பால்காரர் கிட்டுதான்
இப்படி அழைப்பு மணியை அழுத்துவார். பூனை நடக்கிற மாதிரிச் சத்தமே இல்லாமல்.
‘வருகிறேன்,
வருகிறேன். கூட ஒரு அரை லிட்டர் வேணும்’ என்று கதவைத் திறந்தால், ஜானகி நின்றுகொண்டு
இருந்தாள். முதுகில் ஒரு பை. கைகளில் ஒரு பை. இரண்டையும் கீழே வைத்துவிட்டு இரண்டு
கைகளையும் அகல விரித்தபடி நின்றாள். சோப்பு நுரையும் தூக்கிச் செருகின சேலையுமாக
நான் இருப்பதைப் பார்த்ததும், கால்களைத் தரையில் உதைத்து, ஏமாந்தது போலச்
சிரித்தாள். நான் அவள் கைகளுக்குள் இருப்பது போல, கண்களை மூடிப் பாவனையாக இரண்டு
கைகளையும் பெருக்கல் குறியாக இறுக்கிக் கொண்டாள்.
வழக்கமான மற்ற
தினங்கள் என்றால், இந்தச் சோப்பு நுரையை அவள் மேல் உதறியிருப்பேன். மினுங்கி
மினுங்கி ஜானகி முன் சிகையில் நுரை உடைந்து உடைந்து அடங்குவது நன்றாகத்தான்
இருக்கும். இந்த முறை முடியவில்லை. அதற்குக் காரணங்கள் உண்டு.
‘ஆட்டோ சத்தமே
கேட்கவில்லை; என்று குனிந்து பையை எடுத்தேன்.
’ஆட்டோவில் வந்தால்தானே ஆட்டோ சத்தம் கேட்கும்’ – தோளில் தொங்கிக்கொண்டிருந்த சிறுபையில் இருந்து, ஒரு
ஒற்றை இறகை எடுத்து நீட்டினாள். ‘அனு ஸ்கூல் போயிருக்கும். எனவே நீலா எனும் அனு
அம்மாவுக்கு’ என்று சொன்னாள்.
சிரிக்கிற மாதிரியும் இருந்தது. கண் கலங்கவும் செய்தது. ‘சிறகிலிருந்து பிரிந்த ஒரு இறகு’ என்றாள். இப்படித் துவங்கும் அந்தக் கவிதையின் வரிகளை முற்றிலும்
எழுதித்தான் ஆறு ஏழு
2
மாதத்திற்கு முன்பு
அந்தக் கடிதத்தைத் துவங்கி இருந்தாள். எனக்குக் கூட அல்ல, ‘அன்புமிக்க
சுந்தரத்துக்கு’ என்று அனுவுடைய அப்பாவுக்குத்தான் எழுதியிருந்தாள்.
அந்தக் கடிதம் வந்த
தினம் கூட நன்றாக ஞாபகம் இருக்கிறது. தொடர்ந்து அன்றைக்கு மழை பெய்துகொண்டே
இருந்தது. ‘போறாளே பொன்னுத் தாயி. பொலபொலவென்று கண்ணீர் விட்டு’ என்ற பாடலை அந்தப் பெண் தொலைக்காட்சியில் அவ்வளவு உருக்கமாகப்
பாடிக்கொண்டிருந்தது. மழையா, இந்தப் பாட்டா, சோபாவில் படுத்துத் தூங்கும் அனுவின்
தோற்றமா எதுவோ இந்த அறையை, இந்த வீட்டை வேறு விதமாக மாற்றியிருந்தது. அமைதி இந்த
அறையைத் தண்ணீரால் நிரப்புவது போல நிரப்பிக்கொண்டு இருக்க, ஒரு குளிர்ந்த
கூழாங்கல் போல நான் அடியில் கிடப்பதாக நினைத்துக்கொண்டேன். நாற்காலியில் இருந்து
எழுந்து தரையில் படுத்துக் கொண்டேன்.
வாயில் அரிசிக்
குருணையை ஏந்திச் சுவரோரம் செல்லும் பிள்ளையார் எறும்பு வரிசை ஒன்றை இப்போது
பார்த்தே ஆகவேண்டும் போலத் தவித்தது. சுடலைமாடன் தெரு வீட்டில் எப்போதோ பார்த்தது.
அதற்குப் பின் பார்க்கவே இல்லை. எறும்புகள் கூட இப்படிக் காணாமல் போய்விடுமா?
குருவி எல்லாம் காணாமல் போய்விடுமா? ஒன்று காணாமல் போனால் அந்த இடத்திற்கு
இன்னொன்று வந்திருக்கும் அல்லவா? அப்படி என்ன வந்திருக்கிறது? இந்த வண்ணத்துப்
பூச்சியும் என்றைக்காவது காணாமல் போய்விடுமா?
இப்படியெல்லாம்
எதைஎதையோ நினைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கையில்தான், ‘கதவைத் திற’ என்று ஜன்னல் வழி சத்தம் கேட்டது. ‘என்ன உட்கார்ந்துக்கிட்டே தூங்கிட்டியா?’ என்று கேட்ட குரலில் சிரிப்பு இருந்தது. தூங்கித்தான் இருக்கவேண்டும்.
ஆனால், ‘இல்லை, சும்மா படுத்துக் கிடந்தேன்’ என்று சொல்லும்போதே
‘ஜானகி லெட்டர்
மாதிரி இருக்கு’ என்று டி.வி பக்கம் இருந்த கடிதத்தை எடுத்தான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதலில் பார்க்கிற இடம் அதுதான்.
3
கடிதங்கள்,
பத்திரிக்கை, அழைப்பிதழ், டெலிஃபோன் பில் என்று ஏதாவது ஒன்று வந்திருக்க வேண்டும்.
‘முதலில் தலையைத்
துவட்டப் படாதா?’
துண்டை நீட்டும் போது,
அனுவைக் குனிந்து முத்தினான். ‘அப்பவே தூங்கிட்டுதா?’ என்றான். உடையை இழுத்துவிட்டான். கொலுசுத் தொங்கலைச் சரி
செய்தபடி, ’என்ன எழுதியிருக்கா ஜானு?’ என்று கடித
உறையைப் பார்த்தான்.
‘சுந்தரத்துக்கு
எழுதியிருக்கா. சுந்தரம் தானே படிச்சுப்பார்த்துச் சொல்லணும்’ என நான் சொன்னதைக்
கவனிக்கவில்லை. உறையின் ஓரத்தை மடக்கி, நகத்தால் இழுத்துவிட்டு, பிசிறில்லாமல்
கத்திரித்து எடுப்பது போலக் கிழித்துக்கொண்டிருந்தான். ஒரு காகிதத் திரி போல,
கிழிந்த துண்டு காற்றில் நெளிந்தது.
‘என்ன? கவிதையெல்லாம்
எழுதியிருக்கா ஆரம்பத்திலேயே? அதுவும் நம்ம ஆள் கவிதை’ என்று சொல்லி, ‘
காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதுகிறது’ என உரக்கச் சொன்னான்.
எனக்கு அந்தக்
கவிதையை அப்படி வாசித்தது பிடித்திருந்தது. கையில் ஈரத் துண்டை வைத்துக்கொண்டே
இன்னும் நெருக்கமாகத் தோளை இடித்தபடி நிற்க வேண்டும் என்று தோன்றியது.
துவட்டப்பட்ட கலைந்த சிகையோடு முகம் அழகாக இருந்தது. நாற்பது தொடப் போகிற முகம்
இதுவரை இத்தனை அழகாக இருந்தது இல்லை. ‘போறாளே பொன்னுத்தாயி’ என்று பாடவேண்டும்
. ரொம்ப நேரமாக நான் அதை மனதிற்குள் பாடியபடி இருந்தது போலவும் , இப்போதுதான்
எனக்கே அது கேட்பது போலவும் நினைத்துக்கொண்டேன். சற்று வெட்கமாக இருந்தது.
‘என்ன, நீலா
என்னவெல்லாமோ எழுதியிருக்கா?’ என்று என்னைப் பார்த்து நிமிர்கிற முகத்தைப்
புரிந்துகொள்ள முடியவில்லை. ‘என்ன?’ என்று புருவத்தைச் சுருக்கினேன். எதுவும் சொல்லவில்லை.
கடிதம் என் கைக்கு மாறியது. ‘என்ன, இப்படி எழுதியிருக்கா?’ என்று மறுபடியும்
சொன்னான். பித்தான்கள் பிரித்துவிடப்பட்டு இரு புறமாக விலகிக் கிடக்கிற சட்டையின்
4
பிளவுகளுடன், ஒரு
நனைந்த பறவை போல அவன் இருந்தான். ‘உட்கார்ந்து வாசி’ என்றான். நான்
உட்காரவில்லை.
ஒரு அடித்தல்
திருத்தல் இல்லாத, வழக்கமான ஜானகியின் கோடு போட்டது போன்ற, சரியாத வரிகள். ஆனால்
எழுதியிருந்த விஷயம் அப்படியில்லை.
இந்த எட்டு ஒன்பது
வருடங்களுக்குப் பிறகு குணசீலனுக்கு அவளைப் பிடிக்காது போயிற்றாம். குழந்தை இல்லாததாலா
என்று கேட்டுவிட்டாளாம். அதெல்லாம் இல்லை, பிடிக்கவில்லை என்கிறானாம். நாம் ஒருவரை
ஒருவர் விரும்பித் தானே திருமணம் செய்துகொண்டோம் என்று கேட்டால், ஒருவரை ஒருவர்
விரும்பாது போனால், அதே போலப் பிரிந்துவிட வேண்டியது தானே என்று சுருக்கமாகத்
திருப்பிச் சொல்கிறானாம்.
அடிக்கடி வெளியூர்ப்
பயணங்களுக்கு உட்படுகிற என் வேலை நிலை காரணமா சீலன் என்று கேட்டால், அதெல்லாம் இல்லையாம்.
ஒருவேளை வேறு பெண்ணை யாரையாவது விரும்புகிறாயா என்றும் கேட்டுவிட்டாளாம். ’இதே கேள்வியை நான் உன்னிடம் கேட்க இடம் உண்டா ஜானகி?’ என்பது அவன் பதிலாம்.
இவ்வளவு சந்தோஷமான
ஒன்பது வருடங்களை ஒரு சாக்லெட் உறை மாதிரி, ஒரு மாத்திரைத் தகடு மாதிரி எப்படி என்னால்
எறிந்துவிட முடியும் சுந்தரம்? அவன் ஒரு அற்புதமான ஆணாக இருந்து, என்னை ஒரு
அற்புதமான பெண்ணாக நேற்றுவரை உணரச் செய்துகொண்டிருந்தான். அந்த அற்புதத்திற்கு
இன்று என்ன நேர்ந்தது சுந்தரம்? அற்புதங்களில் தீரா அற்புதம் என ஒன்றும் கிடையாதா?
விடைகளை முதலில் தந்துவிட்டு, கேள்வியின் புதிர்களை நம்மை எழுதச் சொல்கிற தேர்வு
முறைகளுக்கு நான் பழகியிருக்கவில்லையே.
இந்த ஒன்பது
வருடங்களில் நாங்கள் செய்த பிரயாண காலங்களில் பெய்த பெரு மழையை எந்தக் கடலில்
கொண்டு சேர்ப்பது? நாங்கள் அமர்ந்த பாறைகளின் மேல் விட்டுவிட்டு வந்திருக்கும்
எங்கள் உடல் சூட்டை இனி
5
என்ன செய்வது? நாங்கள்
சேகரித்த வண்ணத்துப் பூச்சிகள் காளான்கள் எல்லாம் என்னாகும்?
மூணாறில், கபினியில்
ஆகும்பேயில், ஹளேபேடுவில், மிகப் பழைய பாடல்களின் தொகுப்பில் இருந்து குணசீலன் தேர்ந்தெடுத்துப்
பாடிய ஏ.எம்.ராஜா பாடல்கள் எத்தனை? சீலனுக்கு அத்தனை நல்ல குரலும் இல்லை. அத்தனை
மோசமான குரலும் இல்லை. குரலை மீறிய நல்ல பாடகன் அவன். இதை எழுதுகிற இப்போது
கேட்கிறது அவனுடைய, ‘அன்பே வா, அழைக்கின்றதென்றன் மூச்சே, கண்ணீரில் துன்பம்
போச்சே’ பாடல். ‘வான்மதி ராவிலே நாம் உலாவலாம். இதம் தரும் காதலில்
எந்த நாளுமே’ என்று அவன் பாடும் போது காயலில் ஒரு படகில் இருந்தோம்.
ஆகாயத் தாமரை நீலமலர்களுடன் எங்கள் படகை ஏந்திக்கொண்டு இருந்தது, எங்களின் கால்கள்
பாபநாசம் ஆற்றில் அமிழ்ந்திருக்க, ’காலையும் நீயே, மாலையும் நீயே’ பாடிய போது ஒரு பலா இலை சுழன்றுகொண்டிருந்தது நீர்ச்
சுழிப்பில். இனி சீலனுக்குப் பாட என்ன பாடல்கள் உண்டு? தெரியவில்லை.
இனிமேல் என் ஓவியக்
கித்தான்களை நிரப்புவதற்கு என்னிடம் எந்த வண்ணங்களும் இல்லை சுந்தரம். தொடர்ந்து
ஓவியம் வரைந்தவர்களுக்கு சுற்றிக்கிடக்கும் இந்த வெற்றுக் கித்தான்கள் உண்டாக்குகிற
பிசைவு தாங்க முடியாத ஒன்று. சொல்லிக் கொள்ளலாம். எதையும் தாங்கலாம் என்று.
எதையும் தாங்க முடியாது என்பதுதான் நிஜம். நிஜம்தான் தாங்க முடியாத பாரம். அந்த
பாரத்தை இறக்கிவைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக் கொள்ளத்தான் இதை
உங்களுக்கு எழுதுகிறேன். இதை நீலாவுக்கும் எழுதியிருக்கலாம் சுந்தரம். வெயிலில்
உலர்த்துவது என்று ஆகிவிட்டது. எல்லா இடத்திலும் தானே வெயில் விழும். ஆனால் இங்கே
மட்டும்தான் விழும் என்பது போல ஒவ்வொருத்தரும் கொடியில் ஒரு இடத்தில் தொங்கப்
போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது இல்லையா?
சட்டென்று இந்த இடத்தில்
முடித்துக் கையெழுத்துப் போட்டிருந்தாள். எனக்குக் காக்கை உட்கார்ந்து
எச்சமிட்டுப் பறக்கிற வெற்றுக் கம்பிக் கொடியில் கிலுகிலு என்று உலோகக்
கிளிப்புகள் அசைவது போல ஒரு
6
கணம் இருந்தது.
மறுகணம் நன்றாக உலர்ந்த துணியின் மேல் சடசடத்து மழை விழ, அதை அவசரம் அவசரமாக
உருவித் தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவருவது போல இருந்தது. என் தோளில்
உலர்ந்தும் உலராமலும் ஜானகி கிடப்பது மாதிரிக் கூட.
நான் படித்து
முடித்துவிட்டேன் என்று தெரிந்ததும், ‘என்ன நீலா, இப்படி ஆயிட்டுது?’ என்று கையைப் பிடித்துக்கொண்டு அப்படியே அனு அப்பா என் பக்கத்தில்
நின்றவிதம் புதியதாக இருந்தது. ஒரு சிலை போல மற்றதெல்லாம் உறைந்துவிட்டது போலவும்
கைகள் மட்டும் நீண்டு என்னைப் பற்றியிருந்ததுமான அந்தப் பொழுதை மேலும் சில
நாட்களுக்கு என்னிடம் வைத்திருந்தேன். ‘அப்படியே கல் மாதிரி நிற்குறீங்க. கை மட்டும்
காய்ச்சல் வந்தது மாதிரித் தீயாகக் காந்துகிறது. எனக்கு ஒன்றும் ஓடவில்லை’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தேன். அதே போலத்தான் ஜானகி
எழுதியிருந்த அந்தக் கவிதை வரிகளில் ஒரு வார்த்தை கூட மறக்காமல் எல்லாம் ஞாபகம்
இருந்தது. ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ என்று அடிக்கடி
நானாகச் சொல்லிக்கொண்ட நேரங்கள் நிறைய.
அதையேதான் ஜானகி
இப்போது சொல்கிறாள். கையில் ஒரு இறகை வைத்துக்கொண்டு. இது காக்கைச் சிறகு அல்ல.
வேறு ஏதோ ஒரு புதுவகைப் பறவைச் சிறகு. சற்று நீளமாக இருக்கிறது. ஒரு அடுக்கு
வெள்ளை, ஒரு அடுக்கு பழுப்பு என நுனிவரை படியப் படிய மினுமினுத்தது.
‘இப்படி ஒண்ணை இதுவரை
பார்த்ததே இல்லையே’
அதைக் கையில் வாங்காமல்
ஜானகியைப் பார்த்தேன்.
‘நாம எல்லாப்
பறவையும் பார்க்காவிட்டால் என்ன? நாம பார்க்காத பறவையும் நம்மைத் தாண்டிப் பறந்து
போகும். இப்படி ஒண்ணோ ரெண்டோ போகிற வருகிற வழியில உதிர்ந்து கிடக்கும். குனிஞ்சு
எடுத்துக்கிடுவோம். என்னிக்காவது எத்தனை தடவைதான் இப்படி குனிஞ்சு குனிஞ்சு
எடுக்கிறது என்று நமக்கு தோணிச்சுது என்றால், எல்லாத்துக்கும் சேர்த்து அப்படியே
7
அண்ணாந்து வானத்தைப்
பார்த்துக்கிட்டு உட்கார்ந்திடலாம், என்னை மாதிரி’ என்றாள். அந்த ‘என்னை மாதிரிதான்’ கஷ்டமாக இருந்தது.
வேறு மாதிரி
பேசுகிறோம், இயல்பாக இல்லை என்று அவளுக்கே பட்டிருக்க வேண்டும். ‘இதோ உங்கள்
வீட்டுக்கு வருகிற வழியில்தான் கிடந்தது. அப்போதுதான் உதிர்ந்ததோ என்னவோ,
எடுக்கும் போது லேசா வெதுவெதுண்ணு கூட இருந்துச்சு. எங்கே பார்த்தாலும் நசுங்கின
வேப்பம் பழம். இது வேப்பம் பழத்தை விரும்பி உண்கிற பறவை ஒன்றின் இறகாகக் கூட
இருக்கலாம்’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டே கையில் இருந்த இறகை
முகர்ந்து பார்த்தாள். ‘கசப்பு வாசனை ஒண்ணும் இல்லை’ என்று சிரித்தாள்.
தொலைக்காட்சிப்
பெட்டியின் மேல் இருக்கிற புத்தர் சிலையைப் பார்த்தபடி, ‘இங்கேயே தான்
இருக்கிறாரா? வேறு எங்கேயாவது ஓடிப் போயிருப்பார் என்று அல்லவா நினைத்தேன்’ என்றபடியே அந்த ஒற்றை இறகை புத்தர் வெண்கலச்
சிலையின் மடியில் வைத்தாள். இது ஜானகி அப்படி வைக்கிற மூன்றாவது இறகு. முதலில் ஒரு
காக்கைச் சிறகு. காக்கைச் சிறகுடன் புத்தர் உட்கார்ந்திருக்கிற படம்தான்
நெடுங்காலம் சுந்தரத்தின் செல்ஃபோன் முகப்பில் இருந்தது. அப்புறம் சின்னஞ்சிறு
குருவி ஒன்றின் இறகு. இப்போது வெள்ளையும் பழுப்புமாக இது.
‘இறைவா’ என்று யார் கையிலிருந்தோ நழுவி விழும் ஒரு பொட்டலம் போல, தன் கனம்
முழுவதையும் கழற்றி வீசிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தாள். எதிரே இருக்கிற
புகைப்படத்தைப் பார்த்துச் சிரித்தாள். ‘சுந்தரம், நீ, அனு மூணு பேரும் இருக்கிற
ஒரு ஓவியத்தை வரைந்து அந்த இடத்தில் மாட்டவேண்டும்’ என்று சொன்னாள்.
இதையே முன்பும் ஒருமுறை சொல்லிவிட்டு, ‘ஒருபோதும் ஓவியம் என்பது ஒரு புகைப்பட
டிஜிட்டல் க்ளிக் அல்ல’ என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்தது.
8
‘அனு அப்பா ஊரில்
இல்லை. மார்த்தாண்டம், குழித்துறை என்று ஏதோ வேலை’ சுந்தரம் எங்கே
என்று ஜானகி கேட்பதற்கு முன்பே நான் சொல்லிவிட்டேன்.
‘முன் கூட்டிச்
சொல்லாமல் வந்தது என் தப்பு. சொல்ல முடியும் நிலையில் இல்லை. எல்லாக் காகிதங்களிலும்
கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, கோர்ட்டில், நீ யார், எந்த ஊர், எப்போ கல்யாணம்
ஆச்சு என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி, இரண்டுபேருக்கும் இதில் சம்மதம்,
எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்று பெஞ்ச் க்ளார்க் முகத்தைப் பார்த்து எச்சிலை
முழுங்கிக்கொண்டே ஒப்புக்கொண்டு, ஆறு மாதத்திற்குப்
பிறகு வாய்தா என்று கேட்ட பின், என்னிடம் யாருக்குச் சொல்லவும் எந்தச் சொல்லும்
இல்லை. எல்லாத் திசை காட்டிகளும் பிடுங்கி எறியப்பட்ட சாலையில் நான் நின்றேன்.
சுந்தரத்துக்குக் கார் ஓட்டத் தெரியாது என்று தெரியும். என்றாலும் அவனுடைய வாகனம் என் அருகே வந்து
நின்று என்னை ஏற்றிக்கொள்ளாதா என்று தோன்றியது நீலா.’ ஜானகி கால்களை மாற்றிப் போட்டுப் பின்னி உட்கார்ந்து
கொண்டு, என்னைப் பார்த்தாள். இது அவள் உட்காரும் முறை. அவளுடைய அலுவலகம் சார்ந்த
வெளிநாட்டுப் பயணத்தின் வார இறுதிச் சுற்றுலாவில் கல்லறைத் தோட்டம் ஒன்றின்
பக்கத்தில் நீல ஜீன்ஸ், ஒரு மெஜந்தா கம்பளிச் சட்டையும் அணிந்தபடி நிமிர்ந்து
உட்கார்ந்திருக்கும் படத்தை மீண்டும் பார்ப்பது போல இருந்தது.
ஒவ்வொரு
புகைப்படத்தின் பின்னாலும் சிறு சிறு வரிகள் எழுதியனுப்புகிற பழக்கம் சீலனுக்கு
உண்டு. அந்தப் படத்தில், ‘ராணியம்மா ஆசைப் பட்டா, பாடச் சொல்லி ஆணையிட்டா’ என்று எழுதியிருப்பான். இப்போது ராணி முடி துறக்கவேண்டியது ஆகிவிட்டது போல.
இப்படியான யோசனையில், துளைப்பது போல நான்
அவளை ரொம்ப நேரம் பார்த்தபடி இருந்திருக்க வேண்டும்.
ஜானகி, ‘ஹலோ’ என்று என் முன் இருக்கும் கரும்பலகையை அழிக்கும் அசைவுகளுடன் கைகளை ஆட்டினாள். ‘அனு எப்போது ஸ்கூலில் இருந்து
திரும்புவாள்? அவள் வரைந்த மயில் படம் இன்னும் என் மேஜையில்
9
ஆடிக்கொண்டு
இருக்கிறது.’ என்று என்னைக் கலைத்து அவள் பக்கம்
திருப்பிவிட்டு, என் முகத்தைத் தாண்டி
எங்கோ பார்த்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள். ‘சிறுவர்கள் வரைகிற மயில்களுக்குத்தான்
எட்டாவது நிறம் ஒன்றில் தோகை இருக்கிறது. களங்கமின்மையின் வண்ணம் அது. பெரியவர்களின்
தூரிகையால் அதை ஒரு போதும் தொடவே முடியாது என எனக்குத் தெரியும்’ என்றாள். கைகளை உயர்த்தி உடம்பை முறுக்கி, ‘யம்மா’ எனச் சத்தமாக
முனங்கினாள். ‘முன் பதிவு செய்யமுடியவில்லை. உட்கார்ந்துகொண்டே ரயிலில் வந்தேன்.
எட்டு மணி நேரம் என்பது இந்த முறை முடியவே முடியாத தொலைவில் இருந்தது. உறங்கவும்
இல்லை’ அவள் குரல் ஒரு களைத்த ஜானகியுடையதாக , தரையில் சருகு
நகர்வது போலக் கேட்டது.
‘டயர்டாக
இருக்கிறாய். சாப்பிட்டுவிட்டுப் படு ஜானகி’ என்று நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘சொல்லவே
வேண்டாம். உன் மடியில் படுத்தால் கூட, அப்படியே தூங்கிவிடுவேன்’ என்று சிரித்தாள்.
‘சுந்தரம் எப்போது
திரும்புவான். அதுவரை தூங்கவா?’ என்றாள். அவன் புதியதாக ஏதாவது கவிதைகள்
எழுதியிருந்தால் அவனை வாசித்துக் காட்டச் சொல்ல வேண்டும். தன்னுடைய கவிதைகளை
மட்டும் அல்ல. மற்றவரின் உயர்ந்த கவிதைகளை அவன் குரலில் கேட்க நன்றாக இருக்கும்.
பி.பி. ராமச்சந்திரனின் அந்த மலையாளக் கவிதையை முதல் முறை அவன் வாசிக்கும் போதே,
அது எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது தெரியுமா நீலா?’ என்று ஜானகி அதைச்
சொல்ல ஆரம்பித்தாள். ஒவ்வொரு வரியாகச் சொல்லிக்கொண்டே வந்து, ‘ இதை விட எளிமையாக/
எப்படி வெளிப்படுத்தும்/ கிளிகள்/ தங்கள் வாழ்வை?’ என்று முடித்தாள்.
கண்களை மூடி அப்படியே இருந்தாள். ‘இதை விட எளிமையாக எப்படி வெளிப்படுத்தும்’ என்பதை மட்டும் மீண்டும் சொன்னாள். எனக்குக் கண்களில் அழுகை
திரண்டுவிட்டது. நான் ஜானகியின் பக்கத்தில் போய் அமர்ந்தேன். அனேகமாக என் விரல்களில்
அப்பியிருந்த சோப்பு நுரை இப்போது முற்றிலும் தணிந்துவிட்டிருந்தது.
10
‘வெளிப்படுத்துதலை
விடச் சிரமமானது எளிமையாக வெளிப்படுத்துதல். சீலனுக்கு அது தெரியாமல் போய்விட்டது.’ என்று சொல்லும் போது ஜானகி தன் கைவிரல்
நகங்களைப் பார்த்தபடி குனிந்திருந்தாள். எந்த வகையிலாவது அவளை எனக்குத்
தொடவேண்டும் என்று இருந்தது. அப்படித் தொடுவதன் மூலம் இப்போதிருக்கிற அவளை வேறு
ஒருத்தியாக மாற்றிவிட முடியும் என நினைத்தேன்.
‘சுந்தரத்திடம் நீயே
பேசு. வந்திருப்பதைச் சொல். உனக்காக அலுவலக அட்டவணையை மாற்றிக்கொண்டு சீக்கிரமே
அவன் வரலாம். ஒன்றரை மணிக்கு அனு வந்துவிடும். எட்டு முதல் ஒன்று வரைதான் பள்ளிக்
கூடம். அதுவரை நீ படுத்திரு. நானும் அடுக்களையைக் கவனித்துவிட்டு வருகிறேன்,
சரியா?’ என்று அவளைப் படுக்கையறைக்குக் கூட்டி போனேன்.
படுக்கையின்
தலைமாட்டில் இருக்கிற சி.டி. ப்ளேயருக்குப் போனாள். ஓடவிட்டாள். சுந்தரம்
சமீபத்திய இரவில், வெளியூர் கிளம்புவதற்கு முன்பு கேட்ட, ஹரிப்ரஸாத் சௌரஸ்யா
ததும்பி வழிய ஆரம்பித்தார். காற்றில் சிறு தழல் போல் விசிறும் புல்லாங்குழலின்
முதல் பரவலிலேயே, ஜானகி நெஞ்சோடு கையை வைத்துக்கொண்டாள். தொலைந்து போகச் சம்மதம் என்பது
போல இருந்தது அந்தச் செய்கை.
‘கதவைச்
சாத்திவிட்டுப் போகிறேன்’
என்று நான் சொல்கையில்,
ஜானகி ஒரு தலையணையை எடுத்துத் தன் மடியில் வைத்திருந்தாள். ‘எதற்குச் சாத்த
வேண்டும்? கதவு திறந்தே இருக்கட்டும். சௌரஸ்யாவுக்குத் தயக்கம் இராது. உன்னுடன்
அடுக்களை வரை வருவார். முன் அறையின் புத்தரோடு உரையாடுவார். பழங்கள் உதிரும்
வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து வாசிப்பதை அவர் விரும்பக் கூடும். இதோ.. இதோ.. இந்த
இடத்தில் அவருடைய இசை ஆளற்ற தெருவில் அடிக்கிற வெயில் போல இருக்கிறது ‘ என்று
எம்பினாள்.
‘முதலில் அவர்
அடுக்களைக்கு வரட்டும். புளிக்குழம்பு பிடிக்குமா அவருக்கு என்று
கேட்டுக்கொள்கிறேன்.’ என்று சிரித்துக்கொண்டே போனேன். அப்படிச்
11
சொன்னேனே தவிர, ஒரு
நீர்த்தடம் போல அந்தப் புல்லாங்குழல் ஒலி நான் செல்கிற இடம் எல்லாம் வந்துகொண்டு
இருந்தது.
வாஷிங் மெஷினில்,
குக்கர் விசிலில், செல் ஃபோன் அழைப்பில், காஸ் சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று
கணகணவென்று சிவப்பாக மோத தெருவில் செல்லும் டெம்போ சத்தத்தில், சப்போட்டா
மாதுளேய்ய் என்ற பழக்காரன் குரலில் எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தது. கூரியர்
பையன் அல்லது அனுவின் ஆட்டோ ரிக்ஷா வருவதற்குள் குளித்துவிட வேண்டும். ஒரு
அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிற மாதிரியான நேரம் அது.
அனு அப்பாவிடம்
பேசினேன். ஜானகி வந்திருப்பதைத் தெரிவித்தேன். அவளைப் பேசு என்றேன் பேசவில்லையா
என்று கேட்டேன். பேசவில்லை போல. சௌரஸ்யா கேட்டுக்கொண்டு இருப்பதைச் சொன்னேன். ஜானகிதான்
முதலில் சௌரஸ்யாவை அறிமுகப்படுத்தினாளாம். அது காஸட் காலமாம். ‘சரி. சீக்கிரம்
வந்துவிடுங்கள். நான் அவளிடம் எதுவுமே பேசவில்லை’ என்றேன்.
‘ஃபோனை அவளிடம்
கொடுக்கட்டுமா? இரண்டு வார்த்தை பேசுகிறீர்களா?’ என்று
நகர்ந்தபோது, குளித்து அவசரமாகத் துவட்டப்பட்ட தலையில் இருந்து முதுகில் ஈரம்
இறங்கிக் கொண்டு இருந்தது. நான் படுக்கை அறை நோக்கிச் செல்கிற நேரத்தில்,
தொலைபேசியின் மறுபக்கத்தில் அலுவலகச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. ‘கொஞ்சம்
லைன்லெ இருங்க’ என்று மறுபடி சொல்லி நகர்கையில், புத்தர் சிலையின்
மடியில் ஜானகி வைத்த இறகு துடித்தது.
கதவு அகலத் திறந்தே
இருந்தது. புல்லாங்குழல் இசை ஓடிமுடிந்து, அணைக்கப் படாமல் மஞ்சள் சன்னலில்
விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பக்க விசிறிக்குப் பதிலாக இந்தப் பக்க
விசிறியின் பொத்தானைப் போட்டிருக்கிறாள். தலைமாட்டிற்குப் பதிலாக கால்மாட்டில்
காற்றுச் சுழன்று, கரண்டைப் பக்கம் சேலை விலகிக் கொலுசு தெரிந்தது.
12
மடியில் வைத்திருந்த
தலையணையைப் பக்கவாட்டில் வைத்திருந்தாள். சன்னலுக்கு வெளிப்பக்கம் இருந்து அசையும்
மஞ்சள் கொன்றைச் செடியின் நிழல் அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு இருந்தது.
‘நல்லா தூங்கிட்டா’ என்று மட்டும் ஃபோனில் சொல்லியிருக்கலாம். அதைச் சொல்லவில்லை.
‘சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று’ என்று சொல்லத் தோன்றியது. அதையும் சொல்லவில்லை. எதையும்
சொல்லவேண்டாம் என்று தூங்குகிற ஜானகியையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அந்தச் சிறகு அவளிடம்
இருந்துதான் உதிர்ந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
%
No comments:
Post a Comment