Thursday, 26 June 2014

இன்னும் சில, இதே மனநிலையில்.






இன்னும் விடுபடவில்லை.

இன்னது என்றில்லை. மனம் ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்துவிடுகிறது. ஏதோ ஒன்றில் விழுந்துவிடுகிறது. சிக்கிக் கொள்கிறது. என்னதென வரையறுக்க முடியா ஏதோ ஒரு நிலையில், யார் கண்ணிலும் காட்டாமல், யார் கண்ணிலும் படாமல், அதற்கு வசப்பட்ட இடத்தில் அப்படியே சமைந்து விடுகிறது. துக்கம், சந்தோஷம், துக்கமின்மை, சந்தோஷமின்மை எதுவும் காரணமாக இருக்கலாம். அனேகமாக அது எது காரணம் என்று பகுக்கவும் தோன்றாத, விரும்பாத இடம். ஆனால் செயலின்மை அல்ல. தீவிரமாகச் சுழலும், உச்சச் சுழற்சியின் பம்பரத் தோற்றமாகக் கூட இருக்கலாம்.

ஐம்பது வருடங்களாக எழுதுகிறவன் ஐம்பத்தி ஓராவது வருடமும் எழுதியே ஆக வேண்டும். அவனுக்கு வேறு கதி இல்லை. அவன் என்ன, இவன் என்ன? எனக்கு வேறு கதி இல்லை. எனக்குத் தெரிந்த வாழ்வையும் மனிதரையும், எனக்கு வாய்த்த மொழியில் எழுதிச் செல்கிறேன்.

சிறுகதைகள் எழுதி நீண்டகாலம் ஆயிற்று. மலைகள்.காம் இணைய இதழில் ‘பிரேம பாசம்’ வந்தது. அதற்குப் பின் கதை எழுதவில்லை. கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். ஒரு தொகுப்புக்கு வரும். இவன் கவிதை எழுதுவதை விடக் கதை எழுதலாம் என்றே நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஏன், நானே கதைகள் எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். முகப் புத்தகத்தில் கதை எழுதினால், வாசிப்பவர்கள் கம்மி. எட்டுவரிக் கவிதைகளில் இருந்து தாண்டி பன்னிரண்டு வரிகளில் எழுதினால், ‘அட. போப் பா’ என்று போய்விடுவார்கள் என்றும் தெரியும். போகன், கலாப்ரியா,மனுஷ்யபுத்திரன் விதிவிலக்கு. அவர்கள் எத்தனை நீண்ட தெனினும் , கடைசி வரியின் முற்றுப் புள்ளிவரை தவறவிட முடியாத  ஈர்ப்புள்ள கவிதைகளை எழுதுகிறவர்கள். எனக்குப் புரிய முடிகிறது.

ஒவ்வொரு காலையிலும், சென்ற பருவ, சமீபத்திய முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துப் பின் தொடர்கிறவர்கள் எனக்கும் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் சரியாகவே தேர்கிறார்கள். இரண்டு கவிதைகள், மூன்று கவிதைகள் பதிவிட்டால், அவர்கள் அத்தனைக்கும் விருப்பிடுவதில்லை. நன்றாக இருக்கிற கவிதைகளையே அவர்கள் கூடுதல் விருப்பி இட்டு/கூடுதல் பகிர்வு செய்து இயல்பான வெதுவெதுப்புடன் நகர்கிறார்கள். எழுதுகிறவன் எழுதிய பிறகு நிறைவுகொண்ட வரிகளில், சொற்களில் சரியாக அவர்கள் அமர்ந்து பறப்பதையும் பார்க்கமுடிகிறது. இலக்கிய சிற்றிதழ், நடுநிலை இதழ்களில் கிடைக்காத, ஆனால் எனக்குத் தேவையென நான் எதிர்பார்க்கிற இடம் இது. நான் தொடர்ந்து முகநூல் பதிவிட இந்த உளவியல் நிறைவு முக்கிய காரணி. அப்புறம் அது என் மறுநாள் பதிவுக்கு, முதல் நாளே என்னைத் தூண்டுகிறது, தயார் படுத்துகிறது. குவிக்கிறது. நான் அடுத்த நாளுக்கான கவிதையை முந்திய நாள் எழுதிவிடுகிறேன். சுதீர் செந்தில், உயிர் எழுத்து இதழுக்காக தொடர்ந்து மாதாமாதம் கவிதைகள் எழுதச் சொன்னதால், அடுத்த வருடம் கதைகள் எழுதச் சொன்னதால் மட்டுமே அந்தக் கவிதைகள், கதைகளை என்னால் எழுத முடிந்தது. முக நூலில் சுதீர்செந்தில் பாத்திரத்தை நானே வகித்துக் கொள்கிறேன். நானே என்னை எழுதச் சொல்லி, கவிதைகள் எழுதத் தூண்டிக் கொள்கிறேன்.

இதற்கு முன்பு எழுதிய கவிதைகளை விட, இப்போது எழுதுகிறவை மாறு சாயல்கள் உடையதாக அமைவது எப்படி எனத் தெரியவில்லை. நீண்ட வரிகள், வேறு வேறு காட்சிகள் உடையதாக அவை அமையும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் என்னை வாசிக்கிறவர்களில் ஒரு பகுதியினர்க்கு அதில் விருப்பமில்லை. என் அடையாளத்தை நான் கலைப்பதாக அவர்கள் கவலை அடைகிறார்கள். இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று பேசிக் கொள்கிறார்கள். நல்லதாகப் போயிற்று என்று என் காணாமல் போதலில் நிம்மதி கொள்கிறவர்களும் இருக்கக் கூடும். வாழ்வின் சகாக்கள் போலத் தானே இலக்கிய சகாக்களும். இப்படியும் அப்படியும் இருக்கத்தானே முடியும்.
இல்லாவிட்டால் எப்படி?

இந்தப் பத்துப் பதினைந்து நாட்களில் நான் எழுதிய முப்பது சொச்சம் கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. எனக்குப் பிடிக்கத்தானே செய்யும்.
நான் மீறவே முடியாத, தாண்டவே செய்யாத, தாண்ட விரும்பாத உரைநடைத் தன்மையுடன் அவை இருப்பினும், நான் இன்னும் சில இதே மனநிலையில், இதே தன்மையில் எழுத நினைக்கிறேன். எந்த முன் திட்டமும் இன்றி ஒரு புள்ளியில் எழுதத் துவங்கி, அதே முன்திட்டமின்மையுடன் அதை அந்தரத்தில் நிறுத்துவது எனக்குப் புதிதில்லை.

*

’தொட்டி மீன்களில் சிறுவகை இனம்
நல்ல இசைக்கு இடுகிற நீச்சல்
தேர்ந்த கவிதையை தேர்ந்த கவிஞன்
வாசிப்பது போல இருக்கும்’
என்பதைச் சோதிக்க விரும்பினேன்.
எந்தச் சுவரும் சொந்தமில்லாத
அடுக்ககத் தபசில் நிகர்த்த
யாருக்கும்  உரிமையில்லாத ஒரு
கவிதையை எழுதினேன்.
ஆயத்தக் கண்ணாடித் தொட்டியை வாங்குவதில்
எந்தச் சிரமும் இல்லை.
கவிதையின் எந்த மூலையிலும் வைக்கலாம்.
வாஸ்துச் சிக்கல் கிடையாது.
எந்த இசைக் குறுந்தகடை ஒலிபரப்புவது
என்ற தயக்கம் இருந்தது.
தொன்மை, நவீனத்துவம், பின்நவீனத்துவத்தில்
மூன்றாவதை நான் தேர்ந்தேன்.
கவிதையும் தொட்டியும் இப்போது
மிதக்கத்துவங்கியிருந்தது அந்தரத்தில்.
சிறிய வகை தங்கமீன் வாங்கினால்
சோதனை துவங்கச் சரியாக இருக்கும்.
பக்கத்துக் கவிஞர் தன் கவிதையில்
திமிங்கலங்களை விட்டிருந்தார்.
கடல் கன்னிகளின் கலப்பினக் குஞ்சுகள்
இன்னொருவர் தொட்டியில் நிலாக் காய்ந்தன.
கவிதைக்கு வெளிச்சந்தையில் சல்லிசாக
மீன்குஞ்சுகள் வாங்குவது உத்தமம் என்று
அக்காதமி பரிசு வாங்கிய அண்ணாச்சி
மடிதற்றுத் தான் முந்தி யோசனை சொன்னார்.
திருட்டுப் பிள்ளையார் போல்
திருட்டுக் குஞ்சுகள் பிராபல்யம் குறித்து
முகப்புத்தக இணைப்பு ஒன்றிரண்டு கிடைத்தன.
மஞ்சள் கல்லறையின் கீழ் பொங்கிவழிந்த
வென்னீர்ச் சுனையின் பனிக்கொப்புளங்கள் உண்டு
சிறகடிக்கும் மீன்களின் இசைக்குடும்பம் ஒன்றை
சிவப்பு ஒயின் குடுவை ஒன்றில் எடுத்து வந்தால்,
தொட்டியைக் காணோம்.குறுந்தகடும் இல்லை.
கவிதை பிரசுரமாகிவிட்டிருந்தது
வேறொருவர் புனைபெயரில்.

%

இதைப் போல எல்லாம் எழுதவில்லை. இதைப் போல இது மட்டும் தான்.
ஒரு ஓவியனின், ஒரு கவிஞனின் நோட்டுப் புத்தகத்தில் இப்படி எத்தனையோ வேண்டாத கோடுகளும் வரிகளும் இருக்கும். அப்போதைய மனநிலையில் அவனுக்கு அவை வேண்டியதாக இருந்தன. அவ்வளவுதான்.

2 comments:

  1. பல்்்வகைை கவிிதைகள்் வாாசிக்க காத்து இருக்கிறோம்

    ReplyDelete
  2. முக நூல் வாசகனையும் விட்டு கொடுக்காமல். உங்களுக்கு நீங்களே ரசிகனாகி ஒரு தூண்டு கோலாகி நிற்பது உண்மையுடன் ரசிக்க முடிந்தது..
    உண்மைதான் முகநூலில் வரிகள் நீளும் போது எளிதில் வாசிப்பிலிருந்து கடந்து போய்விடுவான் வாசகன்....

    ReplyDelete