடைந்து வருகிறேன்.

என் வாழ்வு பெரியதும் இல்லை. சிறியதும் இல்லை. அது வாழ்வு. நான் பெரிய மனிதனும் இல்லை. சிறிய மனிதனும் இல்லை. மனிதன். சின்ன விஷயங்களின் மனிதன்.

இப்படித்தான் இருக்கிறேன் நான்.

இப்படி இருப்பது போதும் எனக்கு.


கல்யாணி.சி                                19.சிதம்பரம் நகர், பெருமாள்புரம்               
08.11.2014.                                        திருநெல்வேலி - 627007.




கனிவுடன்.

இத் தொகுப்பில் தேர்ந்தெடுத்துப் பிரசுரமானவற்றையும், இவை தவிர்த்துச் ‘சமவெளி’யில் பதிவாகியிருக்கிற இன்னும் பலவற்றையும் எழுதுவதற்குப் பெரும் தூண்டுதலும் ஊக்கப் பின்னூட்டங்களும் தந்திட்ட அனைத்து முகநூலர்களையும் நான் நெகிழ்வோடு நினைத்துக் கொள்கிறேன். எனக்கு அவர்கள் மிகவும் தேவையாக இருந்தார்கள். நான் எழுதுவதை வாசிக்க வாசிக்க, நானும் அவர்களுக்குச் சற்று தேவையாக இருந்திருக்கக் கூடும்.
%                                
அது நிறைய நேரம் கோரும், அலுப்பூட்டுகிற ஒரு பெரிய வேலைதான். நானாக இதைச் செய்திருக்கவே மாட்டேன். ‘சமவெளி’ வலைப் பூவிலும் என் முகநூல் பக்கத்திலும் பதிவிட்ட, ஒழுங்கற்ற இடைவெளிகளுடன் சிதறிக்கிடந்த அத்தனை வரிகளையும் தேடியெடுத்து, தொகுத்து, வகைப்படுத்தி, எழுத்துருச் சீர்மையுண்டாக்கி அனுப்பிக் கொடுத்து, என் தேர்வைச் சுலபமாக்கிய சக்தி ஜோதிக்கு என் நன்றி உரித்தாகிறது.
ஒரு முக்கிய மான கட்டத்தில், கணினிப் பயன்பாட்டில் அச்சுக் குழப்பங்கள் உண்டாகித் திகைத்த நேரத்தில், மிகக் குறைந்த அவகாசத்தில் அதைச் சீர்செய்து தந்த வடிவமைப்பாளர், தம்பி ஆர்.சி.மதிராஜுவுக்கும் என் நன்றி
%
2001ல் என்னை அடையாளங்கண்டு என் சிறுகதைகளின் முழுத்தொகுப்பை வெளியிட்டதில்  துவங்கி, 2012 செப்டம்பரில், வண்ணதாசன் – 50 என மதுரையில் ஒரு விழா எடுத்து. என்னைச் ‘சின்ன விஷயங்களின் மனிதன்’ என இன்று வரை நிலை நிறுத்திவரும் சந்தியா பதிப்பகத்தினரை வணங்குகிறேன்.
%
தன்னுடைய புனைவுகளாலும், அதைவிடக் கூடுதலாகத் தன்னுடைய அ-புனைவுகளாலும் நவீன தமிழுக்குத் தொடர்ந்த பங்களிப்பை அளித்துவருகிற திரு.அ.முத்துலிங்கம் அவர்களின் கையில் இந்தத் தொகுப்பைக் கனிவுடன் சேர்க்கிறேன்.

கல்யாணி.சி. 


1 comment:

  1. எல்லோரும் கோடற்ற ஒரு கோட்டின் மேல் தான் எழுதிக்கொண்டு வருகிறோம்.//

    என் வாழ்வு பெரியதும் இல்லை. சிறியதும் இல்லை. அது வாழ்வு. நான் பெரிய மனிதனும் இல்லை. சிறிய மனிதனும் இல்லை. மனிதன்.இப்படி இருப்பது போதும் எனக்கு.//

    எங்களுக்கும் !! தங்களால் எழுதப்படாமல் எஞ்சியிருக்கும் நசுங்கிப் போனவைகளுக்காக காத்திருப்பதிலும் ஒரு சுகம் எங்களுக்கு.


    ReplyDelete