கீதா தான் தொலைபேசினாள். கணபதியண்ணனுடைய மகள். குரல் கலங்கியிருந்தது. ‘சித்தப்பா, நான் அண்ணா நூலகத்தில இருந்து பேசுறேன்.’. அந்தப் பக்கம் கண்ணீரைத் துடைத்துவிட்டு மறுபடி பேசி
இருக்க வேண்டும். ஒரு சிறிய இடைவெளி ஒரு பெரிய கடல் தன்
கொந்தளிப்பை முடிக்கப் போதுமானதாக இருக்கிறது.
‘சொல்லும்மா’ என்கிறேன். இது போன்ற சமயங்களில் ஒரு சொல் மட்டுமே நமக்கு எஞ்சுகிறது. அந்த ஒரு சொல் மறுபக்கத்திற்குப் போதுமானதாகவும் மிகவும் தேவையானதுமாகவும் இருக்கிறது.
‘அப்பா புக், நாலு காப்பி இங்கே வச்சிருக்காங்க சித்தப்பா. அப்பா இதைப்
பார்க்காம போயிட்டாங்களே’ - ஒரு வழியும் அழுகைக்கு அறுநூறு கிலோ
மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருந்துகொண்டு, அவளைப் பார்க்க முடிந்தது எனக்கு.
’ஃபோட்டோ எடுக்கக் கூடாதுண்ணு போட்டிருக்காங்க சித்தப்பா. ஆனா
அப்பா புக்கை நான் கைல வச்சுப் படிக்கிற மாதிரி, ஜனனி செல்லுல ரெண்டு மூணு எடுத்திருக்கா, ஒருத்தருக்கும் தெரியாம’ குரலின் கம்மல் இன்னும் குறையவில்லை. உப்பு மேல் உப்புக் குவிந்து வெயிலில் மினுங்கிக் கொண்டிருக்கும் உப்பளத்தை நான் பார்க்காதவனா? நான் கேட்டுக் கொண்டு மட்டும் இருக்கிறேன்.
‘இதுக்குத் தானே சித்தப்பா, அப்பா ஆசைப் பட்டாங்க?’- அவளுக்கு இன்னும்
சொல்வதற்கும் அழுவதற்கும் அந்தப் புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலும் எல்லா வரிகளிலும் நிறைய ஞாபகங்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன.
அது எங்களுடைய கணபதி அண்ணனுடைய புத்தகம். ’திருவேந்தி’ என்கிறதும் அண்ணனுடைய இன்னொரு பெயர்தான். முழுமுதலோன், கணநாதன், முமு, தெய்வமகன் இப்படி நிறையப் பெயர்களைப் புனைந்து
நின்றவன் அவன். ‘திருவேந்தி, என்கிற இந்தப் பெயரில் தான் அறியப்பட மிகவும் விரும்பினான்.
‘குறுந்தொகை’ப் பாடல்கள் அனைத்துக்கும் எளிய கவிதை நடையில் அவன் உரை எழுதியவற்றுள் முதல் நூறை சந்தியா பதிப்பகம் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகம் அண்ணா நூலக வரிசையில் இருப்பதைப் பார்த்துத்தான் இந்தத் தொலைபேசி அழைப்பு.
%
இரண்டு நாட்களாகச் சென்னையில் இருக்கிறேன்.நேற்று மாலை சந்தியா பதிப்பகத்தில் இருந்து ஒருஅழைப்பு. எங்கிருக்கிறீர்கள்? சொன்னேன். முகவரி சொல்லமுடியுமா? முடிந்தது.
இப்போது அங்கேதான் இருக்கிறீர்களா? ஆமாம் அங்குதான்.
‘ஒன்றுமில்லை. குறுந்தொகை இரண்டாவது தொகுப்பு அச்சாகி வந்துவிட்டது. பத்து பிரதிகளை அனுப்பிவைக்கிறோம். நாளைக்கு இருபத்தி
இரண்டாம் தேதி அல்லவா?’ சௌந்திர ராஜன் ஸார், உப்பும் இனிப்பும் கலந்த அந்தத் தகவலை எவ்வளவு நேர்த்தியான, எதுவும் ஒரு இணுக்குக்
கூடிவிடாத குரலில் சொல்கிறார். சிலருக்குத்தான் மூச்சையும் குரலையும் இவ்வளவு சீராகப் பயிலமுடிகிறது.
சொன்ன மாதிரியே, கொஞ்ச நேரத்தில் புத்தகப் பிரதிகள் வந்து சேர்ந்து
விட்டன. பின்னட்டைதான் முதலில் கண்ணில் படுகிறது. இளையராஜா வரைந்து, ‘உயிர் எழுத்து’ ஆகஸ்ட்-2011 இதழ் முகப்பில் சுதீர் செந்தில் வெளியிட்டிருந்த அதே அற்புதமுகம். அற்புதச் சிரிப்பு, அற்புத முன்பல் இடைவெளியுடன்.
%
அண்ணனுக்கு மிகப் பெரிய வருத்தம். தன்னுடைய அந்த முதல் நூறு குறுந்தொகைப் பாடல்களுக்கான கவிதையுரையை, அதற்குரிய பெறுமதி
தந்து யாரும் பொருட்படுத்தவில்லை என்று. யாருமே மதிப்புரைக்காமல், ஒரு கவனிப்பாரற்ற சருகுபோல நம் சாலைகளில் உதிர்ந்து மக்குகிற புத்தகங்களைப் பற்றி எல்லாம் அண்ணனுக்குஎதுவும் தெரியாது அல்லவா. அவனுக்குப் பதிப்பகத்தார், நூலக ஆணைக்குழு, புத்தகவிமர்சனங்கள், புத்தகக்கண்காட்சி, இது தவிர அவன் இதுவரை மதித்துவந்த கவிஞர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் என் மீது இது குறித்து நிறைய மறு யோசனை இருந்தது. ஒரு நேரடி உதாரணமாக, என்னுடைய இத்தனை வருடத் தொகுப்புக்களுக்கும் இதுவரை மூன்று நான்கு விமர்சனங்கள் மட்டுமேதான் வந்திருக்கின்றன என்று சொன்னதெல்லாம் கூட அவனுக்குச் சமாதானம் தரவில்லை. ஒரு மயில் இறகைக் கொண்டாடுகிறவர்கள் ஒரு முழுத்தோகை விரிப்பைக் கண்டு கொள்வதில்லை என்ற மயிலும் மயில் சார்ந்த உண்மைகளையும் அவன் கணக்கில் எடுக்கவில்லை. அவனுக்குத் தீராத ஆசை இருந்தது, தன்னுடைய அந்த மொத்தக் குறுந்தொகை உரை நானூற்று ஒன்றும் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டாடப்பட வேண்டும் என.
%
அதற்குப் பதிலாக நாங்கள் அவனுடைய துக்கத்தைக் கொண்டாட வேண்டியது ஆயிற்று. இதோ இதைத் தட்டெழுதிக் கொண்டிருக்கிற இதே ஜூன்.22ம் தேதி, இதே ஆதம்பாக்கத்தின் ‘மகிழம் பூ’ பிற்பகலில், ஒரு மூன்று நிமிட தீவிர இதயப் பிசகில் அவனை, சென்ற வருடம் இழந்து விட்டிருக்கிறோம்.
இந்த நினைவு தினத்தில் இங்கிருக்க வேண்டும் என்பதற்காகவே செம்மல், (கணபதியண்ணன் தன் பையனுக்கு இட்டிருக்கும் அழகிய தமிழ்ப் பெயர்)
அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறான். அவனுடைய விருப்பத்தில்தான்
இந்த இரண்டாவது தொகுதியும் அச்சாகியிருக்கிறது.
நான் இந்தப் புத்தகப் பிரதிகளுடன் இந்த வீட்டுக்குள் வரும்போது கணபதி
அண்ணனின் மாலையிட்ட சிரிப்பின் முன் விளக்கெரிந்துகொண்டிருந்தது.
கீதா, ‘வாங்க சித்தப்பா’ என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அசையாது நிமிரும் சுடரையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
புத்தகங்களைக் கொடுத்தேன். ‘வந்துட்டுதா சித்தப்பா’ என்றாள். அதற்கும்
ஒன்றும் சொல்ல முடியவில்லை. அண்ணனைக் கும்பிட்டு, கண்மூடி அவனிடமிருந்து எடுத்துக் கொண்ட பேனாக்களும் கருப்பு இந்திய மைத் தூரிகைகளும் எனக்குள்ளே இருந்து நடுங்க, அப்படியே நின்றேன்.
நான் ஒரு அசைவற்ற கணத்திலிருந்து மீண்டு, அந்த விளக்குச் சுடருக்குத்
திரும்பியபோது, குறுந்தொகை இரண்டாம் தொகுதி அண்ணன் முன்னால்
‘படைக்கப்’ பட்டிருந்தது.
%
நான் காத்திருக்கிறேன்.
அண்ணா நூலகத்தில் இருந்து, ‘குறுந்தொகை இரண்டாம் தொகுதியைப்
பார்க்கச் சந்தோஷமா இருக்கு கல்யாணியண்ணன்’ என உங்களில் யாராவது செய்யப் போகும் தொலைபேச்சுக்காக.
%
நெகிழ்வான பதிவு சார்
ReplyDeleteவிரைவில் அவரின் புத்தகத்தை படிக்கிறேன்
இந்த முறை இந்திய பயணத்தில் வாங்கக் குறித்து வைத்திருக்கிறேன்.
ReplyDeleteஉங்களது மூன்றாவது கடிதத் தொகுப்பு வருவதாக புதிய பார்வையில் படித்தேன்.
எப்போது வருகிறது? சந்தியா வெளியீடா?
/ஒரு மயில் இறகைக் கொண்டாடுகிறவர்கள் ஒரு முழுத்தோகை விரிப்பைக் கண்டு கொள்வதில்லை என்ற மயிலும் மயில் சார்ந்த உண்மைகளையும் அவன் கணக்கில் எடுக்கவில்லை. /
ReplyDeleteஎவ்வளவு உண்மை!
இதோ இந்த பதிவுக்காவது ஒரு பின்னூட்டம் இட்டுவிட வேண்டும் என உட்காரும்போதெல்லாம் வாசித்த கணங்களின் மனவோட்டங்கள் கலைக்க விரும்பாத ஒரு அமைதியில் அப்படியே கிளம்பி போய் விடுகிறதுதான்.
ReplyDeleteஎங்கிருந்து அந்த உணர்வுகளை கடத்தும் வார்த்தைகள் கிடைக்கப்பெறும் என ஏற்படும் ஆச்சரியங்கள் இன்னமும் விலகினபாடில்லை.
கணபதி அண்ணன் குறித்து ஏற்கெனவே ஒரு பதிவு திரு.சுல்தான் அவர்களின் வலைப்பக்கத்தில் வாசித்ததாக நினைவு.
எங்கோ தொலைவிலிருந்து என்னை, எங்களை ஆற்றுப்படுத்துகிறீர்கள். இந்த வாழ்வும் இதன் அன்றாடங்களும் தரும் நெருக்கடியிலிருந்து விலகியிருக்கவும், சுயம் சார்ந்து முகமூடிகளை கழட்டி ஓய்வெடுக்கவும், இன்னும் சொல்லவியலாத எது எதற்காகவோ உங்கள் எழுத்துக்கள்தான் நிதமும் உள்ளுக்குள் பொங்கி வழிந்துகொண்டிருக்கிறது.
இதோ இப்போதுமே வாசித்து முடித்தபோது ஒரு மெல்லிய மின் அதிர்வு உள்ளுக்குள் ஓடி மறையும் கணங்களில் அந்த சுடரின் ஒளி தெரிந்து மறைவது போலத்தான் இருக்கிறது.