Tuesday, 5 November 2019

நாகம்மக்கா.



அவள் விகடனில்  கி.மணிவண்ணன் பத்துப் பன்னிரண்டு பேரைப் பேட்டி கண்டு, அவர்கள வாழ்வில் பாதித்த பெண்களைப் பற்றிச் சொல்லச் சொல்லி, ‘யாதுமாகி நின்றாள்’ என்று தொடரை எழுதிவந்தார்.

இயக்குநர் மகேந்திரன்,பிரபஞ்சன், நல்ல கண்ணு ஐயா, பாஸ்கர் சக்தி, பழநி பாரதி, ட்ராட்ஸ்கி மருது எல்லோரும்  சொல்லியிருந்தார்கள். மணிவண்ணன் அந்த வரிசையில் எழுதக் கேட்டார். நான் எழுதிக்கொடுப்பதற்குள் அந்தத் தொடரே நிறைவடைந்துவிட்டது.

அது புத்தகமாகும் நிலையிலும் கடந்த இரண்டு வருடங்களாக என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.  நானும் தவணை சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் எழுத வாய்க்கவில்லை. எழுதும் முன்பு நாகம்மக்காவை ஒரு தடவையாகவே பார்த்துப் பேசவேண்டும், ஒரு பழைய புகைப்படத்தை வாங்கவேண்டும் அதன் கருப்பு வெள்ளை உயிர்ப்போடு என்று நினைத்தேன்.

நான்கு ஐந்து தினங்களுக்கு முன், என்னுடைய நெருக்கடி மிகுந்த, மனம் உலர்ந்த நாள் ஒன்றில் , மணிவண்ணன் எந்தத் தொடர்பும் கொள்ளாமல், ஒரே ஒரு கடிதத்தை மட்டும் எழுதி உள்ளே வைத்து, டிஸ்கவரி புக் பேலஸ்  ‘நல்லவுயிர் நீ எனக்கு என்ற பெயரில் வெளியிட இருக்கும் அந்தக் கட்டுரைத் தொகுப்பின் பி.டி.எஃப்  அனுப்பி வைத்திருந்தார். எனக்கு வேறு வழியில்லை.

இப்போதும் நாகம்மக்காவைப் பார்க்காமல் இதை எழுத எனக்கு இஷ்டமே இல்லை. எனக்காக இரண்டு மூன்று வருடங்களாக இதைப் புத்தகமாக்காமல் காத்திருந்த மணிவண்ணனுக்காக , ஒரு வகையில்  ‘வல்லா வல்லடியாக’ இதை எழுதியனுப்பினேன்.

இன்று மறுபடி வாசித்துப் பார்க்கையில், ஏன் இதைச் சமவெளியில் வெளியிடக் கூடாது என்று தோன்றியது. சமவெளி வலப் பூவில்  2018ல் ஒரே ஒரு பதிவுதான் இட்டிருக்கிறேன்.

இது 2019ல் இடும் முதல் பதிவு.

%





நாகம்மக்கா.
நாகம்மக்காவைக் கடைசியாகப் பார்த்து ரொம்ப வருடங்கள் இருக்கும், என்று நான் இதை எழுத ஆரம்பிக்க மாட்டேன்.

நாகம்மக்கா இங்கேதான், மதுரை சர்வோதயா நகரில் வீடு கட்டி பிரகாஷ் அத்தானுடன் சௌகரியமாக இருக்கிறாள். மகன் வெளிநாட்டில் இருக்கிறான். மகள் பெங்களூரில் இருப்பாள் என்று நினைக்கிறேன். ஒருத்தரைப் பார்த்து எத்தனை வருடங்கள் தான் ஆகியிருக்கட்டுமே. இன்றோ நேற்றோ சென்ற மாதமோ  பார்த்துக்கொள்ள வாய்க்கவில்லை என்பதற்காக, அவரைக் ’கடைசியாகப் பார்த்தது’ என்று எப்படி, ஒரு வாக்கியத்தை நான் தொடங்க முடியும்? சமீபத்தில் பார்த்தது என்று சொல்லலாம்.

நாகம்மக்காவைப் பற்றியும் அப்படித்தான் .நாகம்மாள் என்ற பெயருடைய அக்கா என்பவளே நாகம்மக்கா. சமீபமாக நாகம்மக்காவைப் பார்த்தது, காளவாசல் பக்கம் பிச்சைப் பிள்ளை சாவடி மாஸ்டர் மகாலில்’. அது ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக இருக்கும். அங்குதான் அவளுடைய மகன் குமாருக்குக் கல்யாணம் நடந்தது. இந்தப் பக்கத்துப் பையன் வடக்கத்திப் பெண் ஒருவரை விரும்பிச் செய்துகொள்வது புதிது இல்லையே..
வடக்கத்தி, தெக்கத்தி எல்லாம் நாகம்மக்காவுக்குக் கிடையாது. எல்லாத் திசையும் அவளுக்கு ஒன்றுதான். எல்லா மனிதரும் அவளுக்கு வேண்டியவர்கள் தான்.  இவர் பெண், அவர் ஆண் என்றெல்லாம் தள்ளி நிற்க மாட்டாள். பிடித்திருந்தால் கையைப் பிடித்துக் கொள்வாள். வலது கையில் தான் வாட்ச் கட்டியிருப்பாள். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள் பொதுவாக வலது கையில் கடிகாரம் கட்டுகிறவர்களாக இருக்கிறார்கள்.  எதையாவது அவளைக் கேலி செய்து சொன்னால், அந்தக் கையால் முதுகில் ஒரு அடி கொடுப்பாள். கண் இடுங்கிவிடும் சிரிக்கும் போது. முன் பற்கள் கொஞ்சம் தேய்ந்த மாதிரி இருக்கும். லேசாக ஈறு தெரியும். ஆனால் சிரிப்பு என்பது வெளியே இருந்து வருவதா? உள்ளே இருந்து அல்லவா. அப்படிச் சிரித்துவிட்டுக் கண்ணைத் துடைத்துக் கொள்வாள். நாகம்மக்காவுக்கு அழாமல் சிரிக்கத் தெரியாது என்பது உண்மைதான்.

சொல்லப் போனால் நாகம்மக்கா சிரிக்கும் போது இப்படிக் கண் கசியுமே தவிர,  அழவேண்டிய இடங்களில் அழ மாட்டாள். மற்றவர்களையும் அழவிடமாட்டாள். ‘இப்போ என்ன நடந்து போச்சு?’  என்று என்னிடம் சொல்லியிருக்கிறாள். எல்லோரிடமும் சொல்லியிருப்பாள். ‘இப்போ என்ன நடந்து போச்சு?’ என்று நாகம்மக்கா அவளிடமே சொல்லிக்கொண்டுதான் , ஆரல்வாய்மொழியில் இருந்து, பெருங்கொண்ட குடும்பமாக இருந்து நொடித்துப் போன அப்பாவோடும் தம்பி சொக்கலிங்கத்தோடும் ஆரல்வாய் மொழி வீட்டையும் விளையையும் விட்டுப் புறப்பட்டு இருப்பாள்.

சொக்கன் என்று நான் கூப்பிடுகிற சொக்கலிங்கமும் நானும் தான் நண்பர்கள். அவன் நாகர்கோவிலில் பி.காம் படித்தான். நான் தூத்துக்குடியில் படித்தேன். ஜெயித்த சமயம் தெரிந்திருந்தால் அவனை மட்டுமே தெரிந்திருக்கும். தோற்றதால் தான் நாகம்மக்காவையும் தெரிந்தது. ‘கறை நல்லது’ போல, தோல்வி நல்லது.  முதல் தடவை, தோற்று இரண்டாம் தடவையும் அப்படி ஆன ஒரு அதிகாலையில் தான், நான் வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் திருநெல்வேலியில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டேன்.

மதுரையில் தான் நாகம்மக்கா, சொக்கன் எல்லோரும் இருந்தார்கள். நாகம்மக்காவுக்கு  சர்வோதயாவில் வேலை. பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் கிடைத்ததாக இருக்கும்.  சொக்கன் சோத்துக்கடைத் தெரு பாட்டா செருப்புக் கடையில் சேல்ஸ்மேன் ஆகச் சேர்ந்திருந்தான். அல்லது சேரவில்லை. எனக்குச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

நாகம்மக்கா வீடு நரிமேடு, கட்டபொம்மன் தெருக் கடைசியில் இருந்தது. இப்போது இருக்கும் நரிமேடும் பீபி குளமும் அல்ல, 1968 ல் இருந்தவை. ஒரு டீக் கடை மட்டுமே ஞாபகம் வருகிறது. கட்டபொம்மன் தெரு எல்லாம் அப்போது ஒரு அடையாளம் தான். அதன் வழியாகப் போக வேண்டும். பூசணி  படர்ந்து மஞ்சள் கிண்ணமாகப் பூத்துக் கிடக்கும் குப்பை மேடு. வாய்க்காலோ சாக்கடையோ ஒன்று வரும். ஒரு பத்துப் பதினைந்து அடியில் ஒரு மரப்பாலம் ஒடுக்கமாக இருக்கும். அதில் போனால், வயலாகத் திறந்து கிடக்கும் ஒரு இடத்தில், வயல் பக்கம் பார்த்து ஒரேவரிசையில் பொது ஊடு சுவரோடு மூன்று வீடுகள். முதல் வீட்டில் நாகம்மக்கா.

அங்கேதான் போய் நின்றேன். சொக்கனும் ஃபெயில். நானும் ஃபெயில். அக்கா ஒன்றும் சொல்லவில்லை. ‘சொல்லிட்டு வந்தியா, சொல்லாம வந்தியா?’ என்று கேட்டாள். இதற்கு எல்லாம் பதில்  சொல்வோம் என்றா அப்படிக் கேட்பார்கள். ‘ விடியதுக்கு முந்தியே புறப்பட்டிருப்பே. அப்புறம் குளிச்சுக்கிடலாம். காப்பி குடி’ என்றாள். காப்பி குடி என்றால் காலைச் சாப்பாடு என்ற ஆராம்புளி அர்த்தம். நான் அழுதேன். நாகம்மக்கா என் தோளில் கையை வைத்தாள். ‘ இப்போ என்ன நடந்து போச்சு?’ என்றாள். ‘ரெண்டு பேரும் சாப்பிடுங்க’ என்றாள்.

இதைச் சொல்லும் போது நாகம்மக்காவுக்கு வயது  25 இருக்குமா குறைவாக இருக்குமா தெரியவில்லை. இப்போதும் அப்படித்தான். 75 இருக்குமா, கூடுதலாக இருக்குமா என்று சொல்ல முடியவில்லை. நாகம்மக்காவுக்கு வயது தெரியவே தெரியாது. இப்படிக் குடும்பம் நொடித்து ஊரைவிட்டு வெளியேறி இன்னொரு இடத்தில் கால் ஊன்றுகிற எல்லாப் பெண்களும் தன்னுடைய வயதை ஒரு இடத்தில் நகராமல் நிறுத்திவைத்துவிடுவார்கள் போல. சின்னவயதில் நடுவயதுபோல இருந்தது போல, நாகம்மக்கா அவள் மகன் கல்யாணத்திலும் அதே நடுவயதில் தான் இருந்தாள்.

அந்த நடு வயதுத் தோற்றத்தை நாகம்மக்கா தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தில் இருந்து எடுத்து தன்னை அப்படியே அந்தச் சாயலில் வார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நாகம்மக்கா வீட்டுச் சுவரில் ஒரே ஒரு புகைப்படம் தான் இருக்கும். அது நாகம்மக்காவின் அம்மா பழனியாச்சியின் படம். சின்ன வயதிலேயே ’வாவரசி’ ஆக இறந்து போன பெண்களை, ஏதோ இன்னொரு படத்தில் இருந்து எடுத்து ‘என்லார்ஜ்’ செய்து சட்டமிடப்பட்ட முகம். அப்படியே நாகம்மக்கா அம்மா ஜாடை தான். சொக்கனிடமும் என்னிடமும்  நாகம்மக்கா ஒரு அம்மாவின் சாயலை மட்டுமே காட்டிக் கொண்டு இருந்தாள்.

நாகம்மக்கா வீட்டில் அவளுடைய அம்மா படம் தவிர எந்தச் சாமி படமும் இல்லை. அவள் சாமி கும்பிட்டு நான் பார்த்ததில்லை. நானாக, நாகர்கோவில் பக்கத்தில் ஏற்றுகிற  வாழைப்பூ விளக்கை அந்த ஒற்றைத் தட்டு நரிமேடு கட்டபொம்மன் தெரு வீட்டில்  வரைந்துகொள்கிறேனே தவிர நாகம்மக்கா விளக்கேற்றுகிற ஒரு காட்சியை என்னால் எந்த நினைவின் ஆழத்திலிருந்தும்  மீட்க முடியவில்லை. அவளுடைய வெளிச்சமே போதும் என்று நினைத்திருக்க வேண்டும்.

சொக்கன் தன் பெயரை எஸ்..சொக்கலிங்கம் என்று எழுதுவான். அதாவது சிவதாணு சொக்கலிங்கம். நாகம்மக்கா தன் பெயரை பி.நாகம்மாள் என்று எழுதுவாள். பழனியாச்சி நாகம்மாள் என்பதாக. நாகர் கோவில் பக்கம் மகன்கள் அப்பாவின் இனிஷியலையும் பெண்கள் அம்மாவின் இனிஷியலையும் போட்டுக்கொள்வார்களோ என்னவோ. ஆனால் P.நாகம்மாள் என்ற பழனியாச்சி நாகம்மாள் பின்னாளில் பிரகாஷ் அத்தானைக் கட்டிக் கொண்ட பின், அதே P. நாகம்மாள் ஆகவே, பிரகாஷ் நாகம்மாள் ஆகவே இருந்தாள்.

நாகம்மக்கா வீட்டு பிரகாஷ் அத்தான் ரொம்ப மென்மை. பேசவே மாட்டார் என்பதைக் கொஞ்சம் தாராளமாகச் சொன்னால், குறைவாகத்தான் பேசுவார் என்று சொல்லலாம். மற்றப்படி உதடு கூட்டி, பல் தெரியாமல் ஒரு சிரிப்புச் சிரிக்கையில் பேரழகன் ஆகிவிடுவார். முன் பின் தெரியாத இடம். மதுரைக் காரர்கள் குடும்பம்தான். ஆனால் அருமையான மனிதர். நாகம்மக்கா அவளே விசாரித்து அவளே பேசி அவளே சுருக்கமாக நடத்திக்கொண்ட கல்யாணம். நாகம்மக்கா ஒரு நல்ல டீச்சர் போலவும் பிரகாஷ் அத்தான் ஒரு நன்றாகப் படிக்கிற பையன், வியாச நோட்டுகளை எடுத்துக்கொண்டு கூட வருவது போலவும் இருப்பார்கள் . முன்பே சொன்னது போல, ஒரு நடுத்தர வயதின் நிதானம் அந்த வயதிலேயே அக்காவுக்குக் குடும்பம் நடத்துவதில் வந்திருந்தது.

அப்புறம் நானும் பி.காம் பாஸ் பண்ணினேன். எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில் பதிந்தேன். வேலை இல்லாமல் இருந்தேன். சர்வீஸ் கமிஷன் எழுதினேன். எல்.ஐ.சி தேர்வு எழுதினேன். ஸ்டேட் பேங்க் தேர்வு எழுதினேன். சமூக நலத் துறையிலும் ஸ்டேட் பேங்க்கிலும் வேலை கிடைத்தது. வங்கிப் பணியில் சேர்ந்தேன். கல்யாணமும் ஆயிற்று.

கல்யாணத்திற்கு நாகம்மக்கா வந்திருந்தாள். நான் கூட, முகத்தை முதன் முதலாக, தாலி கட்டும் போதுதான் பார்த்தேன். நாகம்மக்கா, கல்யாண மண்டபத்துக்குப் பக்கமாகப் பெண் வீடு இருந்ததால், நேரடியாக அங்கேயே போய்விட்டாள். என்னை விடவும் , எங்கள் வீட்டு ஆட்களையும் விட முதல் ஆளாகப் போய் இன்னார் என்று சொல்லி அறிமுகமாகிக் கொண்டவள் நாகம்மக்கா..

‘ சரியா விடியக் கூட இல்லை. குளிச்சு முழுகி தலையை விரிச்சுக் காயப் போட்டுக்கிட்டு இருக்கேன். மதுரையில இருந்து வாரேன். நான் கல்யாணிக்க ஃப்ரண்ட் சொக்கனுக்க அக்கா. நாகம்மாண்ணு,  முதல் ஆளா இவங்க வந்து நிக்காங்க’ என்று நாகம்மக்கா வந்ததை சங்கரியம்மா சிரித்துக் கொண்டே சொல்வாள்.

நாகம்மக்கா எப்போதும் அப்படித்தான். மிக இயல்பாக எல்லா இடத்திற்கும், எல்லோரிடமும் முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்துவிட அவளுக்கு முடியும். எல்லா இடத்துக்கும், எல்லோரிடமும் போய்ச் சேர்ந்துகொள்வதை விட உலகத்தில் கூடுதலான ஒன்று இருக்கிறதா என்ன?

’ நாகம்மக்காவிடம் அப்படி என்ன இருக்கிறது. இவரைப் போலத்தான் ஆயிரம் பேரைச் சொல்லலாமே’ என்று கேட்கலாம். அதுதான் எனக்கும் முக்கியம். இவரைப் போல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்ற வெளிச்சத்தை முதல் முதல் கொடுத்த மனுஷி என்பதால் தான் நாகம்மக்கா எனக்கு முக்கியம். எந்தப் பாறையையும் புரட்டாமல், தன் போக்கில் தன் பாதையில் ’இப்ப என்ன நடந்து போச்சு?’ என்று சென்றுகொண்டே இருந்தது எனக்குப் பெரிய ஆதாரம்.

என்னிடம் நாகம்மக்காவின் படம் ஒன்று கூட இல்லை. அப்படியே இருந்து உங்களிடம் காட்டினாலும், ‘மூக்கு நன்றாக இருந்தது, முழி நன்றாக இருந்தது என்று சொல்ல இந்த முகத்தில் தீர்க்கமாக அப்படி ஒன்றுமே இல்லை’ என்று யாராவது சொல்லலாம். ஒன்றுமே இல்லாதவர்களால் மட்டுமே அழைத்துச் செல்லப்பட முடிகிற நல்ல இடங்கள் இந்த வாழ்க்கையில் நிறைய இருக்கின்றன. நான் அப்படிச் சில அடைந்திருக்கிறேன்.

நாகம்மக்காவிடம் ‘உங்க படம் ஒண்ணு வேணும். கொடுங்கக்கா’ என்று கேட்டால், ஒரு வேளை சொல்லக் கூடும், ‘எம் படம் எதுக்கு? அதுதான் எங்க அம்மைக்க படம் இருக்கே’.

நாகம்மக்கா இதைச் சொல்லும் போது சிரிப்பாள். தேய்ந்த முன் பற்களும் ஈறும் தெரிய, கண்கள் இடுங்க. அது அவள் உள்ளே, என் உள்ளே, எல்லோரின் உள்ளே இருந்து வருகிற சிரிப்பு.
%
கல்யாணி.சி


Friday, 23 February 2018

இறப்பில் இருந்து...











நான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பே அது என் அளவில் இறந்துபோயிருந்தது.

இப்போதும் அது சாவிலிருந்து தன்னை உருவிக்கொண்டு வந்ததாகவே, மிகுந்த நோய்மையுடன், ஒரு சரிந்த நடையுடன், வெயிலிடமிருந்து தன்னைப் பிய்த்து எடுப்பதும் அப்பிக்கொள்வதுமாகப் போய்க்கொண்டு இருந்தது. ஒரு குரைப்பு இல்லை. முனங்கல் இல்லை.  உணவே    தேவையற்ற, உணவே  தென்பட விரும்பாத ஒரு திசையை அது கண்டு பிடித்திருந்தது. அம்பாரம் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருந்த பேபி ஜல்லியிடம் அது சாவின்  ஒய்யார மினுமினுப்பைக்   கண்டிருக்கக் கூடும்.

பூமா ஈஸ்வரமூர்த்தியின் அந்த நிலைத்தகவலை முகப்புத்தகத்தில் உங்களில் சிலரும் பார்த்திருக்கலாம்.  ‘நேற்று இரவு பதினொன்று மணியிலிருந்து நான் ஒரு  தாயில்லாப் பிள்ளை” , ஈஸ்வர மூர்த்திக்கு அறுபத்தாறும் இருக்கலாம். அறுபத்தேழும் இருக்கலாம். எனின் என்ன? தாயை இழந்தால் எந்த வயதினும் அவன் தாயில்லாப் பிள்ளை. தாயில்லை என்று உணர்ந்த ஒருவனின் முகத்திலும் அகத்திலும் உண்டாகும் ‘தாயில்லாப் பிள்ளை’க் களை”  தாங்க இயலாதது. பூமா ஈஸ்வரமூர்த்தி எத்தனை கவிதைகள் எழுதியிருப்பினும் கதைகள், கட்டுரைகள் எழுதியிருப்பினும் , மூர்த்தி என நிற்கிறவனின் கண்கள் ஒரு தாயில்லாப் பிள்ளையுடையதாகவே, உருள வரும் கண்ணீரை உருளவிடாமல் விழுங்க முயன்றுகொண்டே இருந்தன.

கண்ணீரால் கழுவப்பட்ட அப்பழுக்கற்ற கண்களை நேர்கொண்டு பார்க்க நாம் நினைப்போம். ரெப்பை மயிர் நுனிகளில் பாசி கோர்த்தபடி சிவந்துருளும் விரிந்து சுடரும் மூர்த்தியின் கண்களை என்னால் சந்திக்கவே இயலவில்லை.
மூர்த்தியின் அம்மா, பெரியம்மா, சித்தி எல்லோரையும் மூர்த்தியை அறியும் முன்பே அறிவேன். எங்கள்  சுடலைமாடன்  கோவில் தெரு பால்யத்தின் வெளிகளில், எங்கள் வளவு வீடு ஒன்றில், எங்கள் புறவாசல் வீடு ஒன்றில், பேட்டை ரோடு வீடுகளில் எல்லாம் அவர்கள் சாலாச்சி என்றும் பாலம்மா என்றும் வெவ்வேறு சித்திகளாகவும் மனுஷிகளாகவும் நடமாடியிருந்தார்கள்.
எண்பத்தாறு அல்லது எண்பத்தேழு வயது வாழ்ந்த நிறைவுடன் மயில்கழுத்து நிறச் சேலையுடன் குளிர்ப்பெட்டியுள் உறைந்திருக்கும் மூர்த்தியின் அம்மா  முகத்தில்  இருந்து அடுக்கடுக்காக வேறு வேறு சித்திகள்  சாயல் கொண்டு ஒரு விளக்கிலிருந்து மறு விளக்கு ஏற்றிக்கொண்டே போகிறார்கள். நீத்தார் ஒருவரின் முகத்தில் இதுவரை நிறைந்தோர் எல்லோரும் தெரிவோர் என்பதே மெய். யாரை நினைக்கினும் அவர் ஆகும் நிலை கொள்ளும்  அது.

நான் இந்த நாய்க்குட்டியை  மரண வீட்டின் கண்களோடுதான் பார்க்க முடிந்தது. ஏற்கனவே கருத்திருக்கும் அதன் உடலில் இருந்து கால்களின் வழிந்தோடி விழும் ஒரு கருப்பு ஒற்றையடியை  முகர்ந்துகொண்டே,அப்படி முகரும் நாசி நுனையைத் தரையிலிருந்து அகற்ற முடியாமல் உதறித் தவிப்பதாகவே பட்டது. அது இறந்து போயிருக்கும் எனும் யூகத்தில் எனக்குள் எழுதியிருந்த இறப்புச் சான்றிதழை நான் கிழிக்க விரும்பாது,  அதனுடைய இழுபடும் நிழலை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு அப்புறம் தாண்டச் சம்மதிக்காதவனாக இருந்தேன்.

இன்றைய தினசரியில் காஞ்சிபுரத்துப் பக்க கருணை இல்லம் ஒன்றின் சுவர்களில் பெட்டிகள் போன்ற அமைப்பில் அந்த இல்லத்தில் இறந்தோரின் சடலங்கள் இடப்பட்டுப் பூசப்படுகின்றன  என்ற செய்தியிருந்தது.  ஹாலோ ப்ளாக்ஸ் என்ற கட்டுமான முறையில் வாய் பிளந்து நிற்கும் அந்தச் சுவர்க் கல்லறைகளின் வினோதம்  ஒரு நவீன நடுக்கத்தை உண்டாக்குகிறது. மரணத்தை உயிருள்ளவர்களால் கையாள ஒரு போதும் முடியாது. ஆனால் சடலங்களைக் கையாள அவர்கள் தீர்மானிக்கும் உத்திகளின் சிக்கல்கள்  ஒரு பிறழ்வுநிலையை ஒத்துக்கொள்ளத் துவங்கிவிட்டன.

அதே தினசரியின் இன்னொரு இணைப்பில் தான் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்ற மலையாள இளம் இயக்குநரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதன் கடைசிக் கேள்வியும் அதற்கான பதிலும் இப்படி அமைகின்றன.

வெளியாகவிருக்கும் ஈ.ம.யோ., ‘மத யானைக் கூட்டம்’ மாதிரியான இறப்புச்  சடங்கைச் சித்தரிக்கும் படமா?

ஆமாம். ஆனால், இதில் ஒரு மீனவர் குடும்பத்தில் நடக்கும் இறப்புச் சடங்கைப் பதிவு செய்திருக்கிறேன். பொதுவாக, நாம் எல்லோருமே இறப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை. நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து நிற்கவேண்டும் என்ற கேள்வியையும் இதில் புகுத்திப் பார்த்திருக்கிறேன்.

எனக்கு லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பதிலில் உள்ள ‘நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து நிற்கவேண்டும்?’ என்ற கேள்வியை விட்டு  இங்கங்கு நகரமுடியவில்லை. அவருடைய மலையாளப் பதிவின் மொழிமாற்றத்தில் உண்டான இந்த வாக்கியம், அவர் மலையாளத்தில் சொல்லியிருக்கக் கூடியதையும் விட மேலும் ஒன்றை எனக்குச் சொல்வதாகப் படுகிறது,

நான் இந்த மடிக்கணினி விசைப்பலகின் ஊடாக, மானசீக சன்னலின் வழி அந்தக் கருப்பு நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்கிறேன். அது கூட இந்த ஒரு வாரமாக, இக் கணம் வரை இறப்பில் இருந்து மறைந்து நின்றுகொண்டு இருப்பதாகவே படுகிறது.

இதை எழுதிக்கொண்டு இருப்பது, ஒரு வெயில் விழாத அறை எனினும், ஒரு கருப்பு நிழலை நான் முகர்ந்துகொண்டே தான் நகர்ந்துகொண்டு இருக்கிறேன்,
இறப்பில் இருந்து மறைந்து நிற்றல் என பெல்லிசேரி சொல்வதாகவும் அது இருக்கக் கூடும்.




Friday, 24 November 2017

ஓசையுற்றதோர் உலகம் கண்டேன்









ரசூல் பூக்குட்டியை ‘ரெசுல் பூ குட்டி’ என்றுதான் ஆங்கிலத்தில் இட்டிருந்தார்கள் அந்த எட்டாம் பக்கத்தில்.

‘எய்யா, ரெசூலூ, கொஞ்சம் இங்க வந்து என்னாண்ணு கேட்டுட்டுப் போ’ என்று ஒரு குரலை, அது ரசூலின் அம்மாவைப் பெற்ற பாட்டியின் குரலாக, நான் கேட்டுக்கொண்டே அந்தப் பக்கத்துக்குள் போனேன்.

அது ரசூல் பூக்குட்டியின் மிகச் சிறிய நேர்காணல். நிறையப் பேசுகிறவராக ஒரு வேளை ரசூல் இருந்திருக்க மாட்டார். ஒரு ரசூல்  நாளின் கடைசி ஒன்றாக,  களைத்த இரவில்    அது எடுக்கப்பட்டிருக்கிறது. நேர்காண்பவர் நுழையும் போது, ஆஸ்கர் வென்ற ரசூல் அவருடைய  சட்டையைத்  தேய்த்துக்கொண்டு இருக்கிறார்.

‘ஒரு கதை சொல்லட்டுமா?’  என்ற படத்தில் - அப்படிச் சொல்லக் கூடாது தான் - அவர் நடிக்கிறார். அவருடைய ஓசைப் புலன்களின் 360 பாகையில் அது எடுக்கப் பட்டிருக்கிறது. அவர் சொல்வது, ‘அந்தப் படம் அதுவாக நிகழ்ந்தது, அவர் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் மற்ற   எத்தனையோ போல’.


அவருக்கு, இந்த உலகத்தின் மா பெரும் நிகழ்வுகளில் ஒன்றான பூரம் திருவிழாவின் ஓசையைப் பதிவு செய்ய வேண்டும் என்பது  கனவாக இருந்திருக்கிறது. ‘நூறு யானைகள், முன்னூறு இசைக்கலைஞருடனான அந்த எழுபது ஏக்கர் நிகழ்வில், ரசூல் ஓர் இடத்தில் , அரைகுறைப் பார்வையே உள்ள ஒரு யானையைப் பார்க்கிறார். (ஒரு பார்வை இழந்த யானையை, ஒரு பார்வை இழந்த குரங்கை, ஒரு பார்வை இழந்த நாகத்தை, ஒரு பார்வை இழந்த சிட்டுக்குருவியை என்னால் யோசிக்கவே முடியவில்லை).

அரைப் பார்வை உள்ள அந்த யானையிடமிருந்து, ரசூல் பார்வையற்ற ஒரு மனிதர் அந்தப் பூரம் திருவிழா ஓசையை, அந்த இடத்திலேயே அவர் இல்லாமல் எப்படி அனுபவிப்பார்? என்ற ஒரு உணர்வுக்கு நகர்கிறார்.  பார்வையற்றதோர் உலகிலிருந்து, ஓசையுற்றதோர் உலகம் !   அங்கிருந்துதான் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. ரெசுல் பூ குட்டி நாயகனாகும் விபத்து நடக்கிறது.

ஒரு ஓசையின்மையைப் பற்றிய கேள்விக்கு, இந்த பொது சினிமாக்காரர்கள்  ஓசையின்மைக்கு - அமைதிக்கு - ப் பயப்படுகிறார்கள் என்கிறார்/

ரசூலிடம்  கேட்கப்படும்  ஆஸ்கர் விருது பற்றிய கடைசிக் கேள்விக்கு, அவர் சிரித்துக்கொண்டு, ‘ அது என் வங்கிக் காப்பறையில் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை எடுத்துத் துடைத்து வைத்துவிடுகிறேன்’ என்று பதில்கிறார்.

நான் என் வங்கிக் காப்பறையைப் பற்றி நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.