Monday, 8 December 2014

நொடி நேர முழுவட்டம்







எழுதுகிறவனுக்கு  அவன் எழுத்து புத்தகமாக வருவதில் உண்டாகும் மகிழ்ச்சி தனி. நான் இதற்கு முந்திய பருவத்தில் அல்லது காலத்தில் என்னுடைய எந்தத் தொகுப்பும் வருவதில் ஆர்வமும், வந்துவிட வேண்டும் என்பதில் விருப்பமும் இவ்வளவு கொண்டது இல்லை. இந்தக் கவிதைகள் தொகுப்பு ஆகிறதைக் குறித்து உள்ளூர அக்கறையும் , வெளியாகுமா என்று வெளிப்படையாகக் கவலையும் கொஞ்ச நாட்களாகவே இருந்து வருகின்றன.

‘பூனை எழுதிய அறைதொகுப்புக்குப் பின் இது வருகிறது. அந்தத் தொகுப்பில் உள்ளவை எப்படித் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மாதத்தின் தினங்களில் எழுதப்பட்டனவோ, அதே போல இவையும் தொடர்ந்து நாள்தோறும், இரு கட்டங்களில் முகநூலிலேயே நேரடியாகப் பதிவேறின. ஒரு கவிதையும் இதழ்களிலோ, சிற்றிதழ்களிலோ  அச்சேறியது அல்ல.

மனுஷ்யபுத்திரன் கூட, சமீபத்தில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஒட்டிய சந்திப்பில், ‘பத்திரிக்கைகளில் வந்த பிறகு முகப்புத்தகத்தில் வெளியிடலாமேஎன்றார். ‘ யார் வெளியிடுகிறார்கள்?’  என்று சிரித்துக் கொண்டே அவரிடம் கேட்டேன். உண்மையைச் சிரித்துக்கொண்டேதான் கேட்கவேண்டியது இருக்கிறது. என்ன? கொஞ்சம் உப்புக் கைத்த சிரிப்பு. உப்பு அப்படி ஒன்றும் லேசுப்பட்டது இல்லையே.

ஆனால் எந்த வருத்தமும் இன்றி, மிகுந்த நிறைவோடும், தடையற்ற புத்துணர்வோடும்தான் இவற்றை எழுதினேன். கலாப்ரியாவும் போகன் சங்கரும் அப்படித்தான் செய்துகொண்டு இருந்தார்கள். சக்தி ஜோதியும் அதே மன நிலையோடுதான் இருந்தார். கடங்கநேரியான். கு.விநாயக மூர்த்தி, ரவி உதயன், ஷான் கருப்பசாமி கூட அப்படித்தான். இதைத் தவிர முகநூல் வழியாக மட்டும் அறியப்பட்ட இன்னும் ஏழெட்டுப் பேர்கள், யாவரும் எழுதினோம். குறையொன்றுமில்லை.

தொடர்ந்து சூதாடுவது போல, அதிலும் ஜெயிப்பது போல ஒரு இடையறாத அழைப்பு இருந்துகொண்டே இருந்தது. இந்த இரண்டு வருடங்களில் அதில் எழுதியவை, கடந்த இருபது வருடங்களில் எழுதிய மொத்தக் கவிதைகளையும் விட அதிகம். எண்ணிக்கை சார்ந்து மட்டும் அல்ல, தரம் சார்ந்துமே இவை கூடுதல்தான்.  என் தரம் அல்லது என் எழுத்தின் தரம் என்பதை மற்றெவரையும் விட, முதலில் அறிகிறவன் நானே என்பதால், என்னுடைய நிர்ணயங்களை இங்கே இப்படி முன்வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இதே தயக்கமின்மையோடுதான், கிட்டத் தட்ட நூற்றுத் தொண்ணூறைத் தொடுகிற அளவில் முகநூலில் பதிவேறிய கவிதைகளை, இவை தொகுப்பு ஆகிறபோது உண்டாக்கக் கூடிய வாசக அனுபவங்களையும் வாசிப்பு மன நிலைகளையும் கவனத்தில்கொண்டும் கவனித்துக் கொண்டும், நானே கணிசமாகக் குறைத்துக் கொண்டேன். அன்று எழுதி மறுநாளில் நூற்றுப்பேர் விருப்பத்திற்கு உரியதாக இருந்த, இதைத் தொகுக்கும் போது வாசிக்கும் நேரத்திலும் விருப்பத்திற்கு உரியதாகவே இன்னும் இருக்கிற பல கவிதைகளை, என்னுடைய இன்றைய தேர்வு செய்யும் மன ஒருமையில், சாய்ந்தொரு பால் கோடாமல், சால மிகுக்காமல் பார்த்துக் கொண்டேன்.

இக் கவிதைகளை, இவ்வளவு எண்ணிக்கையில், எந்தெந்த தினங்களில் இருந்து எந்தெந்த திசைகளைப் பார்த்தோ, அல்லது யார் யாராகவோ இருந்து எதை எதையோ அறிந்தோ, மலர்ந்தோ, கனிந்தோ, உதிர்ந்தோ எப்படி எழுதினேன் என்பது ஒரு மாய வியப்பாகவே இருக்கிறது. தனிப்பட்ட முறையில் மிகுந்த நெருக்கடியும், வாதையும், தனிமையும், பகிர்ந்துகொள்ள இயலாத துயரும் சிக்கலும் நிறைந்த ஒரு வாழ்நிலையின் இடையே, சிறு ஒற்றைப் பேனாவின் நிழலில் நான் எவ்வளவு தகிப்பாறி இருக்கிறேன் என்பதும், வெவ்வேறு அழுத்தமான குரல்களில், இதுவரையற்ற நீண்ட வடிவங்களில், அதே பரிவோடும், அதைவிடக் கூர்மையோடும், கனிவின் திரட்சியோடும், காம்பைவிட்டுக் கழன்று உதிரும் ஞானத்தோடும் இவை அமைந்திருக்கின்றன என்பதும் உணர்ந்து, இந்தக் கவிதைகளை அவையே என்னைக் குளிர்ந்து போகாது வெதுவெதுப்போடு வைத்திருப்பதால் என் நெஞ்சோடும் அடிவயிற்றோடும் அவற்றை சேர்த்தணைத்துக் கொள்கிறேன்.

இக்கணம் நான் உயிரோடு இருப்பதற்கும் உயிர்ப்போடு இருப்பதற்கும் இவையே காரணிகள் என்பதால், என் இரு கைகளிலும் அருவமான அகல்களைப் போல இவற்றை ஏந்திக் கொள்கிறேன். அந்தச் சிறு மீன் போல, நொடி நேர அரைவட்டம் உண்டாக்கி, காலாதீதமாகப் பொங்கிப் பெருகும் கவிதையின் மகா நதியில், நான் வெயிலில் துள்ளி, மறுபடி நீருள் துளாவி நீந்திச் செல்கிறேன்.

இந்த்த் தொகுப்பை யார் யாருக்கெல்லாமோ சமர்ப்பிக்கலாம். எனக்கு முந்தியும் , என்னை முந்தியும் செல்கிற எத்தனையோ மூத்த, சம, இளைய தலைமுறைக் கவிஞர்களின் அடர்த்தியான பட்டியலுக்கு நான் மரியாதை செய்ய மிகவும் விரும்புவதுண்டு.

தேவ தச்சனுக்கு அல்லது மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அறியப்பட்ட அவர்களுக்கு எந்தப் புதிய பூச் செண்டையும் நான் அளித்துவிட முடியாது. அவர்கள் கவிதைகளின் வெளிச்சமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.

முகுந்த் நாகராஜனும் அறியப்படாதவரோ, வெளிச்சம் பெறாதவரோ அல்ல தான். உரைநடையில் அசோகமித்திரனிடம் உணர்கிற ஒரு அபூர்வமான, பெருநகரம் சார்ந்த மானுட உணர்வை, என்னிடம் தன் கவிதைகளின் வழியாகத் தொடர்ந்து உண்டாக்குகிறவராக முகுந்த நாகராஜன் இருக்கிறார். ரயில்பயணம் சார்ந்த, குழந்தைகள் வாழும் அவருடைய சித்திரங்கள் அசலான பிரத்தியேகம் உடையவை. ஒரு சப்-வே வழியாக நம்மைக் கூட்டிச் செல்ல அவர் வரிகளால் முடிந்திருக்கிறது.

அவருக்கு நினைவு இருக்குமோ என்னவோ?. இருக்கும். எதையும் மறக்கிற ஒருவனால் இப்படி கவிதைகள் எழுத முடியாது. அது ஒரு உயிர்மைப் பதிப்பக புத்தக வெளியீடு. சில வருடங்களுக்கு முன் தேவ நேயப் பாவாணர் அரங்கில் நடந்தது. முகுந்த் நாகராஜனின் கவிதைத் தொகுப்பை அன்று வெளியிட இருந்தவர் வரவில்லை. தற்செயலாக அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த என்னை, அதை வெளியிடச் சொல்லி ஹமீத் கேட்டுக்கொண்டார். நான் வெளியிட்டேன். முகுந்த் நாகராஜனும் நானும் ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளவில்லை. மேடையிலும் மேடைக்கு வெளியிலும் நானும் அவரும் ஒரே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை

இப்போது மட்டும் பேசிக் கொள்ளப் போகிறோமா என்ன? ஒரு சொல்லும் அற்ற அன்புடன், இந்தத் தொகுப்பை முகுந்த் நாகராஜன் கைகளில் தருகிறேன்.
பேச வாய்க்கும் வரை பேசாது இருப்போம்.
முழுவட்டம் அப்படித்தான் இருக்கும்.

கல்யாணி. சி.
15-10.2014.


























Wednesday, 3 December 2014

சின்னு முதல் சின்னு வரை.






உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ?

நான் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். இந்த ‘சின்னு முதல் சின்னுவரைதான் சந்தியா பதிப்பகம் தன்னுடைய சந்தியா பதிப்பக வெளியீடு.1 என்று வெளியிட்ட முதல் எழுத்து. 2001ல் வெளிவந்த அதை , 2014ல் இந்த முன்னுரைக்காகப் பார்க்கையில்தான் தெரிகிறது.
அதற்கும் முன்பு அது பார்த்திபனின் விமலன் புக்ஸ் வெளியீடாக 1991, வந்தது. எனக்கு பார்த்திபன் யார் என்றே தெரியாது. ஜெ. என். ஜெகன்னாதன் மூலம் இந்தப் பிரதி அவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஒருவகையில் இப்போது பார்த்தால், இந்தப் பிரதி மட்டும் அல்ல, சின்னு என்கிற ஸ்ரீனிவாச லட்சுமியும் யார் யாரிடமோதான் போய்ச் சேர்ந்தாள். இந்த 1991ல் இருந்து 2014க்குள் நானும் யார் யாரிடமோதான் போய்ச் சேர்ந்துகொண்டு இருக்கிறேன்.

இந்த வாழ்வின் அடிப்படை மாயமே, நாம் விரும்பியும் விரும்பாமலும், அறிந்தும் அறியாமலும் இப்படி ஒவ்வொருவரிடமாகப் போய்ச் செர்வதுதான். சேர்ந்தோமோ சேர்க்கப்பட்டோமோ என்று கூடத் தெரியாது. செய்வினையோ செயப்பாட்டு வினையோ, இந்தச் சேர்தலே வினை. சேர்தலே விதி.

என் எல்லாப் புத்தகங்களும் ஓரிரு பழைய பிரதிகளாவது என்னுடைய சேகரத்தில் இருக்க, பார்த்திபன் வெளியிட்ட இந்த விமலன் புக்ஸ் சின்னு மட்டும் என்னிடம் இல்லை. நான் புது எழுத்து மனோன்மணியிடம் கேட்க, அவர் அவருடைய கோவை நண்பர்களிடம் சொல்ல, சீனு எனக்கு அவருடைய பிரதியை வாசிக்க அனுப்பிவைத்தார்.

சீனு எனக்கு ஏற்கனவே நண்பர்தான். முதல் பக்கத்துக் காலப் பழுப்பின் வலது உச்சியில் சீனு என்று கையெழுத்திட்டிருக்கிறார். சீனு என உச்சரிக்கையில் சின்னு என்பது போலத்தான் மனதில் அதிர்கிறது. சின்னுவின் நீட்சியாக சீனுவும், சீனுவின் சுருக்கமாகச் சின்னுவும் இருப்பதை உணரமுடிகிறது. ஒரு வாசகன் ஒரு பிரதியின் கதாபாத்திரமாக நீள்வதும், அல்லது அவனே அந்தப் பாத்திரமாக்க் குவிவதுவுமான இந்த இடத்தின் நுட்பம், புரியும்படியாகவும் புரியாத ஒன்றாகவும் எனக்குப் பிடித்திருக்கிறது. இது புதிர் எனில் புதிர். இது புதிர் அவிழ்தல் எனில் புதிர் அவிழ்தல். தானாய் மலரும் தண்ணீர்ப் பூ. வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

நான் அதற்குப் பிறகு சின்னுவைப் பார்க்கவே இல்லை. ஒரே ஒரு முறையாவது பார்த்திருக்கலாம். ‘அதற்குப் பிறகு’  என்பது, ‘எதற்குப் பிறகுஎன்ற கேள்வியை வைத்திருக்கிறது என்பதையும், கேள்வியின் மடியிலேயே பதில் எப்போதும் இருக்கிறது என்பதையும் நான் மட்டுமே அறிவேன். நான் பார்க்கவில்லையே தவிர, சின்னுவை தங்கராஜ் பார்த்திருக்கிறான். ஒரு முறை அல்ல, இரண்டு முறைகள். அதுவும் சமீபத்தில். கடந்த இரண்டு வருடங்களுக்குள்.

ஒரு முறை டவுண் மார்க்கெட் பக்கம், ஏதோ ஒரு கடையில் பூவோ பழமோ பூஜை சாமான்களோ வாங்கிக் கொண்டிருந்த சின்னுவை. அடுத்த முறை ஏதோ ஒரு சிவராத்திரியில் அல்லது பிரதோஷ வேளையில் நெல்லையப்பர் கோவிலில். தங்கராஜ் கொடுத்து வைத்தவன். சின்னு முதல் சின்னுவரை பக்கங்களில் அவள் நடமாடுவதற்கு முன்பே, அவளை செண்பகம் பிள்ளை தெருவில், அத் தெருவின் வெயிலோடு வெயிலாக, மழையூடு மழையாகப் பார்த்தவன். அறுவடைக் களத்துமேடாக வைக்கோலும் கதிரும் நெல்வாசமும் ஆகத் தெருவில் குவிந்து கிடக்கையில், அதனிடை வகிடெடுத்துச் செல்லும் அவளைக் கணடவன். ஒரு செம்பருத்திப் பூவை, பள்ளிக்கூட ட்ராயிங் மாஸ்டர் பயிற்சி நோட்டில் வரைந்து காட்டுகையில், அவன் பார்த்திருந்த ஒரு செம்பருத்திப் பூ ஒன்று சூல்முடியுடன் அசைவதை ஒப்பிட்டு நினைத்துக் கொண்டு, இரண்டு பூக்களுக்கும் இடையில் இவன் ஒரு புதுப் பூவை வரைய முடிகிறவன்.

சொல்லப்போனால், இதை நான் எழுதுவதற்குப் பதிலாக தங்கராஜ் எழுதியிருந்தால், இதைவிடக் கூட, இந்த ‘முதல்’ ‘வரை’  வரையறைகளைத் தாண்டி, சின்னு யாதுமாகி நின்றிருப்பாள். அவன் எனினும் அவள் எனினும், அகமும் புறமும் அறிய முடியும் நிலையில், அவர்கள் யாதுமாகி நின்று எங்கணும் நிறைபவர்களாகவே இருக்கிறார்கள்.

எந்த வாழ்வும் சக்கையானதில்லை. எந்த மனிதரும் தட்டையானவரில்லை. அதிலும் இந்தச் சின்னுவைப் போன்ற பெண்களின் பரிமாணமே வேறு. எந்த மர்மமும் அற்று, தங்களின் உடையும் குமிழிகள் மீது ஏழேழு வண்ணங்கள் சுடரிட, அலைகளிடை நுரைத்து மினுங்கும் விதத்தை எல்லாக் கடற்கரைக் கால்களும் அறிந்தே இருக்கின்றன. கடல் என்பதும் கரை என்பதுவுமே அவரவருக்குத் தனித்தனியாகி விடுகையில், சின்னுவைப் பற்றிக் கேட்பானேன்? சின்னு தனி. தனித் தனி.

நான் சின்னுவைக் கூட அல்ல, சின்னுவின் மகளை, சின்னுவின் பேரக் குழந்தைகளில் ஒன்றையேனும் பார்த்திருக்கலாம். என்னுடைய இந்த 68 – 69ம் வயதில், என்னுடைய மகளின் மகன், மகனின் மகளுடைய உணர்வுலகில், சின்னுவின் கண்களை, சுருள்முடிச் சிலும்பலை ஏந்தி நிற்கும் அவளுடைய வம்சாவழியைப் பார்க்க முடிந்திருந்தால், இந்தச் சின்னு முதல் சின்னுவரையின் வம்சமாகவும் வழியாகவும் , இதனுடைய நீட்சியாகவும் இன்னொரு புதிய பகுதியை எழுதியிருக்க முடியும்.
முழுக்க முழுக்கப் புனைவதை விடவும், முழுக்க முழுக்க மெய்ப்பதை விடவும். சின்னுவின் பேரனின் கரண்டைக் காலில் புரளும் வெள்ளித் தண்டையின் தேய்வைத் தொட்டு மேலேறி, அந்த ஆதிச் சின்னுவின் அகலக் கண்களில் குடியேறி இருப்பேன். எழுத்தில் குடியேறுவது எல்லாம், எழுத்தில் உயிரை விடுவதற்குத் தானே.

சின்னுவுக்கு அவளுடைய சாயலில், அவள் கதையும் கதையின்மையுமாக ஒரு புத்தகம் வந்திருப்பது 1991ல் தெரியாது. 2001ல் தெரியாது. இதோ இந்த 2014ல் கூட்த் தெரிய வாய்ப்பில்லை. யாரை வரைந்தோமோ அவர்களால் பார்க்கப் படாமல், இப்படி எத்தனை எத்தனை ஓவியங்கள், எட்டுத் திக்குகளின் புகையடித்த சுவர்களில் எங்கெங்கோ தொங்கிக்கொண்டிருக்கும்?

ஆர்.கண்ணன் அப்போதே போய்ச் சேர்ந்துவிட்டான். இவள் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது. இருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. என் கண்ணில் படாதவரை, இருந்தாலும் இல்லாதவள்தானே அவள் என்றும் படுகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், இல்லாதவளை இருக்கப் பண்ணத்தானே இந்த எழுத்தெனும் மாயக் கூத்து.

இதை மீண்டும் பதிப்பிக்கிற சந்தியா பதிப்பகத்திற்கு நன்றி சொல்கையில், நான் விமலன் புக்ஸ் பார்த்திபனையும், ஜெ.என்.ஜெகனையும், அந்தப் பச்சை நிற அட்டையில் முகப்போவியம் வரைந்திருந்த ஆனந்த முருகனையும் நினைத்துக் கொள்கிறேன்.

என்னை விடச் சமீபத்தில் சின்னுவைப் பார்த்திருக்கும். என்னைப் போலவே அதே நெகிழ்வுடன் அவளைப் போற்றும் தங்கராஜுவுக்கு இந்தப் புதிய பதிப்பைச் சேர்க்கிறேன். தங்கராஜுவின் இயற்பெயர் தங்கராஜ் அல்ல. கு.சண்முகசுந்தரம். சின்னுவின் இயற்பெயர் மட்டும் என்ன, ஸ்ரீனிவாச லட்சுமியா? இல்லை.

ஒரு வாழ்வைப் புனையும் போது, ஒரு பெயரைப் புனைந்தால்தான் என்ன?
கல்யாணி.சி.
12.09.2014.


Monday, 1 December 2014

சிங்கக் குட்டியும் வெள்ளி மீன்களும் சிதம்பரம் தெருவும்





பெயர் தான் சிதம்பரம் நகரே தவிர, உண்மையாகச் சொல்லப் போனால் இது சிதம்பரம் தெரு தானே. தெரியத் தருவதாகவும் தெரிந்து கொள்ளவேண்டியது ஆகவும் இந்த வாழ்வும் மனிதரும் இருக்கிற போது இது தெரு ஆக இருந்ததும், நகர்ந்துகொண்டே இருப்பதாகவும், நகராமல் நிற்கமுடியாதது ஆகவும் இந்த வாழ்வும் மனிதரும் ஆகிவிட்ட பிறகு இது நகராகவும் ஆகிவிடுவதில் எந்த வியப்பும் இல்லை.

இது நகர் என அறியப்பட்டாலும், ஒரு ஆதித் தெருவைப் போல, இங்கே இன்னும் ஒவ்வொரு வீட்டில் வாசல் தெளித்துக் கோலம் இடுகிறார்கள். அப்படி வாசல் தெளித்துக் கோலம் இடுகிறவர்கள் அந்தந்த வாசலுக்கும் அந்தந்த வீட்டுக்கும் உரிய பெண்களாகவும் இருக்கிறார்கள். அப்படி வாசல் தெளிக்கும் போதும் கோலம் இடும்போதும் தவறாது, எப்போதும் நெருக்கமாகவும், எப்போதாவது சற்றுச் சினந்தும் பேசிப் பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்காகவே அவர்கள் இப்படி ஒரு நித்திய கருமம் போல, வாசலைத் தெளிப்பதையும் கோலமிடுவதையும் தங்கள் கடமையாக வரித்துக் கொள்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது.

எங்கள் வீட்டிலும் வாசல் உண்டு, கோலமிடுபவர்களும் உண்டு அல்லவா? ஒரு செய்தித்தாளை விட ‘செய்திகளை முந்தித் தருகிற’ முந்திய நாளின் அன்றாட வர்த்தமானங்களை, இந்தப் பெண்கள் பேசிக் கொள்வது போல ஒருபோதும் ஆண்களால் மனம் விட்டுப் பேச முடியாது. ஒரு வேளை அப்படி மனம் விட்டுப் பேசுவதால் தான் அவரவர் வாசல்கள் இத்தனை சுத்தமாகவும், அவரவர் இடும் கோலங்கள் இத்தனை நெளிவும் சுளிவுமாய் எழிலுற்றுவிடுவதும் சாத்தியம் ஆகிவிடுகிறது போல.

வயதின் காரணமாகவும் அனுபவத்தின் காரணமாகவும் தலைமைப் பண்பை முன்னிட்டும், எங்கள் வீட்டம்மாவுக்கு, எதைப்பற்றிப் பேசவும் எதைக் குறித்தும் கேள்வி கேட்கவுமான உரிமை உண்டு. இவர் கையில் வாரியல் இருப்பதும் அவர்கள் கையில் கோலப்பொடி டப்பா இருப்பதும் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றுக் கைகளால் முழம் போட அவர்கள் அரசியல் வாதிகளா என்ன? அதற்காக அவர்களுக்கு அரசியல் தெரியாதென்றோ, அவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு அரசியல் நடத்துகிறார்கள் என்பதைத் தெரியாதது போலவோ நாம் எண்ணிவிடவும் இருந்துவிடவும் முடியாது. ஆனால், இன்றையப் பேச்சு அரசியல் குறித்து அல்ல. கனவுகள் குறித்து. அரசியலே ஒரு கனவுதானே என்கிறீர்களா? அது குறித்த விசாரணையை அல்லது சிலாகிப்பை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் இது முழுக்க முழுக்க கனவு குறித்து. சொப்பனம் என்றே சாதாரணமாகச் சொல்லி இருக்கலாம். சொப்பனத்தை கனவு என்று சொல்கையில் அந்தச் சொல்லே கனவு போல ஒரு விஸ்தாரணம் அடைந்துவிடுகிறது.

அந்த எதிர் வீட்டுப் பெண் தான் நேற்றிரவு கண்ட சொப்பனங்களை எங்கள் வீட்டம்மாவிடம் முகம் கொள்ளாத பிரகாசத்துடன் சொல்ல ஆரம்பித்தது, ‘இந்தா பாருங்க சித்தி. எந்திரிச்ச உடனே உங்க கிட்டே தான் சொல்லணும்னு தோணுச்சு. அதுக்குள்ளே சபரியப்பா கிட்டே காப்பி கொடுக்கப் போனேனா. பொறுக்க முடியாம, அவங்க கிட்டே சொல்லிட்டேன்’ என்று துவங்கியது. ஒரு சாதாரணப் பேச்சை இவர்கள்தான் எவ்வளவு ஈர்ப்போடும் அடிப்படை வசீகரத்தோடும் துவங்கிவிடுகிறார்கள்.

அந்தப் பெண் கனவில் ஒரு சிங்கக் குட்டி வந்ததாம். சிங்கக் குட்டி அப்படி ஒரு அழகாக இருந்ததாம். நிஜ சிங்கக் குட்டி கூட அவ்வளவு அழகாக இருக்காதாம். ( ’இங்கே பாருய்யா’ என்று கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது ). பச்சைப் பிள்ளை மாதிரி அது அவள் காலையே சுற்றிச் சுற்றி வருகிறதாம். சற்றுக் குரலை அந்தரங்கமாக ஒருவருக்கு மட்டும் இருக்கிற குரலில் தணித்து, ‘எடுத்து அப்படியே இடது பக்கத்தோடே வைத்து பால் கொடுத்துவிடலாம்’ என்றே அவளுக்குத் தோன்றியதையும்  சொல்லி, மறுபடி குரலை ஏற்றி, ‘எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது சித்தி’ என்று சொல்லி முடித்தாள். சரி இதைப் பற்றிய அபிப்பிராயம் என்ன  என்று வல்லுநர் கருத்துக் கேட்கப் போகிறாள் என்று நினைத்தால், அவள் இன்னொரு கனவை அடுத்துச் சொல்ல ஆரம்பித்தாள்.


’ அதை விட சூப்பர் சித்தி’ என்று துவங்குகிற அந்த முகத்தை,அந்தச் சொல் வழியே பார்க்க முடிந்தது. அவள் ஆற்றில் நிற்கிறாளாம். எந்த ஊர் ஆறு என்று தெரியவில்லையாம். நெல்லையப்பர் கோயில் மூங்கில் மாதிரி சடை சடையாக ஆற்று ஓரம் வளர்ந்து கிடக்கிறதாம். தண்ணீர் கரண்டை அளவுதான் இருக்குமாம். ஆனால் கண்ணாடி மாதிரி, குனிந்து முகம் பார்த்துக் கொள்ளலாமாம். உச்சி வகிட்டில் இருக்கிற நரை முடி வெள்ளிக்கம்பி மாதிரி மினுங்குவது தெரியுமாம். ’நிலைக் கண்ணாடி தோத்துப் போகும்’ என்று சொல்லும் போதும் அந்த முகத்தை எட்டிப் பார்த்துவிட எனக்குத் தோன்றியது. தெப்பக் குளத்தில் எல்லாம் கருப்புக் கருப்பாகத்தான் நாம் மீன் பார்த்திருக்கிறோமாம். அது வெள்ளிமாதிரி இருந்ததாம் ஒவ்வொன்றும். மாதிரிக் கூட இல்லையாம். வெள்ளியே தானாம். கோமதி அம்மனுக்கு வெள்ளியில் கண்மலர் சாத்துவது போல, யாரோ வெள்ளியில் மீன் மீனாகச் செய்து ஆற்றில் விட்டிருந்தார்களாம். கூட்டம் கூட்டமா தேரோட்டம் பார்க்கப் போகிறமாதிரி நீந்தும் அதைப் பார்க்கிறதற்கே ஆசையாக இருந்ததாம். ஆனால் சட்டென்று ’முழிப்பு, வந்துவிட்டதாம்.

இதைச் சொல்லி முடித்த பிறகும் அந்தப் பெண்ணால் கனவு ஆற்றங்கரையில் இருந்து நகர முடியவில்லை. இன்னும் ஆற்று மணல் அவள் சொற்களில் இருந்தது. ‘இந்தா பாருங்க சித்தி. இப்டி இப்டி, இப்டி இப்டி அது நீந்திப் போகுது’ என்று கைவிரல்களை அவள் காற்றில் நீந்தவிட்டுக் கொண்டிருக்கும் போது நான் தாங்கமுடியாமல் வெளியே வந்து அவளைப் பார்க்கவந்து விட்டேன். அவளுக்கு அப்படி ஒரு வெட்கம். ‘சித்தப்பாவைப் பேப்பர் படிக்க விடாமல் பண்ணிவிடாமல் பண்ணீட்டேன் போல’ என்று மன்னிப்புக் கேட்கிற குரலில் என்னைப் பார்த்தது.

எந்தப்  பேப்பரில் இப்படிக் கனவுகளை அச்சடிக்கிறார்கள். எந்தப் பக்கத்தில் இப்படிச் சிங்கக் குட்டிகளை அச்சுக் கோர்க்கிறார்கள். வெள்ளிமீன்கள் நீந்தும் செய்திகளை எந்த நிருபர்கள் முன் வைக்கிறார்கள். அல்லது தன்னுடைய கனவுகளைப் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பகிர்ந்துகொள்ளும் பத்தியை எந்த தினத்தாள் பதிகிறது. செய்தித் தாட்கள் பதிவதும் பதியாததும் இருக்கட்டும், ஒரு அன்றாடப் பெண்ணுக்கு இன்னும் கனவில் சிங்கக் குட்டி வருவதும் மீன்கள் நீந்துவதும் எவ்வளவு அருமையான விஷயம். அதை அவர்கள் தங்களுடைய ஒரு  அலுத்த நாளின் முடிவில், இரவில் காண்பதும், காலையில் எழுந்த கையோடு ஒரு சிறுமியைப் போல, அவளுடைய கணவனிடம் பகிர்ந்து கொள்வதும் எத்தனை நல்ல துவக்கம் அவர்களின் மற்றொரு நாளுக்கு.

எனக்கு சமீபத்தில் மிகக் குறைந்த கனவுகளே வருகின்றன. அல்லது கனவே வருவதில்லை. ஒரு ஆறு மணல் அற்றுப் போவது நிகர்த்ததே ஒரு வாழ்வு கனவற்றுப் போவதும். உலகமயமாதலில் கனவுகளும் பலியாகுமோ? எளிய கனவுகளும் திருடு போமோ? சுதந்திரமாகவும் ஆனந்தமாகவும் காணப்படும் இந்தப் பெண்களின் கனவுகள் வரையறுக்கப்பட்டும் அட்டவணைப் படுத்தப் பட்டும் போகும் காலம் வரும் எனில் அது எத்தனை துயர மிக்கது.

அப்போது இந்தச் சிங்கக் குட்டியும், வெள்ளி மீன்களும் எங்குறும்? எங்கு செல்லும்? நேரில் நின்று கேட்கும் வீட்டம்மாவும், மறைவாக நமக்குள்ளே கேட்டு மகிழும் என் போன்றோரும் சிங்கக் குட்டிக் கனவை, வெள்ளி மீன்கள் சொப்பனத்தைச் சொல்கின்ற அந்தப் பெண் இன்றி எப்படி வாழ்வோம்?

யார் இதற்கு சிதம்பரம் நகர் என்று பெயர் இட்டார்கள்?
ஏன் இது சிதம்பரம் தெருவாகவே இல்லாது போயிற்று?