Sunday, 11 August 2013

முக நக - 2









4.
வேண்டுமானால் நேற்றிரவு அவன் அவனுடைய இருபதுக்களில் நுழைந்திருக்கலாம். கிளிப்பச்சை, வெள்ளை, கருப்பு வரிகள் இட்ட டீ ஷர்ட்டும் நேர்த்தியான கால்சட்டையுமாக இருந்தான். முகத்தில் கருப்புக் கண்ணாடி. நின்ற இடம் பார்வையற்றோர் பள்ளி வெளி வாசல். அவன் கையில் மிக வீரியமாக வளர்ந்த ஒரு நாற்று. நான் ஸ்ப்லெண்டர் வாகன விரைவில் அவதானிக்க முடிந்த நேரத்தில், சகல திசைகளையும் பச்சையாக அது பார்த்தபடி, கொய்யா இலை போலத் தடித்த நரம்புகளுடன், அவன் உடம்போடு ஒட்டிச் செல்லமாக அசைந்தது. பூச் செடியாகத்தான் இருக்க வேண்டும். என்ன பூச் செடி என்று தெரியவில்லை. நிச்சயம் அவனுக்குத் தெரிந்திருக்கும். சொல்லப் போனால், அது ரோஜாச் செடியாக இருந்தால், நம்மால் ஒரு ரோஜாப் பூவை மட்டுமே அதில் பார்க்க முடியும். உலகத்தின் அத்தனை வகைப் பூக்களையும் அது அவனுக்குப் பூத்துக் காட்டும். எல்லாப் பூக்களையும் அந்த ஒரே செடியில் அவன் பார்ப்பான். நம்மைப் போல அவன் வெறும் ஒரு பூ-க்காரன் அல்ல. அது ஒரு பூ-ச் செடி அல்ல.
 
5.
மழை தூறிய பிற்பகல். மகப் பேறு மருத்துவ மனையில் அல்ல. வீட்டில் போய்ப் பார்த்தோம். கடைசல் தொட்டில் கம்பு. பழஞ்சேலையில் கட்டிய தொட்டில். குழந்தை ஒருச்சாய்ந்து தூங்கியது. தூங்கும் போதும் குழந்தைகள் அழகானவை.
ஜான்ஸன்ஸ் பேபி சோப், குடிகூரா பவுடம் எதையும் வாங்கியிருக்கவில்லை. எங்களுக்கு வேறு நடைமுறை யோசனைகள் இருந்தன. பேம்பர், ஸ்னக்கீஸ் என்று கவசங்கள் வாங்க நினைத்தோம். வரும் வழியில் இருந்த கடைகளில் கிடைக்கவில்லை.
சாக்லெட் தந்தார்கள். எடுத்துக்கொண்டோம். புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கையில் எடுத்துக் கொள்ள எனக்குப் பிடிக்கும். தர வேண்டும். தந்தால் வைத்துக் கொள்ளலாம். தொட்டில் அசைந்தது. தொட்டிலுக்குக் கீழ் ஈரம் கசிந்தது. அழுகைச் சத்தம் வந்தது. அம்மாக்காரி வந்து குனிந்து எடுத்தாள், அம்மாக்காரியுடன் அம்மா வாசமும் வந்திருந்தது.
யாரெல்லாம் உன்னைப் பார்க்க வந்திருக்கா, பாரு குட்டிஎன்று கொஞ்சினாள். புரிந்துகொண்டதுபோல் கைகளை உயர்த்தி உடலை நெளித்தது. கருவறைக்குள் இன்னும் இருக்கும் ஞாபகத்தில், கால்களை ஒரு மாதிரி, புடலம் பிஞ்சு போல உயர்த்தி மடக்கிக் கொண்டது.
இடுப்பில் எதுவும் இல்லை. எல்லாம் தெரிந்தது. எல்லாம் என்றால் எல்லாம்தான். ரொம்ப காலத்திற்குப் பிறகு ஒரு குழந்தையை குழந்தையாகவே பார்க்கிற சந்தோஷம் எனக்கு.எங்கிட்டே கொடு பிள்ளையஎன்று கைகளை நீட்டுகிறேன்.
குழந்தை வருவதற்கு முன்பே குழந்தையின் வாசம் என்னிடம் வந்துவிட்டிருந்தது.
 
6.
சபாபதி சித்தப்பா இறந்து முப்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். இதோ இவரைப் பார்த்ததும் சித்தப்பா ஞாபகம் வந்துவிட்டது. சைக்கிளின் இரண்டு ஹாண்டில் பாரையும் பிடித்து உருட்டிப் போகவில்லை. பட்டும் படாமல் இடதுபக்கக் கைப்பிடியை மட்டும் பிடித்துக் கொண்டு நடக்கிறார். சைக்கிள் தானாக உருண்டு அவருடன் போகிற மாதிரி இருக்கிறது. அந்த சாயுங்கால நெரிசல் போக்குவரத்தை முற்றிலும் அலட்சியப்படுத்தி விட்ட முகம் அவரிடம்.
பாபதி சித்தப்பா வாய்க்காலில் மாட்டைக் குளிப்பாட்டிக் கூட்டிவருவது இப்படித்தான் இருக்கும். மாட்டின் கயிற்றையோ கன்றுக்குட்டி தும்பையோ கையால் கூடத் தொடமாட்டார். மாடு, கன்றுக்குட்டியைத் தவிர, வெயிலும் அவருடன் நடந்து வருகிற மாதிரி இருக்கும். கையில் வாய்க்காலில் பறித்த இரண்டு மூன்று அல்லியைப் பூவும் தண்டுமாக வைத்திருப்பார். முதலில் யாரைப் பார்க்கிறாரோ, அவர்களுக்கு எல்லாம் ஆளுக்கு ஒன்று கிடைக்கும்.
சபாபதி சித்தப்பா எப்போதோ எனக்குக் கொடுத்த அல்லிப் பூ இன்னும் முழுத் தண்டுடன், தண்ணீர் வழுவழுப்போடு நினைவில் வாடாமல் அப்படியே தான்
இருக்கிறது. இந்த சைக்கிள்காரச் சித்தப்பாவிடம் அதைக் கொடுத்துவிட்டால் என்ன?

 %


Saturday, 10 August 2013

என்னை என் மூலமாகவே








ஆறு ஏழு வருடங்களாக இதே பாதையில் தான் நடக்கிறேன். மாற்றிகொண்டதே இல்லை. கனத்த மழையிடையே கூட ஒதுங்க இடமற்ற மைதானத்தின் வழியாகவே சென்று, கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் ஒரு தேவாலயத்திலிருந்து மழை பார்த்துக்கொண்டு நின்று, மழை சற்று ‘வெறித்ததும்’ அதே பாதையில் தான் மீண்டும் போனேன். போகிறேன். அடையாளம் தெரிகிற அளவுக்கு ஒரு செம்போத்தும் மூன்று ஆட்காட்டிக் குருவிகளும் உண்டு. பார்த்தால் சிரிக்கிற வகையில் பூமி பூஜை செய்த தினத்தில் இருந்து, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நேற்று வரை, அந்த வீட்டுக் காவலர் உண்டு. வேறு யாரையும் நானும், என்னை வேறு யாரும் கண்டுகொண்டதில்லை.

ஆனால் அவரிடம் மட்டும் எனக்குப் பேசத் தோன்றியது, எண்பது வயது அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலாகவும் இருக்கலாம். வீசி நடக்க இயலாமல், கால்களைத் தரையோடு நகர்த்தி நகர்த்தி நடப்பார். உயர்தரக் காலணிகள், அரைக்கால் சட்டை, பனிக்காலம் எனில் அதற்கான உடைகள் என்று நல்ல தோற்றத்தில் இருப்பார். வட்டக் கண்ணாடி, அடர்த்தியான நரை மீசை, முக அமைப்பு , ஒதுங்கும் சிரிப்பு எல்லாம் காந்தியை நினைவு படுத்தும். காந்தியைக் கூட அல்ல, காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லியை.

அவரை நான் தான் முதலில் வணங்க ஆரம்பித்தேன். முதலில் எந்த முகமனும் சொல்லாது, கைகளின் மரியாதையான கூப்பல் மட்டும் என் வணக்கமாக இருந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே அவரிடம் உண்டாகும் கிறிஸ்தவப் புன்னகை, நாளுக்கு நாள் விகாசம் அடைந்தது. நான், ‘வணக்கம் ஐயா’ என்று சொல்ல ஆரம்பித்தேன். ஒரு கையில் ஊன்றிய கம்பு, இன்னொரு கையில் உள்ள பையில் ஏதாவது உணவுப் பொட்டலங்கள். நான் நினைத்துக் கொண்டேன், படுக்கையில் இருக்கும் அவருடைய மனைவிக்கு உரியவை அவை என.

அந்தத் தெருவில் அந்தப் பெரியவர் பற்றி விசாரிக்கும் அளவுக்கு எனக்கு இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் அவர் யார், என்ன வேலை பார்த்து ஓய்வு பெற்றார், குழந்தைகள் இல்லையா, மனைவிக்கு உடல் நலக் குறைவா என்று எதையும் யாரிடமும் கேட்கத் தோன்றவில்லை. அவரை அவர்மூலமாகவே அறிந்துகொள்ள வேண்டும், அப்படி அறிந்துகொள்வதே அவரைச் சரியாக அறிவதாகும் எனத் திடமாக நம்புகிறேன்.

அவருடைய வீடு எது என்பதை சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். ஆற்றுத்தண்ணீர் குழாய் பதிக்க தெருவின் பக்கங்களில் தோண்டியிருந்தனர். அவர் வீட்டுக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டிருந்தது. செம்மண் குவியல் மேல், யாருடைய தோளிலோ ஆதரவாகச் சாய்ந்துகொண்டு, வேப்ப மரக் கிளையில் தபால் பெட்டி தொங்கும் அந்த வீட்டிற்குள் அவர் சென்றுகொண்டிருந்தார்.

அந்தத் தோள் என்னுடையதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவரைக் கை தாங்கியபடியே அவருடைய வீட்டுக்குள் பிரவேசிப்பது என்பது என் வரவைக் கூடுதலாக அர்த்தப்படுத்தியிருக்கும். உள் அறைகளில் படுக்கையில் இருக்கும் அவருடைய துணைவியாரை கூட நான் பார்த்து நலம் விசாரித்திருக்க முடியும். புறங்கைத் தோல்களிலிருந்து கழன்று நரம்புகளோடிக் கிடக்கும் தளர்ந்த கைகளை நான் பற்றியிருக்கவும் முடிந்திருக்கலாம். அந்த மனுஷி ஒருவேளை என் உச்சந்தலையில் கை வைத்து ஆசீர்வதித்திருப்பார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ,அவர் மூலமாகவே அவரைப் புரிய விரும்பிய என்னை, என் மூலமாகவே அவர் சற்றுப் புரிந்திருப்பார் இல்லையா?
4%

Friday, 9 August 2013

முக நக.








1.
இன்று ஒரு கண் மருத்துவமனையில் காத்திருந்தோம். படிவம் நிரப்பிக்கொடுத்த பின்னரே சோதனைக்கு அனுமதிக்கப் படுவோம். பின்னால் இருந்து யாரோ, ‘பேனா தரலாமா?’ என்று கேட்டார். கொடுத்தேன். அதிகம் போனால் பத்து ரூபாய் இருக்கும். நாங்கள் அழைக்கப்பட்ட அவசரத்தில் அவரிடம் பேனா கொடுத்த நினைவே எனக்கு இல்லை. முதல் கட்ட கண் சோதனை முடித்து வர முக்கால் மணி நேரம் ஆகியிருக்கும். அந்தப் பகுதியில் இருந்து இன்னொரு பகுதிச் சோதனைக்குத் திரும்பும் நேரத்தில் என் முதுகை யாரோ தொட்டார்கள். ஸார். பேனாஎன்று சிரித்துக்கொண்டே நீட்டினார். மன்னிச்சுக்கிடுங்க. மறந்துட்டேன்என நான் அவருக்கு வருத்தம் தெரிவித்தேன். பெருந்தன்மையினால் அல்ல. என் பேனாவின் விலையை விட, அவர் எனக்காகத் தேடித் தேடிக் காத்திருந்த அந்த முக்கால் மணி நேரத்தின் விலையல்ல, மதிப்பு அதிகம். இப்போது மீண்டும் படிக்கலாம் , ”முக்கால் வாசிப்பேர் ஞாபகமாக மூடியைக் கழற்றிவிட்டுத்தான்...என்ற என்னுடைய அந்தக் கவிதையை.
 
2.
விஷால் பரத்வாஜின் நீலக்குடைதிரைப்படம் குறித்துச் சொல்கையில் ராஜு, உங்க கதையைப் படிக்கிற மாதிரி இருக்கு ப்பாஎன்றான். இந்த வார விகடனில்வட்டியும் முதலும்பகுதியில் அதைப் பற்றிப் படிக்கையில் நன்றாகத்தான் இருக்கிறது. அந்த நீலக்குடைச் சிறுமி போல, ‘இது என்னுது இல்ல. என்னுது மாதிரி இருக்குஎன நானும் சொல்லிக்கொள்ளலாம்.
நான் அந்தச் சிறுமியைப் போலத்தான் இருக்கிறேன். ஹரிதாஸ் படத்தில் மழைத்தாரையை ஏந்திக்கொண்டு தனியாக நிற்கும் சிறுவனைப் போலக் கூட.
 
3.
தமிழ்ப் பத்திரிக்கை ஓவிய உலகுக்கு ஹாஸிஃப் கான் ஒரு வித்தியாசமான வரவு. இந்த வாரம் விகடனில் ஒரு நடைபாதை ஓவியனை வரைந்திருக்கிறார். அவன் முன்புள்ள தரையில் ஒரு குழந்தையின் படமும் அதன் மேல் சிதறிக் கிடக்கும் சில்லறைகளும். நாம் பார்க்கிற கோணத்தில் தகடுபோலத் தெரியும் அந்தக் குழந்தையும் அந்த காசுகளின் உலோகக் கனமும் மிகச்சரியான பரிமாணத்தில் வரையப்பட்டிருக்கின்றன.
நான் இப்போதும் தரையில் வரையப்பட்டிருக்கிற அந்தக் குழந்தையையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அப்புறம் அந்த சில்லறைகளை