“பால் ஒரு சொட்டுக்கூட இல்லை.எல்லாவற்றையும் பூனைக்கு ஊத்திவிட்டேன் கதிர்” என்று பாலையா நாடார் நீட்டிய கண்ணாடி டம்ளரை கதிரேசன் பிள்ளை வாங்கிக் கொண்டார். கொதிக்கக் கொதிக்க தேன் நிறத்தில் ஆவி பறந்துகொண்டிருந்த டீயைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தவர்,
“ஏன் பாலையா, இந்த கடும் டீயைக் குடிக்கிறதற்கா மழையில் இவ்வளவு தூரம் புறப்பட்டு வந்திருக்கிறேன்?உம்?” என்று ஒரு மடக்கு டீயைக் குடித்துவிட்டு, மறுபடியும் அந்தக் கண்ணாடி டம்ளரையே கதிரேசன் பார்த்தவராக இருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்துஅவரே, “பால் சேர்த்தாலும் சரி, சேர்க்காமலும் சரி ஒரு நல்ல டீயை எப்போதும் போட்டுவிட முடிகிறது உனக்கு.ஆனால் எனக்கு வென்னீர் வைக்கக் கூடத் தெரியாது நாடார்.” என்று சொன்னார். பாலையா நாடார் தன்னுடைய கையில் ஒரு மடக்கு அளவு வராத டீயை இன்னொரு கண்ணாடி டம்ளரில் வார்த்துக்கொண்டு வந்தபடியே,
“வென்னீர் கொதிக்க வைக்கத் தேவையில்லாத அளவுக்கு, தான் போகிறவரை உன்னை உன் வீட்டுக்காரி பார்த்துக்கொண்டாள்.உனக்கு உன் சாப்பாட்டுத் தட்டு மட்டுமே தெரியும்.அவளுக்கு அடுப்பில் எந்த விறகு எப்படி எரியும் என்று தெரிந்திருக்கும்.அடுப்பைத் தெரிவது நெருப்பைத் தெரிவதுதான்.பெண்கள் நெருப்பையும் தண்ணீரையும் நம்மைவிட அதிகம் தெரிந்திருக்கிறார்கள். மனிதர்களைப் புரிவது அதனால்தான் சுலபம் ஆகிவிடுகிறது அவர்களுக்கு”
“உனக்கு வேறு எதையும் ஊற்றிக்கொண்டாயா?ஒரு மடக்குத் தேநீரைக் கையில் வைத்திருப்பதற்கே இவ்வளவு நீண்ட பேச்சா? பொதுவாக மாஜி பட்டாளத்துக்காரர்கள் சுருக்கமாகத்தான் பேசுவார்கள் என்று நினைத்தேன்”
இதைக் கதிரேசன் சொன்னபடி இருக்கும்போது, நாடார் வெளியே போய் வாசல் நடைப்பக்கம் கதிரேசன் சாத்திவைத்திருந்த குடையை விரித்துக் காயவைத்துவிட்டு வாசல் பக்கத்து விளக்கையும் போட்டுவிட்டு வந்தார்.
“ஏன் நாடார்?இருட்டுக்குள் இருந்தால் குடை காயாதா?எதற்கு வீணாக விளக்கைப் போடுகிறாய்?”
“எது வீண் கதிர்?ஒரு பழைய துணியைப் போல மூலையில் நீ சாத்தி வைத்திருந்த உன்னுடைய குடை இப்போது ஒரு கருப்புப் பூ போல எப்படி விம்மிக் கிடக்கிறது பார். ஈரமான கருப்புத் துணியில் இந்த பல்பு வெளிச்சம் பரவி மினுங்குவதை ஒரு முத்தம் கூட இடலாம்”
கதிரேசன் முதலில் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சிரித்தவர், குடித்துக் காலியான டீ கிளாசுடன் ஒரு நாடகப் பாத்திரம் போல எழுந்து நின்று மேலும் உரக்கச் சிரித்தார்.
“பாலையா. என் கிறுக்கு பாலையா.. நீ கல்யாணமே ஆகாத கிழட்டுப் பட்டாளத்தானாக இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை”
“நீ சொல்வதில் பாதி சரி கதிர்.கல்யாணமே ஆகாத அல்ல. கல்யாணமே செய்துகொள்ளாத பட்டாளத்தான் என்று இருக்கவேண்டும்”.
”கிழட்டுப் பட்டாளத்தான் என்பதை விட்டுவிட்டாய்”
“உனக்கும் எனக்கும் பொதுவான விஷயங்களை நான் திரும்பக் கூறுவதைத் தவிர்த்துவிடுகிறேன்” என்று பாலையா நாடார் சிரித்தபோது, தினமும் மழிக்கப்படும் வழக்கத்தில் உள்ள அவருடைய முகத்தின்தசைகள், முக்கியமாக மீசையற்ற மேலுதட்டுப் பகுதி இவற்றின் மேல் காலம் கோடிழுப்பது நன்றாக இருந்தது.
கதிரேசன் பிள்ளையிடம் பேசியவராக இருந்த நாடார், தன்னுடைய காலடியில் வந்து முனங்கி முனங்கிப் பேசிய பூனையைக் குனிந்து எடுத்துக் கையில் வைத்து, “நீ எந்தப் பாதையில் வந்தாய் கதிர்?’ என்று கேட்டார்.
“ஏன்?சேரன்மாதேவி ரோடு வழியாகத்தான்.எனக்கு இது பக்கம் இல்லையா? அதிலும் மழை வேறு”
”மழை என்ன, மழை கதிர்?அதுதான் குடை வைத்திருக்கிறாயே. ரதவீதி வழியாக வந்திருக்கலாம்”
“கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடச் சொல்கிறாய்”
“நம்முடைய கழுத்து.நம்முடைய மூக்கு. அப்படி ஒன்றிரண்டு தடவை தொட்டால்தான் என்ன?” பாலையா நாடார் இதைச் சொல்லிவிட்டு வாசலைப் பார்த்தார். அவருடைய கையிலிருந்து இறக்கிவிடப்பட்ட பூனை விரித்துவைத்த குடையைத் தாண்டி, பூந்தொட்டிகள் வரிசைப்பக்கம் சென்றுகாணாமல் போனது.
மறுபடியும் அவரே ஆரம்பித்தார்.“எதற்குச் சொல்கிறேன் தெரியுமா கதிர்? இன்று அப்படி வந்திருந்தால் தேரைப் பார்த்திருக்கலாம்”
“தேரோட்டம்தான் முடிந்து, நேற்றே தேர் நிலைக்கு வந்துவிட்டதே”
“ஓடுகிற தேர் மாதிரி, நிலைக்கு வந்த தேரும் அழகு கதிர்.நான் தேர் இழுக்க எல்லாம் போகவில்லை.தேர் நிலைக்கு வந்துவிட்டது என்று எனக்கும் தெரியும். ராத்திரி பதினோரு மணிக்கு மேல் புறப்பட்டுப் போனேன்”
“ஏதாவது இரண்டு டோஸ் மருந்து சாப்பிட்டுருப்பாய்”
“உனக்கு எப்போதும் அதே ஞாபகம்தான் கதிர்.வந்ததிலிருந்து பார்க்கிறேன்.ஒரு கண்ணாடி கிளாஸை வெறும் டீ ரெங்குவுடன் பார்க்க உனக்குத் தயாரில்லை”
“இல்லை நாடார்.மழை பெய்தது.சரி. பாலையா ஏதாவது வைத்திருப்பானே என்று தோன்றிவிட்டது”
“நேற்றும் மழை பெய்தது கதிர். தேர் ஓடின ரதவீதி மழை பெய்து எப்படிக் கிடக்கும் பார். ஓடுகிற தேரை விட ஓடி நிற்கிற தேரில் கூடுதலாக என்னவோ வந்து சேர்ந்துவிடுகிறது கதிர்.அது ஓடின நான்கு ரதவீதிகள்.அதை இழுத்த, பார்த்த நாலாயிரம் பேர் எல்லாம் சேர்ந்து அதன் மேலே புழுதி மாதிரி, சந்தனம் மாதிரி அப்பிக்கிடக்கும்.இந்த வடம், பூண் பூணாக அதிலிருக்கிற வளையம் எல்லாம் வெறும் தேங்காய் நாரா?வெறும் இரும்பா?அது எப்படி இப்படி வளைந்து, நெளிந்து, கனத்து, தரையோடு தரையாக இவ்வளவு அழகாகக் கிடக்கிறது?!நான் தேரைக் கூட அதிக நேரம் பார்க்கவில்லை.அந்த தொம்பை, குதிரை எல்லாவற்ரையும் விட, தரையோடு தரையாகக் கிடக்கிற வடத்தையே ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அதைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கண்ணீர் முட்டிவிட்டது தெரியுமா?”
“கிட்டத்தட்ட கண்ணீர் முட்டுகிற மனநிலையில்தான் நானும் உன்னைப் பார்க்க வந்தேன் நாடார். இந்த கண்ணாடி கிளாஸை நான் பார்ப்பது பற்றிய உன் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறேன்”
”ஏன் கதிர்?அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாதா?”
கதிரேசன் பிள்ளை எழுந்து, கிராமஃபோன் இருக்கிற மேஜையைத் தாண்டி அதன் வலப்புறம் இருக்கும் நான்கு இலை கருப்பு விசிறியை ஓடவிட்டு, அதன் காற்று சில அடிகள் தூரம் போய்ச் சேர்ந்து, எதிர்ச் சுவரில் உள்ள அங்குவிலாஸ் காலண்டரின் தினத் தேதிகள் படபடத்ததும், நிறுத்திவிட்டுப் பேச ஆரம்பித்தார். அவருடைய குரல் கம்மியும் தழுதழுத்தும் இருந்தது.
”என் தங்கச்சி உனக்குத் தெரியும் இல்லையா நாடார்?”
“கூடலாங் கோவில் பண்ணையாருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாரே அவரா?”
“எனக்கு சகோதரி அவள் ஒருத்திதானே”
”இல்லை.பண்ணையார் என் வாடிக்கையாளர் அல்லவா? என்னுடைய வாடிக்கையாளர் நுனியில் இருந்துதானே என் ஞாபகத்தை நான் துவங்க முடியும்” – கன்னம் ஒடுங்கிய பாலையா நாடாரின் கண்களில் ஒரு ஈரப் பளபளப்பேறி விரிந்தன. ரோமன் இலக்கக் கடிகாரத்தின் பெண்டுலம் அசையும் ஓசை மட்டும் கேட்கிற அமைதியில்அந்தப் புகைப்படத்தை அவர் நெருங்கி நின்றார்.
பன்னிரண்டுக்குப் பத்து அளவில சட்டமிடப்பட்ட அந்த மாரார் ஸ்டுடியோ புகைப்படத்தின் முட்டை வடிவத்துக்குள் ஒரு கருப்பு ஆஸ்டின் வண்டிக்கு முன்னால், கத்தி போன்ற காக்கிக் கால் சட்டையும் இடுப்பு வாரும் கால் ஜோடும் சட்டையுமாக நிற்கிற பாலையா நாடாரின் முகத்துக்கும் , இதோ இந்த நிமிடத்தின் பாலையா நாடார் முகத்துக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஒவ்வொருத்தரின் ஜீவனைத் துலக்க இப்படி ஏதாவது சிறியதாகவோ பெரியதாகவோ ஒன்று எப்போதும் இருந்துவிடுகிறது. “அவர் கார் வாங்குவதற்கு முன்பு என்னுடைய ஆஸ்டின் வண்டிதானே எல்லா பிரயாணத்திற்கும்”
”ஆமாம். எல்லா பிரயாணத்திற்கு என்றாலும், முக்கியமாக அவருடைய விருப்பப் பெண்ணின் வீடு நோக்கிய பிரயாணத்துக்கு”
”அவர் இறந்துவிட்டார் அல்லவா?”
“பத்துப் பதினைந்து வருடங்கள் இருக்கும்”
“எதற்குக் கேட்டுக்கொள்கிறேன் தெரியுமா கதிர்? அவருடைய அதே விருப்பப் பெண் என்னுடைய விருப்பப் பெண்ணும் கூட. சில சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது”
“இதை இன்றைக்கு நீ சொல்வதில் ஏதோ ஒரு பொருத்தம் இருக்கிறது நாடார்”
”கதிர். நீ உன் தங்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாய்”
“அவள் கணவருக்குச் சொந்தமான வீடு ஒன்று மேல ரதவீதியில் இருக்கிறது தெரியுமா?’
‘என் ஆஸ்டின் வண்டி இரவு தங்கிய வீடுகளை எனக்குத் தெரியாதா போகும்?”
“அந்த வீட்டில்தான் இப்போது கொஞ்ச காலமாக என் சகோதரி இருக்கிறாள். உடம்புக்கு முடியவில்லை.நடமாட்டம் கிடையாது.படுத்த படுக்கைதான்.அவள் வீம்பு அவளுக்கு. பிள்ளைகள் யாரையும் அண்ட விடவில்லை”
“பிள்ளைகளை விடு.உனக்கு என்ன?நீயும் தனியாகத் தானே இருக்கிறாய் கதிர்?
“எல்லோரும் தனிதான். ஒரு கட்டத்தில் எல்லோரும் தனியாகத்தான் இருக்க விரும்புகிறோம் நாடார்”
“தனியாக இருப்பது பற்றி எனக்குப் புரியமுடிகிறது.ஆனால் உன் துணை உன் சகோதரிக்கு உதவும் அல்லவா?”
“எழுபது வயதிற்கு மேல் யாருடைய உதவியையும் ஒரு யாசகம் என மனம் வெறுக்கத் துவங்கிவிடுகிறது.ஏன்?நானே அப்படித்தான் நினைக்கிறேன்.”
“உன்னுடைய குரலையும் படபடப்பையும் பார்த்தால், நீ அழுதுவிடுவாய் என நினைத்தேன். ஆனால் நீ எதை எதையோ பேசிக்கொண்டு போகிறாய்”
“எதை எதையோ பேசின பின்புதான், இதைச் சொல்ல எனக்கு முடிகிறது நாடார்.திடீரென்று தோன்றிற்று.கோவிலுக்குப் போன கையோடு அவளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன். சந்திப் பிள்ளையார் முக்குக்கும் அவள் வீட்டிற்கும் ரொம்ப தூரம் ஒன்றுமில்லையே”
“வாசலில் அந்தப் பன்னீர் மரம் நிற்கிறதா கதிர்?”
“கேட்கிறவனுக்கு மட்டும் அல்ல. சொல்கிறவனுக்கும் பழைய ஞாபகங்கள் இடைஞ்சல் நாடார். அந்தப் பன்னீர் மரம் இப்போது இல்லை”
“மன்னித்துக்கொள் கதிர்.என் ஐம்பதாம் வயதுகளில் கூட, அந்த வீட்டுப் பன்னீர்ப் பூக்களை நான் பொறுக்கியிருக்கிறேன்.இப்போது பொகைன்விலா வளர்ந்து நிற்கும் இந்த வீட்டு வாசலில் ஒரு பன்னீர்மரம் நிற்க நான் விரும்பியிருக்கிறேன். பானெட்டின் மேல் பன்னீர்ப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் என் கருப்பு ஆஸ்டின்… புரளும் பன்னீர்ப் பூக்களின் மத்தியில் கண் சுருக்கிப் படுத்திருக்கும் என் செல்லப் பூனை… நினைத்துப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது”
”நினைப்பு மட்டுமே வாழ்வில் அழகாக மிஞ்சும் போல இருக்கிறது நாடார்.உன்னுடைய ஞாபகத்தையும் தொடர்புபடுத்தி, மேலே சொன்னால், பன்னீர் மரம் இப்போது இல்லாத அந்த வீட்டின் தலைவாசல் கதவை அழுத்தித் திறக்க நான் சிரமப்பட்டேன். இத்தனைக்கும் ஏற்கனவே ஒரு ஆள் நுழைய முடிவது போல் அது திறந்தே இருந்தது”
”எனக்கு அந்தக் கதவின் பித்தளைக் குமிழ்கள் கூட ஞாபகம் இருக்கிறது கதிர். ஆனால் அதன் பக்கம் செல்வதற்குள் குரைக்கவே குரைக்காத ஒரு அல்சேஷியன் நாயைத் தாண்டிப் போகவேண்டியது இருக்கும். அது உண்டாக்குகிற பயம் அதனுடைய நாக்கிலிருந்து தகடு போலத் தொங்கும்”
“ஒரு ஆள் உயர மின்விசிறி மூலையில் கடகடவென்று ஓடுகிறது.வலது புறம் திரும்பிப் பார்த்தால் கட்டிலில் தன் ஞாபகமே இல்லாமல் ரெங்கம்மா கிடக்கிறாள். மேலே பொட்டுத் துணியில்லை” – பாலையா நாடாரின் முகத்தைப் பார்க்காமல் இதுவரை இருந்தவர், “என், தங்கச்சியை அந்தக் கோலத்தில் பார்க்க முடியவில்லை நாடார்” என்று எதிரே இருப்பவரின் கையைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். மீண்டும் மீண்டும் ‘ஒரு பொட்டுத் துணியில்லை’ என்று சொல்லி விசும்பினார்.
“நீ போய்ப் பார்த்தது உன் சகோதரிக்குத் தெரியுமா?”
“தன் ஞாபகமே இருக்கிற மாதிரித் தெரியவில்லை அவளுக்கு.கோட் ஸ்டாண்டில் இருந்து நழுவி விழுந்த பழைய சட்டை மாதிரிக் கசங்கிக் கிடக்கிறாள்.”
“அப்படியே நினைத்துக் கொள் கதிர். நீ பார்த்தது தெரியாதது வரை, அப்படி சட்டைத் துணியாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே”
அதெப்படி முடியும் நாடார்? என் தங்கச்சி அல்லவா அது” – உட்கார்ந்திருந்த நாற்காலியிலேயே சற்றுத் திரும்பி அதன் முதுகுப் பக்கத்தில் முகத்தை வைத்துக்கொண்டு கதிரேசன் பிள்ளை அழுதுகொண்டு இருந்தார். மற்ற அனைத்தும் அசைவின்றி இருக்க, பூந்தொட்டிப் பக்கம் இருந்த பூனை ஒரு குட்டியைக் கவ்விக்கொண்டு உட்பக்கமாகப் போயிற்று.சிறிய சிறிய இடைவெளிக்குப் பின் மூன்று குட்டிகளையும் ஒவ்வொன்றாகக் கவ்விக்கொண்டு சென்றது.கதிரேசனின் அழுகை நின்று நான்காவது முறை ஒரு பூனைக்குட்டியை அது கவ்விக்கொண்டு போகும் நகர்வை இருட்டுக்குள் எதிர்பார்த்தபடி குனிந்த தலையுடன் இருந்தார்.அவருடைய அழுகையில் வடிந்து வாய்க்குள் இறங்கிய உப்பு அவருக்கு மிகவும் தேவையாக இருந்தது.
“என்ன பண்ணுகிறாய் பாலையா?”
“இரு கதிர்.வருகிறேன்” என்று மட்டும் பதில் வந்தது.தண்ணீர்க் குழாய் திறந்து மூடுகிற நீர்ச் சிதறலுடன் நாடார் விசிலில் அதிக சத்தமின்றிப் பாடுவது கேட்டது.அந்த விசில் சத்தத்தையும் தண்ணீர் சிதறும் சத்தத்தையும் கதிரேசன் பிள்ளைக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
“அங்கே என்ன செய்கிறாய்?இங்கே வா நாடார்.இங்கே வந்து விசில் அடி” என்று இவர் சொல்லும்போது, பாலையா நாடார் கையில் ஒரு செவ்வகப் பீங்கான் தட்டை ஏந்திக்கொண்டு வந்தார்.இரண்டு குவளைகளும் ஒரு போத்தலும் அதில் இருந்தன.
“அந்த முக்காலியை இழுத்து முன்னால் போடு” என்று சொல்லி அதன் மர நகர்வு இருட்டில் இழுபடும்வரை நின்று, குனிந்து வைத்துவிட்டு.“இதற்கு ஒரு சொட்டுப் பால் கூடத் தேவைப்படுவதில்லை கதிர்” என்றார்.
எதுவுமே சொல்லாமல், அந்தக் குவளைகளை, போத்தலை, பாலையா நாடாரை எல்லாம் கவனித்தபடி இருந்தவர்,வாசலைத் தாண்டி வெளியே பார்வையைத் திருப்பினார்.
“உண்மைதான் நாடார். ஈரக் குடையை உன்னால் அழகாக விரித்துவைக்க முடிகிறது” என்று அதையே பார்த்துக்கொண்டு இருந்தார், குடையின் மீது பதிந்திருந்த பார்வையை அகற்றாமலேயே, “உன்னை ஒன்று கேட்கலாமா நாடார்?” என்று தயங்கி, ஒரு சிறு ஓடையைத் தாண்டி அப்புறம் செல்வதற்குக் கால்களை நிதானிப்பது போல அமைதியாகி,
“உன்னுடைய விருப்பப் பெண், அதுதான் என் தங்கை கணவருடைய விருப்பப் பெண் இப்போது இருக்கிறாளா?’ என்று கேட்டார்.
கையில் எடுத்து வாயருகே கொண்டுபோக இருந்த கண்ணாடிக் குவளையை அப்படியே நெஞ்சு மட்டத்தில் நிறுத்திவிட்டு, திரவம் படர்வது போல மினுமினுக்கும் கண்களுடன் பாலையா நாடார் அப்படியே இருந்தார்.
%%%%
உயிர் எழுத்து
ஆகஸ்ட் - 2103
ஒரு பழைய துணியைப் போல மூலையில் நீ சாத்தி வைத்திருந்த உன்னுடைய குடை இப்போது ஒரு கருப்புப் பூ போல எப்படி விம்மிக் கிடக்கிறது பார். ஈரமான கருப்புத் துணியில் இந்த பல்பு வெளிச்சம் பரவி மினுங்குவதை ஒரு முத்தம் கூட இடலாம்”
ReplyDeleteஎன்னமோ செய்கிறது.. வாசித்து முடிக்கும்போது..
2103!!!!
ReplyDeleteநண்பர் ரிஷபன் சொல்லி உள்ளது போலவே
ReplyDeleteமனதை என்னமோ செய்கிறது .
வாசகனின் சிந்தனைப் போக்கை மாற்றுவதை விட வேறு என்ன
பெரிய சாதனை புரிய வேண்டும் ஒரு படைப்பாளி
உனக்கு உன் சாப்பாட்டுத் தட்டு மட்டுமே தெரியும்.அவளுக்கு அடுப்பில் எந்த விறகு எப்படி எரியும் என்று தெரிந்திருக்கும்.அடுப்பைத் தெரிவது நெருப்பைத் தெரிவதுதான்.பெண்கள் நெருப்பையும் தண்ணீரையும் நம்மைவிட அதிகம் தெரிந்திருக்கிறார்கள். மனிதர்களைப் புரிவது அதனால்தான் சுலபம் ஆகிவிடுகிறது அவர்களுக்கு”
ஐயா நீங்கள் அதிகம் எழுத வேண்டும் உங்கள் தமிழ் நடையில் நாங்கள் தமிழ் பழகுகிறோம்
ReplyDelete